Published:Updated:

டிஸ்னியின் படப் பெயரை மாற்ற வைத்த ஹீரோயின் 'மோனா' புயல்!

விகடன் விமர்சனக்குழு
டிஸ்னியின் படப் பெயரை மாற்ற வைத்த ஹீரோயின் 'மோனா' புயல்!
டிஸ்னியின் படப் பெயரை மாற்ற வைத்த ஹீரோயின் 'மோனா' புயல்!

ஃப்ரோஸென்(2013) , பிக் ஹீரோ 6 (2014) ஜூட்டோபியா (2016) என தொடர்ந்து மூன்று மெகா ஹிட்களுக்கு பிறகு நான்ஸ்டாப் ஸ்பீடில்  வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டூடியோஸ் தங்களின் அடுத்த படமான 'மோனா'வை வெளியிட உள்ளது. அந்த ஸ்பீடை குறைத்துள்ளார் ஒரு ஃபோர்ன் ஸ்டார்.

'பாலினேஷியா தீவுகள்' இந்தோனேஷியாவின் வலது புறம் தொடங்கி பசிபிக் சமுத்திரத்தில் பரந்து விரவிக் கிடக்கிறது. இங்குள்ள தீவுகளில்தான் மனித இனம் அதிகம் பயணம் செய்ததாக வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால் அந்த பயணம் கடந்த சில ஆயிரம் ஆண்டுகளாக நடப்பதில்லை. அந்த தீவுகளை சேர்ந்த பெண் துணிச்சலாக மீண்டும் கடலில் பயணிக்கிறாள். அப்போது ஏற்படும் அனுபவங்களும் அவள் யாரை சந்திக்கிறாள் என்பதும்தான் கதை. அந்த துணிச்சல் பயணம் செய்யும் 16 வயது பெண்ணின் பெயரான 'மோனா'தான் படத்தின் டைட்டில்.

அமெரிக்காவில் தயாரிக்கப்படும் படங்கள் ரிலிஸுக்கு முன்பாகவே முக்கியமான விமர்சன பத்திரிகைகள், இணையதளங்ளுக்கு திரையிட்டு காட்டப்படும். அந்த வகையில் வரும் நவம்பர் 23-ம் தேதி படம் ரிலிஸாக உள்ளதால் விமர்சக ஊடகங்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. வழக்கமாக எந்தப்படம் வந்தாலும் கழுவிக் கழுவி ஊற்றும் தளங்கள் கூட இந்த படத்தை ஆகா ஒஹோ என புகழ்ந்தன. எனவே டிஸ்னி டபுள் குஷியில் ரிலிஸ் வேலையில் இறங்கிய நிலையில் இத்தாலி நாட்டில் 'வேற ஒரு மோனா பெரும் புகழுடன் இருப்பது தெரியவந்தது.  அவர் இத்தாலிய நீலப்பட நடிகை மோனா போஸி.  

இத்தாலியின் ஜெனோவாவில் பிறந்த மோனாவின் தந்தை ஒரு அணுவிஞ்ஞானி. உலகின் பல்வேறு நாடுகளுகளில் மாறி மாறி குடியேறிய பெற்றோரிடம் இருந்து 19 வயதில் பிரிந்த மோனா டிவி தொடர்களில் நடித்து வந்தார். கொஞ்சம் ஹாட்டான திரைப்படத்தில் தோன்றிய காரணத்தால் டிவி தொடர்களில் இருந்து நீக்கப்படவே நீலப்பட உலகில் புகுந்தார்.  1985-ல் இருந்து முழுக்க முழுக்க நீலப்படங்களில் நடிக்க ஆரம்பித்த மோனா இளைஞர்களிடம் செம ஹிட் ஆனார்.ஆந்த துறையில் ஆக்டிவ்வாக இருந்த சில வருடங்களிலேயே 100 படங்களுக்கும் மேல் நடித்திருந்தார். 1994-ல் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மோனா அதே ஆண்டில் இறந்துவிட்டார். ஆனால் இன்று வரை மோனாவை மதிப்புடன் இத்தாலிய ஆண்கள் பார்க்கின்றனர். இன்றைய இளைஞர்கள் கூட அவரை மிகவும் மதிக்கிறார்கள் என்று கூறுகின்றன. இதமட்டுமில்லாமல் 'மோனாலேண்ட்' என்கிற ஹார்ட்கோர் கிராபிக்ஸ் நாவலும், அனிமேஷன் படமும் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில் அமெரிக்காவுக்கு அடுத்து மிகப்பெரிய அனிமேஷன் மார்க்கெட்டான ஐரோப்பாவில் பட ரிலிஸ் வேளையில் டிஸ்னி இறங்கிய போது 'மோனா' என்கிற பெயருக்கு காப்பிரைட் இருந்ததை கண்டுபிடித்தது. சரி 20 வருடங்களுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட பெயர்தானே என அசால்ட்டாக இருந்தவர்கள் இத்தாலியில் 'மோனா'வின் செல்வாக்கை அறிந்து தற்போது 'வையனா' மாற்றியுள்ளனர். ஐரோப்பிய யூனியனில் இத்தாலி இருப்பதால் ஒட்டுமொத்த ஐரோப்பாவில் வெளியாகும் படத்தின் பெயரை 'Oceania' என மாற்றியுள்ளனர்.  "மோனா இறந்து 22 ஆண்டுக்களுக்கு பின்னாலும் அவருக்கு மக்களிடம் இருக்கும் செல்வாக்கு ஆச்சர்யமளிக்கிறது" என படத்தின் இயக்குநர் ரான் க்ளமெண்டும், ஜான் மஸ்கரும் தெரிவித்துள்ளனர். 

இதில் மற்றொரு ஆச்சரியமான விஷயம் நடிகை மோனாவிற்கு அவரின் பெற்றோர் அந்த பெயரை இந்த படத்தின் கதை நடக்கும் பசிபிக் தீவுகளின் பழங்குடி மொழியில் இருந்துதான் எடுத்து வைத்துள்ளார்கள். அந்த பெயருக்கு "மிக மிக ஆழமான கடல்" என்று அர்த்தமாம்.  

-வரவனை செந்தில்