Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நம்மை யாரெல்லாம் கண்காணிக்கிறார்கள்? அதிர்ச்சிக் கதை சொல்லும் `தி சர்க்கிள்' படம்

காலையில் எழுந்ததும், `இன்று டிராஃபிக் சற்று அதிகம் இருக்கும். பத்து நிமிடம் தாமதமாக அலுவலகத்துக்கு ரீச் ஆவீர்கள்' என கூகுள் நோட்டிஃபிகேஷன் உங்கள் மொபைலில் வருவதைக் கவனித்திருக்கிறீர்களா? ஏதோ ஓர் ஊருக்கு நாம் செல்லும்போது, செல்லும் வழியில் இருக்கும் காபி டேயை நமக்குச் சொல்லிக்கொண்டே வருகிறதா? இவை அனைத்தும் நன்மைகள்தானே! ஆனால், இதை யாரெல்லாம் பார்க்கிறார்கள்?  டெக்னாலஜி மூலம் நமக்கு உதவும்பொருட்டு, நம் பிரைவசிக்குள் எவ்வளவு தூரம் நுழைந்திருக்கிறது என்பதைச் சொல்ல முயற்சித்திருக்கும் படம்தான் `தி சர்க்கிள்'. 

தி சர்க்கிள்

ஈமன் பெய்லியின் (டாம் ஹாங்க்ஸ்) தி சர்க்கிள் நிறுவனத்தில் தன் தோழியின் உதவியால், ஆரம்பநிலை வேலையில் சேருகிறாள் மே ஹோலாண்ட் (எம்மா வாட்சன்). அவளையும் அவளின் குடும்பத்தையும் பார்த்துக்கொள்கிறது `தி சர்க்கிள்'. தன் குடும்பத்தைப் பார்ப்பதை மறந்து அலுவலகத்திலேயே தொடர்ச்சியாக வேலைசெய்கிறாள்  மே. அவளுக்கு நடக்கும் ஓர் அசம்பாவிதச் சம்பவத்தால், நிறுவனத்தின் புது கண்டுபிடிப்பான `SeeChange' என்னும் லைவ் கேமரா கருவி மூலம் தன்னை வெளி உலகுக்கு அறிமுகம் செய்துகொள்கிறாள் மே. தான் பார்க்கும் விஷயங்கள், சந்திக்கும் நபர்கள் என அவளின் ஒவ்வோர் அசைவையும் சர்க்கிளில் அக்கவுன்ட் வைத்திருக்கும் அனைவராலும் பார்க்க முடியும். (ஃபேஸ்புக் லைவின் ஓப்பன் அக்கவுன்ட் என வைத்துக்கொள்ளலாம்) ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர், தினமும் அவளது செய்கைகளைப் பார்க்கிறார்கள். பிரைவசி என்ற ஒன்றே இல்லாமல் இருப்பதுதான் நிம்மதியானது என்பது வலியுறுத்தப்படுகிறது. உலகெங்கிலும், SeeChange கேமராக்களும் மக்களின் கேமராக்களும் கண்களாக மாற ஆரம்பிக்கின்றன. மேவின் பெற்றோர் அவளைவிட்டு முற்றிலுமாக விலகுகிறார்கள். அதற்குள், அடுத்த கண்டுபிடிப்பான SoulSearch-யை உருவாக்குகிறது `தி சர்க்கிள்'.  SoulSearch மூலம் உலகில் இருக்கும் எவரையும் 20 நிமிடத்தில் தேடிக் கண்டுபிடிக்க முடியும். இவற்றால் நடக்கும் சில விஷயங்களுக்கு, மே ஹோலாண்ட் இறுதியில் என்ன முடிவு எடுக்கிறாள் என்பதைத் தெளிவில்லாமால் சொல்லியிருக்கிறது `தி சர்க்கிள்'.

தி சர்க்கிள்

டேவிட் எக்கர்ஸின் நாவலான `தி சர்க்கி'ளை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் படம்தான் `தி சர்க்கிள்'. கடந்த ஆண்டு டாம் ஹாங்க்ஸ் நடித்த `ஏ ஹோலோகிராம் ஃபார் தி கிங்'கும் டேவிட் எக்கர்ஸின் நாவல்தான்.  

ஆப்பிளின் டிம், கூகுளின் சுந்தர்பிச்சை போல் அவர் SeeChange கேமராவை விளக்கும் அந்த ஆரம்பக் காட்சி சூப்பர். படம் முழுக்க ஒரு பதபதைப்புடன் காணப்படும் எம்மா வாட்சனும் சில காட்சிகளில் சிறப்பாக நடித்து இருக்கிறார்.  ஆனால், படத்தில் பல்வேறு காட்சிகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டாத பிளாஸ்டிக் கதாபாத்திரங்களால் நிரப்பப்பட்டிருக்கின்றன. எச்சரிக்கை தரும் ஒரு நாவலைப் படமாக்கவேண்டிய இடத்தில் முழுவதுமாகத் தோற்றுபோய் இருக்கிறார் இயக்குநர் ஜேம்ஸ் பொன்சோல்ட்.  பல்வேறு டேட்டாக்களைச் சுரங்கத்தில் ஏன் வைக்க வேண்டும்? மே-வின் தோழி ஏன் அப்படி ரியாக்ட் செய்கிறாள்?  எப்படி டை லைஃபிட்டியை (ஜான் பொயேகா) யாராலும் கண்காணிக்க முடியவில்லை?  மே எதைப் பற்றியும் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் இறுதியில் அந்த முடிவை எடுப்பது ஏன்?... எனப் பல கேள்விகளுக்கான பதில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. நாவலில் தெளிவாக இருக்கும் சில விஷயங்கள்கூட படத்தில் இல்லை. பொதுவாக நாவலில்தான் சில விஷயங்களில் வாசிப்பாளனின் புரிதலுக்கு விட்டுவிட்டு, அப்படியே நகரும். இதில் அப்படியே உல்ட்டா!

ஐந்து வருடங்கள் கழித்து படத்தில் வருவதுபோல், கூகுளும் ஃபேஸ்புக்கும், பிற கார்ப்பரேட் நிறுவனங்களும் நம்முடைய தனிமனிதச் சுதந்திரங்களை முழுவதுமாகக் கைப்பற்றக்கூடும். ஆனால், அப்போது யாரும் இந்தப் படத்தை நினைவுபடுத்திப் பாராட்ட மாட்டார்கள். நம் பிரைவசியை முழுவதுமாக இணையத்துக்குத் தாரைவார்த்துவிட்டு நிற்கிறோம் என்பதை அழுத்தமாகச் சொல்லாமல், முற்றிலும் குழப்பி எடுக்கப்பட்டிருக்கிறது `தி சர்க்கிள்'.

 

 

`ரகசியம் என்பது பொய்யானது',  `ஒரு விஷயத்தைப் பகிரும்போதுதான் அக்கறைகொள்ள முடியும்', `பிரைவசி என்பது திருட்டுத்தனம்' இதுதான் படத்தின் டேக்லைன். அதை மட்டும் பார்த்துவிட்டு, நாம் இணையத்தில் நம் பிரைவசியை ரேன்சம்வேர்களுக்கு இரையாக்காமல் பாதுகாத்துக்கொள்ளுதல் நலம். பிரைவசி என்பது நம் உரிமை என்பதை நினைவில் கொள்வோம்

படம் பார்த்துவிட்டு வெளியே வந்ததும், அமேசானில் நான் பார்த்த ஒரு பொருளை, ஃபேஸ்புக்கில் கடை விரித்து விளம்பரம் செய்யும்விதம் ஏனோ ஞாபகம் வந்தது. அந்தப் பொருளை வாங்கலாம் என முயல்கையில், 'பாஸ், இந்தத் தளத்துல அது 10 ரூபாய் கம்மி' என மற்றொரு தளத்தின் முகவரி பாப் அப் ஆனதும் ஞாபகம்வருகிறது. நண்பன் ஒருவன் Swiggey-ல் மதிய உணவு ஆர்டர்செய்து அமர்ந்திருக்க, வேறொரு டெலிவெரி கம்பெனியிலிருந்து ஒரு மெசேஜ் அவன் மொபைலுக்கு வந்திருந்தது. `எங்களிடம் ஆர்டர்செய்திருந்தால், உங்களுக்கு இன்னும் விரைவாக அதே நேரம், 10 சதவிகிதம் டிஸ்கவுன்ட்டுடன் இந்தப் பொருள் கிடைத்திருக்கும்'. இதை எல்லாம் யார் கண்காணிக்கிறார்கள்? நம் தகவல் எத்தனை பேரிடம் இருக்கிறது? அப்படி நம் தகவலில் என்ன இருக்கிறது? எல்லாம் இருக்கிறது.

2002-ம் ஆண்டு ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் வெளியான படம் `மைனாரிட்டி ரிபோர்ட்ஸ்'. ஒருவர் கொலைசெய்யும் முன்னரே அந்தக் கொலையைத் தடுத்து, அதற்குக் காரணமாக இருந்த நபரைக் கைதுசெய்வார்கள். `மைனாரிட்டி ரிப்போட்ஸ்' படத்தில் வரும் ஆண்டு 2054. இந்த டெக்னாலஜி வருவதற்கு அத்தனை ஆண்டுகள் ஆகாது என்பது மட்டும் நிச்சயம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்