Published:Updated:

ரயில் பயணம்... ஒரு கொலை... கொலையாளி யார். மிரட்டுகிறதா சஸ்பென்ஸ் த்ரில்லர் #MurderOnTheOrientExpress

கார்த்தி
ரயில் பயணம்... ஒரு கொலை... கொலையாளி யார். மிரட்டுகிறதா சஸ்பென்ஸ் த்ரில்லர் #MurderOnTheOrientExpress
ரயில் பயணம்... ஒரு கொலை... கொலையாளி யார். மிரட்டுகிறதா சஸ்பென்ஸ் த்ரில்லர் #MurderOnTheOrientExpress

அகதா கிறிஸ்டியின் நாவல்களில் அதிகமுறை படமாக்கப்பட்டது மர்டர் ஆன் தி ஓரியன்ட் எக்ஸ்பிரஸ்தான். ரயிலில் பயணிக்கும் உலகின் டாப் மோஸ்ட் துப்பறிவாளர் ஹெர்க்யூ பொரோவுக்கு ஒரு புது கேஸ் வருகிறது. பனிப்பாறை ஒன்று விழுந்து ரயிலின் பாதையை மறித்து, ரயிலை தடம்புரள வைக்கிறது. அடுத்து ஒரு கொலை. அந்தக் கொலையைச் செய்தது யார் என்பது சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது மர்டர் ஆன் தி ஓரியன்ட் எக்ஸ்பிரஸ் திரைப்படம். #MurderOnTheOrientExpress

ஜானி டெப், ஜூடி டென்ச், பெனலோப் க்ரஸ், வில்ஹெம் டேஃபோ, மிச்சல் பெய்ஃபெர் என எக்கச்சக்க மல்ட்டி காஸ்டிங். அது போக, ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் அசத்தும் கென்னெத் ப்ரானாக் , கதையின் நாயகனான ஹெர்க்யூ பொரோ கதாபாத்திரத்தையும் , இயக்கத்தையும் ஒரு சேர கையாண்டிருக்கிறார். 

முட்டையின் அளவு முதல், கழுத்தில் இருக்கும் 'டை' வரை ஹெர்க்யூவிற்கு எல்லாமே பெர்ஃபெக்ட்டாக இருக்க வேண்டும். ஜெருசலத்தில் நடந்த ஒரு திருட்டை தனக்கே உரித்தான பாணியில் கண்டுபிடிக்கிறார் ஹெர்க்யூ. இஸ்தான்புல்லில் ஓய்வு எடுக்க நினைக்கும் ஹெர்க்யூவிற்கு , அடுத்த அசைன்மென்ட் லண்டனில் இருக்க, நண்பர் பௌக் மூலம் ஓரியன்ட் எக்ஸ்பிரஸில் பயணிக்கிறார். (இது வெறும் இன்ட்ரோதான் பாஸ் ஸ்பாய்லர் எல்லாம் இல்லை). 

சிலரை மட்டும்தான் மேக்கப் இல்லாமல் இருக்கும் பொழுது கண்டுபிடிப்பது கடினம். அப்படிப்பட்ட ஜீவன்தான் ஜானி டெப். ஆலிஸ் த்ரூ தி லுக்கிங் கிளாஸ், டெட் மேன் டெல்ஸ் நோ டேல்ஸ் படங்களிலேயே, ஜானி டெப் மிகவும் வயதானவர் போல் காட்சியளித்தார். இந்தப் படத்தில் அது தொடர்கிறது. ஐம்பது வயது ஆகிவிட்டாலும் டேக் கேர் ப்ரோ. இதில் இன்னும் சற்றே முறைக்கும் ரோல் அவருக்கு.

ரயிலில் வெவ்வேறு கதாபாத்திரங்கள். ரேச்சட் (ஜானி டெப்), இளவரசி ( ஜூடி டென்ச்), பிலார் ( பெனலோப் க்ரஸ்) எனத் திரையில் தோன்று ஒவ்வொரு கதாபாத்திரமுமே பிரபலமான நடிகர்கள்தான் என்பதால், யார் மீதும் சந்தேகம் கொள்ள முடியாத நிலையில் பயணிக்கிறது ரயிலும் திரைக்கதையும். ஹெர்க்யூவின் படங்களின் ஆஸ்தான இசையமைப்பாளரான பேட்ரிக் டாய்ல், படத்தின் த்ரில்லருக்கு ஏற்றபடி இசையமைத்திருக்கிறார். 

ரயில் பயணம்... கொலை. கொலையை யார் செய்திருப்பார்கள் என்ற விசாரணை என்கிற நாவலேதான். ஆனால் ஏனோ பிற்பகுதியில் போரடிக்க ஆரம்பித்துவிடுகிறது. சில, ரீமேக்குகள் காலத்தின் கட்டாயம்.  ஜானி டெப், ஜூடி டென்ச், கென்னெத் ப்ரானாக் என ரசிக்க படத்தில் பல விஷயங்கள் இருக்கின்றன.1974ல் வெளிவந்த பாகத்தைப் பார்த்துவிட்டு, தன் ஹீரோ ஹெர்க்யூவாக நடித்த ஆல்பெர்ட் ஃபின்னி மீசை வைக்கவில்லை என்பதை மட்டும்தான் குறையாகச் சொன்னாராம் கிறிஸ்டி. அகதா கிறிஸ்டி இப்போது இருந்திருந்தால், சந்தோஷப்பட்டிருப்பார். கென்னெத் மீசையை அவ்வளவு அழகாக வைத்திருந்தார். அதிலும் அதைப் பாதுகாக்க அவர் வைத்திருந்த கருவி எல்லாம் அல்ட்டி.  

அட்டகாசமான காஸ்டிங், அசத்தலான ஒளிப்பதிவு, அந்தக் காலகட்டத்திற்கு கொண்டு செல்லும் கலையாக்கம் எனப் பல இருந்தும், படம் சில இடங்களில் சலிப்புத் தட்டுகிறது. க்ரைம் இன்வெஸ்டிகேஷன் படம், அதுவும் ஒரு துப்பறியும் நிபுணர்தான் படத்தின் மையம் என்பதால் விறுவிறுப்பு மிஸ்ஸாவது பெரிய மைனஸ். கொலைக்கான ஒவ்வொரு லீட் கிடைக்கும் போதும் அடுத்து விறுவிறுப்பாக நகரப் போகிறது என நிமிர்ந்து உட்காரும் போதெல்லாம், 'அங்க உனக்கென்ன வேல' என்கிற ரேஞ்சில் உரையாடும் போது படத்தின் வேகம் சுருண்டு பாய் போட்டுப் படுக்கிறது.

இருந்தாலும் at the end people always see there is right or wrong என்கிற தர்க ரீதியான கருத்தை படத்தின் க்ளைமாக்ஸோடு இணைத்த விதமும், அந்த எமோஷனலான கடைசிக் காட்சியும் சூப்பர். அகதா கிறிஸ்டியின் நாவலின் பெர்ஃபெக்ட் அடாப்டேஷன் 1974ல் வெளிவந்த வெர்சன்தான் என்பதை நினைவுறுத்துகிறது இந்த சினிமா. நாவலையோ, பழைய வெர்சனையோ படிக்காத, பார்க்காத நபர்கள், தாராளமாய் ஓரியன்ட் எக்ஸ்பிரஸுக்கு ஒரு விசிட் அடிக்கலாம்.