Published:Updated:

ரகசிய அறையிலிருக்கும் மர்மம்… கதவைத் திறந்தால்? ‘Insidious: The Last Key’ படம் பயமுறுத்துகிறதா?

ர.சீனிவாசன்
ரகசிய அறையிலிருக்கும் மர்மம்… கதவைத் திறந்தால்? ‘Insidious: The Last Key’ படம் பயமுறுத்துகிறதா?
ரகசிய அறையிலிருக்கும் மர்மம்… கதவைத் திறந்தால்? ‘Insidious: The Last Key’ படம் பயமுறுத்துகிறதா?

‘இன்ஸிடியஸ்’ (Insidious) படத்தொடரில் 4வது படமாக வந்திருக்கும் ‘Insidious: The Last Key’, கதைவரிசைப்படி அந்தத் தொடரின் இரண்டாவது பாகம்.

‘இன்ஸிடியஸ்’ கதைகளின் முதன்மை கதாபாத்திரமான எலிஸ் ஒரு ‘சைக்கிக்’ (psychic) என்பது முந்தைய படங்களைப் பார்த்தவர்களுக்குப் புரிந்திருக்கும். பேய்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதுதான் அவரது தொழில். தன் கடந்த காலத்தை நினைத்து இன்னமும் பயந்துகொண்டிருக்கும் எலிஸ் அவர்களுக்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு வருகிறது. தன் வீட்டில் பேய் பிடித்திருப்பதாகவும், உதவி வேண்டும் என்றும் ஒருவன் கேட்கிறான். அவன் தற்போது பேய் இருப்பதாய் குறிப்பிடும் அந்த வீடு, எலிஸ் தன் தாய், தந்தை மற்றும் தம்பியுடன் பிறந்து, வளர்ந்த பழைய விடு. தன் தந்தையால் பல துன்பங்களை அங்கேதான் அவர் அனுபவித்தார். தன் தாயையும் அங்கேதான் இழந்தார். இந்த கடந்த கால துன்பங்களை மறந்து, தன் பழைய கொடுமையான நினைவுகளை ஓரங்கட்டிவிட்டு உதவி செய்ய எலிஸ் முற்படுகிறார். பேயை விரட்டினார்களா, பிரிந்த உறவுகள் ஒன்று சேர்ந்ததா என்பதை நாம் யூகித்த பாணியிலேயே, சுவாரஸ்யமாகச் சொல்ல முற்பட்டிருக்கிறது ‘இன்ஸிடியஸ்: தி லாஸ்ட் கீ’ படம்.

எலிஸ் ஒரு ‘சைக்கிக்’காக எல்லாப் படங்களில் தோன்றினாலும், பேய் பிடித்த வேறு யாரோ ஒருவர் தான் கதையின் நாயகனாக/நாயகியாக இருப்பார்கள். இந்த முறை சற்று வித்தியாசமாக எலிஸ் அவர்களைச் சுற்றியே கதை நகர்கிறது. ஒரு பழைய வீடு, அச்சுறுத்தும் பேய், குழந்தைகளை முக்கியக் கதாப்பாத்திரமாக வைத்துப் பயங்காட்டுவது, இரண்டு ட்விஸ்ட்கள் என ஆங்கிலப் பேய் படங்களுக்கே உரித்தான டெம்ப்லேட்தான் இந்தப் படமும் என்றாலும், உறவுகளின் சிக்கல்கள், கதாப்பாத்திரங்கள் இருந்து பார்க்கும் இடத்திற்கு ஏற்ப வெவ்வேறு அர்த்தங்களைக் கொடுக்கும் காட்சிகள், அதை வைத்தே ட்விஸ்ட்கள் எனக் கொஞ்சம் சுவாரஸ்யம் சேர்த்திருக்கிறார்கள்.  

பேய் படங்களுக்கு பெயர் போன ‘கத்தும் ராணி’ என்று அழைக்கப்படும் மூத்த நடிகை லின் ஷெய், ‘எலிஸ் ரெயினியர்’ கதாப்பாத்திரத்தில் வழக்கம் போல நன்கு பொருந்தி போயிருக்கிறார். தான் ஒரு ‘சைக்கிக்’ என்றாலும், பேய்களை முதலில் பார்க்கும்போது தோன்றும் நடுக்கம், தள்ளாத வயதில் வரும் சோர்வு என தன் இயலாமையை மிகவும் இயல்பாகப் பதிவு செய்திருக்கிறார். அதிர்ந்து கூட பேசாதவர், தைரியம் வரவழைத்துக் கொண்டு பேய்களை விரட்ட முற்படுவது, காமெடியன்களாக உலாவரும் தன் இரண்டு உதவியாளர்களை அன்புடன் மேய்ப்பது, பிரிந்த உறவுகளைப் பார்த்ததும் உணர்ச்சிவசப்படுவது என ஒரு இயல்பான மூதாட்டியாகவே அவர் உலாவுவது படத்தின் பெரிய பலம்.

“Are you hiding any skeletons in your closet?” என்று ஆங்கிலத்தில் ஒரு பிரபல கேள்வி உண்டு. எல்லோரிடமும் ஒரு ரகசியம் இருக்கும். அது வெளியே தெரிந்தால் அவரின் மேல் நாம் வைத்திருக்கும் பார்வையை முழுமையாக மாற்றிவிடும். இந்த சைக்காலஜியை ஒரு பேய் படத்தில் புகுத்தி, ட்விஸ்ட்டாக உருமாற்றி திரைக்கதை தைத்திருப்பது பாராட்டத்தக்க முயற்சி. அந்த ரகசிய அறையில் எலிஸ் அவரது உதவியாளனுடன் சேர்ந்து மர்ம முடிச்சை அவிழ்க்கும் காட்சி, திகில் பட்டாசு! ஆனால், பெரும்பாலான காட்சிகள் முன்னரே யூகிக்கும்படி அமைந்தது சற்று ஏமாற்றமே. உதாரணமாக, இறுதியில் உதவி இந்த வடிவத்தில்தான் வரும் என்பதைப் பலரும் முன்னமே சுலபமாக கணித்து விடுவார்கள். பேய் படங்களில், அடுத்தடுத்த காட்சிகளில் என்ன நடக்கப் போகிறது என்பதை யூகிக்க முடியாமல் செய்தால் மட்டுமே திகிலான காட்சிகள் சரியான தாக்கத்தை ஏற்படுத்தும். இங்கே அந்த உணர்வு எங்கேயும் ஏற்படவில்லை.

இயக்குநர் ஜேம்ஸ் வான் அவர்களின் முதல் படம் ‘சா’ (Saw) மாபெரும் வெற்றி பெற ‘டெட் சைலன்ஸ்’ (Dead Silence), ‘இன்ஸிடியஸ்’ எனத் தன்னை த்ரில்லர் மன்னனாக நிலைநிறுத்திக் கொண்டார். ‘தி கான்ஜுரிங்’ மற்றும் ‘அனபெல்’ படத்தொடர் பின்னாளில் உருவாக அடித்தளம் போட்டதே ‘இன்ஸிடியஸ்’ முதல்பாகம் பெற்ற வெற்றிதான். இந்தத் தொடரை பொறுத்தவரை, அவர் முதல் இரண்டு பாகங்களை மட்டும் இயக்கி விட்டு, முன் கதைகளை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என்று தயாரிப்பு பக்கம் ஒதுங்கி விட்டார். அவர் இயக்குநர் நாற்காலியில் இல்லாமல் சென்ற பாகமே சற்று தடுமாறித்தான் போனது. அது இந்தப் பாகத்திலும் தொடர்கிறது. நல்ல கதையை பிடித்தவர்கள், திரைக்கதையில் சற்று கவனம் செலுத்தி, திகில் காட்சிகளை கவனமாகக் கட்டமைத்து, இன்னமும் பயமூட்டியிருந்தால் ‘Insidious: The Last Key’ இந்தப் படத்தொடரில் பலமான ப்ரீக்குவல் (Prequel) படமாக அமைந்திருக்கும்.