பூச்சாண்டி, சங்கிலி கருப்பன், பச்சை மனிதன் - ஹாலிவுட் டைட்டில் அட்ராசிட்டீஸ்!

அமெரிக்கன் போக்கிரி முதல் ஹல்க் வரை தமிழ் டைட்டில் அட்ராசிட்டிஸ்!

டைட்டில்

அமெரிக்கன் போக்கிரி : 

என்னடா இது... தமிழில் இளையதளபதி விஜய் நடித்த 'போக்கிரி' படத்தை ரீமேக் பண்ணிட்டாங்களானு பார்க்காதீங்க. இதன் உண்மையான டைட்டில் 'Shoot Em Up'. படத்தின் கதை வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்குவதுதான். ஹீரோ நடந்து போய்க்கொண்டிருக்கும்போது ஒரு கர்ப்பிணி பெண்ணை சிலர் கொல்ல முயற்சி செய்வார்கள். நடுவில் ஹீரோ உள்ளே புகுந்து வில்லன்களிடம் இருந்து காப்பாற்றுவதுதான் கதை. படத்தில் ஹீரோ கேரட் அதிகமாகச் சாப்பிடுவார். நல்லவேளையாக படத்திற்கு 'கேரட் மனிதன்' என்று பெயர் வைக்கவில்லை.

 

கேடி ராம்போ கில்லாடி அர்னால்டு :

நம்ம ஊரு பில்லா, ரங்கா போல் அங்கு 'சில்வஸ்டர் ஸ்டாலோன்', 'அர்னால்டு'. 'ராம்போ' என்னும் படத்தில் ஸ்டாலோன் நடித்ததால் அதையே படத்தின் டைட்டிலாக வைத்து விட்டனர். இதனுடைய உண்மையான டைட்டில் 'The Escape Plan'. படத்தில் எதிர்பாராதவிதமாக அர்னால்டு சிறைக்குச் சென்று விடுவார். அதன்பின் ஸ்டாலோனும் சிறை செல்ல இவரோ பயங்கர மூளைக்காரர். இவரைப் பயன்படுத்தி அர்னால்டும் இவருடன் தப்பிப்பதுதான் கதை. இதற்கு 'ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி' என்ற பெயர்கூடப் பொருத்தமாக இருக்கும் பாஸ்.

 

கும்கி வீரன் :

'கும்கி' படத்தின் ஹீரோ விக்ரம் பிரபுதானேன்னு டவுட்டாகாதீங்க. படத்தின் நிஜப்பெயர் 'Ong Bak'. டோனி ஜா நடிப்பில் வெளிவந்த படம். 'கும்கி' வெளியான சில நட்களில் இந்தப் படம் வெளியானதால் வீரனுடன் கும்கியைச் சேர்த்துவிட்டனர். ஆசையாக வளர்க்கும் யானைக்குட்டியைக் கடத்திச் சென்றுவிடுவார்கள் வில்லன் கும்பல் அவர்களிடமிருந்து யானைக்குட்டியை மீட்பதுதான் கதை. படத்தின் கதாநாயகியாக லெட்சுமி மேனனைக் கேட்டிருக்கலாம் டைரக்டர்.

 

சங்கிலி கருப்பன் :

படத்தின் உண்மையான டைட்டில் 'See No Evil'. இந்தப் படத்தின் ஹீரோ மல்யுத்த வீரர் கெயின். முகத்தில் முகமுடி அணிந்து சண்டையிட வருவாரே ஒரு வீரர்... அவரேதான். படத்தின் கதை இதுதான். இவர் வசிக்கும் பங்களாவிற்கு யார் வந்தாலும் கொன்று விடுவார். அப்படி ஒரு திகிலான திரைப்படம். கையில் சங்கிலி ஒன்று வைத்துக்கொண்டு எல்லோரையும் வேட்டையாடுவார். மறு பக்கம் அம்மாவிற்கு மிகவும் பயந்த சுபாவம் அடிகூட வாங்குவார். சங்கிலி கருப்பன் குசும்புக்காரன். 

 

கால பைரவன் :

இந்தப் படத்தின் டைட்டில் 'Ghost Rider'. படத்தில் வினோத சக்தி வந்து ஹீரோ உடம்பு முழுவதுமாக நெருப்பு எரியத் தொடங்கிவிடும். உடம்பு மட்டுமின்றி அவர் ஓட்டும் பைக்கிலும் நெருப்பு எரியும். அதோடு எதிரிகளை வெளுத்து வாங்குவார் ஹீரோ. படத்தின் கதை சாத்தானிடமிருந்து மக்களைக் காப்பாற்றுவதுதான். சண்டை, அடி, உதை, குத்து என்று படம் பங்கமாகப் போகும். படத்தின் டைட்டிலை 'நெருப்புடா' என்றுகூட வைத்திருக்கலாம்.

 

மிரட்டல் அடி :

படத்தின் டைட்டிலைப் பார்த்தாலே தெரிந்திருக்கும் அடாவடியான திரைப்படம் என்று. படத்தின் பெயர் 'Kung Fu Hustle'. படத்தில் ஹீரோ எந்த வேலையும் இல்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருப்பார். ஏரியா சண்டையில் ஹீரோவை வில்லன் பொளந்து விடுவார். மீண்டுவந்து மறுபடியும் க்ளைமாக்ஸில் வில்லனை வெளுத்துக்கட்டுவார் ஹீரோ. படத்திற்கு 'மின்னல் அடி' என்று வைத்தால்கூட பொருந்தும்.  

 

பூச்சாண்டி :

படம் பெயரே பகீரென்று இருக்கே... படம் எப்படி இருக்கும்? இந்தப் படத்தின் டைட்டில் 'Boogeyman'. படத்தின் கதை சிறு வயதில் ஹீரோவின் அப்பா காணாமல் போய் விட, 16 வருடங்களுக்குப் பின் அவனின் அம்மாவும் இறந்து விடுவார். பின் தன் பழைய வீட்டிற்கு வந்து சில மர்மங்களைக் கண்டுபிடிப்பதற்காகச் செல்வான் ஹீரோ. அங்கு நடக்கும் திகிலான நிகழ்வுகள்தான் படத்தின் கதை.  

 

பச்சை மனிதன் :

சில பரிசோதனை முயற்சியில் அசுரனாக மாறிடுவார் ஹீரோ. படத்தின் டைட்டில் 'Hulk'. சாதாரண மனிதனாக இருக்கும் ஹீரோ ஏதேனும் கோபம் வந்தால் மிகப்பெரிய அசுரனாக மாறிவிடுவார். மாறுவதோடு மட்டுமில்லாமல் உடம்பு முழுவதுமாகப் பச்சை நிறத்தில் மாறிவிடும். பலமுறை ராணுவ வீரர்கள் முயன்றும் தோல்வியடைந்து தப்பி விடுவார் ஹல்க். பின் பல்வேறு முயற்சிக்குப் பின் சாதுவாய் மாற்றி பார்ட்-2 வருமாறு படத்தை முடிப்பார்கள். படத்திற்கு 'கோவக்கார கோவாலு'னு டைட்டில் வைத்திருக்கலாம்.

 

-தார்மிக் லீ

Do you like the story?

Please Appreciate the Author by clapping!