Published:Updated:

அவெஞ்சர்ஸ் : இன்ஃபினிட்டி வார் உருவான கதை... 10 ஆண்டு படங்களின் Recap பாகம் 1

கார்த்தி
அவெஞ்சர்ஸ் : இன்ஃபினிட்டி வார் உருவான கதை... 10 ஆண்டு படங்களின் Recap பாகம் 1
அவெஞ்சர்ஸ் : இன்ஃபினிட்டி வார் உருவான கதை... 10 ஆண்டு படங்களின் Recap பாகம் 1

ஏப்ரல் மாத இறுதியில் வேங்கை மவன் 'காலா' ஒத்தையில் வருவார் என எதிர்பார்த்துக் காத்திருந்தால், அவரோ ஜூன் மாதத்துக்குத் தள்ளிப் போய்விட்டார். ஆக, இந்த வெள்ளியன்று மொத்தமாகக் களம் இறங்குகிறார்கள் சூப்பர் ஹீரோக்கள். ஆம், சில வருடங்களாகவே காமிக்ஸ் ரசிகர்களும், மார்வெல் சூப்பர் ஹீரோ வெறியர்களும் பார்க்க காத்துக்கொண்டிருக்கும் 'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்' திரைப்படம் ஏப்ரல் 27-ம் தேதி வெளியாக இருக்கிறது. என்னப்பா, வழக்கம்போல சூப்பர் ஹீரோ வில்லனைக் கொல்வான், அதுதானே கதை என இந்தப் படத்தை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியிலும், இருக்கும் ஒவ்வொரு நபரும் சூப்பர் ஹீரோக்கள். சூப்பர்ஹீரோ சினிமா வரலாற்றில் இதற்கு முன்பு இப்படி இத்தனை ஹீரோக்களை வைத்து ஒரு படம் வெளியானதில்லை. படத்தின் டிரெய்லர், போஸ்டர் என எதுவும் இதுவரை ரசிகர்களை ஏமாற்றவில்லை என்பதால், எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாக எகிறிக்கிடக்கிறது. 

தேனோஸ் எனும் அரக்கன் உலகை மொத்தமாக அழிக்கத் திட்டம் தீட்டுகிறான். சூப்பர் ஹீரோக்கள் இணைந்து அதை எப்படி முறியடிக்கிறார்கள் என்பதுதான், 'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்' படத்தின் கதை. எல்லா அவெஞ்சர்ஸ் பாகங்களிலும், உலகை அழிக்கும் வில்லன்களிடம் அதனைக் காப்பாற்றுவதுதான் சூப்பர் ஹீரோக்களின் வேலை. 'அவெஞ்சர்ஸ் : இன்ஃபினிட்டி வார்' ஏன் உருவானது, எப்படி இவர்களை ஒன்றிணைத்தார்கள் என்பதை இனி பார்ப்போம்!

'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வாரி'ல் வரும் கதாபாத்திரங்கள் பற்றித் தெரிந்துகொள்ள, இதற்குமுன் வந்த 18 படங்களில் எவற்றையேனும் பார்த்திருக்க வேண்டும். இல்லையேல் சில நிமிடங்கள் செலவு செய்து இதைப் படித்துவிடவும்.  ஊர்ல இருக்கிற எல்லா சூப்பர் ஹீரோவும் வரும்னு சொன்னாய்ங்க, ஆனா பேட்மேன் வரவே இல்ல, வொண்டர் வுமன்கூட வரலயேப்பா என நீங்கள் அலுத்துக்கொண்டால்... அதற்கு நிர்வாகம் பொறுப்பேற்காது. 

மார்வெல் சினிமேட்டிக் யுனிவெர்ஸின் 19-வது படம், 'அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்'. காமிக்ஸ் குறும்படங்கள் (மார்வெல் ஒன் - ஷாட்ஸ்), தொலைக்காட்சித் தொடர்கள் (மார்வெல்ஸ் - ஏஜென்ட்ஸ் ஆஃப் ஷீல்ட்) எனப் பலதரப்பட்ட தொடர்கள் மூலம் அவெஞ்சர்ஸ் தொடருக்கான தொடர்புகளை விரிவுபடுத்திக்கொண்டே இருந்தது, மார்வெல் சினிமேட்டிக் யுனிவர்ஸ். மனிதர்களைக் காக்கும் இயக்கமான ஷீல்டுக்கும், ஷீல்டை ஒடுக்க நினைக்கும் ஹைட்ராவுக்குமான யுத்தம். ஜெர்மானிய நாஜி படையின் அங்கம்தான் இந்த ஹைட்ரா. இந்தக் காட்சிகள் முழுக்க 'மார்வெல்ஸ் - ஏஜென்ட்ஸ் ஆஃப் ஷீல்ட்' தொடரில் காட்சிப்படுத்தப்படுகிறது. 

அவெஞ்சர்ஸின் தேவையை உணர்த்தும் நிக் ஃப்யூரி பற்றிய காட்சிகள் திரைப்படங்களில் வந்ததால், நிக் ஃப்யூரி நடிக்கும் காட்சிகள் தொலைக்காட்சித் தொடரான 'ஏஜென்ட்ஸ் ஆஃப் ஷீல்டி'லும் தொடர்ந்தது. இங்குதான் டிசி செய்த தவறை மார்வெல் செய்யவில்லை. 'ஃபிளாஷ்' எனும் தொலைக்காட்சித் தொடரை ஒளிபரப்பிக்கொண்டிருக்கும் அதேவேளையில், ஃபிளாஷ் கதாபாத்திரத்தை வைத்து 'ஜஸ்டிஸ் லீக்' எடுத்தது டிசி. இரண்டிலும் முற்றிலுமாக வெவ்வேறு கதை, வெவ்வேறு கதாபாத்திரங்கள். ஆனால், 'மார்வெல் ஏஜென்ட்ஸ் ஆஃப் ஷீல்டி'லும் சரி, 'அவெஞ்சர்ஸ்' படங்களிலும் சரி... 'நிக் ஃப்யூரி'யாக நடித்தது சாமுவேல் ஜாக்சன்தான். 'மார்வெல்ஸ் ஏஜென்ட்ஸ் ஆஃப் ஷீல்ட்' தொடரின் நாயகன் ஏஜென்ட் ஃபில் கோல்சன் கதாபாத்திரம் 'அயர்ன்மேன்', 'அயர்ன்மேன் 2', 'தி அவெஞ்சர்ஸ்' படங்களிலும் வரும். திரைப்படம், தொலைக்காட்சித் தொடர் இரண்டிலும் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்தது, கிளார்க் கெக். 

மார்வெல் நிறுவனம் காமிக்ஸோடு ஒதுங்கிக்கொள்ள, படமும் நாமே எடுக்கலாமே என்ற ஐடியா சட்டென அவர்கள் பின் மண்டையில் உதிக்க, ஆரம்பிக்கப்பட்டதுதான் மார்வெல் சினிமேட்டிங் யுனிவெர்ஸ். 'எக்ஸ் மேன்', 'ஃபென்டாஸ்டிக் 4' போன்ற படங்களை வேறு நிறுவனங்களுக்குக் கொடுத்து படமாக்க விட்டுவிட்டு, காமிக்ஸில் மட்டும் கவனம் செலுத்தி வந்தது மார்வெல் நிறுவனம். படங்கள் எடுக்கலாம் என முடிவெடுத்தபின், எல்லாவற்றையும் மிகக் கவனமாக ரீபூட் செய்தார்கள். உண்மையில் 'அவெஞ்சர்ஸ்', டிசியின் 'ஜஸ்டிஸ் லீக்' போன்ற கிராஸ் ஓவர் சினிமாக்களை எடுப்பதென்பது அவ்வளவு சுலபம் இல்லை. நான்கைந்து திரைப்படங்களில் / தொடர்களில் வரும் கதாபாத்திரங்களை ஒன்றிணைத்து எடுக்கப்படும் கிராஸ் ஓவர் சினிமாக்களில் பெரிய நடிகர்களின் கால்ஷீட்டைவிட முக்கியமானது ஒன்று இருக்கிறது. அது, படங்களுக்கான காலநிலை. அந்த டைம்லைன் பெர்ஃபெக்டாக இல்லாவிட்டாலும், ஓரளவுக்கேனும் சரியாக இருக்க வேண்டும். இல்லையென்றால், எல்லாமே சிரிப்பாகிவிடும். மார்வெல் இதை close to perfection ஆக சாத்தியப்படுத்திக்கொண்டிருக்கிறது.

 இந்த மாதம் வெளியாகும் பாகத்துக்கு 'அவெஞ்சர்ஸ் : இன்ஃபினிட்டி வார்' பாகம் 1 என்றும், அடுத்தாண்டு வெளியாகும் இதன் தொடர்ச்சிக்கு 'அவெஞ்சர்ஸ் : இன்ஃபினிட்டி வார்' பாகம் 2  என்றும் பெயர் வைக்க திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், படத்தின் முக்கியத்துவம் கருதி தற்போது 'அவெஞ்சர்ஸ் : இன்ஃபினிட்டி வார்' என்று மட்டுமே பெயர் வைத்திருக்கிறார்கள். அடுத்த பாகத்தின் பெயரைக்கூட வெளியிடாமல் அமைதிகாத்து வருகிறது, அவெஞ்சர்ஸ் படக்குழு. 

ஒரு படத்தில் அனைத்து சூப்பர் ஹீரோக்களையும் கொண்டுவருவதென்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஏனெனில், அவர்களின் காலம் அனைத்தையும் ஒரே டைம்லைனின் கீழ் கொண்டுவர வேண்டும். எதுவும் மாறிவிடக்கூடாது. ஒவ்வொரு Stand Alone தனிப்படங்கள் வரும்போதும், பிற படங்களின் கதையையும் சேர்த்து யோசிக்க வேண்டும். முடிந்தவரை சில சூப்பர் ஹீரோக்களை இணைக்க வேண்டும். இரண்டு இரண்டு நபர்களாக அவர்களை இணைக்கும்போது, 'அவெஞ்சர்ஸ் : இன்ஃபினிட்டி வார்' போன்ற மெகா சூப்பர் ஹீரோ படங்களில், தனித்தனி அறிமுகம் தேவைப்படாது. இன்னொரு விஷயம், எந்தவொரு சூப்பர் ஹீரோவும் துருத்திக்கொண்டோ படத்துக்கு அந்நியமாகவோ தோன்றக்கூடாது. அதேபோல, அந்தந்த ரசிகர்களும், தங்கள் ஆதர்ஷ சூப்பர் ஹீரோ ஒரு படத்தில் வீணடிக்கப்பட்டுவிட்டதாக நினைத்துவிடக்கூடாது. இவை எல்லாத்தையும் இன்று வரையில் கவனமாகக் கையாண்டிருக்கிறது, மார்வெல் சினிமேட்டிக் யுனிவர்ஸ். பல படங்களுக்கான அக்ரீமென்டில் கையெழுத்திடுகிறார்கள், ராபர்ட் டௌனி ஜூனியர் (அயர்ன் மேன்), பிளாக் விடோ (ஸ்கார்லெட் ஜொஹான்ஸன்), கேப்டன் அமெரிக்கா (கிறிஸ் ஈவான்ஸ்) , நிக் ப்யூரி (சாமுவேல் ஜேக்ஸன்). மார்வெல் சினிமேட்டிக் யுனிவெர்ஸ் இந்தப் படங்களையெல்லாம் ஒவ்வொரு Phase (தொகுப்பு) ஆகப் பிரிக்கின்றது.

Phase 1 :  

Phase 1-ல் வெளியான படங்கள் : 

அயர்ன் மேன் (2008)

தி இன்கிரெடிபிள் ஹல்க் (2008)

அயர்ன் மேன் 2 (2010)

தோர் (2011)

கேப்டன் அமெரிக்கா : தி ஃபர்ஸ்ட் அவெஞ்சர் (2011)

மார்வெல்ஸ் : தி அவெஞ்சர்ஸ் (2012)

திரைப்படம் வெளியான ஆண்டுகளை இனி கணக்கில் கொள்ளாமல், 'அவெஞ்சர்ஸ் : இன்ஃபினிட்டி வாரி'ன் கதைக்கான டைம்லைன் படி, இனி படங்களுக்கு ஒரு கொசுவத்தி சுருள் ஓட்டுவோம். 

கேப்டன் அமெரிக்கா : தி ஃபர்ஸ்ட் அவெஞ்சர் (2011)

மெர்வெல் சினிமேட்டிங் யுனிவெர்ஸுக்கான டைம்லைன், 'கேப்டன் அமெரிக்கா'வில் இருந்துதான் உருவாக்கப்படுகிறது. 2012-ம் ஆண்டு ஒரு பழைய, உறைந்த நிலையில் இருக்கும் போர் விமானத்தைக் கண்டெடுக்கிறார்கள், அறிவியலாளர்கள். அதற்குள்ளே உறைந்த நிலையில் இருக்கிறார், 'கேப்டன் அமெரிக்கா' எனப்படும் ஸ்டீவ் ரோஜர்ஸ். ஆம்... இருக்கிறார். 1940-களில் எப்படி இருந்தாரோ, அதேநிலையில் இருக்கிறார். 

எல்லா விஷமத்தனமான வேலைகளிலும், எதிரி அணியான ஹைட்ரா ஈடுபட, ஸ்டீவ் ரோஜர்ஸ் அதற்குத் தயார்படுத்துகிறார்கள். அவரை வேறொரு மனிதராக மாற்றுகிறார்கள். ஹாவர்டு ஸ்டாக் (டோனி ஸ்டார்க் - அயர்ன் மேனின் தந்தை ) வைப்ரேனியமால் செய்யப்பட்ட ஒரு கவசத்தை ஸ்டீவ் ரோஜர்ஸுக்குத் தருகிறார். (வைப்ரேனியம்... வகாண்டா.. பிளாக் பேந்தர்... தனிக்கதை பிறகு பார்ப்போம்). ரெட் ஸ்கல் எனும் வில்லனை சமாளிப்பதுதான், கேப்டன் அமெரிக்காவின் அசைன்மென்ட். கேப்டன் அமெரிக்காவின் தோழன் பக்கி பேர்ன்ஸும் இதில் அறிமுகம் செய்யப்படுகிறார். இறுதியாக அமெரிக்காவைக் காப்பாற்ற, வில்லன் வைத்த வெடிகளுடன், ஆர்டிக் பனிப்பாறைகளில் தன் விமானத்தை இடித்து லேன்ட் ஆகிறார், கேப்டன் அமெரிக்கா. ஹாவர்டு ஸ்டார்க்கால் அங்கிருந்த டெசரெக்ட்டைத் தேடி எடுக்க முடிந்ததே தவிர, கேப்டன் அமெரிக்காவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. முடியவேயில்லை...

 தி இன்கிரெடிபிள் ஹல்க் (2008)

'கேப்டன் அமெரிக்கா' போல இன்னொரு சூப்பர் ஹீரோவை உருவாக்கலாம் என கேமா கதிர்வீச்சுக்கு ப்ரூஸ் பேன்னரை ஆளாக்குகிறார்கள். ஆனால், சூப்பர் ஹீரோவுக்குப் பதிலாக, மெகா சைஸில் ஹல்க் உருவாகிறார். இதயத்துடிப்பு, 200-ஐக் கடந்துவிட்டால், ஹல்க் வந்துவிடுவார். இல்லாவிட்டால், சராசரி ப்ரூஸ் பேன்னர். இவ்வளவுதான் 'ஹல்க்'. கதிர்வீச்சுக்குள்ளாகி ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. அப்போது நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி, 'தி இன்கிரெடிபிள் ஹல்க்' திரைக்கதை ரெடியாகிறது. படத்தில் ஹல்க்காக எட்வார்ட் நோர்டன் நடித்திருப்பார். இதே காலகட்டத்தை அடிப்படையாக வைத்து, 'அயர்ன் மேன் 2', 'தோர்' படங்கள் எடுக்கப்படுகின்றன. 'தி இன்கிரெடிபிள் ஹல்க்' படத்தின் இறுதியில் 'அயர்ன் மேன்' சிறப்புத் தோற்றத்தில் வருகிறார். ஆனால், 'அவெஞ்சர்ஸ்' படங்களுக்கான முதல் தலைவலி 'தி இன்கிரெடிபிள் ஹல்க்' படத்தின் நாயகனான எட்வார்ட் நார்டன் மூலம் ஆரம்பிக்கும் என அப்போது மார்வெல் நிறுவனம் நினைத்திருக்காது. எட்வார்ட் நார்டன் மற்ற பாகங்களில் நடிக்க மறுக்கிறார். அடுத்து வரும் பாகங்களில் மார்க் ரஃபேலாவை மாற்று ஹீரோவாக அறிமுகம் செய்தது, மார்வெல்.  

அயர்ன் மேன் (2008)

அப்பா சயின்டிஸ்ட், தானும் சயின்டிஸ்ட் என டோனி ஸ்டார்க் வாழ்க்கையில் எல்லாமே ஹைடெக்தான். டிசி காமிக்ஸில் வரும் 'பேட்மேன்' போல, டோனி ஸ்டார்க் பெரும் பணக்காரர். தன்னை ஒரு குழு கடத்திக்கொண்டு செல்ல, அங்கிருந்து தப்பிக்க, ஹைடெக் டெக் உடைகளைப் பயன்படுத்துகிறார். பிளேபாய் மோடில் இருந்து சீரியஸ் மோடுக்கு மாறுகிறார் . தவறான முறையில் தீயவர்களுக்கு விற்கப்படும் ஹைடெக் ஆயுதங்களைக் கண்டுபிடித்து, வெல்கிறார். 2008-ம் ஆண்டு வெளியான 'அயர்ன் மேன்'  படத்திலிருந்தே 'அவெஞ்சர்ஸ் : இன்ஃபினிட்டி வார்' பட வேலைகளை ஆரம்பித்துவிட்டார்கள். படத்தின் போஸ்ட் கிரெடிட் காட்சிகளில் அவெஞ்சர்ஸுக்காக தேவையை உணர்த்த ஆரம்பிப்பார், நிக் ஃப்யூரி (சாமுவேல் ஜேக்ஸன்). 

அயர்ன் மேன் (2010)


'அயர்ன் மேன் 2' படம், 2010-ம் ஆண்டு வெளியாகிறது. அமெரிக்க அரசாங்கம், அயர்ன் மேனின் டெக்னாலஜியை அரசுக்குத் தரச் சொல்கிறது. மனிதர்களின் கையில் இது இருப்பது ஆபத்து என நினைக்கிறது. இதை மெல்ல மெல்ல மெருகேத்தி, அயர்ன் மேன் வெர்சஸ் கேப்டன் அமெரிக்காவுக்கான காட்சிகள் உருவாக்கப்படுகின்றன. ஷீல்ட் சார்பாக ஏஜென்ட் பிளாக் விடோ (ஸ்கார்லெட் ஜொஹான்சன்) கதைக்குள் வருகிறார். அயர்ன் மேன் தோழனான வார் மெசினின் கதாபாத்திரமும் இதிலிருந்துதான் ஆரம்பமாகிறது. படத்தின் இறுதிக்காட்சியில் பல்வேறு படங்களுக்கான ஆரம்பக்காட்சிகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. சிறுவயது ஸ்பைடர் மேனைக் காப்பாற்றுகிறார், அயர்ன் மேன். வகாண்டா தேசத்து பிளாக் பேந்தருக்குப் பிள்ளையார் சுழி போடப்படுகிறது. 

தோர் (2011)

அஸ்கார்டு எனும் மாயாஜால உலகத்தின் புதல்வர்களான தோரும் (கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்), லோகியும் தோர் (2011) படத்தின்மூலம் கதைக்குள் வருகிறார்கள். தோருக்கும் லோகிக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். அஸ்கார்டு அரசன் ஓடின், தன் மகனுடைய சுத்தியலைப் பிடுங்கி வைத்துக்கொண்டு, தண்டனையாக அவனை பூமிக்கு அனுப்பிவைக்கிறார். முரட்டுக்கார தோர், தன்னிலை உணர வேண்டும் என்பதே ஓடினின் விருப்பம். அஸ்கார்டை ஆட்சி செய்யத் திட்டங்கள் தீட்டுகிறான், லோகி (டாம் ஹிட்டில்ஸ்டன்). இன்னொரு ஷீல்ட் ஏஜென்ட்டான ஹாக் ஐ (ஜெர்மி ரென்னர்) அறிமுகம் செய்யப்படுகிறார். டிசி காமிக்ஸில் வரும் க்ரீன் ஏரோ போல, ஹாக் ஐ கதாபாத்திரமும் வில் அம்பு மட்டுமே பயன்படுத்தும். படத்தின் போஸ்ட் கிரெடிட் காட்சிகளில் டெஸரெக்ட் பற்றிப் பேசுகிறார், நிக் ஃபியூரி. 
 
தி அவெஞ்சர்ஸ் (2012)

உலகை அழிக்க முனையும் லோகிக்கு எதிராக அணி ஒன்றைத் திரட்டுகிறார், நிக் ஃபியூரி. அயர்ன் மேன், தோர், கேப்டன் அமெரிக்கா, ஹல்க், பிளாக் விடோ, ஹாக் ஐ எனப் பலரும் ஒன்றிணைகிறார்கள். பிறரின் மனதை அடக்கும் சக்திகொண்ட மைண்ட் ஸ்டோன், லோகிக்குக் கிடைக்கிறது. ஏஜென்ட் கோல்சனைக் கொன்றுவிட்டு லோகி தப்பிக்கிறான். டெசரெக்ட்டை வைத்து ஒரு வார்ம்ஹோலை உருவாக்கி, பூமியை அழிக்க ஏலியன்களை அழைக்கிறான், லோகி. ஏலியன்களைச் சமாளித்துக்கொண்டே, மக்களைக் காப்பாற்றுகின்றனர் அவெஞ்சர்ஸ் டீம். இதுக்கு இல்லையா ஒரு எண்டு? என நினைக்கும் அரசாங்கம், இந்த ஊரை மட்டும் ஒரு அணுகுண்டு போட்டு, முடித்துவிட்டால், ஏலியன்களைக் கொன்றுவிடலாம் என முடிவு செய்கிறது. தற்போதிருக்கும் அமெரிக்க அரசாங்கத்தைவிட, கோமாளித்தனமான அரசையே மார்வெல் தொடர்ந்து சித்திரித்து வருகிறது. அரசாங்கம் அனுப்பிய ஏவுகணையை, அயர்ன் மேன் ஏலியன்களின் ஸ்பேஸ் ஷிப் பக்கம் திருப்பி, அவர்களை அழித்து, உலகைக் காப்பாற்றுகிறார். 

தொடரும்...