Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிராட் பிட் - ஏஞ்சலினா ஜோலி பிரிவு ஏன்? #Brangelina

அது... 2013, மே மாதம். அமெரிக்காவின் பெவர்லி ஹில்ஸ் பகுதியிலிருக்கும் மார்பக புற்றுநோய் மையத்தில் அறுவை சிகிச்சை முடித்துவிட்டு அறையில் மகிழ்ச்சியாக சிரித்துக் கொண்டிருந்தார், உலகம் போற்றும் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி. புகழ்பெற்ற நடிகை, மிக தைரியமாக தனக்கு மார்பக புற்றுநோய் இருப்பதை வெளிப்படையாக அறிவித்தது மட்டுமின்றி, அறுவை சிகிச்சை முடிந்து இத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறீர்களே?...இது கேள்வி...

" என்  சிகிச்சையின் ஒவ்வொரு நொடியும் என் கணவர் பிராட் பிட் என்னுடனே இருந்தார். எனக்கு வலி தெரியாத வகையில், என்னை மகிழ்வித்துக் கொண்டும், எனக்கு நம்பிக்கையளித்துக் கொண்டும் இருந்தார். எனக்காகவும், என் குடும்பத்திற்காகவும் நான் இதை நிச்சயம் செய்ய வேண்டும். இது என்னையும், பிராட்டையும் நெருக்கமாக்கும் என்று நம்பினேன். அது போலவே, இப்பொழுது நானும், பிராட் பிட்டும் பிரிய முடியாத... பிரிக்க முடியாத அளவிற்கு நெருக்கமாகி உள்ளோம்..." ...இது பதில். 

 இன்று உலக சினிமா ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் விவாகரத்து கோரி கோர்ட் படி ஏறி இருக்கிறார்கள் " பிராஞ்சலினா", என்றழைக்கப்படும் பிராட்பிட் - ஏஞ்சலினா ஜோடி. 

 பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான தன் பால்யம் குறித்து பேசியது, போதை பழக்கத்திலிருந்து மீண்டது,தன் கர்பப்பை நீக்கியதை வெளிப்படையாக அறிவித்தது, அகதிகளுக்கான ஐநா வின் சிறப்புத் தூதராக செயல்படுவது என நடிப்பையும் மீறி தன்னுடைய துணிச்சலுக்காகவும், சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளுக்காகவும் பெயர் பெற்றவர் ஏஞ்சலினா ஜோலி. முதலில் நடிகர் ஜானி லீ மில்லருடனும், பின்பு பில்லி பாபுடன் திருமணம் செய்து விவாகரத்து பெற்றிருந்த நிலையில்... 2004 மே மாதம் MR. & MRS. ஸ்மித் படத்தின் படப்பிடிப்பில் பிராட்பிட்டை முதன் முதலாகப் பார்க்கிறார் ஏஞ்சலினா. நடிகை ஜெனிபர் ஆனஸ்டனுடனான திருமணம் கசந்திருந்த நிலையில், பிராட்பிட்டும், ஏஞ்சலினாவும் ஒருவருக்கொருவர் நெருக்கம் காட்டினர். 2005யில் படம் வெளியாகி உலகம் முழுக்க பெரிய ஹிட்டானது. அதோடு, "பிராஞ்சலினா" ஜோடியும் உலக வைரல் ஆனது. 

 அன்று முதல் கடந்த 14ஆம் தேதி வரை பிரிக்க முடியாத ஸ்டார் ஜோடியாக வலம்வந்தவர்கள் விவாகரத்திற்கு விண்ணப்பித்திருக்கிறார்கள்." பிராட் அதிகம் குடிக்கிறார். போதை வஸ்துக்களை பயன்படுத்துகிறார். அதனால், குழந்தைகளிடம் கடுமையாக நடந்து கொள்கிறார். குழந்தைகள் நலன் கருதி, அவரை நான் பிரிகிறேன்..." இது ஏஞ்சலினா வெர்ஷன் என சொல்லப்படுகிறது. விவாகரத்து மனுவில் காரணமாக கருத்து வேறுபாடுதான் காரணம் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.  மேலும், விரைவில் வெளிவர உள்ள "எல்லைட்" (ALLIED) என்ற படத்தில் உடன் நடித்த மரியான் காடிலார்ட்(MARION COTILLARD) என்ற பிரெஞ்சு நடிகையுடன் பிராட் தொடர்பு வைத்திருக்கிறார். இதை ஏஞ்சலினா தனியார் டிடெக்டிவ் கொண்டு உறுதி செய்துள்ளார் என்ற செய்தியும் ஹாலிவுட்டில் பறக்கிறது. 

 "குழந்தைகளை கட்டுக்கோப்பாக வளர்க்க வேண்டுமென்று தான் நான் சில சமயங்களில் கண்டிப்புடன் நடந்து கொள்கிறேன். மேலும், இந்த விவாகரத்தை வெளியில் தெரியாதவாறு, குழந்தைகளை பாதிக்காத வகையில் செய்ய வேண்டும் என்று தான் சொல்லி வந்தேன். ஆனால், ஏஞ்சலினா குழந்தைகளின் நிம்மதியை சீர்குலைத்து விட்டார்". இது பிராட்பிட் வெர்ஷன். மேலும், நடிகை மரியானுடன் பிராட்டிற்கு எந்த தொடர்பும் இல்லை. ஏஞ்சலினாவிற்குத் தான் அவரைக் கண்டு பொறாமை. படப்பிடிப்பிற்கு வந்த ஏஞ்சலினாவிடம் பேசச் சென்ற மரியானை அவர் அவமதித்துவிட்டார், என்று பிராட்டிற்கு ஆதரவு குரல் ஒலிக்கிறது. 

2005யில் இருந்தே ஒன்றாக வாழ்ந்து வந்தாலும் 2014, ஆகஸ்ட் மாதம் தான் "பிராஞ்சலினா" கல்யாணம் செய்து கொண்டார்கள். அதுவும் குழந்தைகளின் வற்புறுத்தலாலே நடந்தது. அந்தக் கல்யாணத்தில் ஏஞ்சலினா உடுத்திய உடையை அவரின் மகள் ஜஹாரா வடிவமைத்தார். அந்தக் கல்யாணத்தில் வெட்டப்பட்ட கேக்கை அவர்களின் மகன் பேக்ஸ் செய்திருந்தார். இவர்களைப் போலவே, இவர்களின் குழந்தைகள் கதையும் உலகப் பிரசித்தம். ஏஞ்சலினா, பிராட்பிட் ஜோடிக்கு மொத்தம் 6 குழந்தைகள். அதில் மூவர் கம்போடியா, எத்தியோப்பியா மற்றும் வியட்நாமில் இருந்து தத்தெடுக்கப்பட்டவர்கள். பிறக்கும் போதே பொற்றோரை இழந்து, இப்பொழுது வளரும் சூழலில் வளர்ப்புப் பெற்றோரும் பிரியும் சூழலில் ... இப்பிரிவினால் அதிகம் பாதிக்கப்படப் போவது இந்தக் குழந்தைகள் தான். அனைத்து குழந்தைகளையும் தன்னிடமே ஒப்படைக்க வேண்டுமென்று ஏஞ்சலினா நீதிமன்றத்தில் கேட்டுள்ளார். 

கடந்த நவம்பர் மாதம் ஒரு பேட்டியில் ஏஞ்சலினா இப்படிச் சொன்னார்,  "எனக்கும் பிராட்டிற்கும், உலகின் மற்ற ஜோடிகளைப் போலவே தான். சண்டை, சச்சரவுகள் அதிகம் வரும். இருந்தும் அது போன்ற சமயங்களில் எங்களுக்குத் தேவையான இடைவெளியை எடுத்துக் கொண்டு, அதிலிருந்து மீண்டு வருவோம்..." . தற்போது மீண்டு வர முடியாத தூரத்திற்கு இருவரும் இடைவெளி எடுத்துக் கொண்டது தான் சோகம்...!

-இரா.கலைச்செல்வன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்