Published:Updated:

மனைவி ஆசைப்பட்ட ஊருக்கு வீட்டுடன் பறந்த கிழவர்! #UP #MovieRewind

மனைவி ஆசைப்பட்ட ஊருக்கு வீட்டுடன் பறந்த கிழவர்! #UP #MovieRewind

சுமார் 70 வயது கிழவர் ஒருவர், 12 வயது சுட்டிச் சிறுவன் ஒருவன், பிரமாண்டமான பறவை ஒன்று, துறுதுறுவென சுற்றும் நாய் ஒன்று, கூடவே, வானத்தில் பறக்கும் வீடு... இப்படியொரு விநோதமான கூட்டணியில் ஒரு திரைப்படம் எப்படி இருக்கும்? நிச்சயமான சுவாரஸ்ய உத்தரவாதத்தை அளிக்கிறது, UP. 

வருடம் 1940. சார்லஸ் மன்ட்ஸ் என்கிற ஆய்வுப் பயணி ஒருவர், தன்னுடைய கண்டுபிடிப்பு ஒன்றை மக்களிடம் முன்வைக்கிறார். ‘பாரடைஸ் ஃபால்ஸ்’ என்கிற எவராலும் அறியப்படாத பிரதேசம் ஒன்றில், தான் கண்டுபிடித்த பிரமாண்டமான பறவையின் எலும்புக்கூட்டை அனைவரின் பார்வைக்கும் வைத்து பாராட்டைப் பெறுகிறார். ஆனால், அது போலியான கண்டுபிடிப்பு என்பதை விஞ்ஞானிகள் அம்பலப்படுத்துகிறார்கள். ஆத்திரமான சார்லஸ், ‘தான் மீண்டும் அந்தப் பிரதேசத்துக்குச் சென்று, அந்தப் பறவை இனத்தை உயிரோடு கொண்டுவருவேன். அதுவரை இங்கே திரும்ப மாட்டேன்’ எனச் சபதம் செய்துவிட்டுச் செல்கிறார். 

கார்ல் என்கிற ஒன்பது வயது சிறுவனுக்கு, ஆய்வுப் பயணியான சார்லஸ் மீது மிகவும் பிரியம். அவரைத் தன் ஆதர்சமாகக் கருதுகிறான். தானும் அந்த ரகசியப் பிரதேசத்துக்குப் பயணிக்க வேண்டும் என்பது அவன் கனவு, லட்சியம். இதே விருப்பம்கொண்ட எல்லி என்கிற சிறுமியைச் சந்திக்கிறான். வாயாடியான எல்லி, அவனைக் கவர்ந்துவிடுகிறாள். அதிகம் பேசாத கார்லை, எல்லிக்கும் பிடித்துவிடுகிறது. இருவரும் நண்பர்கள் ஆகிறார்கள். பெரியவர்களானதும், இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள். ‘பாரடைஸ் ஃபால்ஸில்’ தங்களின் வீடு இருக்க வேண்டும் என்பது எல்லியின் கனவு. எனவே, அங்கே செல்வதற்காக இருவரும் பணம் சேமிக்கிறார்கள். ஆனால், பல நடைமுறைச் செலவுகளால் அது செலவழிந்துகொண்டே இருக்கிறது. 

காலம் நகர்கிறது. இப்போது கார்லும் எல்லியும் வயோதிகம் அடைந்துவிட்டார்கள். எல்லியும் நோய்வாய்ப்பட்டு இறந்துபோகிறார். வாழ்க்கையைத் தனிமையில் கழிக்கிறார் கார்ல். இந்நிலையில், ஒரு கட்டுமான நிறுவனம், சுற்றியுள்ள அனைத்து வீடுகளையும் விலைக்கு வாங்கி, பெரிய திட்டம் ஒன்றைச் செய்ய ஆரம்பிக்கிறது. ஆனால், எல்லியுடன் வாழ்ந்த அந்த வீட்டை கார்ல் விற்க மறுக்கிறார். தன்னுடைய மெயில் பாக்ஸை சேதப்படுத்திவிடும் கட்டுமானப் பணியாளர் ஒருவருடன் கார்ல் சண்டையிடுகிறார். ஆத்திரத்தில் அந்தப் பணியாளரைத் தாக்கிவிட, பெரிய சர்ச்சையாகி, நீதிமன்றம் வரை செல்கிறது. 'முதியோர்களுக்கான ஓய்வு இல்லத்துக்கு கார்ல் செல்ல வேண்டும்' என நீதிமன்றம் உத்தரவிடுகிறது. 

கார்ல் தனது வீட்டைவிட்டுக் கிளம்பவேண்டிய நாள். அவரை அழைத்துச்செல்ல அரசு ஊழியர்கள் வருகிறார்கள். ‘இதோ, ஒரு நிமிடம் வருகிறேன்’ என்கிறார் கார்ல். பிறகு நிகழும் அந்தக் காட்சியைக் கண்டு நம்பமுடியாமல் வாய் பிளந்து நிற்கிறார்கள் அரசு ஊழியர்கள். ஆம்! கார்லின் வீடு, ஆகாயத்தில் பறக்க ஆரம்பிக்கிறது. பலூன் வியாபாரியான கார்ல், பல நூறு ஹீலியம் பலூன்களைக் கட்டி, தனது வீட்டை வானத்தில் பறக்கவிடுகிறார். மனைவி எல்லியின் வாழ்நாள் கனவின்படி, தனது வீட்டை ‘பாரடைஸ் ஃபால்ஸ்’ பகுதியில் கொண்டுபோய் வைக்க வேண்டும் என்கிற லட்சியத்துடன் இந்த விபரீதமான பயணத்தை மேற்கொள்கிறார். 

தனது வீட்டுடன் வானத்தில் பறந்துகொண்டிருக்கும்போது, கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைகிறார் கார்ல். வானத்தில் பறந்துகொண்டிக்கும் வீட்டை யார் தட்ட முடியும்? வெளியே எட்டிப் பார்த்தால், ரஸ்ஸல் என்கிற சிறுவன் ஆபத்தான நிலையில் தொங்கிக்கொண்டிருக்கிறான். குறும்புத்தனம் நிறைந்த அவன், ஏற்கெனவே கிழவருக்கு அறிமுகம் ஆனவன்தான். ‘உங்களுக்கு எந்த வகையிலாவது உதவ விரும்புகிறேன்’ என்று கார்லை நச்சரித்துக்கொண்டிருந்த வாண்டுதான் அவன். அவருக்கு உதவுவதன் மூலம் தனது சேகரிப்பின் கடைசி பேட்ஜை பெற்று, பள்ளியில் விருது வாங்க முடியும். 

‘அடப்பாவி ரஸ்ஸல், இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறாய்?” என்று பதறுகிறார் கார்ல். ‘நானும் உங்கள் பயணத்தில் பங்குகொள்கிறேன்’ என்கிறான் சிறுவன். 

கிழவரும் சிறுவனும் தங்கள் பயணத்தில் ஒரு பிரமாண்ட பறவையையும், பேசும் நாயையும் சந்திக்கிறார்கள். பறவைக்கு ‘கெவின்’ என்று பெயர் வைக்கிறான் சிறுவன். பயணத்தில் அவையும் இணைகின்றன. இன்னொரு பக்கம், கெவின் என்கிற அந்தப் பறவையைக் கைப்பற்ற, ஒரு சதிகாரக் கும்பல் முயன்றுகொண்டிருக்கிறது. ‘என் பரிசோதனையில் வெற்றிபெறுவேன்’ என்ற சபதத்துடன் முன்னர் காணாமல்போன ஆய்வுப் பயணியான சார்லஸ்தான், இந்தச் சதியின் பின்னால் இருக்கிறார். 

இதனால், கெவின் பறவைக்கு மட்டுமின்றி, கிழவர் மற்றும் சிறுவனுக்கும் பல ஆபத்துகள் உருவாகின்றன. இதை அவர்கள் எவ்வாறு எதிர்கொண்டார்கள்? கெவினுக்கு என்னவாயிற்று? கிழவரின் பறக்கும் வீட்டுக்கு என்னவாயிற்று? தன் லட்சியத்தை அவர் நிறைவேற்றினாரா என்பதே அடுத்தடுத்த சுவாரஸ்யங்கள். 

விமர்சகர்களின் பாராட்டுகளுடன், வணிகரீதியாகவும் வெற்றிபெற்ற இந்தத் திரைப்படம், ஆஸ்கர் உள்ளிட்ட பல விருதுகளை வென்றது. அனிமேஷன் பிரிவில் மட்டுமின்றி, ‘சிறந்த திரைப்படம்’ பிரிவிலும் நாமினேட் செய்யப்பட்ட அரிய சாதனையையும் படைத்தது. 

தன் மனைவியின் வாழ்நாள் விருப்பத்தை நிறைவேற்றும் லட்சியத்துடன் சாகசப் பயணத்தை மேற்கொள்ளும் கிழவர், அவருடைய எரிச்சலைப் பொருட்படுத்தாமல் தொணதொணவென்று பேசிக்கொண்டிருக்கும் சிறுவன், மயில் தோற்றத்தில் இருக்கும் பிரமாண்டமான பறவை, இவர்களைக் கண்காணிக்க அனுப்பப்பட்டு, இவர்களுக்கே விசுவாசமாக மாறும் பேசும் நாய், நூற்றுக்கணக்கான வண்ண பலூன்களால் வானத்தில் பறக்கும் வீடு, எதிர்கொள்ளும் ஆபத்துகள், தங்கள் கூட்டணியால் அவற்றை எதிர்கொள்ளும் சாமர்த்தியம் எனத் திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் கண்களைவிட்டு அகலவே இல்லை. 

கார்லுக்கும் எல்லிக்குமான நேசமும் அன்பும் மிக நெகிழ்ச்சியாகச் சொல்லப்பட்டுள்ளது. மனைவியின் வாழ்நாள் விருப்பத்தை நிறைவேற்ற, கிழவர் மேற்கொள்ளும் சாகசத்தில் காட்டும் உறுதியும் பிரமிக்கவைக்கிறது. தங்களைக் கூண்டோடு ஒழிக்க சார்லஸ் போடும் திட்டங்களை முறியடிக்கும் காட்சிகள், பரபரப்பும் நகைச்சுவையும் இழைந்தவை. 

பிக்ஸார் அனிமேஷன் ஸ்டூடியோ உருவாக்கியிருக்கும் திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தரமும் துல்லியமும் மிளிர்கிறது. ஒவ்வொரு பாத்திரமும் தனித்தன்மையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. பறந்துகொண்டிருக்கும் வீட்டினுள் மாட்டியிருக்கும் எல்லியின் புகைப்படம் அசைவதன்மூலம் கார்லுக்குச் சொல்லும் செய்தி கவிதை. வண்ணமயமான பாரடைஸ் ஃபால்ஸின் பின்னணியில் நிகழும் சாகசக் காட்சிகள் பரபரப்பு நிறைந்தவை. கார்ல் பாத்திரத்துக்கு அட்டகாசமாகக் குரல்கொடுத்திருக்கிறார், நடிகர் எட் அஸ்னர் (Ed Asner). பாப் பீட்டர்சனுடன் இணைந்து எழுதிய கதையை அற்புதமாக இயக்கியிருக்கிறார் Pete Docter. 

குழந்தைகளோடு இணைந்து பார்க்கவேண்டிய சிறந்த அனிமேஷன் திரைப்படம் Up.

அடுத்த கட்டுரைக்கு