Published:Updated:

வேம்பயர்...ஓநாய்...மனிதர்கள் மற்றும் காதல்..! மீண்டும் வருகிறது ட்வைலைட் #Twilight

விகடன் விமர்சனக்குழு
வேம்பயர்...ஓநாய்...மனிதர்கள் மற்றும் காதல்..! மீண்டும் வருகிறது ட்வைலைட் #Twilight
வேம்பயர்...ஓநாய்...மனிதர்கள் மற்றும் காதல்..! மீண்டும் வருகிறது ட்வைலைட் #Twilight

அழகு தேவதை பெல்லாவிற்கும், 104 வயது வேம்பயர் எட்வர்ட்டுக்கும், மனித ஓநாய் ஜாக்கபிற்கும் இடையேயான முக்கோண காதல் கதை தான் ட்வைலைட். வேம்பயருக்கும் பெண்ணிற்குமான காதலை ஃபேன்டசியாக சொல்லி, ஹாலிவுட்டில் மிகப்பெரிய ஹிட்டடித்த ட்வைலைட் மீண்டும்  காதல் கதை பேசப்போகிறது. 

எழுத்தாளர் ஸ்டீபன் மேயர் பிரபலமான நாவல் தான் ட்வைலைட். அந்தக் கதையை மையமாகக் கொண்டு முதல் பாகம் 2008ல் வெளியானது. இதுவரை ஐந்து பாகங்கள் வெளியாகியிருக்கின்றன. முதலிருந்து ஐந்து பாகத்தையும் பார்த்தால் மட்டுமே படத்தை முழுமையாக பார்த்த உணர்வை ஏற்படுத்தும். காதலின் உச்சகட்ட உணர்வை அழகியலுடன், சென்டிமென்ட் கலந்து கொடுத்திருப்பது இப்படத்திற்கான வெற்றியை அடுத்தடுத்தப் பாகத்திற்கும் நகர்த்தியது.

இந்த ஐந்து பாகத்திற்குமான ஒட்டுமொத்த செலவே 385 மில்லியன் டாலர் தான். ஆனால் இப்படத்தினால் கிடைத்த வருமானம் மட்டும் 3.34 பில்லியன்.  படம் மட்டுமின்றி ட்வைலைட் சீரிஸின் புத்தகங்களும் சக்கைபோடு போட்டது. 

இந்த ஐந்துப்பாகத்திற்குமான சுருக்கமான கதை என்னென்னா.... போலீஸ் அதிகாரியான பெல்லாவின் தந்தை, வேலை மாற்றலாகி வாஷின்டனின் சிறிய நகரம் ஃபோர்க்ஸ் பகுதியில் குடியேறுகிறார்கள். அங்கிருக்கும் கல்லூரியில் சேர்கிறாள் பெல்லா. பெல்லாவிற்கும், எட்வர்ட்டுக்குமான சந்திப்பு அக்கல்லூரியில் நடக்கிறது. பெல்லாவிற்கு மட்டும் எட்வர்ட் கொஞ்சம் வித்தியாசமாகத் தெரிகிறாள்.   அவன் வேம்பயர் என்பதையும் கண்டுபிடிக்கிறாள் பெல்லா. இவருவருக்குமான காதலும் அடுத்தக் கட்டத்திற்கு நகர்கிறது. பெல்லாவை காதலிப்பதால், வேம்பயர் உலகத்தில் ஏற்படும் எதிர்ப்புகளுக்கு எதிராக போராடுகிறான் எட்வர்ட். இதற்கு நடுவே பெல்லாவின் பழைய நண்பன் ஜாக்கப்பிற்கும் இவளுக்குமான காதல். தவிர, ஓநாய் கூட்டத்திற்கும் வேம்பயருக்கும் ஒத்து போவதில்லை. இவர்களுக்கிடையே அடிக்கடி சண்டைகளும் நடக்கின்றன

இறுதியில் பெல்லா, எட்வர்ட்டை திருமணம் செய்கிறாள். இருவருக்குமான உறவு அடுத்தக்கட்டத்திற்கு நகர்கிறது. கர்ப்பமாகும் பெல்லாவின் வயிற்றினுள் குழந்தை வேகமாக வளர்கிறது. கர்ப்பமான 1மாதத்திற்குள்ளேயே குழந்தையையும் பெற்றெடுக்கிறாள் பெல்லா. அந்த காட்சிகள் வலியும் ரணமுமாக காட்சிப்படுத்தப்பட்டன. சாதாரண பெண், வேம்பயர் குழந்தையை பெற்றெடுப்பதால் இறந்துவிடுவாள் என்று அனைவரும் நினைக்கு போது, பெல்லாவும் வேம்பயராக மீண்டும் உயிர்பெறுகிறாள். 

இப்போது, எட்வர்டை விடவும் அதிக சக்தி பெல்லாவிற்கு. ஐந்தாவது பாகத்தில், பெல்லாவின் குழந்தையை கொன்றுவிடுவதே வேம்பயர்  உலகிற்கு நல்லது என்று, கொல்ல வருகிறது ஒரு கூட்டம். அதை எதிர்த்து சண்டையிடுகிறாள் பெல்லா. பெல்லாவுடன் ஓநாய் ஜாக்கப்பும், அவனது கூட்டமும் சேர்ந்துகொள்கிறது. பனி நிறைந்த மலைகளின் நடுவே நிகழும் சண்டை காட்சியுடன் படமும் முடிகிறது.

(ஐந்தாவது பாகத்தின் க்ளைமேக்ஸ் காட்சி)

திரைக்கதை தான் ஒட்டுமொத்தப் படத்திற்கும் பலமே. அதை ஐந்து பாகத்திற்கும் பொறுப்புடன் அமைத்தவர் பெண் திரைக்கதையாசிரியர்  மெலிசா ரோசென்பர்க் ( Melissa Rosenberg).  முதல் பாகத்தை கேத்ரின் ஹார்ட்விக் (Catherine Hardwicke) , இரண்டாவது பாகத்தை சிரிஸ் விட்ஸ் (Chris Weitz) , மூன்றாவது டேவிட் ( David Slade) மற்றும் இறுதி இரண்டு பாகங்களை பில் கான்டன் (Bill Condon )  இயக்கியிருக்கிறார்கள். மாறுபட்ட இயக்குநர்கள் என்றாலும் படத்திற்கான ஒளியமைப்பு மற்றும் மேக்கிங் படத்திற்கு படம் அசத்தல்

பெல்லாவாக "கிரிஸ்டின் ஸ்டிவர்ட்", வேம்பயர் எட்வர்ட்டாக,  "ராபர்ட்" மற்றும் ஓநாய் மனிதன் ஜாக்கப் கதாபாத்திரத்தில் "டெய்லர் லுட்னர்" நடித்திருக்கிறார்கள். 

ட்வைலைட்டின் இறுதி பாகம் 2012ல் வெளியானது. அடுத்தப் பாகம் எப்பொழுது என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு. ஆதற்கான சாத்தியக்கூறுகள் அமையாமல் இருந்த நிலையில் , லயன்ஸ் கேட் என்கிற தயாரிப்பு நிறுவனம் அதற்கான வேலைகளின் இறங்கியிருக்கிறது. எழுத்தாளர் ஸ்டீபனுடன் பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும், அதற்கான கதை விவாதத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளனர். ட்வைலைட் படம் உருவாகுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக செய்தி வெளியானதுமே, ஹாலிவுட் ரசிகர்கள் குஷியாகிவிட்டனர்.  

அடுத்தப் பாகத்தின் கதை என்னவாக இருக்கும் கதாபாத்திரங்கள் எவ்வாறு அமைக்கப்படும் என்பது ரசிகர்களின் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எப்படியிருந்தால் என்ன, படம் வந்தா போதும், பார்க்க நாங்க ரெடி என்கிறது லவ்வர் பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ். 

பி.எஸ்.முத்து