Published:Updated:

"சூறாவளிக் காற்று, சூறையாடும் கும்பல்..." - 'தி ஹரிகேன் ஹெய்ஸ்ட்' படம் எப்படி?

தார்மிக் லீ
"சூறாவளிக் காற்று, சூறையாடும் கும்பல்..." - 'தி ஹரிகேன் ஹெய்ஸ்ட்' படம் எப்படி?
"சூறாவளிக் காற்று, சூறையாடும் கும்பல்..." - 'தி ஹரிகேன் ஹெய்ஸ்ட்' படம் எப்படி?

சூறாவளிக் காற்று... அதைப் பயன்படுத்தி பணத்தைக் கொள்ளையடிக்க நினைக்கும் கும்பலுக்கும், பணத்தைக் காப்பாற்ற நினைக்கும் சகோதரர்களுக்குமான டாம் அண்ட் ஜெர்ரி ஆட்டமே, 'தி ஹரிகேன் ஹெய்ஸ்ட்' படம்.

சூறாவளியைப் பயன்படுத்தி பணத்தை சூறையாடத் திட்டமிடும் கொள்ளைக்காரர்கள், அவர்களுடன் போராடி பணத்தைக் காப்பாற்ற முயலும் சகோதரர்கள்... நல்லது, கெட்டது வென்றது எது? என்பதைச் சொல்கிறது, `தி ஹரிகேன் ஹெய்ஸ்ட்' திரைப்படம். 

1992-ல் `ஹரிகேன் ஆண்ட்ரூ' என்ற சூறாவளி அல்பமாவில் உள்ள கல்ஃபோர்ட் எனும் ஊரை வெறித்தனமாக வேட்டையாடிக் கொண்டிருக்கிறது. அந்தச் சூறாவளியில் வில் ரட்லஜ் (டோபி கெப்பல்) - ப்ரீஸ் ரட்லஜ் (ரையன் வான்டென்) சகோதரர்கள், தங்களது அப்பாவை சிறுவயதில் இழந்துவிடுகிறார்கள். வருடங்கள் சென்றபின், வில் வானியல் ஆராய்ச்சியாளராகவும், ரையன் கடல் துறையிலும் வேலை பார்த்து வருகிறார்கள். அதேஊரில் அமெரிக்காவை எதிர்த்து, அங்கிருக்கும் கஜானாவைத் திருட ஒரு கும்பல் சதித்திட்டம் தீட்டுகிறது. அதன் பாதுகாவலராக கேஸி கார்பைன் (மேகி க்ரேஸ்) வேலை பார்க்கிறார். புயலின் காரணமாக அங்கிருக்கும் கோடிக் கணக்கான தொகையைப் பாதுகாப்பதுதான் கேஸியின் வேலை. மறுபக்கம் சூறாவளியைப் பயன்படுத்தி ஒட்டுமொத்த தொகையையும் சூறையாட பக்காவாகப் ப்ளான் போட்டு வருகிறார்கள், கொள்ளையர்கள். இந்தத் திட்டத்திற்கு அந்த ஊரின் சில போலீஸும், அரசு ஊழியர்களும் உடந்தையாக இருக்கிறார்கள். கொடூரப் புயலின் காரணமாக மின்சார வசதி செயலிழக்கிறது. உள்ளே பல பாதுகாப்புக் கருவிகளுக்கு மின்சாரம் தேவைப்படுவதால், ஜெனரேட்டரைப் பயன்படுத்துகிறார்கள். 

திடீரென ஒருநாள் அங்கிருக்கும் ஜெனரேட்டரிலும் பிரச்னை ஏற்பட, சரிசெய்ய ப்ரீஸ் ரட்லஜின் உதவியை நாடிச் செல்கிறார், கேஸி. இதைப் பயன்படுத்தி கொள்ளைக்கார கும்பல், கஜானா இருக்கும் இடத்தை நோக்கி விரைகிறது. அங்கிருக்கும் பாதுகாப்பு வீரர்கள் அனைவரையும் துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகாளாக சிறை பிடிக்கிறது. கஜானாவுக்குத் திரும்பும் கேஸியின் மீதும், ப்ரீஸின் மீதும் துப்பாக்கிச் சூடு நடக்கிறது. தன் உயிரைப் பணையம் வைத்து கேஸியை தப்பிக்கச் செய்கிறார், ப்ரீஸ். பல நவீன பாதுகாப்புகளைக் கொண்ட பணப் பெட்டகத்தைத் திறக்க கேஸியால் மட்டும்தான் முடியும் என்பதால், கொள்ளைக்காரர்கள் அவரை வலைவீசித் தேடிக்கொண்டிருக்கிறார்கள். கொள்ளைக்காரர்களிடமிருந்து தப்பித்து அந்த பணப் பெட்டகத்தைக் காப்பாற்றும் மிஷினில் இறங்குகிறார், கேஸி. நடந்த விஷயங்களைத் தெரிந்துகொண்ட டோபியும் தன் சகோதரரைக் காப்பாற்ற கேஸியோடு இணைகிறார். சுழற்றியடிக்கும் சூறாவளியில் நடக்கும் இந்த டாம் அண்ட் ஜெர்ரி சண்டையில் வென்றது யாரென்பதே, படத்தின் க்ளைமாக்ஸ். 

படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் பாயின்ட், விஷுவல். படம் முழுவதும் புயலுக்குள் பயணிப்பதால் அதற்குள் நாமும் சிக்கியதுபோல ஒரு உணர்வைக் கொடுக்கிறது. குறிப்பாக, ஆரம்பக் காட்சியில் வீட்டின் ஒவ்வொரு பகுதியாக பிய்த்துக்கொண்டு அடிக்கும் சூறாவளிக்குள் போகும்போது, நம் கால்களும் திரையை நோக்கிப் பறப்பதுபோல் இருக்கும். 250 கி.மீ வேகத்தில் வீசும் புயல் காற்று, பணப் பெட்டகத்துக்குப் பயன்படுத்தியிருக்கும் நவீன தொழிநுட்பம், டோபி வைத்திருக்கும் ஹைடெக் கார்... என டெக்னிக்கலான விஷயங்களில் இயக்குநர் ராப் கோஹன் அதிகமாகவே மெனக்கெட்டிருக்கிறார். முக்கியமாக, முதல் காட்சியில் இருந்த அதே நகக்கடி ரகக் காட்சி, க்ளைமாக்ஸ் காட்சியிலும் இடம்பெற்றிருந்தது. சுற்றியடிக்கும் சூறாவளிக்கு ஹீரோ டோயில் ஆரம்பித்து, கம்ப்யூட்டர் ஹேக்கர் மெலிசா வரை அனைவரும் கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.  

விஷுவல்ஸ் மற்றும் கிராஃபிக்ஸ் வேலைகளுக்கு அதிக கவனம் செலுத்திய இயக்குநர், கதையில் சற்று தடுமாறியிருக்கிறார். வெறும் நான்கு கொள்ளைக்காரர்கள் அங்கிருக்கும் 10-க்கும் மேற்பட்டவர்களைத் தாக்கி, பிணைக் கைதிகளாக்கும் சண்டைக் காட்சியில் துளியும் நம்பகத்தன்மை இல்லை. ஒரு சில ஸ்டன்ட் காட்சிகள் `வாவ்' ரகத்தில் அமைந்திருந்தாலும், மால் ஒன்றில் நடக்கும் சண்டைக் காட்சி, சிங்கமுத்து ஸ்டைலில் `என்னடா பித்தலாட்டம் இது?' என்ற நக்கல் கேள்வியை எழுப்பியது. இப்படிப்பட்ட கதையையும், விஷுவலையும் பயன்படுத்திப் பரபரப்பையும், ஆக்‌ஷன் காட்சிகளையும் இன்னும் அதிகப்படுத்தியிருக்கலாம். ஓப்பனிங் காட்சியிலும், க்ளைமாக்ஸ் காட்சியிலும் கொண்டு வந்த பரபரப்பைப் படம் முழுக்கவே வரச் செய்திருக்கலாம். 

`புயலுக்குப் பின் அமைதி' - படம் பார்த்து வெளியே வரும்போது இந்தப் பழமொழி கண்டிப்பாக உங்களது ஞாபகத்துக்கு வரும்!.

அடுத்த கட்டுரைக்கு