Published:Updated:

28 பில்லியன் டாலர் நிறுவனத்தை எதிர்த்து வென்ற தனி ஒருத்தி! #MustSeeMovie

விகடன் விமர்சனக்குழு
28 பில்லியன் டாலர் நிறுவனத்தை எதிர்த்து வென்ற தனி ஒருத்தி! #MustSeeMovie
28 பில்லியன் டாலர் நிறுவனத்தை எதிர்த்து வென்ற தனி ஒருத்தி! #MustSeeMovie
28 பில்லியன் டாலர் நிறுவனத்தை எதிர்த்து வென்ற தனி ஒருத்தி! #MustSeeMovie

இந்தக் கதையின் நாயகி எரின் புரோகோவிச். கணவனைப் பிரிந்த, மூன்று குழந்தைகளுக்குத் தாயான அவளுக்கு வேலை இல்லை. அமெரிக்காவில் பெரும்பாலும் எல்லோருக்கும் வீடும், காரும் இருக்கும். ஆனால் வேலைவாய்ப்பும் பணப்புழக்கமும் இல்லாததால் கடனும் அதிகமாக இருக்கும். எரினுக்கு 17000 டாலர் கடன் இருக்கிறது. கடனை அடைக்க வேண்டும். தன் மூன்று குழந்தைகளுக்கு கல்வி, உணவு ஆகியவற்றுக்குப் பணம் வேண்டும். அவளுக்கென்று உதவ யாரும் இல்லை. ஆனால் தொடர்ந்து மனந்தளறாமல் போராடிக் கொண்டிருக்கிறாள். பல வேலைகளுக்கு முயற்சிக்கிறாள். எதுவும் கிடைத்த பாடில்லை. ஒரு முறை நேர்காணலுக்குப் போய் தோல்வியடைந்து திரும்பும்போது, ஒரு டாக்டருடைய கார் அவளது காரில் மோதி கழுத்தின் ஸ்பைனில் விரிசல் ஏற்படுகிறது.

28 பில்லியன் டாலர் நிறுவனத்தை எதிர்த்து வென்ற தனி ஒருத்தி! #MustSeeMovie

அதற்கு எட் மாரிஸ் என்ற வழக்கறிஞர் மூலம் வழக்கு தொடுக்கிறாள். ஆனால் இவளுடைய வாதம் வழக்கை வெல்லும் அளவுக்கு வலுவான ஆதாரங்களுடன் இல்லாததால் தோல்வியடைகிறது. எட்’டும் இந்த வழக்கைக் கண்டுகொள்ளாமல் எரினின் போன் அழைப்புகளையும் புறக்கணித்து விடுகிறார். எரின் ஒரு பெண். ஆனால் சாதாரணப் பெண் அல்ல. மூன்று குழந்தைகளை வளர்க்கும் கடமையைத் தாண்டி தன்னால் என்ன செய்ய முடியும் என்பதை சிந்திப்பவள். அதற்கான தேடலும் முயற்சியும் அவளிடம் இருந்தது. அது அவளை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றது. ஆனால் மூன்று குழந்தைகள் மட்டுமே உள்ள தனி ஒரு பெண்ணாக அவளுக்கு பயமும் இருந்தது. அந்த பயத்தினால் அவளுக்கு ஒரு காதலும் கிடைத்தது. வழக்கைதான் நம்மால் ஜெயிக்க முடியவில்லை. தினசரி உணவுக்காவது அந்த வழிக்கறிஞரிடம் வேலை வாங்கியே தீர வேண்டும் என்ற முடிவில் எட் மாரிஸ் அலுவலகத்துக்கு செல்கிறாள். அங்குத் தான் தோற்றுவிட்டதைக் காரணம் காட்டியும் நீங்கள் வேலை தந்தே ஆக வேண்டும் எனக்கு வேறு வழியே இல்லை என்று நாசூக்காக மிரட்டியும் வேலை கேட்கிறாள்.

இறுதியாக என்னைக் கெஞ்ச வைக்காதீர்கள் என்று கேட்க, எட் மனமிறங்கி அவளுக்கு ஆவணங்களை வகைப் பிரித்து வைக்கும் வேலை கொடுக்கிறார். இங்குதான் தொடங்குகிறது அவளது போராட்டம். அவள் ஆவணங்களை வகைப் பிரிக்கும் வேலைகளை மட்டும் பார்க்கவில்லை. அவளுக்குள் இருந்த தேடல் ஆவணங்களை ஆராய்ச்சி செய்யவும் தூண்டுகிறது. அந்த ஆராய்ச்சியில் அவளுக்கு சவாலாக சிக்கியதுதான் 28 பில்லியன் டாலர் மதிப்புடைய பசிபிக் கேஸ் அண்ட் எலக்ட்ரிக் நிறுவனம், ஹிங்க்லியில் உள்ள நோய்வாய்ப்பட்ட ஒரு குடும்பம் வசிக்கு வீட்டிற்கு 2,50,000 டாலர் விலை பேசியிருந்தது. ஒரு பெரிய நிறுவனம் இப்படி இடங்களை வாங்குவது சாதாரணம். ஆனால் அதற்கான ரியல் எஸ்டேட் ஆவணங்களில் அந்தக் குடும்பத்தினரின் நோய்களைப் பற்றிய குறிப்புகள் ஏன் இடம்பெற்றுள்ளன என்பதில் தான் எரினுக்கு சந்தேகம் இருந்தது. அந்த ஆவணத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்யத் தொடங்கியவளுக்கு அதிர்ச்சியும் சவாலும் காத்திருந்தது.

பசிபிக் கேஸ் அண்ட் எலக்ட்ரிக் நிறுவனம், ஹிங்க்லியில் உள்ள தனது உற்பத்தி நிலையத்தின் கொள்கலன்களைக் குளிர்விப்பதற்காகப் பெருமளவு தண்ணீரைப் பயன்படுத்தி வருகிறது. ஆனால் பிரச்னை இதுவல்ல. அந்தக் கொள்கலன்கள் துருப்பிடிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக, குரோமியம் என்ற கனிமம் பயன்படுத்தப்பட்டிருப்பதுதான். அதுவும் மனிதனுக்கு விஷமாக இருக்கக் கூடிய ஹெக்சாவாலண்ட் குரோமியமான குரோமியம் 6 பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஹெக்சாவாலண்ட் குரோமியம் கலந்த தண்ணீர் சுத்திகரிக்கப்படாமல் மீண்டும் நிலத்தில் கொட்டப்பட்டதன் விளைவு ஹிங்க்லி நகரம் முழுவதும் உள்ள தண்ணீர் விஷமாக மாறியிருக்கிறது. இந்தத் தண்ணீர்தான் அங்குள்ள மக்களுக்கு ஆஸ்துமா, குழந்தையின்மை, மலட்டுதன்மை, புற்றுநோய் என அனைத்து நோய்களும் வந்ததற்கு காரணம். இது பல ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படாமல் இருந்ததால் ஏறக்குறைய 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதோடு, அந்த நோயைக் காரணம் காட்டியும், அவர்களது ஏழ்மையைக் காரணம் காட்டியும், பணம் கொடுப்பதாகச் சொல்லி அங்கிருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். இவையனைத்தையும் தனி ஒருத்தியாகக் கண்டுபிடித்தாள் எரின்.

28 பில்லியன் டாலர் நிறுவனத்தை எதிர்த்து வென்ற தனி ஒருத்தி! #MustSeeMovie

இதைக் கண்டுபிடித்து ஒரு வாரத்தில் அலுவலகம் திரும்பிய எரின் வேலையை விட்டு நீக்கப்பட்டிருந்தார். ஒரு வாரம் இவர் ஊர் சுற்றிக்கொண்டு ஜாலியாக இருந்தார் என்று நினைத்ததுதான் எட் செய்த தவறு. இதனால் கடுப்பான எரின் ரொம்பவே மனமுடைந்தார். ஆனால் எரினின் உழைப்பு வீணாகவில்லை. அந்த கேஸின் சீரியஸ்னஸ் புரிந்த எட், எரின் வீட்டிற்கே வந்து மீண்டும் வேலையில் எடுத்துக்கொண்டார். மீண்டும் தன் இன்வெஸ்டிகேஷனைத் தொடங்கிய அவளுக்கு அச்சுறுத்தல் வந்தும் அவள் பயப்படவில்லை. குழந்தைகளை அவளால் சரியாகப் பார்த்துக்கொள்ள முடியவில்லை என்ற வருத்தமும் அவளுக்கு இருந்தது. ஆனால் இது சுற்றுச்சூழலுக்கும் மக்களுக்கும் எதிரான பெரிய பிரச்னை என்பதால் நிச்சயம் இதில் வெற்றியடைய வேண்டும் என்ற வெறி அவளுக்கு இருந்தது. கிடைத்த ஆதாரங்களை வைத்து அந்த 28 பில்லியன் டாலர் நிறுவனத்திடம் பேசினர். ஆனால் ஹெக்சாவாலண்ட் குரோமியம் பயன்படுத்தியைதை அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. மக்களுக்கு உள்ள நோய்களுக்கு புகைப்பிடித்தல், உணவு முறை ஆகியவற்றை காரணம் காட்டினார்கள். அதை உறுதி செய்யும் எந்த ஆதாரங்களும் இல்லாததால் உங்களால் என்ன செய்ய முடியும் என்று சவால் விட்டனர். எட் மாரிஸ்க்கு முற்றிலும் நம்பிக்கை போய்விட்டது. மேலும் இவர்களுடைய உழைப்பை பங்கு போட இன்னொரு பெரிய சட்ட நிறுவனம் தயாராக இருந்தது. ஆனால் அவர்கள் கூட இது வேலைக்காகாது என்றே இருந்தனர். ஆனால் எரினின் நோக்கம் உண்மையாக இருந்ததாலும், அவளுடைய விடா முயற்சியாலும் அதற்கான ஆவணமும் அவளுக்கு கிடைத்தது.

1966ல் இந்தக் குரோமியம் ஆபத்தானது இதை அனுமதிக்க முடியாது என்று வாட்டர் போர்ட் வழங்கிய ஆவணம், அந்த நிறுவனத்தில் வேலை பார்த்து வெளியேறிய ஒருவர் மூலம் அவளுக்கு கிடைத்தது. அவள் வெற்றி பெற்றாள். பாதிக்கப்பட்ட 634 மக்களுக்கும் சேர்த்து நீதிமன்றம் மூலமாக 333 மில்லியன் அமெரிக்க டாலர் நஷ்ட ஈடாக கிடைத்தது. அமெரிக்க நீதிமன்ற வரலாற்றிலேயே மக்களுக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச நஷ்ட ஈட்டுத் தொகை இதுதான். இத்தனைக்கும் எரின் வழக்கறிஞரோ, பத்திரிகையாளரோ கூட இல்லை. ஆனால் அவளுடைய தேடல் தெளிவாக இருந்தது. எந்தப் பிரச்னைக்கு எங்குப் போவது என்ன செய்வது போன்றவற்றையெல்லாம் தெரிந்துகொண்டாள்.

இதில் நம்மை ஆச்சர்யப்படுத்தும் விஷயம் என்னவென்றால், கதையின் நாயகியான ‘எரின் புரோகோவிச்’ (கிழே படத்தில் இருப்பவர்) வாழ்வின் நடந்த உண்மைச் சம்பவமே இந்தப் படம். அவர் பெயரிலேயே படமாக்கப்பட்ட இந்தக் கதையை இயக்கியது ஸ்டீவன் சோடன்பர்க். எரின் புரோகோவிச்சாக நடித்தவர் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை ஜூலியா ராபர்ட்ஸ்.

28 பில்லியன் டாலர் நிறுவனத்தை எதிர்த்து வென்ற தனி ஒருத்தி! #MustSeeMovie

எரின் புரோகோவிச்

எரின் புரோகோவிச் ஆதாரங்களைக் கண்டுபிடிக்கும் பயணத்தை சுவாரஸ்யமாகவும் நகைச்சுவையுடனும் கூறியுள்ள இந்தப் படம், ஒரு பிரச்னையைப் பற்றி மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வது எப்படி என்பதையும் கற்றுத் தருகிறது. ஒரு உண்மை சம்பவத்தை ஒரு ஆவணமாகச் சொல்லாமல் எல்லோருக்கும் சென்று சேரும் வகையில் ஒரு தாயின் அடிப்படை வாழ்வாதாரத்தையும், ஜெயிக்கத் துடிக்கும் அவளுடைய கனவையும் அதனோடு பிணைத்து திரைக்கதையாக்கப்பட்டிருப்பது படத்தின் தொடக்கம் முதல் கடைசி வரை நம்மை கட்டிப் போடுவதில் வெற்றி அடைகிறது. நம் நாட்டிலும் சுற்றுச் சூழலுக்கும் மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் கூடங்குளம், நியூட்ரினோ, கெயில், கோலா, யுனிலிவர் என ஆயிரம் பிரச்னைகள் உள்ளன. ஆனால் அவற்றை எதிர்த்து வெற்றியடையும் சூழல் இங்கு இருக்கிறதா என்பது கேள்விக் குறிதான். நம்மால் அந்த வெற்றிகளை, கத்தி, கத்துக்குட்டி என்று சினிமாக்களில் மட்டுமே சாத்தியப்படுத்தி கைத்தட்டி மகிழ்ச்சியடைய முடிகிறது.

- ஜெ. சரவணன் -