Published:Updated:

``ஒரு சவால்... தனியாகப் பார்ப்பீர்களா...கும்பலாகப் பார்ப்பீர்களா?!" #TheHauntingOfHillHouse சீரிஸ்

தார்மிக் லீ

நெட்ஃபிளிக்ஸில் வெளியான `தி ஹான்டிங் ஆஃப் தி ஹில்ஹவுஸ்' சீரிஸ் பற்றிய பார்வை.

``ஒரு சவால்... தனியாகப் பார்ப்பீர்களா...கும்பலாகப் பார்ப்பீர்களா?!" #TheHauntingOfHillHouse சீரிஸ்
``ஒரு சவால்... தனியாகப் பார்ப்பீர்களா...கும்பலாகப் பார்ப்பீர்களா?!" #TheHauntingOfHillHouse சீரிஸ்

1959-ல் ஷிர்லி ஜாக்ஸன் என்பவர், `தி ஹான்டிங் ஆஃப் ஹில்ஹவுஸ்' என்ற நாவலை எழுதினார். பேய்கள் தொடர்பான புனைவுகளில் (Ghost Literature) 20-ம் நூற்றாண்டின் `சிறந்த நாவல்' என்ற நற்பெயரோடு, பல விருதுகளையும் பெற்றது இது. 1963 மற்றும் 1999 என இரண்டுமுறை இது படங்களாக எடுக்கப்பட்டது. முதல் படம் நாவலை அப்படியே திரைப்படமாக்கியது என்றால், இரண்டாவது படம் சற்றே திரைமொழிக்கு ஏற்ற வணிக சமரசங்கள் செய்து வெளியானது. தற்போது, இதே புத்தகம் நெட்ஃபிளிக்ஸில் சீரிஸாகவும் வெளியாகியுள்ளது. மைக் ஃப்லானகன் என்பவர் இதை இயக்கியுள்ளார். #TheHauntingOfTheHillHouse

முன் குறிப்பு : பதற்றப்படாம படிங்க. கதையில் வரும் டுவிஸ்ட்டுகள் எதையும் ரிவில் செய்யவில்லை. 

தமிழ்ப் படங்களில் தொடங்கி, ஹாலிவுட் படங்கள் வரை... வித்தியாசமான பல பேய்ப் படங்களைப் பார்த்தாகிவிட்டது. போதாக்குறைக்கு சூப்பர் நேச்சுரல், ஹாரர், த்ரில்லர் என எல்லா ஜானர்களில் டிவி சீரிஸ்களும் பார்த்துப் பழகிக்கொண்டிருக்கிறோம். படமாகட்டும், சீரிஸ் ஆகட்டும், தற்போது வெளிவரும் `ஹாரர்' சப்ஜெக்ட் படைப்புகளில் பயமும் இல்லை; பழைய சோறும் இல்லை. மிகுந்த வறட்சியில் உள்ளது, ஹாரர் ஜானர். ஏதேனும் வித்தியாசமான தளத்தைக் கொண்டு பேய்ப் படங்களோ, சீரிஸோ வெளியாகாதா எனக் காத்துக்கொண்டிருக்கும் படப் பிரியர்களுக்கு, `தி ஹான்டிங் ஆஃப் தி ஹில் ஹவுஸ்' ஒரு நல்ல தீனி. அதுவும் இரவு நேரத்தில் தனியாக அமர்ந்து ஹெட்செட்டை மாட்டிக்கொண்டோ, ஹோம் தியேட்டர் எஃபெக்ட்டிலோ இதைப் பார்த்தால், யாம் அடைந்த பயத்தையும் பரபரப்பையும் நீங்களும் அடையலாம். ஒரு எபிசோடோ இரண்டு எபிசோடோ... இதைப் பார்த்து முடித்த பின்னர் தவறாமல் டாம் அண்ட் ஜெர்ரியோ, மிஸ்டர் பீனோ பார்த்துச் சிரித்துவிட்டுத் தூங்கவும். இந்த சீரிஸ் தூக்கத்தின் நைட்மேராக மாற அதிக வாய்ப்புள்ளது. இதை டிஸ்கிளைமராகக்கூட வைத்துக்கொள்ளலாம். 

இந்தக் கதைக்குச் சொந்தக்காரர் வேறொருவராக இருந்தாலும், இதை நேர்த்தியாகக் கொடுத்ததற்கு இயக்குநரோடு சேர்த்து நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர், எடிட்டர், முக்கியமாக ஒளிப்பதிவாளர், ஆர்ட் டைரக்டர்... என சீரிஸின் மொத்த டீமுக்கும் பங்குண்டு. சீரிஸைப் பற்றி டீட்டெயிலாகப் பார்ப்பதற்கு முன், இதன் கதை என்னவெனப் பார்த்துவிடுவோம். முன்பே சொன்னதுபோல, ஸ்பாய்லரோ, டுவிஸ்ட் ரிவிலோ எதுவும் இல்லை. தங்களுக்குச் சொந்தமான பங்களாவில் குடும்பத்தோடு தங்கி, அங்கு ஏற்பட்டிருக்கும் ஓட்டை உடைசல்களை சரி செய்துவிட்டு கையோடு அதை விற்கவும் திட்டமிடுகிறது ஒரு குடும்பம். விற்ற பணத்தை வைத்து தங்களுக்கான நிரந்தர வீட்டைத் தாங்களே கட்டுவதுதான் இவர்களின் கனவு. குடும்பத் தலைவர் வீடு கட்டுபவர்; தலைவி, கட்டும் வீடுகளுக்குத் திட்டம் போடுபவர். எனவே, தங்களுக்கான வீட்டை அவர்களே கட்ட முடிவு செய்கிறார்கள். 

சரி, குடும்பத்தில் இருக்கும் உறுப்பினர்களை அறிமுகப்படுத்தி வைக்கிறேன். சீரிஸில் வரும் கதாபாத்திரங்களும் குடும்ப உறுப்பினர்கள் மட்டும்தாம். குடும்பத் தலைவர், ஹ்யூக் க்ரைன் (டிமோதி ஹுட்டன், ஹெண்ட்ரி தாமஸ்). தலைவி, ஒலிவியா க்ரைன் (கார்லா குகினோ). இவர்களுக்கு, ஸ்டீவன் க்ரைன் (மைக்கேல் ஹுயிஸ்மேன், பேக்ஸ்டன் சிங்கிள்டன்), ஷிர்லி க்ரைன் (எலிசெபத் ரீசர், லுலு வில்ஸன்), லூக் க்ரைன் (ஆலிவர் ஜாக்ஸன், ஜூலியன் ஹில்லியர்டு), தியோ க்ரைன் (கேட் சீகல், மெக்கென்னா க்ரேஸ்), நெல் க்ரைன் (விக்டோரியா பெட்ரெட்டி, வயலெட் மெக்ரே) என ஐந்து குழந்தைகள். கதை இரு தளத்தில் பயணிக்கும். ஒரு தளம் 1992-களில் பங்களாவை விற்கத் திட்டுமிடுதலுக்கான கதை. இன்னொரு தளம் 26 ஆண்டுகள் கழித்து குடும்ப உறுப்பினர்களின் தற்கால நிலை. இந்த இரண்டு காலத்திலும் நடந்திருக்கும் சம்பவங்களை ஒன்றோடு ஒன்று இணைத்திருக்கிறது திரைக்கதை. அந்தக் காட்சிகளும் காலங்களும் மாறும் ஒவ்வொரு இடத்திலும் அத்தனை கிரியேட்டிவிட்டி!

எடுத்த எடுப்பிலே நம்மைக் கட்டிப்போட்டு இருக்கை நுனியில் உட்கார வைத்துவிடுகிறார் இயக்குநர், மைக் ஃப்லானகன். அப்படியே மெள்ள மெள்ள நேரமெடுத்து நம் பய உணர்வுகளைப் பரிசோதித்துப் பார்க்கும் திகில் நிறைந்த திரைக்கதை, சூப்பர் டூப்பர் விஷுவல்... என நம்மை உடனே உள் அழைத்துச் செல்கிறது. எதிர்பார்க்காத டுவிஸ்ட்டுகள், அரட்டியெடுக்கும் சவுண்ட் எஃபெக்ட்ஸ், பயமூட்டும் ஒரு டோனில் ஒளிப்பதிவு எனப் பார்ப்பதற்கும், உணர்வதற்கும் ஒரு நல்ல படைப்பு. வழக்கமான கதைக்களம்தான் என்றாலும், 1959-ல் வெளிந்த நாவலை வைத்து, அதை இந்தக் காலத்திற்கேற்ப கதையிலும், திரைக்கதையிலும் சின்னச் சின்ன மாற்றங்களைக் கொண்டுவந்து பார்ப்பவர்களை ஒரு திகில் ரைடுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. முக்கியமாக, இயக்குநரின் ரசனைக்கேற்ப பங்களாவை அமைத்துக் கொடுத்ததில், கலை இயக்குநருக்கும் அதிகப் பங்குண்டு. பழைய காலத்து பாழடைந்த பங்களா, பூட்டில் காட்டப்படும் வெண்கலச் சிங்கம், வீட்டுக்குள் பயன்படுத்தப்பட்டிருக்கும் பொருள்கள், வீட்டின் கதவு... என எல்லாவற்றிலும் அதிக கவனத்தைச் செலுத்தி, பார்ப்பவர்களையும் அங்கேயே அழைத்துச் சென்றிருக்கிறது. 

சீரிஸின் மிகப் பெரிய பலமே திரைக்கதைதான். இரண்டு களத்தில் பயணிக்கும் கதையின் திரைக்கதையை முடிச்சுப்போட்டு, அதைத் தெளிவாக ஒன்றிணைத்ததுதான் இந்த சீரியஸின் டாப் நாச். அதிலும் அந்த ஐந்து கதாபாத்திரங்களின் தன்மை, அவர்கள் எடுக்கும் முடிவுகள் என எல்லாவற்றையும் உற்று நோக்கும்போது, இப்படியான சம்பவங்கள் நிகழ்கையில் நாமும் இப்படியான முடிவுகள்தாம் எடுப்போம் என்ற எண்ணம் எழும். அதுதான் இந்தக் கதையின் வெற்றி. மூத்தவன் ஓர் எழுத்தாளர். தன் சிறுவயதில் பேய் பங்களாவிலேயே மற்றவர்களுடன் தங்கியிருந்தாலும், "பேயே இல்லை... அதை நான் எங்கள் பங்களாவில் பார்த்ததும் இல்லை" எனும் ஓர் பகுத்தறிவுவாதி. இரண்டாமவள் தன் கணவருடன் இறுதி சடங்கிற்கான வேலைகளை நிகழ்த்திகொடுக்கும் கான்ட்ராக்ட் வேலை செய்பவள். மூன்றாமவள் ஒரு சைக்காலஜிஸ்ட். ஒருவரை தொடுவது மூலமே அவரின் ஜாதகத்தையே உணர்ந்துவிடுவாள். அடுத்த இரண்டு கடைக்குட்டிகளும் ட்வின்ஸ். அதில் மூத்தவன் மனநலம் பாதிக்கப்பட்டதாய் சொல்லப்பட்டு, தன் வாழ்வின் பாதி நாள்களை மனநல விடுதியிலேயே தொலைத்தவன். பேய்களை நேரில் பார்த்தவன். கடைக்குட்டி பெண் எதற்கு எடுத்தாலும் பயப்படும் பயந்த சுபாவம் கொண்டவள். அவள் பார்த்த, பார்க்கும் பேய்க்கு கழுத்து ஒடிந்து இரூக்கும். இப்படி ஐந்து முக்கியக் கதாபாத்திரங்களும் ஒவ்வொரு விதத்தில் இருப்பது கதையை மேலும் சுவாரஸ்யமாக்குகிறது. அதிலும் ஒரு முழு நீளத்தில் சொல்லவேண்டிய கதை, முதல் ஐந்து எபிசோடுகளில், சகோதர - சகோதரிகள் ஒவ்வொருவரின் பார்வையில் இருந்து மட்டும் கடத்திய விதம், பல விஷயங்களை ஸ்பூன்ஃபீட் செய்யாமல் நம்மை புரிந்துகொள்ள வைக்கிறது.

சுத்தி சுத்தி ஒரே குடும்பத்துக்குள் நடக்கும் கதை, அமானுஷ்யம், இழப்பு, அதற்கான விடையின் தேடுதல்... இதில் எந்த இடத்திலும் தேங்கி நிற்காமல் கதையும் காட்சிகளும் ஒரு ஃப்ளோவில் போய்க்கொண்டே இருக்கும். `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' புகழ் கைக்கேல்ஃப்லாக்னன்தான் இந்தப் படத்தில் எழுத்தாளராக வருபவர். குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கதை. அமானுஷ்யத்தை எல்லா இடத்திலும் அள்ளித் தெளித்து தெகட்டவிடாமல், எங்கு வேண்டுமோ அங்கு மட்டும் வைத்துத் திகிலூட்டியிருக்கிறார், இயக்குநர்.

எந்த நேரத்தில் என்ன ஆகும் என்ற பரபரப்பு சீரிஸின் ஆரம்பித்திலிருந்து முடிவு வரை இருக்கும். இது கொடுக்க முயன்றிருக்கும் தாக்கத்தை முழுமையாக அனுபவிக்க, இரவு நேரத்தில் தனியாக உட்கார்ந்து பார்க்கவும். பயந்த சுபாவம் என்றால், கும்பலாகப் பார்க்கவும் (இது பின் குறிப்பு).