Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மம்மி பாவம்... விட்ருங்க ப்ளீஸ்! TheMummy படம் எப்படி?

உயிரோடு புதைக்கப்பட்ட ஒரு பெண், 1,000 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மியாகச் செய்யும் அட்டகாசங்களே `தி மம்மி 2017'.

`தி மம்மி' என்ற போஸ்டரைப் பார்த்ததும், அந்தத் திகில் கிளப்பும் இசையும் பாலைவனக் காட்சிகளும், ப்ரெண்டன் ஃப்ரேசர், ரேச்சல் வெய்ஸ், ஹமுனாபுத்ராவ் செல்வதும், அங்கு இருக்கும் மம்மி தற்செயலாக எழுவதும் என திகில் காட்சிகள்தான் நினைவு வரும். அதற்குப் பிறகு `தி மம்மி ரிட்டன்ஸ்', `தி மம்மி: டாம்ப் ஆஃப் தி டிராகன் எம்பரர்' எனப் பல மம்மிகள் எழுப்பப்பட்டன. 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு மம்மி படம். அதுவும் ஆக்‌ஷன் ஹீரோ டாம் க்ரூஸ், ரஸ்ஸல் க்ரோவ் எல்லாம் நடிக்கிறார்கள் என்றதும், நடிகர்களுடன் புது மம்மியின் எதிர்பார்ப்பும் கூடியது.

எப்படி இருக்கிறது `தி மம்மி (2017)'?

தி மம்மி

தன் நாட்டுக்கு அரசியாக விரும்பும் இளவரசி அமனெட், வழக்கம்போல் குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் கொன்று, கடைசியாகக் காதலரையும் 'செட்' கடவுளுக்குப் பலியிட முயல்கையில், உயிரோடு புதைக்கப்படுகிறாள். தற்போதைய ஈராக்கில் நிக் மார்ட்டனும் ( டாம் க்ரூஸ்) அவன் நண்பரும் புதையலைத் தேடிக் கிளம்ப, அவர்களுக்கு இந்த மம்மியின் கல்லறை கிடைக்கிறது. அதற்குள் சென்று மம்மியை எடுத்துக்கொண்டு லண்டனுக்குக் கிளம்ப, மம்மியும் உயிருடன் கிளம்புகிறது. பிறகு, லண்டனில் நடக்கும் அதிரடிதான் மீதிப்படம். 

புதைக்கும்போது கட்டப்பட்ட துணியோடுதான் வில்லி சோஃபியா படம் முழுக்க வருகிறாள். ஃப்ளாஷ்பேக் காட்சிகள் முழுக்க மாண்புமிகு சென்சார் போர்டு கறுப்பு மையைப் பூசி, சோஃபியாவின் காட்சிகளை மறைத்திருக்கிறார்கள். ( ஸ்பாய்லர்ஸ்க்கு நன்றி சொல்லலாம்). ஒவ்வொரு கண்ணிலும் இரண்டு கருவிழிகள் என வில்லத்தனத்துக்கு மை பூசி இருக்கிறார்கள். வில்லி மீண்டும், உலகை ஆள, தன் காதலரை அதே கத்தியால் கொல்ல வேண்டும். அதன் தற்போதைய காதலர் டாம் க்ரூஸ், மம்மி டாம் க்ரூஸை ரொமான்ட்டிக்காக அணுகும்போதெல்லாம், `ஜெகன்மோகினி' படம்தான் ஞாபகம் வந்தது. முதலில் இந்த மம்மியை யார் எழுப்பியது என்பதற்கான காட்சிகள்கூட தெளிவாக இல்லை. 

தி மம்மி


இதுபோக, படத்தில் டாக்டர் ஜெக்கில்லாக வரும் ரஸ்ஸல் க்ரோவ், அவ்வப்போது வில்லன் கதாபாத்திரமான எட்வார்டு ஹைடாக மாறுவார் (இந்தக் கதாபாத்திரத்தைத் தனிப்படமாக எடுக்க இருக்கிறார்கள்). ஆனால், அவர் நல்லவரா... கெட்டவரா என இறுதிவரையில் கண்டுபிடிக்க முடியவில்லை. முதல் பாதி முழுக்க `ஜெயம்' பட க்ளைமாக்ஸ் கோபிசந்த் போல், டாம் க்ரூஸை அடைய வில்லி சோஃபியா நடந்துகொண்டே இருப்பார். அதிலும் இறுதியில் தண்ணீருக்குள் ஹீரோ, ஹீரோயின், வில்லி, 'மம்மி அடியாள்கள்' எல்லாம் தண்ணீருக்குள் சண்டையிடுவது எல்லாம் கிச்சுக் கிச்சு ரகம். அதிலும் `ஓர் அடியாள் மம்மி', நீச்சல் தெரியாமல் தண்ணீருக்குள் மூழ்கிவிடும். (பாலைவனத்தில் இருந்த மம்மி, அதுவும் 1,000 வருஷங்கள் ஆகிருச்சு. நீச்சல் மறந்துபோயிருக்கும்போல).  அதுவும் அந்த க்ளைமாக்ஸ் காட்சி யோசித்ததற்கே, திரைப்படக் குழுவைத் தனியாகப் பாராட்டலாம்.

1999-ம் ஆண்டு வெளியான `மம்மி'யில் பாலைவன மண்ணிலிருந்து வில்லன் இம்ஹோடெப் கிளம்பி, ஹீரோ குழுவின் ஹெலிகாப்டரை அழிப்பான். அதை மீள் உருவாக்கும் செய்கிறேன் என லண்டன் தெருக்களில் வில்லியை மண் மூலம் வாய் பிளக்க வைத்திருக்கிறார்கள். ஆனால், மண் விழுந்ததென்னவோ படத்தில்தான். 

தி மம்மி

 
54 வயதிலும் டாம் க்ரூஸ் அதிரடியில் கலக்குகிறார். கட்டடங்களில் தாவுவது, துப்பாக்கிக் குண்டுகளுக்கு இடையே சிக்கிக்கொள்ளாமல் ஓடுவது, சண்டைக் காட்சிகளில் தூக்கி எறியப்படுவது... என சில நிமிடம் நாம் பார்ப்பது `மம்மி'யா அல்லது `மிஷன் இம்பாசிபிளா' என்னும் அளவுக்கு அதிரடியாகச் சண்டைபோடுகிறார். `சல்லி' படத்தில் பறவைகள் விமானத்தைத் தாக்குவதுபோல், காக்கைக் கூட்டம் ஒன்று லண்டன் நோக்கி விமானத்தைக் கிழித்தெறியும். அதேபோல் லண்டனிலிருக்கும் அந்தக் கட்டடத்தின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்குவது என, சில காட்சிகளின் விஷுவல்ஸ் செம.  டாம் க்ரூஸின் நண்பராக வரும் ஜேக் ஜான்சனும் சில ஒன்லைனர்கள் சொல்லி சிரிக்கவைக்கிறார்.  

 

டிசி தன் `எக்ஸ்டெண்டட் யுனிவெர்ஸ்' மூலம் `தி மேன் ஆஃப் ஸ்டீல்', `பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன்' போன்ற படங்களை எடுப்பதுபோல், யுனிவெர்சல் நிறுவனம் டார்க் யுனிவெர்ஸை ஆரம்பித்திருக்கிறது. அதன்படி யுனிவெர்சலின் பழைய படங்களான `தி இன்விசிபிள் மேன்', `தி ஹன்ச் பேக் ஆஃப் நோட்ர் டேம்' (The Hunchback of Notre Dame),  `டிராகுலா' போன்ற படங்களை மீண்டும் தயாரிக்க இருக்கிறார்கள். ஆனால், `தி மம்மி'யை அவர்கள் மீள் உருவாக்கம் செய்திருப்பதைப் பார்த்தால், 'ஃபர்னிச்சர் மேல கைய வெச்ச... மொத டெட்பாடி நீதான்' என்னும் வடிவேலு வசனம்தான் நினைவுக்குவருகிறது.

டாம் க்ரூஸ் அறிமுகமாகும் முதல் காட்சிதான் படத்தின் இறுதிக்காட்சியும். அடுத்த பாகமும் இப்படித்தான் இருக்கும் என்றால், மம்மிகள் நிம்மதியாக உறங்கட்டும் பாஸ், ப்ளீஸ்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்