Published:Updated:

துப்பாக்கி ஏஞ்சலினா ஜோலி... வில் அம்பு அலிசியா... இந்த #TombRaider எப்படி இருக்கிறது?

ர.சீனிவாசன்
துப்பாக்கி ஏஞ்சலினா ஜோலி... வில் அம்பு அலிசியா... இந்த #TombRaider எப்படி இருக்கிறது?
துப்பாக்கி ஏஞ்சலினா ஜோலி... வில் அம்பு அலிசியா... இந்த #TombRaider எப்படி இருக்கிறது?

தமிழ்த் திரையுலகில் தொடர்ந்து பிரச்னைகள். எந்தப் புதிய படமும் வெளியாகாவில்லை. இந்த நேரத்தில் டாம் ரைடர் படம் வெளியாகியிருப்பது அதற்கு கிடைத்துள்ள பெரிய வரம் என்றே சொல்ல வேண்டும். உலகப் புகழ்பெற்ற பெண் கதாபாத்திரம் ஒன்றை முதன்மையாக கொண்டு ஆக்ஷன், அட்வெஞ்சர் படமாக வெளிவந்திருக்கும் Tomb Raider படம் எப்படி?

இளம் வயதிலேயே லாரா க்ராஃப்ட்டை (அலிசியா விகேண்டர்) விட்டுவிட்டு ஓர் உண்மையை தேடி, சாகசப் பயணம் ஒன்றுக்கு செல்கிறார் லாராவின் தந்தை (டாமினிக் வெஸ்ட்). சென்றவர் ஏழு வருடமாகியும் திரும்பாததால், இறந்துவிட்டதாகவே கருதப்படுகிறார். விரக்தியில் தன் கோடிக்கணக்கான சொத்துக்களையும், தன் தந்தை காட்டிகாத்த நிறுவனத்தையும் ஒரு பெண் உதவியாளரிடம் விட்டுவிட்டு தனித்து வாழ்கிறார் லாரா. அப்போது ஒரு சந்தர்ப்பத்தில் மனம் மாறி திரும்பும் வேலையில், தன் தந்தை போயிருப்பது வெறும் சாகசப் பயணம் மட்டுமல்ல, ஹிமிக்கோ என்ற மரணத் தேவதையின் கல்லறையை தேடி என்பது புரிகிறது. இயல்பிலேயே தற்காப்பு கலைகள் கற்றவளாக, சாகசங்களின் மேல் அலாதி பிரியம் கொண்டவளாக இருக்கும் அவள், தன் தந்தை விட்டு சென்ற தடயங்களை பின்பற்றி அவரை தேடிச் செல்ல பயணப்படுகிறாள். அந்தப் பயணத்தில் அவள் தெரிந்து கொண்ட ரகசியங்கள் என்ன? ஹிமிக்கோ என்ற மரணத் தேவதை யார்? என்பது போன்ற கேள்விகளுக்கு சாகசங்கள் பல கலந்து பதில் சொல்ல முற்பட்டிருக்கிறார்கள்.

நீங்கள் 90ஸ் கிட்ஸ் என்றால் டாம் ரைடர் கேம் குறித்தும் அதில் வரும் லாரா க்ராஃப்ட் குறித்தும் அறிமுகம் கொடுக்க தேவையில்லை. இப்போதும் இந்த கேமில் புது புது வெர்ஷன்கள் வருகின்றன என்றாலும் 2001-07 வரை உலகெங்கும் பேசப்பட்ட கேம் இதுவாகத்தான் இருக்கும். சாகசக்காரியாக லாரா க்ராஃப்ட் தோன்றி செய்யும் அதிரடிகள் அப்படியே வெள்ளித்திரையிலும் விரிந்தன. லேடி சூப்பர்ஸ்டார் ஏஞ்செலினா ஜோலி லாரவாக நடிக்க 2001ம் ஆண்டு Lara Croft: Tomb Raider என்ற பெயரில் படமாக வெளியானது. ஏஞ்செலினா ஜோலியின் நடிப்பை பாராட்டினாலும், படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. இருந்தும் துணிந்து இரண்டாம் பாகம் 2003-ம் ஆண்டு எடுக்கப்பட அதற்கும் அதே ரிசல்ட். இந்த வரலாற்றை மாற்றி எழுத ஆஸ்கர் நாயகி அலிசியா விகேண்டரை வைத்து Tomb Raider படத்தொடரை ரீ-பூட் செய்திருக்கிறார்கள். லாரா க்ராஃப்ட் என்றதும் இரண்டு கைகளில் துப்பாக்கியுடன் இருக்கும் ஏஞ்சலினா ஜோலிதான் நினைவுக்கு வருவார். சிலருக்கு பில்லா படத்தில் நயன்தாரா ஹை ஹீல்ஸில் காரின் மேல் நடந்து வருவது கூட நினைவுக்கு வரலாம். அலிசியா ஏஞ்சலினா ஜோலியின் கதாபாத்திரத்தை எந்தளவு பூர்த்தி செய்கிறார் என்பதுதான் கேள்விக்குறி.  அலிசியா இரண்டு துப்பாக்கிகளுடன் போஸ் தர, இறுதி வரை காத்திருக்க வேண்டும். 

2013ம் வருடம் வெளியான Tomb Raider கேம் ஒன்றின் கதையுடன், கொஞ்சமே கொஞ்சம் அதன் இரண்டாம் பாகத்தின் கதையையும் சேர்த்து இந்தப் படத்திற்கு பொருத்தி அழகு பார்த்திருக்கிறார்கள். இதில் நல்ல விஷயம் என்னவென்றால், முந்தைய இரண்டு படங்களை போல இல்லாமல், இந்தப் புதிய படத்தை ஓர் ஆர்ஜின் (Origin) ஸ்டோரியாகவே எடுத்திருக்கிறார்கள். அவளின் குழந்தைப் பருவம், அவள் ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளராக, சாகசக்காரியாக மாற என்ன காரணம் என்றெல்லாம் சொல்லாமல் சொல்கிறது இந்தப் படம். ஓர் ஆர்ஜின் ஸ்டோரிக்கு நோலனின் பேட்மேன் பிகின்ஸை நல்ல உதாரணமாகக் கொள்ளலாம். 

லாரா க்ராஃப்ட்டாக அலிசியா நன்கு பொருந்தி போயிருக்கிறார். சாகசக்காரியாக மாற எத்தனிக்கும் கதாபாத்திரம் என்பதால், அவரின் இயல்பான இருக்கத்துடன் கூடிய உடல்மொழி நன்கு பொருந்தி போயிருக்கிறது. ஒரு படகில் இருந்து மற்றொரு படகிற்கு குதிக்க தயங்குவது, சிறுவர்கள் கத்தியை நீட்டி சண்டைக்கு வர, ஓடி ஒளிவது. ஒவ்வொரு முறை ஏதோ ஒரு சாகசம் செய்தாக வேண்டிய சூழல் வரும்போது நடுங்குவது என ஒரு ஆர்ஜின் கதைக்கு தேவையான நடிப்பை சிறப்பாகவே வழங்கியிருக்கிறார். ஆனாலும், ஏதோவொன்று குறைகிறது. அலிசியாவின் முகத்தில் . பிஞ்சு மூஞ்சிம்மா உனக்கு என்று தான் வடிவேல் பாணியில் சொல்லத் தோன்றுகிறது.

பிரச்னை என்னவென்றால், படத்தில் அதைத் தவிர வேறு எதுவும் சொல்லி கொள்ளும்படி அமையவில்லை என்பதுதான். பாதிப்படம் முடிந்தவுடன், இதுவரை ஓடிய கதையை திரும்ப ஒட்டி பார்த்தால், இதையா ஒரு மணி நேரம் காட்டினார்கள்? நான்கு காட்சியிலேயே இதை எல்லாம் விளக்கியிருக்கலாமே என்று தோன்றுகிறது. சரி, இப்போதாவது சாகசங்கள் விரியும் என்று உட்கார்ந்தால், அதிலும் ஏமாற்றமே. வீடியோ கேமில் இருந்து ஒரு ஏழு பெரிய சாகசக் காட்சிகளை எடுத்து வைத்து கொண்டு, அந்த ஸ்டன்ட்கள் வரவேண்டும் என்பதற்காக மட்டுமே திரைக்கதை அமைத்ததை போல இருக்கிறது. “இப்போ அடுத்து அவன் இதை சொல்லுவான் பாரேன்” என்று நாமே காட்சிகளை கெஸ் செய்து விடலாம். ரீபுட் என்பதற்காக வசனங்கள் கூட மம்மி காலத்தில் எழுதப்பட்டது போல், அரதப் பழசாக இருக்கிறது. 

படம் முழுக்க லாராவை பெரிய புத்திசாலி என்று புகழ்கிறார்கள். ஆனால், அதை நிரூபிக்கும் காட்சிகள் படத்தில் மிகவும் குறைவு. இறுதியில் ஒரு ட்விஸ்டை வைத்து இரண்டாம் பாகத்திற்கு லீட் கொடுக்கிறார்கள். அந்த ட்விஸ்ட் கூட லாராவின் தந்தை கொஞ்சம் யூகித்திருந்தால் முன்னமே கண்டுபிடித்திருக்கலாம். அதை லாராவிடமும் சொல்லியிருக்கலாம். லாரா க்ராஃப்ட் படங்களில் வந்த  இரண்டு துப்பாக்கிசாகசங்கள் இதில் இல்லை. டாம் ரைடர் கேம் பாணியில் வில் அம்பு பயன்படுத்தியிருக்கிறார்கள். அம்பு நூல் இழைல மிஸ் ஆயிடுச்சு.