Published:Updated:

உலக கேமர்களே... விர்ச்சுவல் ரியாலிட்டி களத்தில் அசத்தும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்! டோன்ட் மிஸ் #ReadyPlayerOne

உலக கேமர்களே... விர்ச்சுவல் ரியாலிட்டி களத்தில் அசத்தும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்! டோன்ட் மிஸ் #ReadyPlayerOne

உலக கேமர்களே... விர்ச்சுவல் ரியாலிட்டி களத்தில் அசத்தும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்! டோன்ட் மிஸ் #ReadyPlayerOne

உலக கேமர்களே... விர்ச்சுவல் ரியாலிட்டி களத்தில் அசத்தும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்! டோன்ட் மிஸ் #ReadyPlayerOne

உலக கேமர்களே... விர்ச்சுவல் ரியாலிட்டி களத்தில் அசத்தும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்! டோன்ட் மிஸ் #ReadyPlayerOne

Published:Updated:
உலக கேமர்களே... விர்ச்சுவல் ரியாலிட்டி களத்தில் அசத்தும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்! டோன்ட் மிஸ் #ReadyPlayerOne

மேட்ரிக்ஸ் போல ஒரு விர்ச்சுவல் உலகத்தில் வாழும் கதாபாத்திரங்கள், அவர்களுக்கான போட்டிகள், வெற்றி தோல்விகள். அந்த மாய உலகத்தை உடைத்துப் போட போராடும் கலகக்காரர்கள், மாய உலகத்தை ரசித்து வாழும் கதாநாயகன், அந்த அமைப்புக்கு (சிஸ்டத்துக்கு) எதிராக அவன் கிளர்ந்து எழுவது என நாம் பார்த்துப் பழக்கப்பட்ட கதையாக இருந்தாலும், Ready Player One படம் பயங்கரமாக நம்மை ஈர்க்கும். அது எதனால் தெரியுமா?  


" எல்லா பிரச்னைகளையும் தீர்க்க முயற்சிசெய்கிறோம். பிறகு, அதோடு வாழப் பழகிக்கொள்கிறோம் " படத்தின் ஆரம்ப வரிகள் இவை. 2045 லும் இதுதான் நடக்கிறது. நிஜ உலகின் பிரச்னைகளைச் சமாளிக்க அல்லது அதிலிருந்து விடுபட, 2045ல் மக்கள் அனைவரும் தேர்ந்தெடுப்பது OASIS . OASIS என்பது ஒர்டு விர்ச்சுவல் ரியாலிட்டி உலகம்.  OASISன் கிரியேட்டரான ஜேம்ஸ் ஹேலிடே தனது முழு சொத்தையும் கேமில் இருக்கும் புதிர்களைக் கண்டுபிடித்து வெல்பவர்களுக்கு வழங்குவதாக அறிவித்துவிட்டு மறைகிறார். சக போட்டியாளரான Innovative Online Industries (IOI) ஹேலிடேவின்  சொத்துக்களை அபகரிக்க முயல்கிறது. அதற்கென விளையாட்டில் வெல்வதற்காக, ஆயிரக்கணக்கான நபர்களைப் பணியமர்த்துகிறது. அவர்கள், சிக்ஸர்ஸ் என அழைக்கப்படுகிறார்கள்.  ஹீரோ & டீம் , சிக்ஸர்ஸ் இறுதியில் யார் வெல்கிறார்கள் என்பதை புதிரோடும் வாழ்க்கை அனுபவங்களோடும் சொல்கிறது, ரெடி பிளேயர் ஒன் .  படத்தின் மிகப்பெரிய பலம், படத்தில் வரும் பிற படங்கள், வீடியோ கேம்கள், உடைகளின் ரெஃபரன்ஸ் மட்டுமே. 

தனக்குப் பிடித்த இயக்குநர்களுக்கு, புத்தகங்களுக்கு, நடிகர்களுக்கு ட்ரிப்யூட் செய்யும் விதமாக திரைப்படங்களில் காட்சிகள் அமைக்கப்படுவது புதிதல்ல. தமிழிலியே இதற்கு எக்கச்சக்க உதாரணங்கள் சொல்ல முடியும். சிவாஜி திரைப்படத்தின் தமிழ் பதிப்பில் எம்.ஜி.ஆர், சிவாஜி முதல் கமல்ஹாசன் வரைக்குமான பாடல் காட்சிகளுக்கு ரஜினி ஆடியிருப்பார்.அதே செட்டில் அவற்றை மறு உருவாக்கம் செய்திருப்பார்கள். அது கிட்டத்தட்ட ஸ்பூப் என்ற வகைக்குள் அடங்கிவிடும். சுப்ரமணியபுரம் படத்தில் ‘சிறுபொன்மணி அசையும் அதில் தெறிக்கும்’ என நாஸ்டால்ஜியாவை கிளறிவிட்ட அற்புதமான ட்ரிப்யூட். அதற்குப் பிறகு பல படங்களில் இளையராஜாவின் எவர்க்ரீன் இசையை வலிந்து திணித்த போக்கையும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். க்வெண்டின் டரண்டினோவின் படங்களின் பின்னணி இசை முதல் பல இடங்களில் அவருடைய ஆதர்சமான இசைத்துணுக்குகளைத் தெறிக்கவிடுவார். “இதுவரை வெளியான ஒவ்வொரு படத்தையும் நான் சுட்டிருக்கிறேன்…” (I steal from everysingle movie ever made) என்பார் டரன்டினோ. 


ஸ்டார் டிரெக், பேட்மேன், ஹார்லி குயின், Back to the future இயக்குநர்  Robert Zemeckis, Tron, ஜுராஸீக் பார்க், கிங் காங், சூப்பர்மேன், ஸ்டார் வார்ஸ், சிட்டிசன் கேன் , சைல்ட் பிளே படத்தில் வரும் சக்கி பொம்மை, தி அயர்ன் ஜயன்ட்  என இத்தனை படங்களின் ரெஃபரன்ஸ் சட் சட்டென கடந்து போகிறது.அட, இது அதுதான என யோசித்து முடிவதற்குள் அடுத்த ரெஃபரன்ஸ் வந்துவிடுகிறது. படங்களாக மட்டுமில்லாமல், பாடல்கள், வீடியோ கேம்கள் என அத்தனை ரெஃபரன்ஸ்கள் படத்தின் முதல் காட்சி முதல் இறுதிகாட்சி வரை அள்ளித் தெளித்திருக்கிறார் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். தன்னைப் பற்றி அதீத துதி வந்துவிடக்கூடாது என்பதற்காக தனது பல முந்தைய படங்களை இதில் சேர்க்காமல் தவிர்த்திருக்கிறார் இயக்குநர் ஸ்பீல்பெர்க் . ஜப்பானியர்களின் நிஞ்சா கதாப்பாத்திரம் வரை அவ்வளவு நுணுக்கமாக சேர்த்திருக்கிறார். 

இத்தனை ரெபரன்ஸ்களையும் தாண்டி படத்தில் ஸ்பீல்பெர்க் ஒரு மகத்தான் ட்ரிப்யூட்டை உலக சினிமா ரசிகர்களின் ஆதர்சமான ‘ஸ்டான்லி குப்ரிக்’கிற்கு செய்திருக்கிறார். Artificial Intelligence திரைப்படத்திற்கான திரைக்கதையையும் கதையையும் 600க்கும் மேற்பட்ட ஸ்டோரிபோர்ட் ஓவியங்களையும் ஸ்பீல்பெர்க்கிடம் கொடுத்து இந்த படத்தை நீ இயக்கு நான் தயாரிக்கிறேன் என்று இன்ப அதிர்ச்சியை ஸ்பீல்பெர்க்கிற்கு அளித்தார் குப்ரிக். குப்ரிக்கின் மறைவுக்குப் பிறகு வெளிவந்த Artificial Intelligence  திரைப்படத்தையே குப்ரிக்கிற்கான ட்ரிப்யூட்டாக எடுத்திருந்தார் ஸ்பீல்பெர்க். அந்த படத்தின் பல காட்சிகளின் அமைப்பு குப்ரிக்கின் முந்தைய படங்களின் காட்சி அமைப்போடு ஒத்துபோகும் படி அமைத்திருப்பார். அந்த ட்ரிப்யூட்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் இந்தப்படத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மொத்தமாக குப்ரிக்கின் ஒரு படத்தை மறு உருவாக்கம் செய்திருக்கிறார் ஸ்பீல்பெர்க். படத்தின் ட்ரெயிலரில் கூட மற்ற படங்களின் ரெபரன்ஸ்களை காட்டியவர்கள், குப்ரிக்கின் இந்த படத்தைப் பற்றி பெரிதாக வாயே திறக்கவில்லை. அதனால், ஸ்பாய்லர்களைத் தவிர்க்கும் பொருட்டு அந்தப் படத்தின் பெயரையோ காட்சிகளையோ சொல்லாமல் தவிர்க்கிறேன். “நான் குப்ரிக்கின் எந்தப் படங்களையும் பார்த்தது இல்லை, அதனால் எனக்குப் புரியாமல் போனால் என்ன செய்வது என்று கேட்கிறீர்களா?” ஒன்றும் பிரச்னை இல்லை, குப்ரிக்கின் அந்தப் படத்தை பார்க்காத ஒரு கதாபாத்திரம் படத்தில் உண்டு. அந்தக் காட்சிகளில்  அது உங்கள் துணையாக இருக்கும். 


ஒரு காட்சியை மறு உருவாக்கம் செய்வதென்பது எப்போதும் கடினமான ஒன்று. அதையும் தாண்டி அது சிறப்பாக வந்துவிட்டால், பார்வையாளனை அதை விட திகைப்பில் ஆழ்த்தும் விஷயம் வேறெதுவுமாக இருக்க முடியாது.  பிரெஞ்சு இயக்குநர் கொடார்டின் Bande à part பேண்ட் ஏ பார்ட் படத்தில் ஒரு காட்சி இருக்கும். கதை மாந்தர்களான ஃபிரான்ஸ், ஆர்த்தர், ஒடில் மூவரும் லோவர் மியூசத்தில் வேகமாக ஓடுவார்கள். அந்த இடத்தை 9 நிமிடம் 43 நொடிகளில் கடந்ததாக காட்சிப்படுத்தி இருப்பார் கொடார்ட். (உலக சாதனை 9 நிமிடம் 45 நொடிகள் ). உலக சாதனையை வென்றுவிட்டதாக மூவரும் அவர்களுக்குள் சிரித்து அகமகிழ்வார்கள். இதே காட்சியை பெர்னார்டோ பெர்டொலூஸி 2003ம் ஆண்டு வெளிவந்த தி ட்ரீமர்ஸ் The Dreamers படத்தில் மறு உருவாக்கம் செய்கிறார். படத்தின் நாயகர்கள் 1964ம் ஆண்டு வெளியான பேண்ட் ஏ பார்ட் படத்தின் ரெக்கார்டை வெல்வதாக காட்சிப்படுத்தியிருப்பார். இப்படி சினிமாவுக்குள் செய்யும் ட்ரிப்யூட், மறு உருவாக்கம் எல்லாமே எப்போதும் ஸ்பெஷல். சரி. ரெடி பிளேயர் ஒன் படத்தின் மறு உருவாக்க காட்சிக்கு வருவோம். படத்தில் வரும் அந்த குப்ரிக் படம் என்ன என யூகிக்க முடிகிறதா? உங்களுக்கு ஒரு க்ளூ வேண்டுமென்றால் சொல்கிறேன்.  REDRUM . அவ்வளவு தான் ! 

படத்தில் ஹேலிடேவாக வரும் மார்க் ரைலேன்ஸ் தவிர்த்துவிட்டு பார்த்தால், படத்தில் பெரும்பாலும் புதுமுகங்கள். ஹீரோவான வேட் வாட்ஸை சற்று ஞாபகப்படுத்திப் பார்த்ததில் சமீபத்திய 'எக்ஸ் மென்' படத்தில் சைக்லாப்ஸாக நடித்தவர் எனத் தெரிகிறது. ஆனால், கதையின் நாயகர்கள் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்று தோன்றுகிறது. கதையில் வரும் விர்ச்சுவல் ரியாலிட்டி உலகில் நடக்கும் OASIS  தான் கதைக்களம் என்பதால், எதுவும் பெரிய உறுத்தலாக இல்லை.

சினிமா என்னும் கலையை இவ்வளவு லயித்து எடுக்க வயது ஒரு தடையில்லை என்பதை மற்றுமொரு முறை நிரூபித்திருக்கிறார் இந்த 70 வயது இளைஞர். 

சினிமா ஆர்வலர்கள், கேம் பிரியர்கள் மிஸ் பண்ணாமல் பார்க்கவேண்டிய சினிமா இந்த ரெடி பிளேயர் ஒன்.