Published:Updated:

பிக் பாஸுக்கு சவால் கொடுக்கும் இந்த 5 சீரியல்கள்!

பிக் பாஸுக்கு சவால் கொடுக்கும் இந்த 5 சீரியல்கள்!
பிக் பாஸுக்கு சவால் கொடுக்கும் இந்த 5 சீரியல்கள்!

ஒரு காலத்துல சீரியல்களுக்காக டிவி முன்னாடி வாயை பிளந்துட்டு பார்த்துட்டு இருந்த பயலுகதான நாம, இப்ப திடீர்னு கேம் ஆஃப் த்ரோன்ஸ், 13 ரீஸன்ஸ் ஒய்?,  ஷெர்லாக் ஹோம்ஸ்னு வகைவகையா லேப் டாப்ல ஆங்கில தொடர்களுக்கு அடிமைஆகிட்டோமே இதுக்கு காரணம் என்ன? வறட்சி. பொழுதுபோக்கு வறட்சி. பிக் பாஸ் முடிவடைந்து 10 நாள்கள்கூட ஆகலை. 9 மணி ஆனால் ஆட்டோமேட்டிக்காக உங்கக் கை ரிமோட்டை தேடுதா. அப்ப உங்களோட அடுத்த மூன்று மாதங்களுக்கான ப்ளூ பிரின்ட் தான் இது.

பைசா செலவில்லாம பொழுதுபோக நம்ம பசங்களுக்கு கிடைச்சதுதான் இந்த ஹாலிவுட் தொடர்கள். மகிழ்ச்சி, ரொம்ப நல்ல பொழுதுபோக்குதான். ஆனால் இப்போ எல்லாமே வணிகமயம் ஆகிடுச்சு.  மேலே குறிப்பிட்ட ஆங்கில தொடர்களும் இப்போதெல்லாம் அநியாயம் பண்றாங்க. பொழுதுபோக்கு எனும் பெயரில்  கண்டதையும் ரசிகர்களிடம் திணிக்கிறார்கள்.  நான் ராஜமெளலி, சுந்தர்.சி படமெல்லாம் பாக்கமாட்டேன் செல்வராகவன், வெற்றிமாறன் பாணி படங்கள்தான் விரும்பி பார்ப்பேன்’ங்றவரா நீங்க? இதோ உங்களுக்காக கமர்சியல்  அல்லாத சில ஆங்கில தொடர்கள்.

BLACK MIRROR

இங்கிலாந்து தொடர். Sci-fi / Thriller / Drama. தொடர்தான்னு சொன்னாலும், ஒவ்வொரு எபிசோடும் ஒன்றோடு ஒன்று தொடர்பு இல்லாம புதிய கதை. புதிய களம். புதிய பாணி, புதிய மனிதர்கள்னு அவ்வளவு புதுமையா இருக்கும். இந்த மாதிரி தொடர்களை ஆந்தாலஜினு சொல்வாங்க. ப்ளாக் மிரரோட விஷேசம்  இதுமட்டுமில்லை, கதை நடக்கிற காலம் - எதிர்காலம். தற்போதிருந்து 20-30 வருஷத்துக்கு பிறகு நடக்குற பிரச்னையும்,  புதுவித டெக்னாலாஜிகளும்தான் கதைக்களம்.  எதிர்காலத்துல எதுவேண்டுமானாலும் சாத்தியம் என்பதைத் தாண்டி இந்தபிரச்னைகளெல்லாம் கண்டு நமக்கு ஒரு பயம் வரும். ஏனெனில் இன்று பார்த்த எபிசோட்ல வந்த டெக் சமாசாரம் அடுத்த நாள் காலை நாளிதழில் “விஞ்ஞானிகளின் அசத்தலான புதிய கண்டு பிடிப்பு”னு வந்திருப்பதை பார்க்கும்போது உள்ளுக்குள்ள தூக்கி வாரி போடும்.  

ஒரு எபிசோட் - ”இப்ப ஒரு ஆளுக்கு ஃபேஸ்புக்குல எத்தன லைக்ஸ் வருகிறது என்பதை வெச்சுத்தான் அவரை மதிப்பிடுகிறோம்.  அதுவே எதிர்காலத்தில் நிஜ வாழ்க்கையிலும்  நமக்கு ரேட்டிங் கொடுத்தால் என்ன ஆகும்?.   இன்னோர் எபிசோட் - தன் கணவனை இழந்த மனைவி ஆழ்ந்த சோகத்துல இருக்கா.  அப்போது அவளுக்காக அவள் தோழி ஒரு சர்வீஸ் பற்றி சொல்கிறாள். இறந்துபோனவங்களோடு பேசுவது. ஒரு கம்ப்யூட்டர்,  அவள் கணவருடைய எல்லா இ-மெயில்கள், குறுஞ்செய்திகள், கடிதங்கள், குரல், பர்சனல் தகவல்கள் என்று எல்லாவற்றையும் சேமித்துகொண்டு அவளிடம் போனில் அதே குரலில் அதே நடையில் அவரைப்போலவே பேசுகிறது.  ஒரு நாள் அந்த கம்ப்யூட்டர் குரல் இந்த ஃபோன் வழி உரையாடலை அடுத்த படிக்கு எடுத்துக்கொண்டு போக ஒரு வழி சொல்கிறது. - இன்னும் தெரியவேண்டுமெனில் கருங்கண்ணாடி (BLACK MIRROR) பாருங்கள். மொத்தம் 3 சீசன். ஒரு சீசனுக்கு குத்துமதிப்பா 7 எபிசோட்கள். ஒவ்வொன்றும் பச்சக்.

STRANGER THINGS

1980களில் நடக்கும் கதை. Science Fiction / Horror / Supernatural / Historical period drama. பாப் கலாசாரமும், மைக்கெல் ஜாக்‌ஷனும் கொடி கட்டி பறந்த காலம். ஒரு விஞ்ஞான ஆராய்ச்சி கூடத்தில் தற்காலத்துக்கு தேவையில்லாத ஒரு சோதனையால் வரும் பிரச்னைகள்தான் களம். இதற்கிடையில் ஒரு பையன் காணாமல் போய்விடுகிறான்.  அவனை கண்டுபிடிக்க மூன்று பசங்களும் காட்டுக்குள்ளே தேடுதல் வேட்டையில் இறங்க, நடுராத்திரி மழையில் டார்ச் லைட் வெளிச்சத்தில்  ஒரு மொட்டை தலை பெண்ணை  கண்டுபிடித்து வீட்டுக்கு கூட்டிட்டு வருகிறார்கள்.  அந்த பொண்ணு யாரு? அவள் தலை ஏன் மொட்டையாக இருக்கு? அவர்களின்  நண்பன் எங்கே? அவன் தொலைந்துபோன அந்த காட்டுக்குள்ளே ஏன் இந்த பொண்ணு வர மாட்டேன் என்கிறாள்? அந்த விஞ்ஞானிகள் அப்படி என்னதான் அந்த கூடத்துல நடத்துகிறார்கள்? இப்படி சாதாரணமாக தொடங்கும் முதல் எபிசோட். அடுத்தடுத்த எபிசோட்ல நகம் கடிக்கவெச்சு இறுதி எபிசோட்ல விரலையே கடிக்க வைத்துவிடும். 

SENSE8

Supernatural / Sci-fi / Action / Drama. மொத்தம் 8 பேர். இந்தியா, பெர்லின், கொரியா, ஐஸ்லேண்ட், சிகாகோ, லண்டன், நைரொபி, மெக்ஸிகோனு 8 நாடு. ப்ளூடூத், வைஃபை, என்,எஃப்.சி.க்கெல்லாம் அடுத்த லெவல். ஒவ்வொருத்தரும் மற்றவர்களின்சென்ஸோட இணைந்து இருப்பார்கள்.  இதில் விஷேசம் என்னவெனில் சிகாகோல இருப்பவருக்கு தாகம் எடுத்தால் இந்தியாவில் இருப்பவர்தண்ணி குடித்தால் போதும்.  அவருக்கு தாகம் தீர்ந்துவிடும்.  எம்.ஜி.ஆர் படம் மாதிரி இருக்கில்ல? கண்டிப்பா இல்ல. நைரொபியில் இருப்பவனுக்கு சண்டைனா என்னவென்றே தெரியாது. சரியான பயந்தாங்கொள்ளி. ஆனால் கொரியாவில் இருக்கும் பொண்ணு கிக் பாக்ஸிங் சாம்பியன். இவனை ரௌடி கும்பல் சுற்றிவளைத்து நிற்க அதே நேரத்தில் ஜெயிலில் இருக்கும் கொரிய பெண்ணுக்கு சக கைதி கூட சண்டைவர. ரெண்டு லைனும் இணைந்து, இணைப்பு பலமாகி, நம்ம பையன் பேய் இறங்கியது போல சண்டை போட எல்லோரும் வியந்து பார்ப்பார்கள். ஆனால் அவனுக்கே தெரியாது அடிச்ச ஒவ்வொரு அடியும் கொரிய பொண்ணு ஜெயில்ல அவளோட எதிரிய அடிச்ச அடிகள்னு.

கதாபாத்திர வடிவமைப்பு ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும். அதனால எந்த எபிசோடும் டல் அடிக்காம போகும். மும்பைல இருக்க ”கலா” ங்கற பொண்ணுக்கு இன்னும் சில நாட்கள்ல பிடிக்காத ஒருத்தனோட கல்யாணம். ஆனா அதுக்குள்ள தன் சென்ஸ்மேட்டான பெர்லின்ல இருக்க ”வுல்ஃப் கேங்க்” எனும்  ஒரு திருடன் மேல காதல். ”லிடோ” மெக்ஸிக்கோல பெரிய ஹீரோ ஆனா அவர் ஒரு ஓரினச்சேர்க்கை யாளர். ”நோமி” ஒரு ப்ளாக்கர், ஹேக்கர் ஆனா அவளும் ஒரு ஓரினச்சேர்க்கையாளர்.”வில்” ஒரு புது போலீஸ்காரன், தன்னோட சின்ன வயசுல இருந்து ஒரு கேஸை முடிக்க துடிக்கிறான். ”ரீலி” லண்டன்ல வசிக்கிற ஒரு டி.ஜே. அவள் சிங்கிள் தான் ஆனால் இப்ப கர்ப்பமா இருக்கிறாள்.

தனித்தனியா பார்த்தால் ஒரு பிரச்னையும் இல்லை. ஆனால் ஒண்ணோடஒண்ணு கண்டபடி  இணைந்தால் என்ன நடக்கும்? இவங்க 8 பேரையும் ஒரு அமைப்பு வலைவீசி தேடிட்டு இருகாங்க. இவங்க 8 பேரும் ஒருத்தர ஒருத்தர் கண்டுபிடிச்சாங்களா? இந்த இணைப்பு விஷயம் ஏன் நடக்குது? எப்படி நடக்கிறது? எதனால் நடக்கிறது? யார் இவர்களை துரத்துகிறார்கள்? எதற்கு துரத்துகிறார்கள்? இத்தனையும் கண்டுபிடிக்கறதுதான் உச்சகட்டம்! இந்த தொடரின் இயக்குநர் யார் தெரியுமா? மேட்ரிக்ஸ் எடுத்தாரே  The Wachowskis அவரேதான். வேற லெவல் ஐடியா!

ORANGE IS THE NEW BLACK

Comedy / Drama. நியூயார்க் நகரம். பத்துவருஷத்துக்கு முன்னாடி, லெஸ்பியனா இருந்த “பைப்பர்”ங்கற பொண்ணு “அலெக்ஸ்”ங்கற தன் காதலிக்கு சூட்கேஸ் நிறைய போதைப்பொருள் கைமாற்றி கொடுக்கிறாள். பத்து வருஷத்துக்கு பிறகு, இப்போ ஒரு பையனோட கல்யாணம் நிச்சயம் ஆகியிருக்க “பைப்பர” கைது பண்ணிடுறாங்க. 15 மாசம் மகளிர் சிறையில் இருக்கணும். அங்கே தன் பழைய காதலி அலெக்ஸ சந்திக்குறா நம்ம பைப்பர். பைப்பருக்கு அங்க என்ன ஆச்சு? 15 மாசம் தாக்குபுடிச்சாளா? அலெக்ஸ் இன்னும் அவளை காதலிக்கிறாளா? பைப்பரோட கல்யாணம் என்ன ஆகும்?என்று ”சின்ன கதை, பெத்த காமெடி” வகையறா.  

பிக் பாஸ் வீட்ல விதவிதமா கதாபாத்திரங்கள் சுத்துனமாதிரி இங்க வகைவகையா கதாபாத்திரங்கள் இருப்பாங்க. சை-ஃபை, த்ரில்லர் அதிகம் பாக்காதவங்க ஜாலியா வயிறு குலுங்க சிரிக்க 2013 ல வந்து, மரண ஹிட் அடித்து, தொடர்களுக்கு தரப்படும் உயர் விருதான  ”ப்ரைம் டைம் ஏமி அவார்ட்ல” சிறந்த தொடர் விருது, சிறந்த துணை நடிகை விருது, சிறந்த எழுத்து, அது இதுனு அமெரிக்கா மக்களின் மனம் கவர்ந்த தொடர் இது.  இப்போ  2017 வரைக்கும் 5 சீசன் பாத்துடுச்சு அமெரிக்கா. முதல் சீசன் பாத்தாபோதும். அதுக்கப்புறம் அடிமை ஆகிடுவிங்க,  பின்பு டைம் கிடைச்சா 5 சீசனும் பாத்துடுங்க. இன்னும் இதுக்கு ரசிகர் வட்டம் குறையாம இருக்க காரணம் - இது ஒரு உண்மை கதை. ROFL MAX!

PRISON BREAK

Crime / Drama. அண்ணன் தம்பி ரெண்டு பேரு. துணை ஜனாதிபதியை கொலை வழக்குல தவறுதலா அண்ணன அரெஸ்ட் பண்ணி சிறையில் அடைத்துவிடுகிறார்கள்.  தம்பி தன் அண்ணன எப்படியாவது தப்பிக்க வெக்கணும்னு ஒரு திட்டம் போடுறான். இதுல திருப்பம் என்னவென்றால் இந்த சிறைய வடிவமைத்த இஞ்சினியரே இந்த அண்ணன்தான். 2005ல இருந்து 2009 வரைக்கும் மக்களின் அமோக வரவேற்பில்  தொடர்ச்சியா விறுவிறுப்பாக 4 சீசன் வரை வந்த ப்ரிசன் ப்ரேக், ஒரு பெரிய ப்ரேக்குக்கு பிறகு இப்போ 2017ல 9 வருஷத்துக்கு முன்னாடி எப்படி போனதோ அப்படியே கபாலி மாதிரி திரும்ப வந்திருக்கு.

சை-ஃபை, ஆக்‌ஷன், த்ரில்லர், ஹாரர், காமெடி எல்லாத்தையும் பாத்தாச்சு ஆனா க்ரைம்? மிஷ்கின் ஃபேனா நீங்க? உங்களுக்காகவே இருக்கு இந்த ப்ரிசன் ப்ரேக். நுனி சீட் விறுவிறுப்பு, நகம் கடிக்கும் நொடிகள்னு ஒவ்வொரு எபிசோடும் அனல் பறக்கும். இங்கிலீஷ், ஷ்பானிஷ், அராபிக்னு மூன்று மொழியும் கத்துக்கலாம். 5 சீசன் 90 எபிசோட்ஸ். நாளையில்  இருந்து  பார்க்க ஆரம்பித்தால் இன்னும் சரியா 3 மாசத்துல பார்த்து முடித்துவிடலாம்.  சோறு தண்ணி வேணாம்.... இதே கெடா விருந்துதான்.

அடுத்த கட்டுரைக்கு