Published:Updated:

“கண்கலங்கிய ‘டைட்டானிக்’ நாயகி, அஞ்சலியின் ‘ரோசாப்பூ’, வாவ்.. வருண் தவான்” #WoodBits

“கண்கலங்கிய ‘டைட்டானிக்’ நாயகி, அஞ்சலியின் ‘ரோசாப்பூ’, வாவ்.. வருண் தவான்” #WoodBits
“கண்கலங்கிய ‘டைட்டானிக்’ நாயகி, அஞ்சலியின் ‘ரோசாப்பூ’, வாவ்.. வருண் தவான்” #WoodBits

வருண் தவானுக்கு மெழுகு சிலை 

வளர்ந்து வரும் இந்தி நடிகர்களில் ஒருவர் வருண் தவான். அடுத்த சூப்பர் ஸ்டார் பந்தயத்தில் முன்னணியில் இருக்கும் வருண்  சென்றவாரம் தனது சிக்ஸ் பேக் படத்தை ட்விட்டரில் ரிலீஸ் செய்தார். அப்புகைப்படம் அனைவரையும் வாய்பிளக்க வைத்தது. தற்போது ஹாங்காங்கில் உள்ள மேடம் டுசாட்ஸ் மெழுகு சிலைகள் அருங்காட்சியகத்தில் இவரது மெழுகு சிலையும் நிறுவப்பட்டுள்ளது. அமிதாப் பச்சன், ஷாருக் கான், அனில் கப்பூர், சல்மான் கான், மாதுரி திக்‌ஷித், ஹ்ரிதிக் ரோஷன், கத்ரீனா கைஃப், கரீனா கப்பூர், ஐஸ்வர்யா ராய் என்ற வரிசையில் பாலிவுட் நடிகர்களில் மிக இளம் வயதில் இந்தப் பெருமையைப் பெற்றவர் இவரே. 

கண் கலங்கிய டைட்டானிக் நாயகி 

‘டைட்டானிக்', 'தி ரீடர்' உள்ளிட்ட ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்த நடிகை கேட் வின்ஸ்லெட்டிற்குத் திரைத்துறையில் சிறப்பாகப் பங்காற்றியதற்காக 'லண்டன் ஃப்லிம் க்ரிட்டிக் சர்கிள்' விருதுகள் விழாவில், அவருக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. இத்தகைய சர்வதேச விழாக்களில் விருது பெற்றவர்கள் ஏற்புரை வழங்குவது வழக்கம். தனக்கான விருதைப் பெற்றுக்கொண்டு பேசிய  கேட் வின்ஸ்லெட், 'பெண்களைத் தங்கள் அதிகாரத்தால் அச்சுறுத்தும், தவறாக எண்ணும் இயக்குநர்கள், தயாரிப்பளார்களுடன் வேலை செய்யக்கூடிய தருணங்களைத் தவிர்க்கக்கூடிய முடிவுகளை எடுக்காமல் இருந்துவிட்டேன். இத்தகைய கசப்பான உண்மைகளைச் சுமந்துகொண்டு இந்த விருதை வாங்குவது நெருடலாக இருக்கிறது'  எனக் கண்கலங்கப் பேசியிருக்கிறார். இவர் யாரைக் குறிப்பிடுகிறார் என்று தெரியாததால், ஹாலிவுட்டில் சலசலப்பு தொடங்கியுள்ளது. 

மலையாள 'ரோசாப்பூ' அஞ்சலி

'கற்றது தமிழ்', 'கலகலப்பு', 'தரமணி' எனப் பல தமிழ் படங்களில் நடித்திருக்கும் அஞ்சலி, தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களிலும் பிஸி. தற்போது அவரது நடிப்பில் வெளிவரயிருக்கும் 'ரோசாப்பூ'  படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. அஞ்சலிக்கு 'ரோசாப்பூ' இரண்டாவது மலையாளப் படமாகும். இப்படத்தை தமிழில் 'புலி', 'இருமுகன்' ஆகிய படங்களைத் தயாரித்த ஷிபு தமீன்ஸ் தயாரித்திருக்கிறார். 

‘கிரிக் பார்ட்டி' படத்தின் ரீ-மேக் 'கிர்ராக் பார்ட்டி'

2016-ஆம் ஆண்டு எல்லா தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த கன்னடப் படம் 'கிரிக் பார்ட்டி'. கன்னடத்தின் இளம் நாயகன் ரக்‌ஷித் ஷெட்டி, சம்யுக்தா ஹெக்டே, ராஷ்மி மந்தன்னா நடித்த இப்படம், தற்போது தெலுங்கில் 'கிர்ராக் பார்ட்டி' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. நிகில் சித்தார்த், சிம்ரன் பர்ரிஞ்சா, சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் இதில் நடித்துள்ளனர். கன்னடத்தில் ஹிட் பாடல்களைக் கொடுத்த அஜ்னேசஷ் லோக்நாத்தே தெலுங்கிலும் இசையமைக்கிறார்.   

ரீல் தோனியின் புது அவதாரம்

‘கை போ சே', 'தோனி' ஆகிய படங்களில் நடித்து பாலிவுட்டில் பிரபலமானவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். படப்பிடிப்பில் இருக்கும் தனது 'சொன்ச்சிரியா' படத்தின் கெட்அப் லுக்கை அண்மையில் ட்விட்டரில் வெளியிட்டார்.  இப்படத்தில் 70-களில்  வாழ்ந்த சம்பல் கொள்ளையர்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாக்கியிருக்கிறார்கள். இப்படத்தை அபிஷேக் சௌபி இயக்குகிறார். வழக்கமாக சாக்லேட் பாயாக வரும் சுஷாந்த் சிங்கை இந்த 'சொன்ச்சிரியா' லுக்கில் அடையாளம் தெரியாத அளவுக்கு இருக்கிறார் என்று ரசிகர்கள் இவரது ட்விட்டர் பதிவின் கீழ் கமெண்ட் செய்து வருகிறார்கள்.