Published:Updated:

'மெத்தட் ஆக்டிங்'கால் மேஜிக் செய்பவன்! #HappyBirthDayAlPacino

தார்மிக் லீ

ஹாலிவுட்டில் கமல்ஹாசனோடு ஒப்பிடும் நடிகர் அல் பசினோ. அவரது பிறந்தநாளான இன்று, அவரைப் பற்றிய ஓர் சிறப்புப் பகிர்வு.

'மெத்தட் ஆக்டிங்'கால் மேஜிக் செய்பவன்! #HappyBirthDayAlPacino
'மெத்தட் ஆக்டிங்'கால் மேஜிக் செய்பவன்! #HappyBirthDayAlPacino

தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட நடிகர்களை ஹாலிவுட் கலைஞர்களோடு ஒப்பிட்டுப் பாராட்டுவது வழக்கம். ஹாலிவுட் சினிமா விரும்பிகளுக்கு `தி காட்ஃபாதர்' படத்தைப் பற்றி நான் சொல்லித்தான் தெரியவேண்டுமென்ற அவசியம் இல்லை. அதில் நடித்த முக்கியமான இரு நடிகர்கள், மார்லன் பிராண்டோ, அல் பசினோ.  நடிகர் திலகம் சிவாஜியை `தமிழ் சினிமாவின் மார்லன் பிராண்டோ' எனக் கொண்டாடுபவர்கள், கமல்ஹாசனை ‘தமிழ் சினிமாவின் அல் பசினோ’ என்று கொண்டாட வேண்டும் என்பார்கள். 

கமல்ஹாசனுடன் ஒப்பிட்டுக் கொண்டாடும் அளவுக்கு அவர் என்ன அவ்வளவு பெரிய நடிகரா... என்று கேட்டால், ஆம் அல் பசினோ மாபெரும் நடிகர் என்பதைத் தாண்டி ஹாலிவுட் சினிமாவின் மகத்தான கலைஞன் என்று சொல்லலாம். 77 வயதைக் கடந்து 78-வது வயதில் அடியெடுத்து வைக்கும் இந்த கலைக் காதலனுக்கு இன்று பிறந்தநாள். தற்போது வெளியாகும் படங்களைப் போல் வெறும் பிரமாண்டத்தை மட்டுமே நம்பாமல், நடிப்பை மட்டுமே ஆதாய ஸ்ருதியாகக் கொண்டு படங்கள் வெளிவந்த காலம் அது...  

இவர் பிறந்த கொஞ்ச நாள்களிலேயே இவரது தாயும் தந்தையும் பிரிந்துவிட்டனர். அதற்குப் பின்னர், தனது தாயின் அரவணைப்பில்தான் வளர்ந்தார். குடும்பத்தின் ஏழ்மையும் வறுமையும் இவரது பள்ளிப் படிப்பை பாதியிலேயே துண்டித்தது. அப்போது இவருக்கு வயது 17. தன் வயிற்றுப் பசிக்காகப் பல இடங்களில் வேலை செய்தார். பழைய படங்களைப் பார்க்கும் பழக்கத்தைக்கொண்ட அல் பசினோ, அதில் வரும் கதாபாத்திரங்களைப் போல் வீட்டில் இருக்கும் தாத்தா பாட்டியிடம் நடித்துக்காட்டுவார். இவருள் இருக்கும் நடிகனை உணர்ந்த பாட்டியும் தாத்தாவும் இவருக்கு மேலும் தன்னம்பிக்கை ஊட்டினர். அதன் பின்னர் ஆக்டிங் பள்ளியில் சேர்ந்த அல் பசினோ தன்னுள் இருந்த நடிகனைக் கொஞ்சம் கொஞ்சமாகச் செதுக்க ஆரம்பித்தார்.  

இதற்கிடையில், தன் 21-வது வயதில் தன் தாயை இழந்தார். அதன்பிறகு ஒரு வருட இடைவெளியில் தாத்தாவையும் பாட்டியையும் இழக்க நேர்ந்தது. வறுமையின் கோர முகம் அல் பசினோவை பதம் பார்த்தது. நிரந்தரமான வேலையில்லை, கையில் பணமில்லை, சொந்தம் என்று சொல்ல ஒருவரும் இல்லை. இப்படிப் பல ‘இல்லை’களைக்கொண்ட அல்பசினோவிடம் இருந்தது ‘நடிப்பு’ என்ற ஒன்றே ஒன்று மட்டும்தான். 

1969-ல் `Me, Natalie' எனும் படத்தில் சிறு வேடத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. பின்னர் இரண்டு வருட காத்திருப்புக்குப் பின் இரண்டாவது படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. இம்முறை பெரிய வாய்ப்பு. படத்தின் லீடிங் ரோல் இவர்தான். அந்தப்படம் பல பாராட்டுகளைப் பெற்றது. பின், வந்தது மூன்றாவது பட வாய்ப்பு. அது வரலாற்றை திரும்பிப் பார்க்க வைக்கும்படியான வாய்ப்பு. அதுதான் `தி காட்ஃபாதர்' படம். 

தற்போது வெளிவரும் `டான்' படங்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கும் படம் `தி காட்ஃபாதர்'. இதன் பாதிப்பிலும் பாணியிலும் எல்லா மொழிகளிலும் படங்கள் வெளியாகியிருக்கின்றன. இன்னும் வெளிவந்துகொண்டே இருக்கின்றன. ஆனால், `காட்ஃபாதர்' படம் வெளிவந்த ஆண்டு 1972. ஏறத்தால 10 மணி நேரம் கொண்ட படத்தை, மூன்று பாகங்களாக வெளியிட்டார்கள். 

தமிழ் சினிமாவிலும் இந்தப் படத்தின் சாயலில் பல படங்கள் வெளியாகியிருக்கின்றன. அது நம்ம ஊர் ஃப்ளேவரிலும் திரைக்கதையில் சிறு மாறுதல்களுடன் வெளிவந்தன. `தேவர்மகன்' படம் தொடங்கி `கபாலி' வரை... தமிழில் வந்த பல டான் படங்களில் ‘காட்ஃபாதர்’ சாயல் உண்டு. இப்படியொரு மகத்தான படத்தில், நேர்த்தியான நடிப்பை வெளிக்காட்டியவர்தான், இந்த அல் பசினோ. மார்லன் பிராண்டோவுக்குப் பிறகு, அல் பசினோதான் காட்ஃபாதராக நடித்தார். காட்ஃபாதராகவே வாழ்ந்தும் இருப்பார். 

இன்று வெற்றி நாயகனாக ஹாலிவுட் சினிமாவில் வலம் வந்தாலும் அன்று அல் பசினோவுக்கு ‘தி காட்ஃபாதர்’ மூன்றாவது படம். அதற்கு முன் இவர் நடித்த இரண்டு படங்களைப் பார்த்த பின், அதன் தயாரிப்பு நிறுவனத்துடன் சண்டையிட்டு, அல் பசினோவை `காட்ஃபாதர்' படத்தில் நடிக்க வைத்தார், இயக்குநர் ஃப்ரான்சிஸ் ஃபோர்டு கொப்பல்லா. படப்பிடிப்பு தளத்தில் அல் பசினோவைப் பார்த்து தயாரிப்பு நிறுவனம், `இந்தக் குழந்தை இங்க என்ன பண்ணுது, முதல்ல இவனை வெளியில் அனுப்புங்கள்' என்று நக்கலாகச் சொல்லியிருக்கிறது. 

இவர்தான் காட்ஃபாதர் கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறார் என்று தெரிந்தவுடன், இவரைப் படத்திலிருந்து நீக்க மூன்று முறை முயன்றும் உள்ளது. ஆனால், படத்தின் இயக்குநர் ஃப்ரான்சிஸ் போர்டு கொப்பல்லாதான் இவருக்குள் இருந்த நடிகனை அடையாளம் கண்டு, படத்தில் இவரை தக்கவைத்தது. இவரது நம்பிக்கைக்குக் கிடைத்த பலன்தான் இன்னமும் `காட்ஃபாதர்' படத்தைப் பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். இனிமேலும் பேசுவோம்.  

அதன் பின்னர் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்கத் தொடங்கினார், அல் பசினோ. காட்ஃபாதர் படத்தோடு சேர்த்துப் பல படங்களில் நடித்து, தன்னைத் தேர்ந்த நடிகனாக ஹாலிவுட்டில் அடையாளம் காட்டினார். முதல் படத்திலேயே அபார நடிப்பை வெளிக்காட்டிய பின், அடுத்தடுத்து நடித்தப் படங்களைப் பார்க்க ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தனர். சிறந்த நடிகனாக ஏற்றுக்கொள்ளவும் தொடங்கினார்கள். ரசிகர்களின் காத்திருப்புக்கு இவர் கொடுத்த பரிசே இவரின் படங்கள். உதாரணத்துககு `Scarecrow', `Serpico', `Scarface', `...And justice for all', `Scent of a woman', `The devil's advocate', நோலன் இயக்கிய `Insomnia' எனப் பல படங்கள். Classical acting, Stanislavski's System, Method acting, Meisner technique, Practical Aesthetics... இப்படி வெளிக்காட்டும் நடிப்பில் பல வகைகள் உள்ளன. இதில் அல் பசினோ பின்பற்றுவது `மெத்தட் ஆக்டிங்'.  

அதென்ன மெத்தட் ஆக்டிங்? ஒரு வரியில் சொல்வதென்றால், `கதாபாத்திரத்தை உள்வாங்கி நடிப்பது'. அதற்குப் பெயர்தான் மெத்தட் ஆக்டிங். கதை கேட்கும்போதே, தன் கதாபாத்திர வடிவமைப்பைப் பற்றி தெரிந்துகொள்வதில்தான் மெத்தட் ஆக்டர்களின் ஆர்வம் அதிமாக இருக்கும். இவர்களின் முக்கியமான குணாதிசியங்களில் ஒன்று, இந்த ரக நடிகர்கள் வசனங்களை மனப்பாடம் செய்ய மாட்டார்கள். அதற்கு `Improvisation' என்ற இன்னொரு பெயரும் உண்டு. வசனத்தின் கருவையும் நோக்கத்தையும் ஞாபகத்தில் வைத்துக்கொண்டு, அந்தச் சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் வசனங்களை அவர்களே சேர்த்து பெர்ஃபார்ம் செய்வார்கள். இவர்களுக்குப் பெயர்தான் மெத்தட் ஆக்டர்ஸ். 

இந்த மெத்தட் ஆக்டிங்கில் தலை சிறந்து விளங்குபவர் அல் பசினோ. ஒருசில நடிப்பு ஆர்வக்கோளாறுகளை உற்றுக் கவனித்தால் ஒரே மாதிரியான நடிப்பையும் வசனங்களின் உச்சரிப்பையும் முக பாவனைகளையும் கவனிக்க முடியும். ஆனால், அல் பசினோவிடம் டெம்ப்ளேட்டான நடிப்பைப் பார்க்கவே முடியாது. பல வெரைட்டியான நடிப்பை வெளிக்காட்டக் கூடியவர். இவர் நடித்த படங்களைப் பட்டியலிட்டால், அந்தப் படத்தில், அந்தக் கதாபாத்திரத்தில் இவர் மட்டும்தான் நடிக்க முடியும் என்ற எண்ணம் கண்டிப்பாக நம் அனைவருக்கும் தோன்றும். இப்படி ரசிகனுக்குத் தோன்றவைப்பதுதான் ஒரு நடிகனுக்குக் கிடைக்கும் வெற்றி. வேறொரு நடிகரால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியுமெனில், நாம் ஏன் இதில் நடிக்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்படும் படங்களில் அல் பசினோ கண்டிப்பாக நடிக்க மாட்டார்.  

இவரின் நடிப்பில் என்னை பெர்சனலாக பாதித்த படம், `Scent of a woman'. இது, பல விருதுகளைப் பெற்ற படம் என்ற காரணத்துக்காக அல்ல. தன் குரலுக்குள் ஒளிந்திருக்கும் கம்பீரத்தை அவ்வளவு அழகாகப் பயன்படுத்தியிருப்பார். யதார்த்தம் சூழ்ந்திருக்கும் இந்தப் படத்தில் `தன் பெயர் அல் பசினோ' என்பதை மறந்து ஃப்ராங்க் ஸ்லேடாகவே வாழ்ந்திருப்பார். படத்தில், பார்வையற்ற குருடனாக வாழ்வதைச் சாபமாக நினைக்கும் ஃப்ராங்க் ஸ்லேட், தான் எதற்காக வாழ்கிறேன் என்பதற்கான விளக்கம்தான் இந்தப் படம்.  

`தி டெவில்ஸ் அட்வகேட்' படத்தில் கடவுளைப் பற்றி ஒரு விளக்கம் கொடுப்பார். `கடவுளைப் பற்றி நான் ஒரு விளக்கம் தர்றேன். கடவுளுக்கு வேடிக்கையென்றால் நிறைய பிடிக்கும். மனிதனுக்கு வரமாக உள்ளுணர்வைக் கொடுப்பார். அதற்குப் பின் அவர் என்ன செய்கிறார்? அவருடைய பொழுதுபோக்குக்காக விதிமுறைகளை நேரெதிராக நிர்ணயிப்பார். `பார்... ஆனால் தொடாதே, தொடு... ஆனால் ருசிக்காதே, ருசி... ஆனால் விழுங்காதே... நீ ஒரு முடிவில் இருந்து இன்னொரு முடிவை எடுக்கும்போது அவர் என்ன செய்கிறார்? நீ செய்வதையெல்லாம் பார்த்து சிரித்துக்கொண்டிருப்பார். அவரை வழிபட வேண்டுமா? கண்டிப்பாக முடியாது.' இப்படி ஒவ்வொரு வசனமும் அவரது மனதில் இருந்து பேசுவதைப்போல் அவ்வளவு ஆழமாக வெளிப்படும்.  

80 வயதை நெருங்கியும், நடிப்பு என்ற கலை தாகத்தை நிறுத்திக்கொள்ளாமல், இன்னமும் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் அல் பசினோ. வரலாறு இவரை என்றும் நினைவில் கொள்ளும். பிறந்தநாள் வாழ்த்துகள் அல் பசினோ. 

சார்லி சாப்ளின் பிறந்தநாள் கட்டுரையைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.