Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நம்ம 'ஜாக்'க்குக்கு பர்த்டே! #HBDleonardoDiCaprio

லியோ

சில படங்கள்தான் தலைமுறைகள் கடந்தும்,  தமிழ் ரசிகர்களின் மனதில் டெலீட் செய்ய முடியாத அந்தஸ்தை பெறும். மாற்று மொழி படங்கள் என்றால் அது இன்னும் கஷ்டம். அப்படியொரு ஹாலிவுட் படம்தான் டைட்டானிக். அழகு, ரொமாண்ட்டிக் என்பதையெல்லாம் தாண்டி ரோஸம்மா வின்ஸ்லெட்டை விட , ஜாக் பையன் லியோனார்டோ டிகாப்ரியோவுக்கு ஸ்பெஷல் இடம் தந்தவன் தமிழ் ரசிகன்.

லியோக்கு இன்று 41வது பிறந்த நாள். காத்திருந்து காத்திருந்து இந்த ஆண்டுதான் ஆஸ்கார் பொம்மை,  லியோவின் கைரேகையை  ஸ்கேன் செய்திருக்கிறது. 

‘காட்டு எருமையின் ஈரல்’ போலவே ஒரு டூப்ளிகேட்டைத் தயாரித்து வைத்திருந்தது ‘ரெவனென்ட்' படப்பிடிப்புக் குழு. லியோ அதைக் கடித்துத் தின்பதுபோல காட்சி. கசப்பு இருக்கக்கூடாது என இனிப்பாக போலி ஈரல் ஒன்றைத் தயாரித்து வைத்திருந்தனர். அதை வாங்கிப் பார்த்த லியோ, `இது வேண்டாம்' என மறுத்துவிட்டார். ‘எனக்கு நிஜ லிவர் கிடைக்குமா?’ கேட்டதும் அத்தனை பேருக்கும் அதிர்ச்சி. காரணம், லியோ சுத்தமான வெஜ்ஜி; அடுத்து, அதை அசைவம் சாப்பிடுபவரால்கூட முகர்ந்துபார்க்க முடியாது. 

‘எனக்கு நிஜ லிவர்தான் வேண்டும். ரெடி பண்ணுங்க’ என உறுதியாகச் சொல்லிவிட, இரண்டொரு நாட்களில் படப்பிடிப்புக் குழு தயார்செய்து தந்தது. மூச்சைப் பிடித்துக்கொண்டு அந்த ரத்தம் சொட்டும் துர்நாற்றம் அடிக்கும் காட்டு எருமையின் ஈரலை, மூக்குக்கு அருகே கொண்டுசெல்ல கொடூரமாக குமட்டுகிறது. மீண்டும் மீண்டும் எனப் பலமுறை அந்தக் காட்சிக்காக மெனக்கெடுகிறார். சரியாக வரவில்லை. -40 டிகிரி குளிரில் நடுங்கியபடி இப்படி ஒரு விஷயத்தைச் செய்யவேண்டிய அவசியம் லியோனார்டோவுக்கு இல்லவே இல்லை. பாப்புலாரிட்டி கோபுரத்தின் மொட்டைமாடியில் நிற்கும் மிஸ்டர் ஹாலிவுட் அவர். ஆனால், `எத்தனை முறையானாலும் செத்தேபோனாலும் செய்தே தீருவேன்' என அந்த ரத்தம் வழியும் பச்சை ஈரலைக் கடித்துத் தின்ன ஆரம்பிக்கிறார். அதுதான் லியோ.

வெற்றி எப்போதும், யாருக்கும் எளிதில் கிடைக்காதுதான். லியோவுக்கு எக்ஸ்ட்ரா கஷ்டத்தை தந்துதான் வெற்றி அணைத்தது. 

பார்ன் வித் சில்வர் ஸ்பூன் இல்லை. அரிவாளும், கையடக்க துப்பாக்கிகளும்தான் லியோவின் குழந்தை காலம். பிறந்த இடமே ரவுடிகளின் கூடாரம். தெருவுக்கு தெரு விபச்சாரம். பள்ளிகளில் மாணவர்கள் என்ற பெயரில் இருந்த எல்லோருமே சைல்ட் அக்யூஸ்டுகள். நினைத்தால் வாழ்க்கையை தொலைக்க ஒரு சில நொடிகளே போதுமானதாக இருந்தது லியோவுக்கு. ஆனால், அவரது ஆசை, எண்ணம் எல்லாமே கலையாக இருந்ததுதான் ஆச்சர்யம். "சயின்ஸ் வேணாம்மா.. மேக்கப் போட்டுக்கிறேன்" என்ற லியோவை அவரது அம்மா அடிக்கவில்லை; அணைத்தார். அவரே ஆடிஷன்களுக்கு அழைத்துச் சென்றார். அம்மாவின் ஆசியை பெற்றறவன் தோற்க முடியுமா?

லியோவின் ஆஸ்தான நடிகர் ராபர்ட் டிநீரோ. அவரேதான் தி பாய்ஸ் லைஃப் படத்துக்காக லியோவை தேர்ந்தெடுத்தவர். அன்றிலிருந்தே லியோவின் அர்ப்பணிப்பு பயணம் தொடங்கியது. எந்த ரோலோ, எந்த படமோ.. அதில் லியோவின் பங்களிப்பும், ஆர்வமும் 100%க்கு குறைந்தது கிடையாது.

1996-ம் ஆண்டில் வெளியான ‘ரோமியோ + ஜூலியட்’ அவரை சாக்லேட் ஹீரோவாக, இளசுகளின் டார்லிங்காக மாற்றியது. `டைட்டானிக்' அவர் மேல் பித்துப்பிடிக்கவைத்தது. `டைட்டானிக்'குக்கு ஆஸ்கர் கிடைக்கவில்லை என்றதும், ‘ஓட்டுக்களை ஒழுங்கா எண்ணுங்கடா’ என ஆஸ்கர் கமிட்டிக்கு  இமெயில் அனுப்பி தெறிக்கவிட்டனர் அவரது ரசிகர்கள்.

2002-ம் ஆண்டில் `கேங்ஸ் ஆஃப் நியூயார்க்', கொஞ்சம் வளர்ந்த வேறு ஒரு லியோவை அறிமுகப்படுத்தியது. 

2004-ம் ஆண்டில் வெளியான `ஏவியேட்டர்' மெச்சூர்டு நடிகனாக நிலைநிறுத்தியது. வயது ஏற ஏற, சவாலான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தார். புகழின் உச்சியில் இருக்கும்போதே ‘ஜாங்கோ அன்செயின்ட்’ படத்தில் கொடூரமான கொலைகார ஸ்மைலிங் வில்லனாக நடிப்பதற்கு எல்லாம் தனி கெத்து வேண்டும்.

ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு வயதிலும் அதற்கேயுரிய கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்து மிரட்டியிருக்கிறார். எல்லா ஹாலிவுட் நடிகர்களுக்கும் 40 வயதுக்கு மேல்தான் அதிரிபுதிரி படங்கள் அமைந்திருக்கிகின்றன. அந்த ஹிஸ்டரிபடி பார்த்தால், இனிதான் லியோவின் பெஸ்ட் வரவிருக்கிறது. அந்த பெஸ்ட்டை எப்படியும் பெட்டராக செய்வார். 

வாழ்த்துகள் லியோ!

-கார்க்கிபவா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement