Published:Updated:

"கொடூரக் கொள்ளையர்கள், பாசக்கார டாக்டர்... என்ன செய்கிறார், இந்த ஹாலிவுட் 'தீரன்'!" - 'டெத் விஷ்' படம் எப்படி? #DeathWish

கே.ஜி.மணிகண்டன்
தார்மிக் லீ
"கொடூரக் கொள்ளையர்கள், பாசக்கார டாக்டர்... என்ன செய்கிறார், இந்த ஹாலிவுட் 'தீரன்'!" - 'டெத் விஷ்' படம் எப்படி? #DeathWish
"கொடூரக் கொள்ளையர்கள், பாசக்கார டாக்டர்... என்ன செய்கிறார், இந்த ஹாலிவுட் 'தீரன்'!" - 'டெத் விஷ்' படம் எப்படி? #DeathWish

40-க்கும் மேற்பட்ட கொள்ளை, 20-க்கும் மேற்பட்ட கொலைகள்... என நகரையே தூங்கவிடாமல் செய்யும் இரவு நேரக் கொள்ளைக்காரர்கள். அதில் யதேச்சையாக ஒரு டாக்டரின் குடும்பம் சிக்க, அதில் சில இழப்புகளும் நேர்கிறது. சாதாரண மக்களைப் போல இழப்பைக் கண்டு கடந்து போகாமல், கொள்ளையர்களைத் தேடி களத்தில் இறங்குகிறார் டாக்டர். கொள்ளையர்களை கண்டுபித்தாரா... தனக்கு நேர்ந்த இழப்புக்கு பலி தீர்த்தாரா... என்பதே `டெத் விஷ்' சொல்லும் கதை.

மனைவி லூசி ரோஸுக்கு (எலிசெபத் ஷ்யூ) சர்ப்ரைஸ் கிஃப்ட் வாங்கிக்கொடுப்பது, பள்ளி முடித்த மகள் ஜோர்டனின் (கேமிலா மோரோன்) ஆசைப்படி அவருக்குப் பிடித்த இடத்தில் கல்லூரிக்குச் சேர்ப்பது... என சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வருபவர், டாக்டர் பாலி கெர்ஸி (ப்ரூஸ் வில்ஸ்). மறுபக்கம் இரவு நேரங்களில் நடக்கும் கொள்ளைகள் பற்றி லோக்கல் நியூஸில் ஆரம்பித்து, நேஷனல் நியூஸ் வரை எல்லா சேனல்களிலும் அதைப் பற்றிய அலர்ட்கள் அனல் பறக்கிறது. கொள்ளையர்கள், எல்லோரைப் போலவும் சாதாரண ஆட்கள். அவர்களது சூழ்நிலைக்கேற்ப சிக்கும் ஆட்களை நோட்டம் விட்டு, பக்காவாக ப்ளான் செய்துதான் ஒவ்வொரு கொள்ளையையும் செய்வார்கள். அப்படி ஒருநாள் இரவில் தன் குடும்பத்துடன் இருக்க முடியாத சூழல், டாக்டர் கெர்ஸிக்கு ஏற்படுகிறது. அதைத் தெரிந்துகொண்ட கொள்ளையர்கள், அன்றிரவு வேட்டையை டாக்டரின் வீட்டில் நடத்த முடிவு செய்கிறார்கள். அன்றிரவு நடக்கப்போகும் கோரத்தைப் பற்றி தெரியாமல், ரோஸும், ஜோர்டனும் தங்களது இரவை கேக் செய்து கழித்துக்கொண்டிருக்கிறார்கள். 

கொள்ளையர்கள் வீட்டில் புகுந்துவிட்டார்கள் என்பதைத் தெரிந்துகொண்ட ரோஸ், தன் வீட்டில் இருக்கும் பணத்தையும் சில பொருள்களையும் 'எந்தவிதச் சண்டைச் சச்சரவுகளும் இல்லாமல் கொடுத்துவிடலாம்' என்ற முடிவுக்கு வருகிறார். அதையும்மீறி சில கைகலப்பு நடக்க, கொள்ளையர்கள் இருவர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்துகிறார்கள். ரோஸ் மரணமடைந்துவிடுகிறார், ஜோர்டன் கோமாவுக்குச் செல்கிறார். இதில் விரக்தியடையும் கெர்ஸி, பல நாள் போலீஸாரின் கண்களில் மண்ணைத் தூவி வரும் அந்தக் கொள்ளைக்காரர்களைத் தேடிக் களமிறங்குகிறார். கொள்ளையர்கள் யாரென்றே தெரியாமல், களத்தில் இறங்கும் கெர்ஸி, கண்ணில்படும் எல்லாக் கொள்ளைக்காரர்களையும் சுட்டுத் தள்ளுகிறார். தனக்குக் கிடைக்கும் சில துப்புகளின் மூலம், கெர்ஸியின் இழப்புக்குக் காரணமாக இருந்த கொள்ளையர்களைப் பற்றி தெரியவருகிறது. வேட்டைக்குக் கிளம்பும் கெர்ஸி, கொள்ளையர்களை பலி தீர்த்தாரா... இல்லை அவர்களிடமே பலியானாரா... என்பதைப் பரபரப்பாகச் சொல்ல முயன்றிருக்கிறார், இயக்குநர் எலி ரோத்.

`டெத் விஷ்' எனும் நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது. இதற்கு முன் 1974-ல் இதே கதையை மையமாகக் கொண்ட படம் வெளியாகியிருக்கிறது. கதை ஆரம்பித்த இடத்திலே முடிவதுதான், படத்தின் மிகப் பெரிய அம்சம். `டை ஹார்ட்', `ரெட்', `தி சிக்த் சென்ஸ்', `ஹாஸ்டேஜ்' எனப் பல ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படங்களில் நடித்து வந்த ப்ரூஸ் வில்ஸ், இந்தப் படத்தில் சென்டிமென்ட் நடிப்பைக் கையில் எடுத்துள்ளார். மனைவியை இழந்த சோகம், மகளை இழந்துவிடுவோமோ என்ற பயம், கொள்ளையர்களைப் பலிவாங்க வேண்டிய வெறி.. என எல்லாவற்றிலும் நடிப்பை கனகச்சிதமாக வெளிக்காட்டியுள்ளார். ப்ரூஸ் வில்ஸின் தம்பியாக வரும் ஃப்ராங்க் கெர்ஸியின் (வின்சென்ட் டி'ஓவோஃப்ரியோன்) காமெடிகள் சில இடங்களில் ஓகே ரகம். படத்தில் பாராட்டப்பட வேண்டிய மற்றொரு விஷயம், ரோஜியர் ஸ்டோஃபர்ஸின் ஒளிப்பதிவு. எல்லா ரக ஷாட்களிலும் மிரட்டியுள்ளார். மார்க் கோல்டுப்ளாட்டின் எடிட்டிங் ஆங்காங்கே ஆறுதல். டிடெக்டிவ் யெயின்ஸ் (டீன் நோரிஸ்), டிடெக்டிவ் ஜாக்ஸன் (கிம்பர்ளி எலிஸ்), எலிஸபத் ஷ்யூ, கேமிலா மோரோன், மைக் எப்ஸ், ரூனி பெல்வின்ஸ் என மற்ற கதாபாத்திங்கள் தங்களுக்குக் கொடுத்த கேரக்டரை சரியாகச் செய்துள்ளனர். 

படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே கதைக்குள் வந்துவிட்டாலும், அடுத்தடுத்த சம்பவங்களை நகர்த்த இயக்குநர் எடுத்துக்கொண்ட நேரம் ரொம்பவே நீ...ளம். படத்திற்கு சம்பந்தமே இல்லாத காட்சிகளும் ஏராளம். படத்தின் கதையை காட்சியாக்கிப் பார்த்தால் 20 நிமிடங்களே தேறும். படத்தில் பரபரப்பும் டோட்டல் மிஸ்ஸிங். இடம்பெற்ற இரண்டு ஆக்‌ஷன் காட்சிகளைப் பல இடங்களில் வைத்திருந்தால், படம் வேற லெவலில் இருந்திருக்கும். ஜோ கார்னஹானின் திரைக்கதையும் சரி, லூட்விக் கோரான்சனின் இசையும் சரி... சுவாரஸ்யம் கூட்டுவதில் தவறியிருக்கிறது. கெட்டவர்களைக் கொல்ல சட்டத்தைத் தன் கையில் எடுத்தது படத்திற்காக `சரி' என்று சமாதானம் செய்துகொண்டாலும், யூ-டியூபை துப்பாக்கிச் சுடுவதற்குப் பயிற்சி எடுப்பதற்கும், துப்பாக்கியைக் கழட்டி மாட்டுவதற்கும், ஹார்ட் டிஸ்கில் இருக்கும் ஆதாரங்களை அழிப்பதற்குப் பயன்படுத்தியது... அப்பட்டமாக இருந்தது.  ஒட்டுமொத்தமாக ப்ரூஸ் வில்ஸுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து எடுத்ததால், வில்லன் நாக்ஸின் (ப்யூ நேப்) கதாபாத்திரம் படத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவே இல்லை.  

ஆங்காங்கே இடம்பெற்ற திரைக்கதையின் 'பரபர' பகுதிகளும், ஆக்‌ஷன் காட்சிகளும் 'வாவ்' ரகம். ஹாலிவுட் ஆக்‌ஷன் த்ரில்லர் படங்களுக்கே உரிய பரபரப்பும், விறுவிறுப்பும் `டெத் விஷ்' படத்தில் இருந்திருந்தால், ஒட்டுமொத்த டீமுக்கும் 'குட் விஸ்' சொல்லியிருக்கலாம்!