Published:Updated:

இந்த 4 காரணங்களால்தான் 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' எல்லாருக்கும் பிடிச்சுருக்கா?! #GameOfThrones

தார்மிக் லீ
இந்த 4 காரணங்களால்தான்  'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' எல்லாருக்கும் பிடிச்சுருக்கா?!  #GameOfThrones
இந்த 4 காரணங்களால்தான் 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' எல்லாருக்கும் பிடிச்சுருக்கா?! #GameOfThrones

சீரியல் என்றாலே டி.வியைக் கண்டு தலை தெறிக்க ஓடிய மக்களுக்கு மத்தியில், 'எப்போடா அடுத்த எபிசோடு போடுவாங்க?' என பதைபதைக்க டி.வியை நோக்கி ஓட வைத்த சீரியல்தான் 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்'. இது அந்தளவு பிடிக்க காரணம் என்ன? ஒரு சின்ன அலசல்.

இந்த சீரியலை ஆர்வத்தால் பார்த்தவர்கள் 20 சதவீதம் என்றால் நண்பர்கள் சொல்லி பார்த்தவர்கள் 80 சதவீதம் பேர் இருப்பார்கள். டீக்கடையில் டாப் அடிக்கும் நண்பர்கள் கூட்டங்கள் அரசியல் தொடங்கி சினிமா வழியே இந்த சீரியலுக்கு வருவதுதான் டிசைன். 'சீரியல் பார்ப்பியா மச்சான்?' என்பதில் தொடங்கும் உரையாடல் கேம் ஆஃப் த்ரோன்ஸை சிலாகிப்பதில்தான் முடிவு பெறும். அப்படியும் இல்லையென்றால் இரு கேம் ஆஃப் த்ரோன்ஸ் ரசிகர்களுக்கு மத்தியில் மாட்டிக் கொண்டாலே போதும். இருவரின் கலந்துரையாடலே நம்மையும் டெம்ப்ட் செய்து பார்க்க வைத்துவிடும். இப்படித்தான் இந்த கேம் ஆஃப் த்ரோன்ஸ் போதை ஆரம்பிக்கிறது. 

காத்திருப்பு :

எச்.பி.ஓ என்ற வார்த்தைகளுடன் பழைய கேபிள் டி.வியில் வரும் 'க்றீச்ச்ச்ச்' என்ற சவுண்டோடுதான் 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்'. அந்த சவுண்டே பலருக்கு ஸ்ட்ரெஸ்பஸ்டராக இருந்தது. சீரியலின் ஒவ்வொரு எபிசோடும் ஆரம்பிக்கும். ஏப்ரல் 17, 2011 அன்று இந்நாடகத்தின் முதல் எபிசோட் ஒளிபரப்பானது. அதன் பின்பு வெளியான ஒவ்வொரு எபிசோடுக்கும் இடையில் ஒரு வார கால இடைவேளை விட்டு ஒளிபரப்பினர். ஒரு சீசன், 10 எபிசோடுகளைக் கொண்டது. முதல் சீசனில் ஒவ்வொரு எபிசோடும் முடிய முடிய, 'அடுத்து என்ன ஆகப் போகிறதோ?' என்ற ஆர்வம், பார்க்கும் ஒருவரையும் விட்டுவைக்கவில்லை. முதல் சீசனின் கடைசி எபிஸோடு முடிந்தபின் 'அய்யய்யோ அதுக்குள்ள முடிஞ்சு போயிச்சே, இன்னும் பார்க்க ஒரு வருஷம் வெயிட் பண்ணுமே!' என்கிற ஏக்கமும் சோகமும் பார்க்கும் எல்லோரையும் பதம் பார்த்தது. ஆகஸ்ட் 27, 2017-ன் முடிவில் 7 சீசன்கள் வெளியாகி தனக்கென ஒரு பெரும் ரசிகர்கள்  பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டது. 7வது சீசனில் எதிர்பார்ப்பை எகிற வைத்து முடிந்த ஜி.ஓ.டியில் அடுத்ததாக என்ன நடக்கப் போகிறது என்று பார்க்க இன்னும் ஒரு வருட காலம் காத்திருக்க வேண்டுமாம். 2018, நவம்பர் அன்றுதான் 8வது சீசன் வெளியாகவிருக்கிறது. ஆக, இந்தக் காத்திருப்பையும், ஏக்கத்தையும் நமக்குள் புகுத்தியதுதான் இந்த பிரமாண்ட வெற்றியின் காரணம். 'டோன்ட் மிஸ் திஸ் சினிமா/சீரியல்' என்ற லிஸ்ட்டுக்குள் முதலில் இடம் பிடித்திருப்பது இந்த ஜி.ஓ.டிதான்.    

கதைக்களம் :

பொதுவாக 'கதைக்களம் இதுதான்' என்று கணிக்க முடிந்தால், அவசியம் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம் யாருக்குமே இருக்காது. அதே போல் படங்களை விட சீரியலில், தன் பக்கம் ரசிகர்களை ஈர்ப்பதும் மிகவும் சவாலான காரியம். காரணம், படம் போல் சீரியல்கள் மூன்று மணி நேரத்தில் முடிவதில்லை. பல சீசன்களைக் கொண்ட சீரியல்கள் ஒரு கட்டத்துக்கு மேல் சலிப்பை ஏற்படுத்தாமல், ரசிகர்களின் மத்தியில் இருக்கும் ஆர்வத்தை தக்கவைத்துக் கொண்டே இருக்க வேண்டும். இந்த சீரியல் அந்த மாதிரியான விஷயங்களை எல்லாம் அசால்ட்டாக செய்தது. ஒரு கட்டத்துக்கு மேல் 'எப்போடா அடுத்த சீசன் வரும்?' என்ற ஏக்கத்தை தூண்டச் செய்தது. 'அப்படி என்ன இதில் கணிக்க முடியாத கதை?' என்று கேள்வி கேட்டால், பதில் உண்டு. 'ஒரு கதையில இவன் நல்லவன், இவன் கெட்டவன்'னு சாய்ஸ் கொடுத்தா செலெக்ட் பண்றது ஈஸி, ஆனா இந்த சீரியல்ல யாரையுமே கணிக்க முடியாது'. இதுவும் வெற்றிக்கு ஒரு காரணம். சில நேரங்களில் கதைக்களம் முகம் சுளிக்க வைத்தாலும் ரசிகர்களிடம் அபிமானம் குறையவே இல்லை. இதில் எந்தவொரு கதாபாத்திரமும் ஹீரோ ஹீரோயின் என்றெல்லாம் இல்லை. எல்லா கதாபாத்திரங்களுக்குமே சரிசமமான முக்கியத்துவம் இருக்கும். காலப்போக்கில் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொருவருக்கும் விருப்பமானவர்களாக மாற்றிவிட்டனர். இது எந்த அளவுக்கு விருப்பம் என்று பார்த்தால், தன் சொந்த பிள்ளைகளுக்கே குறிப்பிட்ட கதாபாத்திரங்களின் பெயரைச் சூட்டி மகிழும் அளவுக்கு விருப்பமானதாகவும், பிடித்ததாகவும் மாறிவிட்டது. கலீஸீ, ஆர்யா, ப்ரெயின், சான்ஸா, டிரியன், ப்ரான் தியான் என அந்த சீரியலின் பல பிரபலமான கதாபாத்திரங்களின் பெயரை அவரவர் பிள்ளைகளுக்கு சூட்டி மகிழ்கிறார்கள் சிலர். 'கலீஸீ' என்ற பெயர்தான் அமெரிக்காவில் அதிக பெண் குழந்தைகளுக்கு வைத்துள்ளனர்.  

விஷுவல் ட்ரீட் :

பொதுவாக ஒரு சினிமாவின் வெற்றியோ, சீரியலின் வெற்றியோ படத்தோடு சேர்த்து நம்மையும் அங்கு பயணிக்க வைப்பதில்தான் இருக்கிறது. கதை நடக்கும் தளத்தோடு நம்மை ஒன்ற வைப்பது மிகவும் கடினம். இதை ஈஸியாக செய்து நம்மையும் கதையோடு பயணிக்கச் செய்த ஒரு விஷயம்தான் இந்த 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்'. சீரியல் பல்வேறு இடங்களுக்கு பயணிக்கும். இதற்கு முன் நாம் கண்டிராத பிரதேசங்களை எல்லாம் விர்ச்சுவலாக உணர வைத்திருப்பார்கள். இதைத் தொடர்ந்து பார்க்கையில் நாம் இருக்கும் இடத்தையே மறந்து, அந்த இடத்துக்கே போய்விடுவதுதான் பெரிய பலமே. அந்த பலத்தைக் கூட்டிக் கொடுத்தது இந்த விஷுவல்தான்.  

கதாபாத்திரங்கள் :

'சிம்மாசனத்துக்கான விளையாட்டு' - சீரியலுக்கான மொழிப்பெயர்த்தலும் இதுதான், கதையின் ஒரு வரியும் இதுதான். கதையை இப்படி ஒரு வரியில் அடக்கினாலும், இடம்பெறும் கதாபாத்திரங்களை மனப்பாடம் செய்ய ஒரு பெரிய ஸ்டடியை மேற்கொள்ள வேண்டும். விவரம் தெரியாமல் முதலில் பார்க்க ஆரம்பித்து விட்டு பின்னர் இது எந்த கதாபாத்திரம் என்று தெரிந்துகொள்ள கூகுளை சரணடைந்தவர்கள் அனேகம். ராஜா காலத்துக் கதை என்பதால் ஏகப்பட்ட குடும்பங்கள், அக்குடும்பங்களுக்குள் இருக்கும் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள். ஒவ்வொரு கதாப்பாத்திரமும் அதற்கேயுரிய வெயிட்டேஜோடு இருக்கும்.