Published:Updated:

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஹாலிவுட் படங்கள் #Welcome2017

விகடன் விமர்சனக்குழு
எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஹாலிவுட் படங்கள் #Welcome2017
எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஹாலிவுட் படங்கள் #Welcome2017

பிறந்து விட்டது 2017.ஹாலிவுட் சினிமா ரசிகர்கள் மனதில் இந்த ஆண்டிற்கான எதிர்பார்ப்புகளை எகிற வைத்திருக்கும்  சில ஹாலிவுட் படங்கள் என்னென்ன என்று ஒரு க்விக் லுக்;

டன்கிர்க்(Dunkirk) : 

இரண்டாம் உலகப் போர் சமயம். ஜெர்மனிக்கு எதிராக பிரிட்டன், பெல்ஜியம், கனடா, பிரான்ஸ் போன்ற நாடுகள் இணைந்து கூட்டுப் படை... மொத்தமாக டன்கிர்க் என்ற  ஒரே இடத்தில், ஜெர்மனியால் சுற்றி வளைக்கப்படுகிறது. கடற்கரையில் இருக்கும் 4 லட்சம் வீரர்களைக் காப்பாற்றும் பெரும் முயற்சி நடந்தது. இதை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் என்பதோடு, இதன் இயக்குநர் கிறிஸ்டபர் நோலன் என்பது படத்திற்கான எதிர்பார்ப்பை ஏகமாகக் கூட்டியிருக்கிறது. ஒளிப்பதிவு ஹாய்டே வேன் ஹாய்டேமா, இசை ஹான்ஸ் ஸிம்மர் என இண்டெர்ஸ்டெல்லாரின் வெற்றிக் கூட்டணி இதிலும் தொடர்கிறது. 

காங் - ஸ்கல் ஐலேண்ட் (Kong - Skull Island) :

அத்தனை பெரிய உருவம்... நெஞ்சம் நிமிர்த்தி... தன்னிரண்டு கைகளால் மார்பில் அடித்துக் கொண்டு உறுமும், கிங் காங்கிற்கு என உலகளவில் பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு.  பசிபிக் பிராந்தியத்தில் இருக்கும் ஒரு தீவின் ராஜாவாக இருக்கிறது காங். அந்தத் தீவிற்கு தீங்கிழைக்கப் போகும் ஒரு மனிதக் கூட்டம், காங்கிடம் இருந்து எப்படி தப்பியது என்பது தான் கதை. காங்கோடு, காட்ஸிலாவும் இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கிறது. 

கெட் அவுட் (GetOut) :

டிரெய்லரே மிரட்டுகிறது. அமெரிக்காவின் ஒரு கிராமத்தில் இருக்கும் தன் காதலியின் வீட்டிற்கு வருகிறான் கருப்பினத்தைச் சேர்ந்த ஹீரோ. அங்கு பல அமானுஷ்யங்கள் நடக்கின்றன. அதை எப்படி எதிர்கொள்கிறான் என்பதை திக்...திக்... திரைக்கதையோடு சொல்ல வருகிறது "கெட்-அவுட்". ஹாலிவுட்டின் காமெடி நடிகர் ஜோர்டான் பீலே, இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ஒரு ஹாரர்,த்ரில்லர் பின்னணியில் நிற அரசியலைப் பேசியிருக்கும் இப்படம் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பி இருக்கிறது.

பியூட்டி அன்ட் தி பீஸ்ட் (Beauty and The Beast) :


ஒரு நாவலாக, கார்ட்டூனாகப் பார்த்ததை படமாக பார்க்க இருக்கிறோம். விகாரமான முகம் கொண்ட அரக்கன். அவன் பிடியில் சிக்கியிருக்கும் அழகிய தேவதையாய் ஒரு பெண். இருவருக்குமான உறவு, அவர்களின் பயணம் என பயணிக்கும் திரைக்கதை. வெளித்தோற்றத்தில் அழகில்லை என்ற கருத்தை உறுதியாகச் சொல்லும் ஒரு திரைப்படம். பீஸ்டாக டான் ஸ்டீவன்ஸ் நடித்திருக்கும் இப்படத்தை பில் காண்டன் இயக்கியுள்ளார். பியூட்டியாக எம்மா வாட்சன் நடித்திருப்பது ஒன்றே போதும், தியேட்டர்களில் கூட்டம் நிரம்பி வழிய...

வார் ஆஃப் தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ் (War of The Planet of the Apes) :

இயற்கைக்கு எதிராக மனிதன் நடத்தும் போரின் உச்சமாக, பெரும் போருக்குத் தயாராகி நிற்கின்றன "ஏப்ஸ்" எனும் குரங்கினம். ஏற்கனவே வந்திருக்கும் பிளானட் ஆஃப் தி ஏப்ஸ் பட வரிசையில் இது மூன்றாவது பாகம். மேட் ரீவ்ஸ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். படத்தின் ஹீரோ "ஏப்" சீஸருக்கு உலகம் முழுக்க பல கோடி ரசிகர்கள் உண்டு. 

தி ஃபேட் ஆஃப் தி ஃபியூரியஸ் (The Fate of The Furious) : 


"குழு தான் குடும்பம்" என சொல்லும் டாம், திடீரென தன் குழுவுக்கு எதிராகத் திரும்பிவிடுகிறார். ட்ரெய்லரே பலமான எதிர்பார்ப்புகளைக் கிளப்பியிருக்கிறது. உலகில் எங்கிருக்கிறதோ இல்லையோ, இந்தியாவில் இந்தப் படத்திற்காக வழி மேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். இந்த வருடத்தின் ஏப்ரல் மாதம் படம் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது. 

பைரேட்ஸ் ஆஃபி தி கரீபியன் - டெட் மென் டெல் நோ டேல்ஸ் (Pirates of the Caribbean- Deadman Tell No Tales) : 


அது ஒரு தனி உலகம். கடல் சூழ் உலகம். அந்த உலகத்தில் அடியெடுத்து வைக்கத் தயாராக இருக்கும் ரசிகர்கள் பல கோடி. பைரேட்ஸ் வரிசையின் 5வது பாகமாக இந்தாண்டு மே மாதம் வரவிருக்கிறது. 

ஸ்டார் வார்ஸ் - எபிசோட் 8 (Star Wars - Episode 8)  :

தலைமுறைகள் தாண்டி ரசிகர் பட்டாளம் கொண்டிருக்கும் எவர் கிரீன் பட வரிசை. அதன் எட்டாவது பாகம் இந்தாண்டு இறுதியில் வெளியாகலாம். 2015 யில் வெளியான ஸ்டார் வார்ஸ்: ஃபோர்ஸ் அவேகன்ஸ் படத்தின் தொடர்ச்சியாக இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஏலியன், வேற்று கிரகம், போர் என ஆக்‌ஷன் கம் எமோஷனல் படமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. 

XXX - 3 :

பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் கொஞ்சம் கூட பஞ்சம் இல்லாத ஒரு படம். நீண்ட நாட்களுக்கு முன்னரே இறந்துவிட்டதாக சொல்லப்பட்ட XXX திடீரென வருகிறான். தனக்கான ஒரு டீமை உருவாக்கி எதிரிகளை துவம்சம் செய்கிறான். மரண மாஸ் ஆக்‌ஷன் காட்சிகள் கொண்ட படத்தில் மிக முக்கிய கதாபாத்திரம் நம்ம தீபிகா படுகோனுக்கு. 

தி மம்மி (The Mummy) :

எகிப்து பிரமிடை நமக்கு அறிமுகப்படுத்திய படம். இதுவரை வெளிவந்த மூன்று பாகங்களின் தொடர்ச்சியாக இல்லாமல், முற்றுலும் புதிய திரைப்படமாக உருவாகியிருக்கிறது இந்த "மம்மி". ஹீரோவாக டாம் குரூஸ் நடித்திருப்பது, படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. எகிப்து இளவரசி வில்லியாக, அல்ஜீரியா நாட்டைச் சேர்ந்த சோஃபியா பியூட்டெல்லா நடித்துள்ளார். 

இந்தப் படங்கள் மட்டுமல்லாமல் உலகைக் காக்க புறப்படும் பல சூப்பர் ஹீரோ படங்களும் எதிர்பார்ப்பைக் கிளப்பி வரிசையில் நிற்கின்றன. தோர், ஸ்பைடர்மேன், ஜஸ்டிஸ் லீக், கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி, வொண்டர் வுமன், பவர் ரேஞ்சர்ஸ், லோகன் என ரசிகர்களுக்கு விருந்து வைக்கத் தயாராகி வருகிறது ஹாலிவுட் சமையலறை!!!

                                                                                                                                - இரா. கலைச் செல்வன்.