மக்களுக்காக போராடி சிறை சென்ற ஹாலிவுட் நடிகை!

அமெரிக்காவின் இயற்கை எழில் மிகுந்த பகுதி... மிசோரி ஆற்றின் கடற்கரையோரம். கடந்த சில மாதங்களாகவே அமெரிக்காவின் பூர்வகுடி இனங்கள் அங்கு கூடாரம் அமைத்துப் போராடி வருகின்றனர். அவர்களின் வரலாறும், வாழ்க்கையும் புதைந்து கிடக்கும் நிலங்களை, துளையிட்டு பைப்லைன் மூலம் ஆயில் மற்றும் எரிவாயுக்களைக் கொண்டு வரும் திட்டத்தை எதிர்க்கிறார்கள் அவர்கள். கிட்டத்தட்ட நம் ஊர் "கெயில்" பிரச்சினை மாதிரியானது... இந்தப் பிரச்சினையை இன்று நாம் எழுதுவதற்கும், உலகளவில் இதுகுறித்த செய்திகள் சென்றடைவதற்கும் காரணமாக இருந்துள்ளார் "டைவர்ஜென்ட்" படப் புகழ் ஷெயிலின் உட்லி. 

"ஃபால்ட் இன் ஆர் ஸ்டார்ஸ்", "டைவர்ஜென்ட்", "ஸ்நோடென்" போன்ற சில படங்களிலேயே நடித்திருந்தாலும்... உலகப் பிரபலம் ஷெயிலின் உட்லி. அமெரிக்கப் பூர்வ குடிகளின் இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற உட்லி, அதை ஃபேஸ்புக் லைவில், வீடியோவாக வெளியிட்டுக் கொண்டிருக்கும்போது... எதிர்பாராத விதமாக கைது செய்யப்பட்டார். 

போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் உட்லியை போலீஸ் தனியாக அழைக்கிறது. உங்களை கைது செய்யப் போகிறோம் என்று சொல்லும் போலீசிடம், "என்னை மட்டும் ஏன் தனியாக கைது செய்கிறீர்கள்???... நான் பிரபலம் என்பதாலா???... இல்லை இதை தற்சமயம் 40,000 பேர் சமூக வலைதளத்தில் பார்க்கிறார்கள் என்பதாலா??? "... என்று தொடர் கேள்விகளை எழுப்புகிறார். ஆனால், பதில் கூறாத போலீஸ் அவரின் கைகளை பின்னால் வைத்து விலங்கிட்டு அழைத்துச் செல்கிறார்கள்... "இது சினிமா ஜோக் அல்ல... போராட்டம் குறித்த விஷயங்களைத் தொடர்ந்து பாருங்கள்..." என்று உட்லி குறிப்பிட்டுள்ளார். 

 கைது செய்யப்பட்ட உட்லி பிணையில் வெளியிடப்பட்டுள்ளார்.

" இந்தக் குழாய் மூலம் ஒரு நாளைக்கு 5,70,000 பேரல்கள் அளவிலான ஆயில் மற்றும் எரிவாயுக்கள் இடம் மாற்றம் செய்யப்படும். ஒரு சின்னப் பிரச்சினை ஏற்பட்டாலும்... 5 நொடிகளில் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடமே தரைமட்டமாகிவிடும்... 50 நிமிடங்களில் மிசோரி ஆறு முற்றிலும் நாசமாகிவிடும். நாங்கள் அந்த காலத்தில் இருந்தது போல் இப்பொழுது இல்லை. எங்களில் பலரும் இன்று நிறைய படித்து நல்ல வேலைகளில் இருக்கிறோம். இனியும் அமெரிக்கர்கள் எங்களை வஞ்சிக்க முடியாது" என்று உணர்ச்சிப் பூர்வமாக பேசுகிறார் ஓர் பூர்வகுடி. மேலும், போராட்டக்காரர்களை அகற்ற காவல் நாய்களை ஏவியுள்ளனர் போலீசார்.

" நான் வாழும் தலைமுறையின் நலத்தை மட்டும் பாராமல் அடுத்த சந்ததியினரின் நலனையும் காக்க வேண்டும் என்று போராடும் சாதாரண 24 வயதுப் பெண் நான். நாங்கள் சுத்தமான நீரையும், வளமான மண்னையும் காக்க போராடுகிறோம். மனிதத்தை அதன் வேரான இந்த பூமியோடு மீண்டும் இணைக்க முயற்சிக்கும் போராட்டம் தான் இது..." என்கிறார் ஷெயிலின் உட்லி.

"ரியல் " ஹீரோயின் !!!

- இரா.கலைச்செல்வன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!