Published:Updated:

டைனோசர்... போர்... சயின்ஸ்ஃபிக்‌ஷன்... பிரமாண்ட சினிமாக்களின் பிதாமகன் ஸ்பீல்பெர்க்! #HBDSpielberg

டைனோசர்... போர்... சயின்ஸ்ஃபிக்‌ஷன்... பிரமாண்ட சினிமாக்களின் பிதாமகன் ஸ்பீல்பெர்க்! #HBDSpielberg
டைனோசர்... போர்... சயின்ஸ்ஃபிக்‌ஷன்... பிரமாண்ட சினிமாக்களின் பிதாமகன் ஸ்பீல்பெர்க்! #HBDSpielberg

டைனோசர்... போர்... சயின்ஸ்ஃபிக்‌ஷன்... பிரமாண்ட சினிமாக்களின் பிதாமகன் ஸ்பீல்பெர்க்! #HBDSpielberg

“நீங்க ஃபர்ஸ்ட் பார்த்த ஹாலிவுட் படம் என்னங்க?” என்று 80ஸ் மற்றும் 90ஸ் குழந்தைகளைக் கேட்டால், “ஜுராசிக் பார்க் தாங்க!” என்று பெருமையுடன் கூறுவார்கள். நம்மில் பெரும்பாலானோர் ஹாலிவுட் என்ற உலகத்தையே அப்போதுதான் முதன் முதலில் ரசித்திருப்போம். இவ்வளவு ஏன்? ஹாலிவுட்டே இந்தியாவில் தனக்கு ஒரு மார்க்கெட் இருக்கிறது என்று உணர்ந்தது அந்தப் படத்தில் தான். அறிவியல் புனைவு கதைகளுக்குப் பெயர் போன மைக்கேல் கிறிச்டன் அவர்களின் நாவல் தான் ஜுராசிக் பார்க் படமாக பரிணாம வளர்ச்சியடைந்தது. அந்த மேஜிக்கை நிகழ்த்திக் காட்டியவர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்!

அப்போதிருந்த தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பல வகை டைனோசர்களை கிராஃபிக்ஸ் காட்சிகள் மூலம் உயிர்கொடுப்பது என்பது எப்பேர்ப்பட்ட இயக்குநர்களுக்கும் சற்று உதறல் கொடுக்கும் வேலைதான். இருந்தும், கொஞ்சமும் தயங்காமல் கிறிச்டன் நாவலுக்குத் திரையில் உயிர்கொடுத்தார். படம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்தியாவில் அதுவரை ஆங்கிலப் படங்களை திரையரங்குகளில் பார்க்காதவர்கள் கூட கூட்டம் கூட்டமாகக் குழந்தைகளுடன் சென்று கொண்டாடினர். அதன் பிறகு ஹாலிவுட் அடுத்த கட்டத்திற்கு சென்றது. பெரிய பட்ஜெட்டில், அசத்தல் கிராஃபிக்ஸ் காட்சிகள் வைத்து தைரியமாகப் படம் செய்யலாம். அதற்கான மார்க்கெட் இந்த உலகில் இருக்கிறது என்பதை அவர்கள் ஜுராசிக் பார்க் படத்தை வைத்துதான் உணர்ந்தார்கள். உபயம்: ஸ்பீல்பெர்க்!

சினிமா வேட்கை

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் அவர்களுக்கு சினிமா மேல் காதல் ஏற்பட்டது அவரின் 12வது வயதில்தான். அந்த வயதில் தன்னுடைய மினி ட்ரெயின் செட் ஒன்றை வைத்துக்கொண்டு சாகசப் படங்கள் எடுக்கிறேன் என்று தனது 8mm கேமராவை தூக்கிக்கொண்டு திரிந்தார். அப்போதெல்லாம் இப்போது போல ஒரு குறும்படத்தை சீக்கிரம் எடுத்துவிட முடியாது. ஃபிலிம் சுருள்கள்தான் என்பதால் காசும் நிறையச் செலவு ஆகும். இருந்தும் படம் எடுத்தே ஆக வேண்டும் என்று தனது பள்ளி நண்பர்களை வைத்து அடுத்த கட்டமாக 40 நிமிடங்கள் ஓடக்கூடிய “எஸ்கேப் டு நோவேர்” என்ற போர் படம் ஒன்றை எடுத்தார். அதன் பிறகு அதே 8mm கேமராவில் மட்டும் 15 படங்கள் எடுத்தார். இப்படியே குறும்படங்கள் மட்டும் செய்துகொண்டிருந்தால் எப்படி எனச் சிந்தித்து 140 நிமிடங்கள் ஓடக்கூடிய “Firelight” என்ற பெரிய படம் ஒன்றை எடுத்தார். ஏலியன்கள் குறித்த இந்தப் படத்திற்கு ஆன மொத்தச் செலவு 500 டாலர்கள். தன்னுடைய சேமிப்பு மட்டும் தந்தையிடம் கொஞ்சம் உதவி என்று அந்தப் படத்தை எடுத்துமுடித்தார். அது 1963ம் ஆண்டு. YouTube என்ன, கம்ப்யூட்டர்களே வராத காலம் அது. எனவே, எடுத்த படத்தை வீட்டின் அருகிலிருக்கும் சிறிய திரையரங்கில் மக்களுக்குப் போட்டு காட்டினார். ஒரு காட்சியிலேயே செலவு செய்த 500 டாலர்களை எடுத்துவிட்டார்.

சினிமாதான் வாழ்க்கை என முடிவு செய்து அதில் உயர்கல்வி பயில தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் விண்ணப்பம் செய்தார். ஆனால், ஸ்பீல்பெர்க் படிப்பில் சுமார்தான். C கிரேட் தான் பெற்றிருந்தார். எனவே, பல்கலைக்கழகம் அவர் விண்ணப்பத்தை நிராகரித்தது. பின்னர், கலிஃபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகத்தில் மாணவராக இணைந்தார். 1968ம் ஆண்டு, 35mm ஃபிலிம் சுருளில், 15,000 டாலர்கள் செலவில், ‘ஆம்ப்லின்‘ என்று ஒரு குறும்படம் எடுத்தார். இந்தப் படம்தான் இப்படி ஓர் இளம் இயக்குநர் இருக்கிறான் என்று இந்த உலகத்திற்கே அவரை அடையாளம் காட்டியது. அவரால் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு ‘ஆம்ப்லின் என்டர்டைன்மென்ட்’ என்று பெயர்வைக்க இதுவே காரணம்!

வெரைட்டி விருந்து

அதன் பிறகு இரண்டு தொலைக்காட்சி படங்கள் எடுத்தார். அதில் ‘டூயல்’ (Duel) என்ற ஒரு படம், வில்லன் என்ற ஒருவனைக் காட்டாமலே, உறுமும் டேங்கர் லாரி ஒன்றை மட்டும் காண்பித்து, இப்படியும் கதை சொல்லலாம் என்று அனைவரையும் பயமடைய செய்தார். அவரது முதல் முழு நீளத் திரைப்படம் ‘தி சுகர்லேண்ட் எக்ஸ்பிரஸ்’ ஒரு கிரைம் திரில்லர். அது வெற்றிபெற்றாலும், அதே ஜானரில் தங்கி விடாமல், தனக்கு மிகவும் பிடித்த ஏலியன் மற்றும் அறிவியல் புனைவு கதைகளைப் படமாக்க தொடங்கினார். அதில் ET: The Extra Terrestrial ஒரு முக்கியமான படம். அதன் பிறகு ஜுராசிக் பார்க் சீரிஸ், செயற்கை நுண்ணறிவு குறித்த AI: Artificial Intelligence என்ற படம், ஷார்க் வகை மீன்களின் அட்டகாசம் ‘ஜாஸ்’, எதிர்கால குற்றங்களைக் கண்டறியும் ‘மைனாரிட்டி ரிப்போர்ட்’, ஏலியன் முற்றுகை இடும் ‘வார் ஆஃப் தி வேர்ல்ட்ஸ்’, தற்போது எடுத்துக்கொண்டிருக்கும் VR கேம் பற்றிய ‘ரெடி பிளேயர் ஒன்’ என்ற படம் என்று அவர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் தொடாத விஷயங்களே இல்லை என்ற அளவிற்குப் படங்களை எடுத்துவிட்டார்.

இடையிடையில், சாகசப் படங்களிலும், படத் தயாரிப்பிலும் கவனம் செலுத்தினார். அவர் தொடங்கிவைத்து இந்தியானா ஜோன்ஸ் படத் தொடர் இன்று வரை ரீபூட் செய்யப்படாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் அவர்களின் மற்றுமொரு சிறப்பு, போர் மற்றும் நாடகத் தன்மை நிறைந்த படங்கள். அதிசய தொழில்நுட்பங்கள் மற்றும் அதிக உழைப்பு தேவைப்படும் பிரம்மாண்ட படங்களை ஒவ்வொரு முறை எடுத்த பின்பும், சில ட்ராமா படங்கள் விறுவிறுவென எடுத்து விடுவது ஸ்பீல்பெர்க் அவர்களின் வழக்கம். மொழி தெரியாத விமானநிலையம் ஒன்றில் மாட்டிக்கொள்ளும் மனிதனின் கதையான ‘தி டெர்மினல்’, கறுப்பினப் பெண் ஒருவரின் சோகக் கதையான ‘தி கலர் பரப்பில்’, கறுப்பின சோகங்களைப் பேசும் ‘அமிஸ்டட்’, படுகொலை ஒன்றைச் சுற்றி பின்னப்பட்ட ‘முனிச்’, அனிமேஷன் படங்களான ‘டின் டின்’ மற்றும் ‘தி பிக் ஃப்ரெண்ட்லி ஜெயன்ட்’, உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ‘பிரிட்ஜ் ஆஃப் ஸ்பைஸ்’ மற்றும் ‘ஸ்க்ளிண்டர்ஸ் லிஸ்ட்’, போர் மற்றும் அதன் தாக்கங்களைக் கூறும் படங்களான ‘எம்பயர் ஆஃப் தி சன்’, ‘சேவிங் பிரைவேட் ரியான்’ மற்றும் ‘வார் ஹார்ஸ்’ என்று கலந்துகட்டி வெரைட்டி விருந்து படைத்தார்.

விருதுகள் மற்றும் கனவுகள் 

ஸ்பீல்பெர்க் இதுவரை மூன்று ஆஸ்கர் விருதுகளை வென்றிருக்கிறார். அவரின் அடுத்த படமான ‘தி போஸ்ட்’, பென்டகன் பேப்பர்ஸ் வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்திய ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகை கடந்துவந்த இடையூறுகள் மற்றும் திக் திக் நிமிடங்களைக் குறித்துப் பேசுகிறது. இந்தப் படம் இந்த மாதமே திரைக்கு வர, அடுத்த சயின்ஸ் ஃபிக்ஷன் படமான ‘ரெடி பிளேயர் ஒன்’ அடுத்த வருடம் மார்ச் மாதம் திரைக்கு வருகிறது. தன்னுடைய கனவுப் படமாக ஸ்பீல்பெர்க் கருதுவது ‘ரோபோ அபோகலிப்ஸ்’ என்ற நாவல் சொல்லும் கதையைத்தான். பலமுறை அறிவிக்கப்பட்டு, பட்ஜெட் பற்றாக்குறை, தொழில்நுட்ப சவால்கள் என்று படம் கைவிடப்பட்டது. விரைவில் இதை மீண்டும் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹாலிவுட் மட்டுமல்ல, உலக சினிமா அரங்கிலேயே ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் அவர்கள் ஒரு மாபெரும் ஆளுமையாகத் திகழ்கிறார். இதற்கு மிக முக்கியக் காரணம், கதை எழுதுவதை விட, ஒரு கதையை எப்படி விற்பது என்ற தந்திரம் இவருக்கு நன்றாகத் தெரியும். ஓர் உண்மைச் சம்பவம் அல்லது யாரேனும் ஒருவர் எழுதிய சிறுகதை/நாவல், இதை மட்டும் வைத்துக்கொண்டு அற்புதமாகத் திரைக்கதை அமைத்து விடுவார். இயக்குவது மட்டுமே தன் தொழில் என்று ஒதுங்கிக் கொள்ளாமல் தயாரிப்பாளராகவும் பல நல்ல படங்களை ஊக்குவிக்கும் ஆர்வலர். இன்று 71 வயதைத் தொட்டுவிட்டாலும் இன்னமும் இளைஞராய் ஓடிக்கொண்டிருக்கிறார். ‘தி போஸ்ட்’ படத்தை இந்த வருடம் ஜூன் மாதம் தொடங்கி, நவம்பர் மாதம் படத்தையே முழுவதுமாக முடித்து விட்டார். இதற்கு இடையில், ‘ரெடி பிளேயர் ஒன்’ படத்தின் கிராஃபிக்ஸ் வேலைகள் வேறு. அதுதான் ஸ்பீல்பெர்க்!

"அறிவியல் புனைவு என்று ஒன்று இல்லவே இல்லை. எல்லாமே அறிவியல்தான்!” என்பார் ஸ்பீல்பெர்க். அவர் கூறியது போல், அவர் படங்களில் அறிவியல் புனைவாக வந்த பல விஷயங்கள், இன்று நிஜ உலகிலேயே வந்துவிட்டதுதான் ஆச்சர்யம்!

அடுத்த கட்டுரைக்கு