Published:Updated:

ஒரு வித்தியாசமான Scifi சீக்வல்... கொஞ்சம் ஸ்லோ, ஆனால் கிளாஸ்..! #BladeRunner2049 படம் எப்படி?

கார்த்தி
ப.சூரியராஜ்
ஒரு வித்தியாசமான Scifi சீக்வல்... கொஞ்சம் ஸ்லோ, ஆனால் கிளாஸ்..! #BladeRunner2049 படம் எப்படி?
ஒரு வித்தியாசமான Scifi சீக்வல்... கொஞ்சம் ஸ்லோ, ஆனால் கிளாஸ்..! #BladeRunner2049 படம் எப்படி?

வரி மதிப்பு பிரச்னைகள் எல்லாவற்றையும் கடந்து, இரு வாரங்கள் தாமதமாகி தமிழகத்தில் வெளியாகியிருக்கிறது `பிளேடு ரன்னர் 2049'. 30 ஆண்டுகளுக்கு பிறகு ரிட்லி ஸ்காட்டின் `பிளேடு ரன்னரு'க்கு இரண்டாம் பாகம் வெளிவந்திருக்கிறது. கடந்த ஆண்டு வெளியாகி பலரது பாராட்டைப் பெற்ற `அரைவல்' படத்தின் இயக்குநர் டெனிஸ் வெல்லிநியூ இப்படத்தை இயக்கியிருக்கிறார். 2049 என்பதற்காக பறக்கும் தட்டு, கடிக்கும் ரோபோ, காமெடி கிராபிக்ஸ் என எந்த க்ளீஷேவும் இல்லாத படத்தை தந்திருப்பதற்காகவே டெனிஸுக்கு ஒரு விர்ச்சுவல் பூங்கொத்து.

இரு படங்களின் குட்டி பிளாட் இதுதான். டைரெல் கார்ப்பரேஷன் எனும் நிறுவனம் வேலைக்காக `ரெப்லிகன்ட்ஸ்'ஸை உருவாக்குகிறார்கள். வேலை செய்யாமல், அடாவடி செய்யும் ரெப்லிகன்ட்ஸை முடித்துக்கட்ட பிளேடு ரன்னர்களை நியமிக்கிறார்கள். அப்படி முதல் பாகத்தில் நியமிக்கப்படும் டெக்கர்டிற்கு குழந்தை ஒன்று பிறக்கிறது. பெற்றோரை பிரிகிறது. அந்தக் குழந்தையின் தேடுதல் பயணம்தான் இந்தப் படம். இரண்டாம் பாகத்தில் டைரெல் கார்ப்பரேஷனை நியாண்டர் வாலஸ் என்பவர் வாங்கிவிடுகிறார். அந்தக் குழந்தை யார், முதல் பாகத்தின் பிளேடு ரன்னர் (ஹாரிசன் ஃபோர்டு) என்ன ஆனார், இந்தப் பாகத்தின் பிளேடு ரன்னர் (ரியான் கோஸ்லிங்) மனிதனா அல்லது ரெப்லிகன்ட்டா போன்ற பல கேள்விகளுக்கு ஆழமாகவும், அழகாகவும் அவசரமில்லாமல் நிறுத்தி நிதானமாய் பதில் சொல்லியிருக்கிறது `பிளேடு ரன்னர் 2049'.

சையின்ஸ் ஃபிக்‌ஷன் படங்களுக்கே உரித்தான எந்த அதிரடியும் இல்லாமல், படம் மெதுவாக செல்கிறது. ஒவ்வொரு காட்சியும், கதாப்பாத்திரமும் அதற்கு தேவையான நேரத்தை எடுத்துக்கொள்கிறது. வசனங்கள் ஒவ்வொன்றும் ப்ளேடைவிட ஷார்ப். குறிப்பாக ரியான் கோஸ்லிங்கின் மூத்த அதிகாரி லவ் பேசுவது. 

'வெறும் துடைப்பத்தை வைத்துக்கொண்டு ஒரு பேரலையை நீ தடுக்க நினைக்கிறாய்... 
தடுத்துவிட்டேன் என்று தான் நினைக்கிறேன்!' 
'என் கட்டளைக்கு எதிராக செயல்பட முடிவெடுத்துவிட்டாயா?
அப்படியொரு வாய்ப்பு எனக்கு தரப்படவில்லை என நம்புகிறேன்' என உதாரணங்களாக நிறைய சொல்லலாம்.

இருள், பனி, புழுதி, புயல் என நகரும் காட்சிகளுக்கு, அதன் அடர்த்தியை பன்மடங்கு கூட்டுகிறது ஹான்ஸ் ஜிம்மரின் இசை. படத்தில் வரும் ஒவ்வொரு ஃபிரேமும் அவ்வளவு அழகு. வேலேஸ் இருக்கும் இடத்தில் நிகழும் காட்சிகள்; ஹாரிசன் ஃபோர்டும் ரியான் கோஸ்லிங்கும் அமர்ந்திருக்கும் இருக்கும் காட்சி; ரியானும், அவனது AI ஆர்ட்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ் காதலியும் மழை நாள் இரவு ஒன்றில் காதலிப்பது ( அந்த காட்சி செம! )  என பல காட்சிகளை அட்டகாசமாக படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரோகர் டீகின்ஸ். 
முதல் பாகத்திற்கு பல்வேறு வெர்ஷன்கள் வந்ததாலோ என்னவோ, திரையில் மக்கள் காணும் வெர்ஷன்தான் என்னுடையது என்பதை முதலிலேயே சொல்லிவிட்டார் இயக்குநர் டெனிஸ். இன்னும் சினிமாவை, அதன் கலையாக்கத்துடன் எந்தவித சமரசமும் இல்லாமல் உருவாக்கும் அமெரிக்க இயக்குநர்கள் இருவர் மட்டுமே. ஒருவர் ரிச்சர்டு லிங்க்லேட்டர், மற்றொருவர் டெனிஸ். `அரைவலி'ல் ஏலியன் சினிமாக்களின் டெம்ளேட் விஷயங்களை தகர்த்தெறிந்தவர், இம்முறை சையின்ஸ் ஃபிக்‌ஷன் படங்களை ஸ்லோவான திரைக்கதை ட்ரீட்மெண்டிலேயே எடுக்கலாம் என நிரூபித்து இருக்கிறார். 

படத்தின் நாயகன் 'K' வாக வரும் ரியான் கோஸ்லிங், படம் நெடுகிலும் அட்டகாசமாக நடித்திருக்கிறார். தான் ஒரு மனிதனா இல்லை ரெப்லிகன்ட்டா எனும் குழப்பத்திலே இறுதிவரை இருப்பது; கற்பனைக் காதலியுடன் அவர் பேசுவது; தன் மூத்த அதிகார் 'லவ்'விடம் அவர் பேசும் மேனரிஸம் என ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு முகபாவனைகள். `மரணம் என்பது ஒரு பழுத்த இலையின் உதிர்தல் போல் இருக்க வேண்டும்' என எங்கேயோ படித்த ஞாபகம். படத்தில் வரும் இறுதிக்காட்சி அத்தகைய ஒன்று.

படத்தில் குறைகளே இல்லையா என்றால், நிறைய இருக்கிறது. வாலஸின் ஆள் ஏன் 'லவ்' அலுவலகத்தில் ஒருவரைக் கொலை செய்து சில பொருட்களைத் திருட வேண்டும், வாலஸ் என்ன ஆனார், டெக்கர்டும், குழந்தையும் என்ன ஆவார்கள்... ஹேரிஸன் ஃபோர்டை கடத்தும் வாலஸின் அடியாட்கள் ரியானை மட்டும் அப்படியே விட்டுச் செல்வது ஏன்... என ஏகப்பட்ட கேள்விகளுக்கு படத்தில் பதில் இல்லை. ஆனால், அவற்றையெல்லாம் கடந்து, சிறப்பானதொரு அனுபவத்தை தருகிறது `பிளேட் ரன்னர் 2049'.

படத்தின் ஆரம்பத்தில் சேப்பர் மோர்ட்டன் ( WWE டேவ் பட்டிஸ்ட்டா ) ரியான் கோஸ்லிங்கிடம் `அதிசயங்களைப் பார்த்திருக்கிறாயா?' என கேட்பார். ஆம், அதிசயம் நிகழ 35 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. 1982-ம் ஆண்டு , முதல் பாகம் வெளியான போது, படம் பெரிதாக யாரையும் ஈர்க்கவில்லை. பல்வேறு வெர்ஷன்கள் காலப்போக்கில் வெளியானது. சில ஆண்டுகள் கழித்து, மெட்ரோபோலிஸ், ஸ்டான்லி குப்ரிக்கின் '2001, ஏ ஸ்பேஸ் ஒடிசி' போன்ற படங்களுக்கு நிகராக பேசப்பட்டது. இரண்டாம் பாகமும், பொதுவான ரசிகர்களிடம் பெரிய கைதட்டல்களைப் பெறவில்லை. ஆனால், இது தீர நிச்சயமாய் ஒரு கிளாசிக் தான். டி20 போட்டிகளுக்கு இடையேயும், ஐந்து நாட்கள் பொறுமையாக அமர்ந்து டெஸ்ட் போட்டிகளை இன்னும் ரசிகர்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். `பிளேட் ரன்னர் 2049' ஒரு அசத்தலான டெஸ்ட் போட்டி. டோன்ட் மிஸ்!!!