Published:Updated:

சீனாவில் தடைசெய்யப்பட்ட பூஹ் கேரக்டர்... ‘கிறிஸ்டோபர் ராபின்’ படம் எப்படி? #ChristopherRobin

ர.முகமது இல்யாஸ்
சீனாவில் தடைசெய்யப்பட்ட பூஹ் கேரக்டர்... ‘கிறிஸ்டோபர் ராபின்’ படம் எப்படி? #ChristopherRobin
சீனாவில் தடைசெய்யப்பட்ட பூஹ் கேரக்டர்... ‘கிறிஸ்டோபர் ராபின்’ படம் எப்படி? #ChristopherRobin

பெரியவர்கள் ஆகிவிட்ட அனைவருக்கும் குழந்தைப் பருவத்துக்குத் திரும்ப வேண்டும் என்ற ஆசை இருக்கும். பெரியவர்களுக்குக் குடும்பம், பணி, எதிர்காலம் எனப் பொறுப்புகளை சுமந்து வாழ வேண்டிய நிர்பந்தம் இருக்கும். குழந்தைகள் எதிர்காலத்தின் மீது பெரிய கவலைகள் இல்லாமல், நிகழ்காலத்தைக் கொண்டாடி வாழ்வர். நமது குழந்தைப் பருவ வாழ்க்கையை நாம் `நாஸ்டால்ஜியா’ என்ற பெயரில் நினைத்து மகிழ மட்டும் வைத்திருக்கிறோம். 

மெச்சூரிட்டி என்ற பெயரில் நமது குழந்தைப் பருவ விளையாட்டுகளை மீண்டும் நாம் விளையாடிப் பார்ப்பதில்லை. குழந்தைகளின் உணர்வுகளையும் மதிப்பதில்லை. அலுவலக மீட்டிங்கில் சமர்பிக்க வேண்டிய டாக்குமென்ட்களை விட, ஒரு சிவப்பு கலர் பலூன் குழந்தைகளின் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

கிறிஸ்டோபர் ராபின் சிறுவனாக இருந்த போது, அவன் வீடு இருந்த பகுதியில் ஒரு காடு இருக்கும். அங்கு அவனது நண்பர்கள் இருந்தனர். உயிரோடு இருந்த பஞ்சு பொம்மைகள்தாம் கிறிஸ்டோபர் ராபினின் நண்பர்கள். ஒவ்வொரு விடுமுறையின் போதும், கிறிஸ்டோபர் அவன் நண்பர்களுடன் விளையாடி மகிழ்வான். `வின்னி தி பூஹ்’ எனப் பெயர்கொண்ட டெடி பியர், `டிக்கர்’ என்ற பெயர்கொண்ட புலி பொம்மை, `பிக்லெட்’ என்ற பன்றிக்குட்டி பொம்மை முதலானவை அந்தக் காட்டில் உயிருடன் வாழ்ந்து வந்தன. 

கோடை விடுமுறை முடிந்து, ஒரு நாள் கிறிஸ்டோபர் பள்ளி விடுதிக்குக் கிளம்புகிறான். முப்பது ஆண்டுகளாக அவன் நண்பர்களைச் சந்திக்க திரும்பி வரவேயில்லை. இரண்டாம் உலகப் போர் நிகழும் காலகட்டம் அது. கிறிஸ்டோபர் சூட்கேஸ் செய்யும் நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறான். அலுவலகத்தில் அவனுக்குக் கொடுக்கப்படும் அழுத்தத்தினால், குடும்பத்தோடு திட்டமிட்டிருந்த வீக் எண்ட்  பயணத்தைத் தவிர்க்க வேண்டியதாகப் போகிறது. அலுவலகம், குடும்பம் எனப் பெரும் மன அழுத்ததில் உழலும் கிறிஸ்டோபர் ராபின் லண்டனில் ஒரு பூங்காவில் தன் பழைய நண்பன் ’பூஹ்’வை மீண்டும் சந்திக்கிறான். பூஹ் இன்னும் குழந்தைத்தனமாக இருப்பது அவனுக்கு எரிச்சலைத் தருகிறது. 

கிறிஸ்டோபர் ராபினின் குடும்பப் பிரச்னை தீர்ந்ததா, அலுவலகப் பிரச்னை என்ன ஆனது, பூஹ் மீண்டும் தன் இருப்பிடத்துக்குத் திரும்பிச் சென்றதா, மற்ற நண்பர்கள் என்ன ஆனார்கள் என்பது மீதிக்கதை. 

டிஸ்னி தயாரிப்பில் லைவ் ஆக்‌ஷன் திரைப்படமாக வெளிவந்திருக்கிறது கிறிஸ்டோபர் ராபின். 90’ஸ் கிட்ஸ் மட்டுமல்ல, அவர்களுக்கு முன்பு இருந்த 80’ஸ் கிட்ஸ்களுக்கும், 70ஸ் கிட்ஸ்களுக்கும் மிகவும் பிடித்த கார்ட்டூன் கேரக்டர்களுள் ஒன்று பூஹ். அதை தற்போதைய குழந்தைகளுக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியாக இந்தத் திரைப்படம் வெளிவந்திருக்கிறது. 

மார்க் பாஸ்டர் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம் குழந்தைகளின் உலகத்தைப் பற்றியும், நண்பர்களின் தேவையைப் பற்றியும் பேசுகிறது. சமயங்களில் அட்வைஸ் சொன்னாலும், பல இடங்களில் காமெடியையும் கலந்து வைத்திருக்கிறது இந்தத் திரைப்படம். பேசும் பொம்மையான பூஹ் லண்டன் வீதிகளில் சுற்றித் திரிந்து, செய்யும் சேட்டைகளையும் அதைக் கட்டுபடுத்த கிறிஸ்டோபர் எடுக்கும் முயற்சிகளும்  சிரிப்பை வரவழைக்கின்றன.

யாரையும் காயப்படுத்தாமல், சிரிப்பை வரவழைக்கும் பூஹினால், இந்தத் திரைப்படம் சீனாவில் தடைசெய்யப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சீன அதிபர் ஜி ஜின்பிங் `வின்னி தி பூஹ்’ கேரக்டரைப் போல உள்ளார் என சீன நெட்டிசன்கள் கிளப்பிவிட்டனர். சீன அதிபரை விமர்சிக்கும் போதெல்லாம், பூஹ் பயன்படுத்தப்பட, சீன அரசின் சென்சார் குழுவினர் இணையத்தில் பூஹ்வின் படத்தை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக இந்தத் திரைப்படம் சீனாவில் தடைசெய்யப்பட்டுள்ளது. 

லைவ் ஆக்‌ஷன் அனிமேஷனில் பொம்மை கதாபாத்திரங்கள் ரியலாக வடிவமைக்கப்பட்டுள்ளன. பொறுமையாகத் தொடங்கும் கதை மிக வேகமாகவும், அவசரமாகவும் முடிகிறது. மேலும் கிறிஸ்டோபர் ராபினின் வாழ்க்கையைப் போல மிக டல்லாக இருக்கிறது படத்தின் கலர்டோன். அது இந்தத் திரைப்படம் வளர்ந்தவர்களுக்கானதா, குழந்தைகளுக்கானதா என்று குழப்பத்தை உண்டாக்குகிறது. இவை படத்தின் முக்கியமான மைனஸ்களாக தெரிந்தன.

மைனஸ்களை கழித்துப் பார்த்தால், குழந்தைகளோடு ஒன்றரை மணி நேரம் மகிழ்ச்சியாக்கும் ஃபீல் குட் திரைப்படமாக கிறிஸ்டோபர் ராபின் இருக்கும்.