வேட்டையில் சிங்கம் சூர்யாவையே மிஞ்சும் லேடி லயன்! Underworld படம் எப்படி?

Underworld

சிங்கம் சூர்யா, சட்டத்திற்கு எதிராக நாட்டில் நடக்கும் அநீதிகளைச் செய்யும் வில்லன்களை வேட்டையாடுகிறார். அதுமாதிரி ஓநாய்மனிதர்களையும், வேம்பயர்களையும் வேட்டையாடும் லேடி லயன் கேட் பெகின்சேல் (Kate Beckinsale). இவரின் ஆக்‌ஷன் அதகளம் தான்  அண்டர்வேர்ல்ட் சீரிஸ் படங்கள். 2003ல் முதல் பாகம் வெளியாகி 22மில்லியன் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, 100 மில்லியன் வசூல் ஹிட்டடித்தது. முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பு அடுத்தடுத்தப் பாகங்களிலும் தொடர்ந்தது. இதோ ஐந்தாவது பாகமாக “அண்டர்வேர்ல்ட் ப்ளட் வார்ஸ்” ரிலீஸாகியிருக்கிறது. இந்தமுறை கேட், லைக்கன்ஸ் எனப்படும் ஓநாய்மனிதர்களையும், வேம்பயர் எனப்படும் காட்டேரிகளையும் எதிர்த்துப் போராடி வெல்லுவதே கதை. 

வேம்பயர்களும், லைக்கன்ஸூம் பரம்பரை எதிரிகள். இந்தமுறை லைக்கன்ஸின் தலைவனான டோபையஸ் மென்சிஸ் (Tobias Menzies) வேம்பயருக்கு எதிராக போர்க்கொடி தூக்குகிறார்கள். அவர்களை அழிக்கவும் திட்டமிடுகிறார். லைக்கன்ஸை தோற்கடிக்கவேண்டுமென்றால், கேட் பெகின்சேல் உதவி வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள் வேம்பயர் இன தலைவர்கள். ஆனால் வேம்பயர் கூட்டத்தில் இருக்கும் லாரா, கேட்டின் இரத்தததிற்காக அவளை கொலைசெய்ய முற்படுகிறாள். அதே நேரத்தில் லைக்கன்ஸ் தலைவனான டோபையஸூம் கேட் பென்கின்சேலைத் தேடுகிறார். இருவருமே நாயகியைத் தேடுவது எதற்காக என்றால், கேட்டின் இரத்தத்தினை அருந்தினால் ஸ்பெஷல் பவர் கிடைக்கும். வேம்பயர்களால் காலை வெயிலிலும் வெளியே வரமுடியும் என்பதே. இவர்கள் இருவரிடமிருந்தும் தப்பிக்கும் கேட், எதிரிகளின் சதியை முறியடித்து, லைக்கன்ஸ் கூட்டத்தினை வேட்டையாடினாரா என்பதை ரத்தமும் சண்டையுமாக சொல்லும் ஆக்‌ஷன் தான் கதை. 

வழக்கம்போல நாயகி கேட் பென்கின்சேல் தான் படம் முழுவதும் நிறைகிறார். முதல்பாகத்தில் இருந்த அழகும், க்யூட்னெஸும் மிஸ்ஸாகி, மெச்சூர் லுக் வந்துவிட்டது. ஓநாய்யுடன் சண்டையிடும்போது தத்ரூபமாக திரையில் நிறைகிறார்.  வேம்பயராக வரும் ஜேம்ஸ்  (Theo James) சண்டைக்காட்சிகளிலும், தந்தையை கொல்லும் இடத்தில் சோகத்திலும் நடப்பில் அசத்துகிறார். 

மற்ற பாகங்கள் போலவே வேம்பயரும் லைக்கன்ஸூம் சண்டைப்போடுவது, வேம்பயர்கள் ரத்தம் குடிக்கும் போதெல்லாம் அவர்களின் முன்காலம் தெரிவது, என அதே பழைய க்ளிஷேக்கள் தான் படம்முழுவதும். அதுமட்டுமின்றி பரபரப்பே இல்லாத துப்பாக்கி சண்டைக்காட்சிகள் என எதுவுமே புதிதாக இல்லாமல், வழக்கமான ஹாலிவுட் ஆக்‌ஷன் படமாகத்தான் தெரிகிறது. 

படத்திற்காக வெளியிடப்பட்ட டிரெய்லர் விறுவிறுப்பின் உச்சம். ஆனால் டிரெய்லர் கொடுத்த எதிர்பார்ப்பை, திரைப்படம் கொடுக்க தவறிவிட்டது. வேம்பயரின் இடத்திற்கே வந்து லைக்கன்ஸ் க்ளைமேஸில் தாக்குதல் நடத்தும். அதில் சூரிய ஒளியில் வேம்பயர்கள் எரிந்து பொசுங்கும், என்கிற ஆதி காலத்து டெக்னிக்கையே பயன்படுத்துகின்றனர். பார்த்ததையே திரும்பிப்பார்க்க போர் அடிக்கிறது, புதுசா எதாவது யோசிங்க பாஸ்.  

92 நிமிடங்களே ஓடும் திரைக்கதையில் சொல்ல வந்திருக்கும் கதையை கச்சிதமாக சொல்லிவிட்டாலும், படத்தில் புதிதாக ஏதும் இல்லையென்பதே குறை. ஹாலிவுட் படங்கள் VFXல் வேற லெவலில் மிரட்டுல் காலக்கட்டத்தில் இந்தப்படத்தில் அப்படியான எதுவுமே பயன்படுத்தப்படவில்லை.  VFXல் புதுமையான விஷயங்கள் எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றமே மிச்சம். 

கேட் பெகின்சேலும், ஜேம்ஸூம் பனி சூழ் பகுதிக்கு செல்லும் காட்சிகள் கண்ணிற்கு விருந்து. அந்த பகுதியில் வில்லன் டோபையஸூடன் கேட்டின் சண்டைக்காட்சிகள் டெக்னிக் செம. ஓநாய் மனிதர்களுடன் அங்கு நடக்கும் ஏழு நிமிட சண்டைக்காட்சிகள் ஒட்டுமொத்த படத்தையும் தூக்கிநிறுத்துகிறது. 

நாயகி கேட்டும் அவளின் மகளின் ரத்தத்தை அருந்தினால் புது சக்திகள் கிடைக்கும் என்ற புதுமையான ஒன்லைனுக்காக மட்டுமே இயக்குநர் அன்னா ஃபோர்ஸ்டரைப் (Anna Foerster) பாராட்டலாம். இருப்பினும் சக்கரை பொங்கலுக்கு வடகறிபோல பொருந்தாத திரைக்கதை படத்திற்கு பலவீனம். மைக்கேலின் இசையும், கார்ல் வால்ட்டரின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலம். 2 மணிநேரத்திற்கு முழுநீள படமாக்கியிருந்தால் ஒட்டுமொத்த படத்தின் ரசனையும் தவிடுபொடியாகியிருக்கும். அதிலிருந்து ரசிகர்களை தப்பிக்கவைத்த எடிட்டர் பீட்டரின் கத்திரிக்கு கங்கிராஜுலேஷன்ஸ். 

நாயகி கேட் பென்கின்சேல்லை மட்டுமின்றி அவரின் மகளையும் வில்லன் கும்பல் தேடுகிறது. ஆனால் கடைசி வரைக்கும் அவரை படத்தில் பயன்படுத்தவில்லை. ஆனால் படம் முடியும் போது மட்டும் மான்டேஜ்ஜாக காட்டுவது.... அதை அடுத்த பாகத்திற்கான ட்விஸ்ட் வைப்பதெல்லாம்? அட போங்க பாஸ், எத்தனை முறை தான் நாங்களும் வலிக்காத மாதிரியே நடிக்கிறது...!  

வில்லனின் முதுகு தண்டையே உருவி எடுப்பது, அந்த புனித நீர், முழுக்க முழுக்க இருட்டிலேயே நிகழும் திரைக்கதை என்று கலை இயக்கத்திற்காக நிறையவே மெனக்கெட்டிருப்பதை போல கதையிலும் கவனம் செலுத்தியிருக்கலாம். அந்த காலத்து உடைகள், செட்டப்புகளுக்கு நடுவே சர்வைவ்லென்ஸ் கேமிரா, துப்பாக்கி, டிஜிட்டல் டெக்னாலஜி என்று பேண்டஸியுடன் கலந்திருப்பது பொருந்தவில்லை.  

அண்டர்வேர்ல்ட் பட சீக்குவலின் ரசிகர்கள் என்றால், நிச்சயம் இந்தப்படம் உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யாது. பத்தோடு பதினொன்றாக வழக்கமான ஆக்‌ஷன் படமே. அதிரடியாக சண்டைக்காட்சிகளுடன் படம் பார்க்கவேண்டுமென்றால் இந்த வாரத்திற்கு அண்டர்வேர்ல்ட் பெஸ்ட் சாய்ஸ். ஜாலியா, கிரியேட்டிவாக படம் பார்க்கவேண்டுமென்றால் அனிமேஷனில் திரையை கலர்ஃபுல்லாக நிறைக்கும் மோனா படம் பக்கம் ஒதுங்கலாம். 

அண்டர்வேர்ல்ட் டிரெய்லர்  தமிழில்: 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!