வெளியிடப்பட்ட நேரம்: 15:09 (07/04/2016)

கடைசி தொடர்பு:16:23 (07/04/2016)

இந்திய சென்சாரை நினைத்து வெட்கப்படுகிறேன்.... தயாரிப்பாளர் ஆவேசம்!

ஜங்கிள் புக் படத்திற்கு U /A தர சான்றிதழ் அளித்ததற்கு இந்தியா வெட்கப்பட வேண்டும், என பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் முகேஷ் பகத் கூறியுள்ளார். வால்ட் டிஸ்னி தயாரிப்பில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிறுவன் நீள் சேத்தி நடிப்பில்,சிறு வயதில் நாம் கார்ட்டூன் கதாபாத்திரங்களாக ரசித்த தி ஜங்கிள் புக் கதையை, அதிநவீன சிஜி லைவ் மோஷன் காப்ச்சர் தொழில் நுட்பத்தில் எடுத்து பிரமாண்டமாக வெளிவர இருக்கும் படம் தான் தி ஜங்கிள் புக் 2016.

இப்படம் அமெரிக்காவில் வெளியாகும் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே இங்கு வெளியாவது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்தியாவில் இப்படத்திற்கு U/A தர சான்றிதழ் அளித்துள்ளது மத்திய திரைப்பட சான்றிதழ் குழு. பொதுவாக U/A சான்றிதழ் என்பது, படங்கள் குழந்தைகளை பயமுறுத்தும் விதமாக 

இருப்பின், பெற்றோர்களுடன் மட்டுமே அப்படத்தை குழந்தைகள் காண அனுமதிக்கப்பட வேண்டும் என்று பொருள். ஆனால் தி ஜங்கிள் புக் படத்திற்கு இந்தியாவில் இந்த சான்றிதழ் அளித்துள்ளதை கண்டித்துக் கடுமையாக சாடியுள்ளார் முகேஷ் பகத்.

இதைப் பற்றி அவர் கூறுகையில் இதிலிருந்தே தெரிகிறது இந்தியா எவ்வளவு பைத்தியக்காரத்தனமாக மாறிக்கொண்டிருகிறது என்று,

ஜங்கிள் புக் போன்ற படங்களுக்கு U/Aசான்றிதழ் வழங்கப்படுமேயானால், கண்டிப்பாக மத்திய திரைப்பட சான்றிதழ் குழுவின் தற்போதைய நிலையை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

 அது தற்போது குப்பைத்தொட்டியில் போடும் நிலையில் உள்ளது, மேலும் இந்தியா இதற்காக வெட்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதே போல் பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானாவும், தான் இதைக் கேள்விப்பட்டவுடன் அதிர்ச்சியடைந்ததாகக் கூறியுள்ளார். மத்திய திரைப்பட சான்றிதழ் குழுவின் தலைமை அதிகாரி பஹ்லாஜ் நிஹ்லானி இதைப்பற்றிக் கூறுகையில், படத்தில் உள்ள 3டி எபக்ட்ஸ் குழந்தைகளைப் பயமுறுத்தும் விதமாக உள்ளதால், இந்தச் சான்றிதழை வழங்கியதாகக் கூறியுள்ளார்.

 இந்த U/A சான்றிதழைத் தாண்டி தி ஜங்கிள் புக் குழந்தைகள் மட்டும் இன்றி அனைத்துத் தரப்பினரிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்