சலஜார், பர்போசா, டர்னர்... இந்த முறை கேப்டன் ஜேக் ஸ்பேரோ யார் பக்கம்? Dead Men Tell No Tales படம் எப்படி? | Pirates of the Caribbean: Dead Men Tell No Tales Review

வெளியிடப்பட்ட நேரம்: 11:38 (27/05/2017)

கடைசி தொடர்பு:22:16 (27/05/2017)

சலஜார், பர்போசா, டர்னர்... இந்த முறை கேப்டன் ஜேக் ஸ்பேரோ யார் பக்கம்? Dead Men Tell No Tales படம் எப்படி?

 

`பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்', உலகம் முழுவதும் பலகோடி ரசிகர்களை கொண்ட ஃபேன்டஸி திரைப்பட தொடர். இந்தத் தொடரின் ஒவ்வொரு திரைப்படமும் வசூலை வாரி குவித்து ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தவை. இதன் ஐந்தாவது பாகம் தற்போது வெளியாகியுள்ளது. அதன் விமர்சனத்தை படிக்கும் முன்னர் சின்ன `இதுவரை' மட்டும் பார்ப்போம்.

Captain Jack Sparrow

 

முதல் நான்கு பாகத்தை பார்த்தவர்கள் நேரடியாக அடுத்த சில பாராக்களை ஸ்கிப் செய்து, ஜம்ப் செய்து கொள்ளவும். ஒரு சின்ன கொசுவர்த்தி சுருள். 

 

The Curse Of the Black Pearl :

 

படகில் தத்தளித்து வரும் வில் டர்னரை, குட்டி எலிசபெத் ஸ்வானும், அவளின் தந்தை பெரிய ஸ்வானும் காப்பாற்ற, The curse of Black pearl அங்கிருந்துதான்   ஆரம்பிக்கும் படம். வில் டர்னரிடம் இருக்கும் தங்க மெடாலியனை எலிசபெத் சுட, பிற்காலத்தில் அது பர்போசாவை எழுப்ப, ஊர் முழுக்க சண்டையாகி எலிசெபத்தை பர்போசா கடத்தித் தூக்கிட்டு வர, இறுதியில் கேப்டன் ஜேக் ஸ்பாரோவும் வில் டர்னரும் பர்போசாவை கொன்று எலிசெபத்தைக் காப்பாற்ற... ஒரே கூத்தா இருக்கும். இதான் 'தி கர்ஸ் ஆஃப் ப்ளாக் பியர்ல்'.

 

வில்லன் : பர்போசா.

 

Dead Man's Chest :

 

 dead mans chestதிருமணம் செய்துகொள்ள வில்லும், எலிசபெத்தும் ப்ளான் பண்ண, ஜேக் ஸ்பாரோவை தப்பிக்க வைத்தது இவர்கள்தான் என்று  தெரிந்து, அதுக்கு தடை போடுகிறார் லார்ட் பெக்கெட். ஜேக் ஸ்பாரோ எதார்த்தமாக டர்னரின் அப்பாவை சந்திக்கிறார். ஆக்டோபஸ் மூஞ்சன் கப்பலில் ஜேக் ஸ்பாரோ கொத்தடிமையாக வேலை செய்தே தீர வேண்டும், இல்லையெனில் ராட்சஷ மீன் (கிரேக்கன்) ஜேக்கை விழுங்கிவிடும். இதுதான் இருவருக்குமான டீல். டேவி ஜோன்ஸின் இதயம் ஒரு பெட்டகத்துக்குள் பத்திரமான முறையில் துடித்துக் கொண்டிருக்கும். அதுக்கு அப்புறம் யார் டேவி ஜோன்ஸின் இதயத்தை லவட்டிச் செல்கிறார், டேவி ஜோன்ஸ் கதி என்னாச்சு, ஜேக் ஸ்பாரோ கிரேக்கனை ஜெயித்தாரா, டர்னரின் அப்பா என்ன ஆனார், போன்ற பல கேள்விக்கு பதில் சொல்வதுதான் 'டெட் மேன்ஸ் செஸ்ட்'.

 

வில்லன் : டேவி ஜோன்ஸ்

 

At World's End

At worlds end

 

டேவி ஜோன்ஸின் இதயத்தை கைபற்றிய பெக்கெட், அதைக்காட்டியே ஒட்டுமொத்த கடற்கொள்ளையர்களையும் அழிக்க  திட்டம்  தீட்டுகிறார். கலிப்சோவின் உதவியோடு இரண்டாம் பாகத்துக்கு லீவ் போட்ட பர்போசா மீண்டும் உயிர்தெழுந்து வருகிறார் (இதுக்கே ஷாக்கானா எப்படி, இதைவிட ஸ்பெஷல் ஐட்டம் ஒண்ணு ஐந்தாம் பாகத்துல இருக்கு). பெக்கெட்டிடமிருந்து தப்பிக்க ஒட்டுமொத்த கடற்கொள்ளையர்களின் கப்பல் கேப்டன்களும் ப்ரெத்ரன் கோர்ட்டில் ஆஜராகி இதுக்கெல்லாம் ஒரு முடிவுகட்ட ப்ளான் பண்றாங்க. பெக்கெட்டின் எண்டீவர், டேவி ஜோன்ஸின் டட்ச்மேன், ஜேக்கின் பியர்ல், இந்த கப்பல்களின் நிலைமை என்ன, ஜோன்ஸின் கட்டுப்பாட்டில் இருந்த ஜேக் எப்படி எஸ் ஆனார், டேவி ஜோன்ஸின் லப் டப் இதயத்துக்கு என்ன ஆச்சு, வில்லும் எலிசபெத்தும் இதுலயாவது ஒன்னு சேர்ந்தாங்களா... இதுதான் 'அட் வேர்ல்ட்ஸ் எண்ட்'.

வில்லன் : பெக்கெட், டேவி ஜோன்ஸ்

On Strangers Tides :

stranger tides

பத்து வருடத்துக்கு கரை ஒதுங்க முடியாத வில் டர்னர், கணவனை பிரிந்து பார்க்க முடியாமல் ஏக்கத்தில் இருக்கும் எலிசபெத்,  இருவருமே இந்த பாகத்துக்கு மெடிக்கல் லீவ். சாவின் விழும்பில் தத்தளித்துக் கொண்டிருக்கும் ப்ளாக்பியர்டு எப்படி ஃபவுன்டெயின் ஆஃப் யூத் என்ற இடத்தை அடைகிறார், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள என்னென்ன வில்லத்தனங்களை செய்கிறார் என்பதுதான் 'ஆன் ஸ்ட்ரேஞ்சர்ஸ் டைட்ஸ்'. படத்தின் மிகப் பெரிய ப்ளஸ் கதாநாயகி பினொலெப் க்ரூஸ்தான். அப்புறம் வழக்கம் போல் ஜேக், பர்போசா, ப்ளாக்பியர்டு சண்டையிட, யார் கடல் கன்னியின் உதவியுடன் ஜெயிக்கிறார்கள் என்பதை படம் சொல்லும்.  

 

வில்லன் : ப்ளாக்பியர்டு

 

19 ஆண்டுகள் கழித்து... ஹென்ரி டர்னர் தன் தந்தை வில் ட்ர்னரை காப்பாற்ற முயலும் காட்சிகளோடு ஆரம்பிக்கிறது 'டெட் மென் டெல் நோ டேல்ஸ்'. ஹென்ரி இருக்கும் கப்பல் தவறுதலாக டெவில்ஸ் டிரையாங்கிளுக்குள் செல்ல, அதில் இருக்கும் அனைவரையும் கொன்று, ஹென்ரியிடம் ஜேக்கை செல்லமாக நலம் விசாரிக்கிறார் புது வில்லன் சலஜார். ஜேக் ஸ்பாரோ ஒரு பாட்டில் ரம்மிற்காக காம்பசை விற்க, அடுத்தடுத்து நடக்கும் அதிரிபுதிரி சாகசங்கள்தான் 'டெட் மென் டெல் நோ டேல்ஸ்'.

Dead men tell no tales

 

எப்போதும் போல் அசால்ட்டான முறையில் என்ட்ரி கொடுக்கிறார்  ஜானி டெப். தன் வயதை(53) விட முதிர்ச்சியான கதாப்பாத்திரம் என்றாலும் ஜேக் அவர் தொணியில் செய்யும் காமெடிகள் எல்லாம் வேற லெவல். தள்ளாட்ட நடை, எதைப் பற்றியும் கவலைப்படாத அந்த ரியாக்‌ஷன்ஸ், சட்டென ஜெர்க் கொடுத்து ஷாக் ஆகும் பார்வை, சிம்பிளாய் சொல்ல வேண்டுமென்றால் ஜேக் ஸ்பாரோ இஸ் பேக். அவரின் நக்கல், நையாண்டி க்ளைமாக்ஸ் வரை தொடர்கிறது.

 

அதிலும் சலஜார் சொல்லும் அந்த ப்ளாஷ்பேக்தான் படத்தின் உச்சக்கட்டம். இளவயது CGI ஜேக் ஸ்பாரோ இடம்பெறும் காட்சிகள் 'பாகுபலியாகிய நான்' சீன் அளவுக்கு மெர்சல் காட்டியது. அந்த சீன் கொடுத்த ஃபீலை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது தியேட்டரில் போய் என்ஜாய் கரோ. ஆக்டோபஸ் மூஞ்சன் டேவி ஜோன்ஸ் அருவருப்பான தோற்றத்துடன் இருக்கும் வில்லன் என்றால், சலஜார் மேக்அப் மூஞ்சி, சி.ஜி மண்டை என மிரட்டுகிறார். ப்ளாக்பியர்டுக்குப் பிறகு முகத்திலேயே சர்வ லட்சணங்களும் பொருந்திய வில்லன் கலை சலஜாருக்குத்தான் வாய்த்திருக்கிறது. 

Dead men tell no tales

 

முதல் பாகத்தை ஞாபகப்படுத்தும் சில புது கதாபாத்திரங்கள் (அடுத்தடுத்த பாகங்களுக்காக இருக்கலாம்) முந்தைய பாகங்களின் தொடர்புகள் என இது ஒரு பெர்ஃபெக்ட் சீக்வல்.

 

'அட் தி வேர்ல்ட்ஸ் எண்டு' படத்தில் சுழலில் மாட்டிக்கொள்ளும் காட்சி, அதோடு கப்பல்விட்டு கப்பல் சென்று சண்டை போடுவது, என அந்த சீனே வேற லெவலில் இருக்கும். அதே போல் இந்தப் பாகத்திலும் கண்ணுக்கு குளிர்ச்சியாய் வியக்க வைக்கும் கிளைமாக்ஸ் காட்சி இடம்பெற்றிருக்கிறது.மற்ற பாகங்களோடு ஒப்பிடுகையில், இது சற்று நேரம் குறைவு என்றாலும், ஜாலியான காட்சிகளை மட்டுமே வைத்துக்கொண்டு ஒப்பேற்றுவது, படத்தின் இறுதியில் லைட்டாக சோம்பல் முறிக்கச் செய்தது.

Dead men tell no tales

மீண்டும் மீண்டும் வரும் ஒரே கதாப்பாத்திரங்கள் , முந்தைய பாகங்களை பிரதியெடுக்கும் காட்சி அமைப்புகள் என பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படங்கள் ஒரு கட்டத்தில் பொறுமை இழக்கச் செய்கிறது. காம்பஸ் தான் ஏற்கெனவே பல பேரிடம் இருந்துள்ளதே, வில் எப்படி நார்மல் ஆனார், ஜேக்கின் வயது தான் என்ன, எல்லா பைரேட்ஸையும் எத்தனை பேரு தான் கொல்வீங்க...   இப்படி பல கேள்விகள். ஜேக் ஸ்பேரோ படங்களில் லாஜிக்கா என கோபப்படாமல், படக்குழுவுக்கு கடிதம் எழுத வேண்டுமென்றால், பல கேள்விகள் தோன்றுகிறது. எப்படியும் ஜானி டெப்பின் அந்த கோமாளித்தன நடிப்பு, படத்தின் வசூலை எடுத்து வந்துவிடுவதால், அதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதேயில்லை. கதை பல இடங்களில், ஜேக் ஸ்பேரோவைவிட அதிகமாக தள்ளாடுகிறது. 

படத்தின் டிரெய்லரைக் காண

 

 

 

படத்தின் இறுதியில் இடம்பெறும் போஸ்ட் கிரெடிட்ஸை மறக்காமல் பார்க்கவும். ஸ்பாய்லர் எல்லாம் சொல்ல வேண்டுமென்றால், இவனும் சாகலையா என நீங்கள் காண்டாவது உறுதி. சிம்பிளாக சொல்ல வேண்டுமென்றால் சென்ற பாகத்தைவிட இது செம்ம படம்! 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close