Published:Updated:

`` `அட!' சொல்லவைக்கும் 12 அயல்நாட்டு சினிமா... ரசிக்கலாம், மிதக்கலாம், பறக்கலாம்!'' - வின்சி ராஜ்

The Platform
News
The Platform

அனைத்து மொழிகளையும் சேர்த்து தனக்குப் பிடித்தமான 125 மொழி திரைப்படங்கள் எனப் பகிர்ந்துகொண்டிருந்தவரிடம், அவருக்குப் பிடித்த 10 அயல்நாட்டுத் திரைப்படங்களை கொஞ்சம் விரிவாகப் பகிர்ந்துகொள்ள சொல்லிக் கேட்டோம்.

தமிழ் சினிமாவின் பிரபலமான போஸ்டர் டிசைனர் ,வின்சி ராஜ். `முண்டாசுபட்டி', `சூது கவ்வும்', `காலா', `கபாலி' என போஸ்டர் டிசைன்களால் நம்மைக் கவர்ந்தவருக்கு, இயக்குநர் எனும் இன்னொரு முகமும் இருக்கிறது. கேன்ஸ் திரைப்பட விழாவில் விருதுபெற்ற குறும்படம் ஒன்றை இயக்கியவர், இப்போது திரைப்படம் ஒன்று இயக்குகின்ற முயற்சியிலும் இறங்கியுள்ளார்.

Vinci raj
Vinci raj

கடந்த சில நாள்களாக, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அனைத்து மொழிகளையும் சேர்த்து தனக்குப் பிடித்தமான 125 மொழி திரைப்படங்கள் எனப் பகிர்ந்து கொண்டிருந்தவரிடம், அவருக்குப் பிடித்த 10 அயல்நாட்டுத் திரைப்படங்களை கொஞ்சம் விரிவாக பகிர்ந்துகொள்ள சொல்லிக் கேட்டோம். `10 கஷ்டம், 12 பண்றேன்' என அவர் பரிந்துரைத்த பட்டியல் இதோ. சினிமா காதலர்கள், இந்த லாக்டௌனைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஓக்ஜா - OKJA

Okja
Okja

`பாரசைட்' படத்தின் இயக்குநர் போங் ஜூன் ஹூ இயக்கித்தில் வெளியான தென் கொரிய திரைப்படம். ஒரு மலைவாழ் கிராமத்து சிறுமிக்கும், அவளுடைய செல்லப்பிராணியாக வளரும் மரபணு மாற்றபட்ட பன்றிக்கும் இடையே உள்ள அழகான உறவுதான் கதை. அதனுள், கார்ப்பரேட்களின் உணவு அரசியலை, உணவை வியாபாரம் செய்கின்ற அரசியலை, பிராய்லர் கோழி, ஆர்கானிக் உணவு போன்ற விஷயங்களை அவ்வளவு எளிமையாகவும் நுணுக்கமாகவும் பேசும் படம். உயர்தரமான கிராஃபிக்ஸும், ஒளிப்பதிவும் நிச்சயம் நம்மை கவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தி மிராக்கிள் - THE MIRACLE

The Miracle
The Miracle

மசுன் கிர்மிசிகல் என்பவர் இயக்கிய துருக்கிய மொழி திரைப்படம். உண்மைச் சம்பவங்களைக் அடிப்படையாகக் கொண்டது. மிகவும் பின்தங்கிய மலை கிராமம் ஒன்றுக்கு, ஆசிரியராகப் பணிமாற்றலாகி செல்கிறார் ஒருவர். அவரால், அங்கு என்னென்ன மாற்றங்கள் நிகழ்கிறதெனச் சொல்லும் பீரியட் திரைப்படம் இது. 1960'களில் நடக்கும் இந்தப் படம், அன்றைய காலகட்டத்தில் அந்த கிராமத்து மக்களின் வாழ்வியல், கலாசாரம், பழக்கவழக்கங்கள் என அத்தனையும் யதார்த்தமாகக் காட்சிப்படுத்தியிருக்கும். படத்தில், இரு வெவ்வேறு காலநிலை மாற்றம் உண்டாகும். அதை அவ்வளவு அழகாக காட்சிப்படுத்தியிருப்பார்கள். அது எப்படி திரையில் சாத்தியாமனது, அதன் பின்னாலுள்ள திட்டமிட்ட உழைப்பு என கதை ரீதியாகவும் கலை ரீதியாகவும் பெயருக்கு ஏற்றாற்போல் நம்மை ஆச்சர்யபடுத்தும் படம்.

தி ப்ளாட்ஃபார்ம் - THE PLATFORM

The Platform
The Platform

ஸ்பானிய இயக்குநர் கால்டர் கஸெல்-உருசியா என்பவர் இயக்கிய, ஒருவித சர்ரியலான திரைப்படம். 20-க்கு 20 அளவுள்ள ஒரு சதுர அறை. அறைக்கு நடுவில், தரையிலும் கூரையிலும் துவாரங்கள். துவாரத்தின் வழியாக கீழே பார்த்தால் கண்ணுக்கு எட்டியவரை துவாரங்களும் அறையும், அறைக்கு இரு மனிதர்கள் மட்டுமே தெரிவார்கள். மேலே பார்த்தாலும் அதே கதைதான். தினமும் அந்தத் துவாரத்தின் வழியாக, ஒரு மேடையில் உணவு அணுப்பப்படுகிறது. மேலிருப்பவர்கள் சாப்பிட்டது போக மீதி நமக்கு. நாம் சாப்பிட்டது போக மீதி கிழிருப்பவர்களுக்கு. கிட்டத்தட்ட, 50-வது மாடியிலேயே பாதி உணவு காலியாகிவிடுகிறது. அப்படியென்றால் கீழே உள்ளவர்களுக்கு உணவு? இதில் தொடங்கி பல கேள்விகளுக்குப் படம் பதில் சொல்லும். சுயநலம், பேராசை போன்றவற்றின் குரூர விளைவுகளை அட்டகாசமாக எடுத்துரைக்கும் படம்.

ஷாப் லிஃப்டர்ஸ் - SHOP LIFTERS

Shoplifters
Shoplifters

ஹிரோகாஸு கொரீடா என்பவர் இயக்கிய ஜப்பானிய திரைப்படம் இது. அழகானதொரு குடும்பம். அப்பா, அம்மா, குழந்தைகள், சித்தி என ஒருத்தருக்கு ஒருத்தர் அவ்வளவு அக்கறையுடன் இருக்கிறார்கள். களவுக்கு ஆயிரம் காரணங்கள் சொல்லும் அப்பா, அதை நுட்பமாக நிகழ்த்தும் திறன் என சுவாரஸ்யமாக நகரும் கதையில், மகனால் சில பிரச்னைகள் எழுகின்றன. அவை அந்தக் குடும்பத்திற்கு என்ன மாதிரியான தாக்கங்களை உண்டு பண்ணுகிறது என்பதுதான் படம். களவுப் பற்றிய படம் என்றாலும் நமக்குப் பல்வேறு உணர்வுகளைப் படம் கடத்துகிறது.

இன்சென்டீஸ் - INCENDIES

Incendies
Incendies

டென்னிஸ் வில்லெநியூவ் இயக்கிய கனட நாட்டைச் சேர்ந்த திரைப்படம். பிரெஞ்சு, அரபிக் மொழிகளில் படமாக்கியிருப்பார்கள். கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒரு திரைப்படம் இது. அது தரும் வலி, நம்மைப் புரட்டிபோடும், யோசிக்க வைக்கும். தன் அம்மா இறந்துபோனதும், இரட்டையர்களான ஒரு சகோதர-சகோதரியின் கைகளுக்குக் கடிதம் ஒன்று வருகிறது. அதில், அவர்களுடைய அண்ணனும், அப்பாவும் வேறு இடத்தில் இருப்பதாகவும் அவர்களைச் சென்று சந்தியுங்கள் என எழுதியிருக்கிறது. உடனே, இருவரும் அவர்களைச் சந்திக்க மத்திய-கிழக்கு நாடொன்றுக்குப் பயணம் மேற்கொள்கிறார்கள். படம் பார்த்து முடித்ததும், ஏற்படும் உணர்வை வார்த்தைகளால் கடத்த முடியாது! கட்டாயம், பார்க்க வேண்டிய திரைப்படம்.

பலூன் - BALLOON

Balloon
Balloon

பெமா ஸ்டென் எனும் திபெத்திய இயக்குநர் இயக்கிய, சீனமொழி திரைப்படம் `பலூன்'. திபெத் நாட்டிலிருந்து இப்படியொரு படைப்பா என ஆச்சர்யப்படுத்திய ஒன்று! எளிமையான ஒரு கதைதான். மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்து வளர்க்கும் ஒரு கணவன்-மனைவி. அந்த மனைவியோ நான்காவது முறையாகவும் கர்ப்பம் அடைகிறார். இதற்கிடையில், கணவனின் தகப்பனார் இறந்துபோக, அவர்தான் மீண்டும் பிறந்துவருகிறார் என நினைக்கிறார்கள். இந்தக் கதையை அவ்வளவு கவித்துவமாகக் காட்சிப்படுத்தியிருப்பார்கள். பலூனை உவமையாக வைத்து திரையில் கவிதை ஒன்றை வடித்திருப்பார்கள். நிச்சயம், பார்க்க வேண்டிய திரைப்படம்.

ஐ ஸ்டில் ஹைட் டு ஸ்மோக் - I STILL HIDE TO SMOKE

I still hide to Smoke
I still hide to Smoke

ரய்ஹானா ஒபர்மெய்ர் எனும் பெண் இயக்குநர் இயக்கிய, அரபிக் மொழி திரைப்படம். பிரான்ஸ்-கிரேக்க-அல்ஜீரியா நாடுகளின் கூட்டுத்தயாரிப்பில் உருவானது. 1995-ல் நடக்கும் கதை, அந்தக் காலகட்டத்தில் அல்ஜீரிய நாட்டுப் பெண்கள் என்னென்ன அடக்குமுறைகளுக்கு ஆளாகினர் என்பதை நெற்றிப்பொட்டியில் அறைந்து சொல்லிய திரைப்படம். பெண் சுதந்திரத்தைப் பறிக்கும் அந்நாட்டின் மத, இன வரையறைகள், சட்டத்திட்டங்கள் ஆகியவற்றை விமர்சனத்துக்கு உட்படுத்திய படம். ஒரு துணிச்சலான படைப்பு.

ஸ்வீட் கன்ட்ரி - SWEET COUNTRY

Sweet Country
Sweet Country

இயக்குநர் வார்விக் தார்ன்டன், ஆங்கிலம் மற்றும் அர்ரென்டே மொழிகளில் இயக்கிய ஆஸ்திரேலியத் திரைப்படம். 1920-களில் ஆஸ்திரேலிய மண்ணில், ஐரோப்பிய குடியேறிகளுக்கும் ஆஸ்திரேலிய பழங்குடியினருக்கும் இடையில் நடந்த இனவெறி அடிப்படையிலான வன்முறைகளைச் சொல்லும் படம். தன் மனைவி மீது பாலியல் வன்முறை நிகழ்த்திய ஐரோப்பிய குடியேறியைக் கொன்றுவிடுகிறான் பழங்குடி இனத்தைச் சேர்ந்த கணவன். கொன்றுவிட்டு இருவரும் தப்பியோட, குடியேறிகள் அவர்களைப் பிடிக்க முயற்சி செய்ய, என்னென்ன நடக்கிறது என்பதே கதை. இந்தியர்கள் நாமும் கதையோடு கனெக்ட் செய்துகொள்ள முடியும்.

தி மோஸ்ட் பியூட்டிஃபுல் கபுள் - THE MOST BEAUTIFUL COUPLE

The most beautiful Couple
The most beautiful Couple

ஸ்வென் டாடிகன் என்பவர் இயக்கிய ஜெர்மானிய திரைப்படம். இளம் ஜெர்மானிய தம்பதியர், மத்திய கிழக்கு நாடொன்றுக்கு சுற்றுலா செல்கிறார்கள். சென்ற இடத்தில் அங்கிருக்கும் சிலரால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறாள் மனைவி. அந்தக் கொடூர சம்பத்தினால் தீவிர மன உளைச்சலுக்கு ஆளாகும் தம்பதியர், நாடு திரும்பி பிறகு இயல்பு வாழ்க்கைக்கும் திரும்புகிறார்கள். அப்போது தன் மனைவிக்கு தீமை இழைத்தவர்களில் ஒருவனை, தனது நாட்டில் பார்க்கிறான் அந்தக் கணவன். அதன் பின் என்ன நடக்கிறது எனப் படம் நகரும். கணவன்-மனைவிக்கு இடையே இருக்க வேண்டிய புரிதல்கள், அவர்களுடைய மனநிலைகள் எனப் பல விஷயங்களைப் பேசுகின்ற படம்.

வேலி ஆஃப் சோல்ஸ் - VALLEY OF SOULS

Valley of Souls
Valley of Souls

நிக்கோலஸ் ரின்கன் கில்லி என்பவர் இயக்கிய கொலம்பிய திரைப்படம். படத்தின் கதை என்னவெனில், அந்நாட்டைச் சேர்ந்த ஒரு மீனவருக்கு இரு மகன்கள். ஒருநாள், மீன் பிடித்துவிட்டு வீடு திரும்புகையில், தன் மகன்கள் இருவரும் பாரா மிலிட்டரி ஃபோர்ஸால் சுட்டுக்கொல்லபட்டதை அறிகிறார். அதன்பின் நடப்பதெல்லாம் நம் நெஞ்சை உலுக்குபவை. வலி நிறைந்த, அழுத்தமான ஒரு திரைப்படம்.

டெல் அவிவ் ஆன் ஃபயர் - TEL AVIV ON FIRE

Tel aviv on Fire
Tel aviv on Fire

ஜாலியான, ரகளையான ஹெப்ரூ/அரபிக் மொழி திரைப்படம். பாலஸ்தீனத்தைச் சேர்ந்த சலீம் அபாஸ், தொலைக்காட்சி தொடர் ஒன்றில் புரொடக்‌ஷன் அசிஸ்டென்டாகப் பணியாற்றுகிறான். பணிக்குச் செல்லும் வழியில் தினமும் செக்போஸ்டில் இருக்கும் அலுவலருக்கும் அவருக்கு நாடகம் பற்றிய உரையாடல் நிகழும். இவர்களின் உரையாடல் இருவரின் வாழ்க்கையையும் எங்கெல்லாம் கொண்டு செல்கிறது என்பதே கதை. படம் முழுக்கச் சிரிப்பு வெடிகளால் சிதறடித்திருப்பார் இயக்குநர் சமெஹ் ஸோபி. ஒளிப்பதிவும், கலை இயக்கமும் கவனிக்கபட வேண்டியவை.

தி டீச்சர்ஸ் டைரி - THE TEACHER'S DIARY

The Teacher's Diary
The Teacher's Diary

நிதிவாட் தரதார்ன் இயக்கிய தாய்லாந்து மொழித்திரைப்படம். லிஸ்டில் கடைசியாக வைத்திருப்பதன் காரணம், எல்லாப் படங்களையும் பார்த்துவிட்டு கடைசியாக ஒரு ஜாலியான, ஃபீல்குட் படமாக இதைப் பார்த்து மனதை ஆசுவாசப்படுத்தலாம். தாய்லாந்து நாட்டிலுள்ள ஒரு கிராமத்தில், மிதவை பள்ளிக்கூடம் ஒன்றிற்கு புது ஆசிரியராக நியமிக்கப்படுகிறான் ஒருவன். அவனுக்கு, அங்கு அதற்கு முன் ஆசிரியையாகப் பணியாற்றியவளின் டைரி ஒன்று கிடைக்கிறது. அதைப் படிக்கப் படிக்க அவனுக்கு அவள்மீது காதல் உருவாகிறது. இவ்வளவுதான் கதை. லொகேஷன், ஒளிப்பதிவு எல்லாம் ரம்மியமாக இருக்கும். இந்தியில் கூட இப்படத்தை `நோட்புக்' என்ற பெயரில் ரீமேக்கினார்கள்.