Published:Updated:

டாப்-5 ஹாலிவுட் படங்கள் 2017

டாப்-5 ஹாலிவுட் படங்கள் 2017

ஆண்டுக்கு நூறு படங்கள் வந்தாலும், ரசிகர்கள் மனதில் நச்சென ஒட்டிக்கொள்ளும் படங்களுக்கு ஆயுள் அதிகம். 2017-ல் ஹாலிவுட்டைக் கலக்கிய பல படங்களில் டாப் 5 பட்டியல் இது. 

5. கோகோ 

பிக்ஸாரின் பக்கா அனிமேஷன் படம் கோகோ. குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் பெரியவர்களுக்கும் பொழுது போக்காக இருந்தவிதத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய படம் இது. மெக்ஸிகனில் இசை மீது அதீத வெறுப்பு காட்டும் குடும்பம், அந்தக் குடும்பத்தில் இசை மீது அதீத ஆர்வம் கொண்ட சிறுவன் எப்படி தன் கனவை அடைகிறான் என்பது ஒன்லைன். இதற்குப் பின் லட்சியமா, குடும்பமா, இறந்த குடும்பத்தினரை நினைவில் வைத்துக் கொள்வது, வெற்றியாளனின் வெற்றி மட்டுமே இங்கு பார்க்கப்படும், அதற்கு அவன் என்ன செய்தாலும் இந்த உலகம் கண்டு கொள்வது கிடையாது என நிறை விஷயங்களை மிக உணர்வுப் பூர்வமாகவே சினிமாவாக்கப்பட்டிருந்தது. 

4. லோகன் 

எக்ஸ்மேனுக்கான ஃபேர்வெல் இந்த `லோகன்'. முந்தைய படங்களில் அடிதடியும், ஆக்ரோஷமுமாக மிரட்டிய லோகனை இந்த பாகத்தில் மிக எமோஷனலாக்கி இருந்தார்கள். தன்னுடைய தந்தையாக நினைத்தவரை பாதுகாக்கவும், திடீரெனக் கண்டடையும் தன் மகளைக் காப்பாற்றவும் லோகன் போராடுவதாக விரிகிற கதை. ஒரு சூப்பர்ஹீரோவின் வயோதிகத்தைக் காட்டிய விதத்தில் வித்தியாசமாய் தெறிந்தது. கூஸ்பம்ப்ஸ் ஆக வேண்டிய ரசிகர்கள், கண்ணீர் வழிய எக்ஸ்மேனுக்கு விடை கொடுத்த விதத்தில் லோகன் மிஸ் செய்யக் கூடாத சினிமா.

3. டன்கிர்க் 

படம் வெளியானதும், இதுதான் நோலனின் சிறந்த படமா? இல்லையா? என்ற வாக்குவாதம் தீபற்றி எரிந்தது. இந்தக் கட்டுரையின் நோக்கம் அதை விவாதிப்பது இல்லை என்பதால் யூ-டன்ர் போட்டு படத்துக்குள் போவோம். அதிக முறை சினிமாவாக்கப்பட்ட ஒரு வரலாற்று நிகழ்வை எடுத்து படமாக்கியிருந்தார் க்ரிஸ்டஃபர் நோலன். திரைக்கதை ஜித்து என்பதால் நீர், நிலம், ஆகாயம் என மூன்றாகப் பிரித்து கதை சொல்லி சுவாரஸ்யப்படுத்தியிருந்தார் நோலன். ஒரு வரலாற்று நிகழ்வை, த்ரில்லிங்காகவும், உண்மைக்கு நெருக்கமாகவும் கொடுத்திருந்தவிதத்தில் இந்த வருட "not to be missed" listல் டன்கிர்க் படத்தை தவிர்க்க முடியாது. 

2. பேபி டிரைவர் 

ரொமாண்டிக் படங்கள்தான் மியூசிகல் படமாக வரும் என்பதை காரை விட்டு மோதி பொடிப் பொடி ஆக்கினான் இந்த `பேபி டிரைவர்'. படத்தில் முழுக்க முழுக்கப் பாடல்கள் மட்டும்தான். ஆக்‌ஷன் படங்களில் சில ஆண்டுகளுக்கு முன் ஆஸ்கர்களைக் குவித்த `மேட்மேக்ஸ்' ஒரு ரகம் என்றால், `பேபி டிரைவர்' இன்னொரு ரகம். கச்சிதமான கார் ஓட்டுனர், அவனுக்கு தேவையான இசை, அவனிக்குப் பிடித்த பெண், அவன் விசுவாசமாக இருக்கும் ஒருவர், அவருக்காக செய்யும் வேலையால் வரும் பிரச்னை என தோட்டா தெறிக்க தெறிக்க ஒரு மியூசிகல் ரெய்டாக அதிரடித்தது படம். 

1. வொண்டர் வுமன் 

`கேல் கடாட் ஆர்மி' ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் ஆச்சர்யமில்லை. காரணம் `வொண்டர் வுமன்' படம். இதற்கு முன்பு வந்த, சூப்பர்கேர்ள், கேட்வுமன், பேட்கேர்ள் என எந்த சூப்பர் ஹீரோயின் சினிமாவும் இத்தனை பெரிய ஆதரவு பெற்றது கிடையாது. கிராஃபிக்ஸ் பூச்சுகளால் படத்தில் கொரளி வித்தை என்ன வேண்டுமானாலும் காட்டலாம். ஆனால், அது படத்தின் உணர்வோடு இணைந்திருந்தால்தான் வேலைக்கே ஆகும் என நிரூபித்தது `வொண்டர் வுமன்'. போர் நடந்து கொண்டிருக்கும் போது, தனி ஒருத்தியாக எழுந்து ஸ்லோமோஷனில் நடந்து செல்லும் போது வரும் கூஸ்பம்ஸ் ஆகட்டும், இறுதியில் "It's not about you deserve, It's about what you believe. And i believe in love" என்ற படி எதிரியை பந்தாடுவது என தன்னுடைய ஒளிரும் மந்திரக் கயிறால் கட்டிப் போட்டார், டையானாவாய் வந்த கேல் கடாட். எந்த அளவுக்கு என்றால் `ஜஸ்டிஸ் லீக்' படம் எப்படி இருந்தாலு கேல் கடாட்டைப் பார்ப்பதற்காகவே படம் பார்க்கும் அளவுக்கு. 2019ல் வெளியாகும் `வொண்டர் வுமன் 2'வுக்கு இப்போதிருந்தே எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு