Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

” உனக்கு இந்த நோயை கொடுத்துவிட்டேன் என்ற உண்மையை ஒப்புக்கொள்ளுங்கள்” - ஜிம் கேரி காதலியின் கடைசி கடிதம்!

" நீங்கள் எனக்கு நிறைய உதவிகளை செய்துள்ளீர்கள். இப்பொழுது என்னை நீங்கள் நன்றி கெட்டவள் என்று கூட நினைக்கலாம். ஆனால், நான் அப்படியல்ல. காதல் உடைவதும், காதலர்கள் பிரிவதும் உலகின் இயற்கை தான். காலம் எனும் மருந்தால் அவர்கள் மற்றொரு உறவிற்குள், வாழ்க்கைக்குள் சென்று மகிழ்ச்சியாக வாழ்வார்கள். ஆனால், நீங்கள் எனக்குக் கொடுத்திருக்கும் இந்த நோயோடு நான் எப்படி என் வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்த முடியும்? என்னைப் பாருங்கள்... நான் அடிபட்டு போய் அருவருப்பாய் இருக்கிறேன். என் வாழ்வில் நான் அதிகம் பயந்தது எனக்குக் கிடைத்துவிட்டது. தனிமை... யாரும்... யாருமே இல்லாத ஓர் தனிமை என்னை சூழ்கிறது..." - உங்கள் பனித்துளி. 


உள்ளம் உருக்கும் ஒரு நீண்ட கடிதத்தின் கடைசிப் பகுதி இது. இதை எழுதியது ஐயர்லந்து நாட்டைச் சேர்ந்த கேத்ரியோனா வைட். எழுதப்பட்டது... தன் நகைச்சுவை நடிப்பினால் உலகையே சிரிக்க வைத்த, சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் ஹாலிவுட் நடிகர் ஜிம் கேரிக்கு...


தி மாஸ்க், ஏஸ் வென்ச்சுரா, ப்ரூஸ் ஆல்மைட்டி, எஸ் மேன், பேட்மேன் ஃபாரெவர் போன்ற உலகப் புகழ்பெற்ற படங்களில் நடித்தவர் ஜிம்கேரி. இரண்டு திருமணங்கள் விவாகரத்தில், நான்கு காதல் பிரிவில் முடிந்த கதை ஜிம்மினுடையது. அவர் கடைசியாக காதலித்து வந்த மேக்-அப் ஆர்டிஸ்ட் கேத்ரியோனோ வைட் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்டார். ஜிம்முடனான காதல் தோல்வியில் அப்படி செய்து கொண்டார் என இது நாள் வரை சொல்லப்பட்டு வந்த நிலையில், அதிர்ச்சிகரமான பல விஷயங்கள் தற்போது வெளிவந்துள்ளன. 


ஜிம் கேரியுடனான உடல் உறவின் மூலம் ஹெர்பஸ் வகை 1, 2 மற்றும் கொனோர்ஹியா ஆகிய பாலியல் தொற்றுக்களைப் பெற்றதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த நோய்கள் தனக்கிருப்பது தெரிந்தும், கேத்ரியோனோவிடம் அதை மறைத்து உடலுறவு கொண்டுள்ளார் என்று ஜிம் மீது இப்பொழுது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2012யில் ஒரு படப்பிடிப்பில் சந்தித்த ஜிம் கேரியும், அவருக்கு மேக்-அப் போட வந்த கேத்ரியோனோவும் காதல் வயப்படுகிறார்கள். ஓராண்டில் அந்த உறவு முறிந்துவிடுகிறது. மீண்டும் 2015யின் தொடக்கத்தில் இருந்து காதலிக்கத் தொடங்குகிறார்கள். அப்பொழுது தான் கேத்ரியோனோ தற்கொலை செய்து கொள்கிறார். இடையில் அமெரிக்க குடியுரிமையைப் பெறுவதற்காக மார்க் புர்டன் என்பவரை திருமணம் செய்கிறார் வைட். அவர்தான் ஜிம்மிற்கு எதிரான இந்த வழக்கை சென்ற மாதம் தொடுத்துள்ளார். மேலும் இதற்கு ஆதாரமாக அவர்களுக்கிடையில் நடைபெற்ற வாட்ஸ் அப் உரையாடல்கள் மற்றும் ஜிம்மால் தனக்கு ஏற்பட்டிருக்கும் நோய் குறித்து கேத்ரியோனா எழுதியுள்ள கடிதத்தையும் வெளியிட்டுள்ளார். 


"இது ஒரு மனிதாபமானமற்ற குற்றச்சாட்டு. வைட்டிற்கு அவரை நான் சந்திப்பதற்கு முன்பிருந்தே மனதளவில் பல பிரச்சனைகள் இருந்து வந்தன. சின்ன வயதில் இருந்தே அம்மா இல்லாதது, சமீபத்தில் அவரின் அப்பா பிரைன் ட்யூமரில் இறந்து போனது என அவரின் வாழ்க்கை சிக்கல் நிறைந்ததாகவே இருந்தது. அந்த மன அழுத்தத்தின் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டாரே அன்றி... என் மீதான இந்த வழக்கு முழுக்க ஒரு பொய்யானது..." என்று தன் வக்கீல் மூலம் சொல்லியிருக்கிறார் ஜிம் கேரி. 

" இது உண்மைக்கான, நீதிக்கான போராட்டம். ஜிம் கேரி பெண்களை எப்படி நடத்துவார், அவர் எவ்வளவு மோசமானவர் என்பதை உலகம் இப்பொழுது புரிந்து கொண்டது" என தன் பக்க நியாயங்களை அடுக்குகிறார் கேத்ரியானோ வைட்டின் கணவர். 

பிராட் பிட் - ஏஞ்சலினா பிரிவு குறித்த செய்திகளே இன்னும் தணியாத நிலையில், ஜிம் கேரியின் மீதான இந்த வழக்கு ஹாலிவுட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும், இந்த வழக்கில் அனைத்து ஆதாரங்களும் ஜிம் கேரிக்கு எதிராகவே அமைந்துள்ளது. வழக்கின் முடிவும் அவருக்கு எதிராக திரும்ப வாய்ப்புகள் இருப்பினும், தன் பண பலம், புகழ், அரசியல் தொடர்புகளின் மூலம் கேத்ரியானோவிற்கு கிடைக்க வேண்டிய நீதி கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சமும் கேத்ரியானோ உறவுகளிடம் இருக்கிறது. 

"எனக்கு உங்களிடமிருந்து வேண்டியது பணமோ, பொருளோ அல்ல... ஒரு மன்னிப்பு... 'தெரிந்தோ தெரியாமலோ உனக்கு இந்த நோயை நான் கொடுத்துவிட்டேன். இது உன் வாழ்க்கையைப் பெரிதளவில் பாதிக்கும்.' என்ற உண்மையை ஒப்புக் கொள்ளுங்கள். அது போதும் எனக்கு. அது என்னுடைய தன்மானத்தை, சுயமரியாதையையும் காக்கும். தயவு செய்து என்மீது கருணை காட்டுங்கள்..."
 -  அன்புடன் உங்கள் அன்பு "பனித்துளி (your dew) ". 

உருகிய அந்த பனித்துளியின் தன்மானம் காப்பாற்றப்படுமா? என்ற கேள்வியின் பதில்  காலத்தின் கைகளில் உள்ளது !!!  

-இரா.கலைச்செல்வன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்