Published:Updated:

பெர்ஃபெக்ட் வில்லன்... இம்பெர்ஃபெக்ட் ஹீரோ... #BlackPanther படம் எப்படி?

கார்த்தி
பெர்ஃபெக்ட் வில்லன்... இம்பெர்ஃபெக்ட் ஹீரோ...  #BlackPanther படம் எப்படி?
பெர்ஃபெக்ட் வில்லன்... இம்பெர்ஃபெக்ட் ஹீரோ... #BlackPanther படம் எப்படி?

வழக்கம்போல சூப்பர்ஹீரோ படங்களுக்கே உரித்தான சகோதர யுத்தம்தான் பிளாக் பேந்தர். ஆனால், மார்வெல்லுக்கு முதல்முறையாக ஒரு ஹீரோ, கதையின் தேவைக்காக ஒரு வில்லன் என பெர்ஃபெக்ட்டாக வந்திருக்கிறது பிளாக் பேந்தர் Black Panther. இதற்கு முன் பேட்டி ஜென்கின்ஸ் இயக்கிய டிசியின் வொண்டர் வுமனுக்கு இப்படியொரு கதைக்களம் அமைந்தது.

Long Long Ago So Long Ago ஐந்து ஆப்பிரிக்க பழங்குடியினர் ஏலியன் ஒன்றுடன் சண்டைக்குச் செல்கிறார்கள். சண்டையில் பழங்குடியினரின் கூட்டத்திலிருந்து முதல் பிளாக் பேந்தர் உருவாக , அவன் மற்ற கூட்டங்களின் தலைவன் ஆகிறான். அங்கு அவர்களுக்குக் கிடைக்கும் வைப்ரேனியத்தை வைத்து அவர்களின் வக்காண்டா தேசத்தை டெக்னிக்கலாக மாற்றுகிறார்கள். ஆனால், யாருக்கும் தெரியாமல், இன்னும் மூன்றாம் உலக நாடாகவே தங்களை காடுகளுக்குள் மறைத்து வாழ்ந்துவருகிறார்கள்... 

கேப்டன் சிவில் வார் படத்தில் வரும் ஐக்கிய நாடுகள் கூட்டமைப்புக் காட்சியில் அப்பா பிளாக் பேந்தர் டி'சாகா T'Chaka இறந்துவிட, வக்காண்டாவின் புது ராஜாவாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறான் T'Challa டி'சாலா (போஸ்மேன்) .


"இங்க பார்த்த எதையும் வெளிய சொல்லிடாதே, ஓடிடு" எனச் சொல்லி, அவனை ஓட ஓட சுட்டுவிட்டு, "ஒரே இடத்துல எல்லாத்தையும் சுட்டு வீழ்த்தினா, நம்மள அமெச்சூர்னு சொல்லிடுவாங்கப்பா " என கிளேவின் ஆரம்பமே அசத்தல் ரகளை. மற்றொரு வில்லனான  'ஜடாகாவின் கதாபாத்திரம் இன்னும் அருமை. ஒவ்வொரு முறை கொலை செய்யும் போதும் தன் உடலில் ஒரு தழும்பை ஏற்படுத்திக்கொள்வது , ' இன்னும் போட்டி முடியலை என அப்பாவியாய் பிளாக் பேந்தர் வரும் போது', "இன்னுமா அதெல்லாம் நீ நம்பிக்கிட்டு இருக்க" என அவனை லெஃப்ட்டில் டீல் செய்வது , என மார்வெல் சினிமாக்களில் ஒரு பெர்ஃப்கெட் வில்லன் கதாபாத்திரம். 2008ல் வெளிவந்த அயர்ன்மேன் படத்திலிருந்து எடுத்துக்கொண்டால் இது மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸின் 18வது திரைப்படம். ஹீரோவிடம் அடி வாங்குவதற்காகவே படைக்கப்பட்ட வில்லன், உலகை அழிக்கும் வில்லன் என டெம்ப்ளேட்டுகளுக்குள் சிக்காமல், ஹீரோக்களின் தவறால் உருவான வில்லன், அதை இறுதிவரை திருத்த முற்படும் ஹீரோ, இறுதியில் வில்லன் சொல்வதில் இருக்கும் நியாயத்தைப் புரிந்துகொள்ளும் ஹீரோ எனப் பல இடங்களில் ஒரு முழுமையான வில்லன்.

படத்தில் காமெடி வில்லனாக வரும் கிளே (ஆண்டி செர்கிஸ்), அதிகாரி ராஸ் (மார்ட்டின் ஃப்ரீமென் ) தவிர அனைவரும் கறுப்பினத்தவர்கள். வக்காண்டா தேசத்தில் இருக்கும் ஐந்து பழங்குடி இனங்கள், டி'சாலாவின் காதலி நகியா (லூபிடா), வக்காண்டாவின் கட்டம்மாவான ஒக்கோய் எனப் படம் முழுக்க ஓர் ஆப்பிரிக்க தேசத்துக்குள் சென்ற ஃபீலைக் கொடுக்கிறது. அதிலும் டி'சாலாவின் தங்கையாக வரும் ஷூரி வரும் எல்லாக் காட்சிகளும் டெக்னிக்கல் மிரட்டல் + காமெடி ரகம். படத்தில் இருக்கும் சின்ன சின்ன கதாபாத்திரங்கள் கூட சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றன. சமீபகாலமாக சூப்பர் ஹீரோ படங்களில் வரும் நக்கல் எபிசோடை இந்த முறை கவனித்துக்கொள்வது ஜபாரி இனத் தலைவராக வரும் ம்'பகு M'Baku. பழங்குடியினர் கூட்டத்துக்குள் ஜூம் செய்து நீங்கள் தேடினால், சிங்கம்- 2 ல் சூர்யா துரத்தி துரத்தி ஓங்கி அடித்த டேனியை உங்களால் கண்டுபிடிக்க முடியும்.

பூசனில் வரும் கார் சேஸ் காட்சியைத் தவிர்த்து மற்ற காட்சிகள் அனைத்திலும், பழங்குடியினரின் பார்ம்பர்ய இசையைப் பயன்படுத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் லுட்விக் கொரான்சன். படத்தில் மிகவும் சப்ட்டிலாக இருந்தாலும், படம் நெடுக வரும் அந்த இசை வெறித்தனம். மைக்கல் ஜோர்டன் , சில்வர்ஸ்டர் ஸ்டாலோனை வைத்து க்ரீட் படத்தை இயக்கிய ரியன் கூக்லர், இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

சற்றே படத்துக்கு அப்பால் (ஸ்பாய்லர்கள் !!!) 

படம் கறுப்பினத்தவர்களுக்கும், ஆப்பிரிக்க பழங்குடியினருக்கும் மிகவும் முக்கியமானதொரு படமாக கருதப்படுப்படுகிறது. சூப்பர் ஹீரோக்கள் பெரும்பாலும் கிரேக்க புராணங்களில் இருந்து மட்டுமே ஆரம்பகட்டங்களில் வெளிவந்துகொண்டு இருந்தது. டிசியின் பேட்மேன், மார்வெல்லின் கேப்டன் அமெரிக்கா போன்றவை சில விதிவிலக்கு. டெக்னோ கதாப்பாத்திரங்கள் தனிப்பிரிவு. ஸ்டாண்ட் அலோன் Satnd Alone திரைப்படங்கள் தவிர்த்து, இதுவரையில் வெளிவந்திருக்கும் குழு திரைப்படங்களில் கூட, பிளாக் பேந்தர் கதாப்பாத்திரம் பெரிதாக தலை காட்டியதில்லை. சமீப காலங்களில் தொடர்ச்சியாக ஹாலிவுட் சினிமாக்களில் ஒரு விஷயத்தை பார்க்க முடிகிறது. வரலாறு என்பது உண்மை இல்லை என்பதை, தொடர்ச்சியாக சினிமா உரக்க ஒளிபரப்பிக்கொண்டே வருகிறது. அதே போல், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், #OscarsSoWhite சர்ச்சை வெடித்தது. கறுப்பின கலைஞர்கள்  பலர் ( வில் ஸ்மித் , ஸ்பைக் லீ, பிளாக் பேந்தர் இயக்குநர் ரியன் கூக்லர் )  ஆஸ்கர் விழாவையே புறக்கணித்தனர்.   ஆனால், பிளாக் பேந்தர் போன்று ஒரு சூப்பர்ஹீரோ படம், கறுப்பின ஹீரோ படம் இங்கு நிச்சயம் தேவை. கறுப்பின இயக்குநர், கறுப்பின மக்கள் ஆதிக்க மக்களை ஒடுக்கி மேல எழ வேண்டும் என நினைக்கும் வில்லன் கதாப்பாத்திரம்,  கெண்ட்ரிக் லமரின் இசை, என படம் கறுப்பினத்தவர்களால் எடுக்கப்பட்ட திரைப்படம். படத்தில் வரும், ஜபாரி பழங்குடியினரின் தலைவன் சொல்வது போல், கறுப்பினத்தவர்களுக்கும் இன்னும் பிரிவினை இருக்கத்தான் செய்கிறது. வில்லனின் எண்ணமான ஒடுக்கப்பட்ட , ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் கறுப்பினத்தவரகள் வைப்ரேனியம் துணை கொண்டு ஆதிக்க சக்திகளை வீழ்த்தி அவர்களின் கை மேலோங்க வேண்டும் என்பது ஒருவரின் கருத்தியலாக இருக்கலாம். ஆனால், போஸ்ட் கிரெடிட்ஸ் காட்சியில் ஹீரோ பிளாக் பேந்தர் சொல்வது சர்வதேச ஆணையத்தில் சொல்வது போல், எல்லோரும் இங்கு ஒரே குடையின் கீழ் ஒரு குடியாக ஒன்றிணைவது அவசியம்.  

படத்தின் டிரெய்லர்

பிளாக் பேந்தரின் மூலம், இந்த ஆண்டு தனது கணக்கை வெற்றியுடன் தொடங்கியிருக்கிறது மார்வெல். மே மாதம் வரும் அவெஞ்சர்ஸ் : இன்ஃபினிட்டி வாருக்குக் கெத்தாகக் காத்திருக்கலாம் மார்வெல் ரசிகர்கள். போஸ்ட் கிரெடிட்ஸ் காட்சிகளைப் பொறுமையாகப் பார்த்துச் சென்றால், மே மாத பரிசு காத்திருக்கிறது.

டிசி எக்ஸ்டெண்ட் யுனிவர்ஸ் (DCEU) ரசிகர்களே! நீங்கள் ஆண்டின் இறுதிவரை காத்திருந்து ஜேசன் மோமோ நடிப்பில் வெளியாக இருக்கும் அக்வாமேனில் பூனை கெடக்கான்னு பார்க்கவும்...