Published:Updated:

முதல் சந்திப்பு முதல் நிச்சயதார்த்தம் வரை... நிக் ஜோனஸ் - பிரியங்கா சோப்ரா காதல் கதை!

சுஜிதா சென்

ஜோன்ஸுக்கு வயது 25. பிரியங்காவுக்கு வயது 36. இவர்களின் நிச்சயதார்த்தம் கடந்த சனிக்கிழமையன்று மும்பையிலுள்ள பிரியங்காவின் வீட்டில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

முதல் சந்திப்பு முதல் நிச்சயதார்த்தம் வரை... நிக் ஜோனஸ் - பிரியங்கா சோப்ரா காதல் கதை!
முதல் சந்திப்பு முதல் நிச்சயதார்த்தம் வரை... நிக் ஜோனஸ் - பிரியங்கா சோப்ரா காதல் கதை!

ந்தியர்கள் வெளிநாட்டினருடன் திருமணம் செய்துகொள்வதென்பது சகஜமாக நடந்துகொண்டிருக்கிறது. அது பிரபலங்களுக்கிடையில் நடக்கும்போது, நாம் சற்று உற்றுநோக்குகிறோம். அப்படியான டாக் ஆஃப் தி டவுனாக இன்று இருப்பவர்கள்தான், நிக் ஜோனஸ் மற்றும் பிரியங்கா சோப்ரா. ஜோனஸைவிட கிட்டத்தட்ட பத்து வயது மூத்தவர் பிரியங்கா. ``செலீனா கோமஸ், மிலேய் சைரஸ், ஒலிவியா கல்போ போன்ற பிரபலங்களுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஜோனஸ், தற்போது இவ்வளவு வயது மூத்த ஒருவரைத் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். யார் அந்த நிக் ஜோனஸ்?" என்ற கேள்விதான் சோஷியல் மீடியாவில் பரவலாக எழுந்துள்ளது. நாமும் அதிலிருந்தே தொடங்குவோம். 

நிக் ஜோனஸ், அமெரிக்க பாப் சிங்கர். தன் ஏழு வயதிலேயே நாடகங்களிலும் நடிக்கத் தொடங்கிவிட்டார். ஒருநாள் அவரது அம்மா பார்லரில் முடி வெட்டிக் கொண்டிருந்தபோது, வெளியே காத்திருந்த ஜோனஸ் விளையாட்டுத்தனமாக எதையோ பாடிக்கொண்டிருந்ததைப் பார்த்த ஒருவர்தான் ஜோனஸின் வாழ்வில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தியவர். ஏழு வயதான ஜோனஸை பிரபல ஹாலிவுட் நடிகரான பிரான்ஸ் லான்ஜெல்லாவிடம் அறிமுகப்படுத்தி வைத்தார் அவர். பிரான்ஸ் பல மேடை நாடகங்களையும், இசை நிகழ்ச்சிகளையும் நடத்துபவர். அவர் 2000-ம் ஆண்டு ஜோனஸை தான் நடத்திவந்த கிறிஸ்துமஸ் கரோல் நிகழ்ச்சி ஒன்றில் பாடுவதற்கு வாய்ப்பளித்தார். அப்போது ஜோனஸ் பாடியது அவரது சொந்தப் பாடல். ஆம், தனது பத்தாவது வயதில் தன் அப்பாவின் உதவியுடன் `ஜாய் டு தி வேர்ல்டு' (Joy to the World) எனும் பாடலை எழுதிப் பாடினார். அப்பாடல் பிரபலமடைந்து அடுத்தடுத்துவரும் கிறிஸ்துமஸ் கரோல் நிகழ்ச்சியிலும் தவறாமல் இடம் பெற்று வந்தது. மேலும், பல இசை நிகழ்ச்சிகளுக்கும், நாடகங்களுக்கும் பல நடிகர்களுக்கு மாறாக இவர் சென்றுகொண்டிருந்தார். அதாவது, ஏதாவது ஒரு நடிகரோ, பாடகரோ வர முடியவில்லை எனில், அவருக்குப் பதிலாக ஜோனஸ் மேடையில் தோன்றுவார். இப்படி ஆரம்பித்ததுதான் நிக் ஜோனஸின் இசைப் பயணம். பின்பு நடிகராக சில படங்களில் நடித்துள்ளார். அதில் நமக்குத் தெரிந்த ஹிட்டடித்த திரைப்படம் `ஜுமான்ஜி - வெல்கம் டு தி ஜங்கிள்'. 

பிறகு, 2002-ம் ஆண்டு சிங்கிள் ஆல்பம் ஒன்றை வெளியிட்டார். அதன் பெயர்கூட வெளியில் தெரியாத அளவுக்கு அவரது திறமை முறியடிக்கப்பட்டது. தோல்வியைச் சந்தித்த ஜோனஸுக்கு அவரது சகோதரர்களான ஜோ மற்றும் கெவினின் உதவ, `இட்ஸ் அபவுட் டைம் (It's about Time)' என்ற ஆல்பத்தை 2006-ம் ஆண்டு வெளியிட்டார். அதுவும் எந்தவொரு கமர்ஷியல் வெற்றியையும் தேடித் தரவில்லை. மேலும், டிஸ்னி சேனலின் தயாரிப்பில் `Self Titled Second Studio Album' என்ற ஆல்பத்தை `ஜோனஸ் அண்டு பிரதர்ஸ்' வெளியிட்டனர். இதுதான் சிகரம் தொட்ட இவர்களின் முதல் ஆல்பம். ஒரு சொட்டுத் தண்ணீருக்காக காத்திருந்தவர்களுக்குப் பெருமழை அடித்ததுபோல் ஆயிரக்கணக்கான ஃபாலோயர்ஸையும் இந்த ஆல்பம் பெற்றுத்தந்தது. சுமார் 17 மில்லியன் ஆல்பங்கள் விற்றுத் தீர்ந்தன. அந்த ஆண்டின் சிறந்த பத்து ஆல்பங்களில் ஒன்றாகவும் இடம்பிடித்தது. இந்நிலையில், ஜோனஸ் தனது சொந்த மியூசிக் நிறுவனமான `Nick Jonas and the Administration' எனும் நிறுவனத்தை ஆரம்பித்தார். அதன்பின் இவர் எது பாடினாலும், அது அவரது ரசிகர்களைத் தொடர்ந்து கவனிக்க வைத்துக்கொண்டே இருந்தது. 

ஜோனஸ் செப்டம்பர் 16-ம் தேதி அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பிறந்தவர். இவரது தந்தை பால் கெவின் ஜோனஸ் கிறிஸ்தவ மதபோதகர், இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர். இவரது தாய் டெனிஸ், வாய் பேச முடியாத குழந்தைகளுக்கான ஆசிரியர் மற்றும் பாடகர். 

ஜோனஸ், டைப்-1 டயபடிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர். ``தற்போது, அதற்கு ஏற்றார்போல் தனது உணவு முறைகளையும், பழக்க வழக்கங்களையும் மாற்றிக்கொண்டுள்ளார்" என்று பிரியங்கா ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இவர்களது காதல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு, நிச்சயமும் முடிந்துள்ளது. கடந்த 16-ம் தேதி லண்டனின் சுமார் இரண்டு கோடி மதிப்புள்ள வைர மோதிரத்தை நிச்சயதார்த்த பரிசாகப் பிரியங்காவுக்குக் கொடுத்திருக்கிறார், ஜோனஸ். அந்நாளில் இவர்களது நிச்சயதார்த்தம் ``இந்த வார இறுதியில் நடக்கும்" என்றும் கூறியிருந்தார்கள். அந்நிகழ்வுக்குப் பிறகு டெல்லி வந்த பிரியங்காவை பாப்பராஸிகள் துரத்த, அவர் தன் கையிலிருந்த மோதிரத்தைக் கழற்றி ஜீன்ஸ் பேன்டில் வைத்துக்கொண்டு காரில் ஏறிச் சென்றார். ஒரு போட்டோவுக்கு பயந்து இப்படிச் செய்த பிரியங்காவின் இச்செயல் வீடியோவில் பதிவாகி நெட்டில் வைரலானது. 

பிரியங்கா - ஜோனஸின் காதல் 2017- ம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த `மெட் கலா' (Met Gala) எனும் ஃபேஷன் நிகழ்விலிருந்து ஆரம்பித்தது. அங்கு நண்பர்களான இவர்கள் சில ஃபேஷன் நிகழ்ச்சிகளுக்கும், டீ பார்ட்டிகளுக்கும் ஜோடியாகச் சென்று கொண்டிருந்ததைக் கண்டு, இவர்களைப் பற்றிய கிசு கிசு காட்டுத்தீ போல் ஹாலிவுட் மக்களிடையே பரவியது. தவிர, ஜோனஸின் இசை நிகழ்ச்சிகளில் பிரியங்கா நடனமாடி வந்தார். இந்த ஆண்டு மே மாதம் தனது இன்ஸ்டா பக்கத்தில் பிரியங்கா சோப்ரா நடந்துவரும் வீடியோ ஒன்றை ஸ்டேட்டஸாக வைத்திருந்தார், ஜோனஸ். அதிலிருந்தே இவர்களது ரிலேஷன்ஷிப் உறுதிசெய்யப்பட்டு மக்களிடையே பரவலாகப் பேசப்பட்டு வந்தது. ஜோன்ஸுக்கு வயது 25. பிரியங்காவுக்கு வயது 36. இவர்களின் நிச்சயதார்த்தம் கடந்த சனிக்கிழமையன்று மும்பையிலுள்ள பிரியங்காவின் வீட்டில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதைத் தனது இன்ஸ்டா பக்கத்தில், ``Taken all my heart and soul" என்று பிரியங்காவும், ``Future Mrs. Jonas...My heart, My love" என்று ஜோனஸும் பகிர்ந்திருக்கின்றனர். ஜோனஸ் தம்பதியருக்கு வாழ்த்துகள்.