வெளியிடப்பட்ட நேரம்: 20:16 (28/08/2016)

கடைசி தொடர்பு:20:33 (28/08/2016)

இது ஹாலிவுட்டின் நான் ஈ

மிருகங்களையும் மனிதர்களையும் இணைத்து வரும் படங்கள் இரண்டே விதம் தான். மனிதனின் ஆன்மா மிருகத்துக்குள் இருக்கும், அல்லது அடுத்த ஜென்மம்/முந்தையை ஜென்மம் மிருகமாக இருப்பார்கள். நைன் லைவ்ஸ் திரைப்படம் முதல் வகை. 

பணக்காரரான டாம் பிராண்ட், உலகின் மிக உயரமான கட்டிடத்தை கட்டுகிறார். அந்தக் கட்டிடத்தை விற்று பணம் பார்க்க ஆசைப்படுகிறார்கள் டாமின் கூட்டாளிகள். பிஸினெஸ், பணம் என சுற்றும் டாம், வீட்டைப் பற்றி யோசிப்பதே இல்லை. தனது மகளின் 11வது பிறந்தநாளுக்கு அவள் ஒரு பூனையை பரிசாக் கேட்க, அதை வாங்கி வருகிறார் டாம். எதிர்பாராத விதமாக நடக்கும் விபத்தில், டாம் கோமாவுக்கு போய்விடுகிறார். டாமின் ஆன்மா பூனைக்குள் சென்றுவிடுகிறது. 

ஒரு வாரத்திற்குள், டாம் எப்படியாவது பூனையின் உடலில் இருந்து மீண்டு வர வேண்டும்.அப்படி இல்லையென்றால், ஆயுள் முழுக்க பூனையின் உடலுக்குள் தான் இருக்க வேண்டும். மீண்டும் மனிதராக மாறினாரா இல்லை பூனைக்குள்ளேயே இருந்தாரா என்பதுதான் நைன் லைவ்ஸ் படத்தின் கதை 

டாம் பிராண்டாக கெவின் ஸ்பேஸீ வருவது சில நிமிடங்கள் தான் என்றாலும், நான் ஈ பட நானி போல் வரும் காட்சிகள் எல்லாம் அந்தர் காமெடி . அதன் பின் படம் முழுக்க அவர் பூனைக்கு குரலுதவி மட்டுமே செய்து இருக்கிறார்.ஆனால், பூனை வரும் காட்சிகளும் காமெடி சரவெடி தான். 

மிருகங்களிடையே ஒரு பழமொழி உண்டு. ஒரு நாயை நீங்கள் வளர்க்கும் போது,அந்த நாய் உங்களை எஜமானைப் போல் பார்க்கும்.ஆனால், ஒரு பூனையை வளர்க்கும் போது, பூனை தன்னை எஜமானராய் பார்த்துக்கொள்ளும். இரவு நேரத்தில் சரக்கிற்காக போராடுவதில் தொடங்கி, முதல் மனைவி ஹேண்ட்-பேக்கில் அட்ராசிட்டி செய்வது, இரண்டாம் மனைவிக்கு புது பாய் ஃபிரண்டோ என சந்தேகப்படுவது என ஒவ்வொரு காட்சியிலும் அப்ளாஸ் அள்ளுகிறது பூனை. சில காட்சிகள் CGI என்றாலும், பல காட்சிகளில் பூனையை தத்ரூபமாக நடிக்க வைத்து இருக்கிறார்கள். கேன்ஸ் போல், ஆஸ்கரிலும் மிருகங்களுக்கு விருது கொடுத்தால், இந்த முறை பூனை பரிசு வெல்வது நிச்சயம்

இறுதியில் எமோஷனலாக முடிக்க முடிவு செய்து இருந்தாலும், படம் காமெடி தான்.  அட்டகாசமான காமெடி படம் இல்லையென்றாலும், இந்த வாரம் வெளியான படங்களில் , பார்க்கும் ரசிகனை ஓரளவிற்கேனும் சிரிக்க வைத்து, திருப்தியாக அனுப்பும் படம் நைன் லைவ்ஸ் தான் என்பதால், தாராளமாய் பார்க்கலாம். 

படத்தின் ட்ரெய்லரைக் காண

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்