‛மம்மி ரீபூட்’ படத்தில் என்ன விசேஷம்?

மம்மி என்ற உடன் சட்டென மொட்டைத் தலை அர்னால்ட் வொஸ்லோ, குடுகுடுவென ஓடும் வண்டுகள், மணல் புயலுக்கு நடுவே பறக்கும் ஃப்ளைட் என நாஸ்டால்ஜியா நினைவுகளில் சிலிர்ப்போம். ஏறக்குறைய ஒன்பது வருடங்கள் கழித்து வெளியாக இருக்கிறது புதிய மம்மி. புது டெக்னாலஜி, புது எஃபக்ட்ஸ் என அனைத்தும் புதிதாக வரும் ரீபூட் வெர்ஷன் இது. ரீபூட் என்பது கிட்டத்தட்ட நம் கம்ப்யூட்டரை ரீபூட் செய்வது போலத்தான். இதுவரை மம்மியை வைத்து சொல்லப்பட்ட எல்லாக் கதைகளையும் தூக்கி ஓரமாக வைத்துவிட்டு, புதியதாக ஒரு கதை சொல்வது தான் ரீபூட். இந்த ரீபூட்டிற்கு முன்பு மம்மி கடந்து வந்த பாதையைப் பார்க்கலாம். 

மம்மி

1932-ல் கார்ல் ஃப்ருண்ட் இயக்கத்தில் வெளிவந்த மம்மிதான் எல்லாவற்றுக்கும் பேஸ்மெண்ட். அதன் பின்பும் 1955 வரை இதைத் தழுவியே ஐந்து பாகங்கள் வெளியானது. எதுவும் பெரிதாக கவனம் பெறவில்லை, 1999-ல் வந்த மம்மி ரீமேக் தான் பம்பர் ஹிட்டாகி பிரபலமானது. ட்ரையாலஜியாக அதன் பின் வெளியான 'தி மம்மி ரிட்டர்ன்ஸ்', 'த மம்மி: தாம்ப் ஆஃப் த ட்ராகன் எம்பரர்' இரண்டும் அந்த ஃபீவரை அப்படியே தக்க வைத்தது. 1932-55 அதற்குப் பிறகு 1959-71 கடைசியாக 1999-2008 என மூன்று கால இடைவெளிகளில் வெவ்வேறு தொழில்நுட்பங்களில் உருவாகிக் கொண்டே தான் இருந்தது மம்மி. இப்போது ஜென் Z தலைமுறைக்கான மம்மி தயாராகி இருக்கிறது. சாதாரணமாய் மம்மி, விஷுவல் என்ற காதுகுத்தல் இவர்களிடம் எடுபடாது என்பதால் அதீத கவர்ச்சிக்காக டாம் க்ரூஸை வைத்து ரீபூட் செய்கிறது யுனிவர்சல் பிக்சர்ஸ். நிச்சயமாக டாம் க்ரூஸ் இதில் நடிப்பது தான் ஸ்பெஷல். கிட்டத்தட்ட சந்திரமுகியில் ரஜினி நடித்ததைப் போன்ற சம்பவம் இது. டாம் க்ரூஸ் கூடவே 'க்ளாடியேட்டர்' ரசல் க்ரோ நடித்திருப்பது கூடுதல் சிறப்பு.

அப்படி என்ன கதை?

2000 வருடங்களுக்கு முன்பு, எகிப்திய இளவரசி அமநெட் (சோஃபியா பௌடெல்லா) அவரது தந்தையைக் கொன்ற குற்றத்திற்காக உயிருடன் சவப்பெட்டிக்குள் வைத்து மணலுக்கு அடியில், மிக ஆழத்தில் புதைக்கப்படுகிறாள். அந்த சவப்பெட்டி மீண்டும் எடுக்கப்படும் போது புத்துயிர் பெறுகிறாள் அமநெட். தீயசக்தி நிரம்பிய அமநெடின் (மம்மி) அட்டகாசங்களைச் சமாளித்து, வழக்கமாக அமெரிக்காவைக் காப்பாற்றும் டாம் க்ரூஸ் லண்டனை எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதாக கதை இருக்கலாம், வேறு ட்ரீட்மென்டும் இருக்கலாம். காரணம் இது முந்தைய மம்மி படங்கள் போல இல்லை. கொஞ்சம் வித்யாசமாக ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருப்பதால் தான் இந்த சந்தேகம்.

முந்தைய பாகங்கள் போல் இருக்காது என்பதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. இந்தமுறை மம்மியால் வரும் பாதிப்புகள் நடக்கப் போவது லண்டன் நகர வீதிகளில். தவிர அமநெட், டாம் க்ரூசை தேர்ந்தெடுக்கிறது என டிரெய்லரில் கூறுகிறார்கள். எனவே அதை வைத்து ஒரு ஆட்டம் இருக்கிறது. மாடர்ன் டைமில் மம்மி வந்தால் என்ன ஆகும் என்கிற இந்த கான்செப்டை 2012-லேயே பிடித்துவிட்டாலும் அதை யார் இயக்கப் போவது எனப் பல இயக்குநர்கள் கைகளுக்குச் சென்று வந்திருக்கிறது வாய்ப்பு. 'டோட்டல் ரீகால்' பட இயக்குநர் லென் விஸ்மேன், க்ளாசிகல் ஹாரர் படம் 'இட்' படத்தை ரீமேக் செய்யும் இயக்குநர் ஆண்டர்ஸ் ஆகியோரைத் தாண்டி கடைசியில் வந்து சேர்ந்தது இயக்குநர் அலெக்ஸ் குர்ட்ஸ்மேனிடம். முதல் முறையாக 3டி, ஐமேக்ஸ் என வளர்ச்சியடைந்த தொழிநுட்பத்துடன் பார்க்க இருக்கிறோம் என்பது குதூகலமான ஒன்று. படம் ஜூன் 9ம் தேதி வெளியாக இருக்கிறது.

-பா.ஜான்ஸன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!