Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நம் தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவது சரிதானா? - 'NERVE' படம் எப்படி?

நெர்வ்

டெக்னாலஜி விபரீதங்களின் சாத்தியக்கூறுகளை வைத்து கதை பண்ணுவதில் ஹாலிவுட் எப்போதும் ஒரு அடி முன்னில் தான் இருக்கிறது. இதற்கு முன் வந்த ஹெர், செக்ஸ் டேப் எனப் பல படங்களில் இதை உணர்வுப்பூர்வமாகவோ, டெக்னிகலாகவோ பதிவு செய்து கொண்டேதான் இருக்கிறார்கள். இதில் இன்னொரு பிரச்னையை எடுத்து முன் வைத்திருக்கிறது நெர்வ் படம். 2012ல் ஜேன் ரியான் எழுதிய 'NERVE' என்கிற "டெக்னோ த்ரில்லர்" ஜானரைச் சேர்ந்த நாவலின் திரைவடிவம் தான் படம். ஜூலை மாதமே அமெரிக்காவில் வெளியாகிவிட்ட படம் இப்போது தான் இங்கு வெளியாகியிருக்கிறது.

வீ என்கிற வீனஸ் டெல்மானிகோ (எம்மா ராபர்ட்ஸ்)வுக்கு இயல்பிலேயே எந்த விஷயத்துக்கும் சின்ன தயக்கம், பயம். தனக்கு கல்லூரியில் அட்மிஷன் கிடைத்திருப்பதைக் கூட, அம்மா மறுத்துவிடுவாரோ என்கிற பயத்தில் சொல்லத் தயங்குகிறாள். வீனஸின் தோழி சிட்னி, நெர்வ் என்னும் ஆன்லைன் ரியாலிட்டி கேம் பற்றி அறிமுகம் கொடுக்கிறாள். (அது என்ன கேம்? பின்னால் வருகிறது) அதில் தான் அதிகபார்வையாளர்கள் கொண்ட ஒரு செலிப்ரிட்டி என சீன் போடுகிறாள் சிட்னி. வீனஸின் பயங்கள் ஒரு முறை அவளுக்கு அவமானத்தை ஏற்படுத்த, தான் ஒரு தைரியசாலி என நிரூபிக்க 'நெர்வ்'ல் ப்ளேயராக லாக் இன் செய்கிறாள். 

நெர்வ் என்பது, ட்ரூத் ஆர் டேர் என்ற விளையாட்டின் டைப் தான். அதில் ட்ரூத்தை மட்டும் தூக்கிவிட்டு டேரை மட்டும் வைத்து விளையாடுவார்கள். அதில் வரும் சவால்களை ஏற்றுக் கொண்டு, குறிப்பிட்ட நேரத்துக்குள் முடித்தால் பரிசுத் தொகை உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். சில சமயம் மாப்பிள்ளையின் சீப்பை எடுத்து ஒளித்து வைக்கும் காமெடி சவால்களும், மொட்டைமாடிச் சுவற்றில் ஏறி தலைகீழாக நிற்கும் டெரர் சவால்களும் வரும். அதில் நீங்கள் பார்வையாளராக சேர்ந்தால், பணம் செலுத்தி உள்ளே நுழைந்து பாப்கார்ன் கொறித்துக் கொண்டே நடப்பவற்றை ரசிக்கலாம். விளையாடுபவராக நுழைந்தால், அது என்ன செய்ய சொல்லி சவால்விடுகிறதோ அதை செய்து பரிசுத் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம். 1) எல்லா டேர்களும் ப்ளேயரின் போனிலிருந்து தான் ரெக்கார்ட் செய்யப்பட வேண்டும், 2) எதாவது ஒரு டேரில் தோற்றால் கூட முன்பு கிடைத்த பணம் அத்தனையும் திரும்ப எடுத்துக் கொள்ளப்படும், 3) இதை பற்றி வெளிநபரிடம் எந்த சூழ்நிலையிலும் சொல்லக் கூடாது என சில விதிமுறைகளும் உள்ளன. இந்த டேஞ்சர் கேமில் தான் வீனஸ் ப்ளேயராக நுழைகிறாள்.

NERVE

ஆரம்பத்தில் முன்பின் தெரியாத ஒரு நபரை முத்தமிடு, அவருடன் நகரத்துக்குப் போ எனச் சின்னச் சின்ன சவால்களைத் தருகிறது நெர்வ். அதன் மூலம் தன்னைப் போன்ற ரசனை கொண்ட இயன் (தேவ் ஃப்ரான்கோ) கிடைக்க ஜாலியாக அடுத்தடுத்த சவால்களையும் ஏற்கிறாள் வீனஸ். ஒரு கட்டத்தில் இந்த விளையாட்டிலிருந்து வெளியேற நினைக்கும் போது விதிமுறை ஒன்றை மீறுகிறாள். அதனால் அடுத்து நடக்கும் சில பிரச்னைகள் என்ன, இதன் முடிவு என்ன என க்ளைமாக்ஸை நெருங்கிறது படம். பெரிதாக நம்மை அசத்தும் திருப்பங்கள் என எதுவும் இல்லை என்றாலும், படத்தின் விறுவிறுப்பு மூலம் கவர்கிறார்கள் படத்தின் இயக்குநர்களான ஹென்ட்ரி ஜூஸ்ட் மற்றும் அரைல் ஸ்குல்மேன். 

படத்தின் சுவாரஸ்யமே, இது 2100ல் நடக்கும் கதை என ஆரம்பிக்காமல் ரியல் டைமில் நடப்பது போன்றே தொடங்கியது தான். தினமும் நாம் சமூக வலைதளங்களில் லைக்ஸுக்காக செய்யும் ஸ்ட்டேட்டஸ், போட்டோ சாகசங்களை, படத்தில் சவால்கள், வியூவர்ஸ்கள், பரிசுப்பணம் என மாற்றியமைத்திருப்பதைப் போல பொருத்திப் பார்க்க முடிகிறது. துணிக்கடையிலிருந்து தப்பிவரும் சவால், கண்ணைக் மறைத்து கொண்டு 60 கி.மீ வேகத்தில் வண்டி ஓட்டும் சவால், உயரமான கட்டடத்தில் ஏறி ஒற்றைக் கையில் தொங்கும் சவால் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு ராகம். வீனஸாக நடித்திருக்கும் எம்மா ராபர்ட்ஸ், இயன்னாக நடித்திருக்கும் தேவ் ஃப்ரான்கோ இருவரும் கச்சிதமான தேர்வு. இப்படி ஒரு கேமை யார் நடத்துகிறார்கள், யார் இயக்குகிறார்கள், க்ளைமாக்ஸில் அதை அழிக்கப் போடும் திட்டம் என சில லாஜிக்களை மறந்து பரபரக்கத் தயாரானால் 96 நிமிடங்களும் உங்களை என்கேஜ்டாக வைத்திருக்கும் இந்த நெர்வ்.

லாக் இன் ஆகும் நபர் தன் கைரேகையை வைத்ததும், அவரின் எல்லா தகவல்களையும் அலேக்காக தூக்கிக் கொள்கிறது நெர்வ். பிடித்த கலர், படித்த புத்தகம், ரேஷன் கடையில் வாங்கிய மண்ணெண்ணையின் அளவு உட்பட அனைத்தையும் அத்துப்படி செய்து கொள்கிறது. அதை வைத்தே வீனஸை பின் தொடர்ந்து ட்ராப் செய்கிறது என்கிற களத்துக்கான ஐடியா செம்ம. கற்பனை என்று சொல்லமுடியாத சாத்தியமானதும் கூட. ஏனென்றால் கிட்டத்தட்ட ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், ட்விட்டர், இன்ஸ்டகிராம் என வரிந்துகட்டி, கைரேகையைத் தவிர, நம்மைப்பற்றிய தகவல்களை நாமே இணையத்துக்கு கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறோம். படத்தின் க்ளைமாக்ஸில் இந்த நெர்வுக்கு எண்டு கார்டு போட மிக எளிமையான வழியைப் பயன்படுத்திவிட்டார் கதாசிரியர். ஆனால், நிஜத்தில் வலைத்தளங்களினால் நடக்கும், வலைத்தளங்களால் நடக்கும் விபரீதங்களுக்கு முடிவு கட்டுவது நம் கையில் தான் உள்ளது!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்