Published:Updated:

"25 சூப்பர் ஹீரோக்கள்... ஒரு சூப்பர் வில்லன் தேனோஸ்!" #AvengersInfinityWar படம் எப்படி?

"25 சூப்பர் ஹீரோக்கள்...  ஒரு சூப்பர் வில்லன் தேனோஸ்!" #AvengersInfinityWar படம் எப்படி?
"25 சூப்பர் ஹீரோக்கள்... ஒரு சூப்பர் வில்லன் தேனோஸ்!" #AvengersInfinityWar படம் எப்படி?

25 சூப்பர் ஹீரோக்கள்... ஒரு சூப்பர் வில்லன் தேனோஸ்! #AvengersInfinityWar படம் எப்படி?

(" நீங்கள் பார்க்கும் போது எப்படி ஸ்பாய்லர்களை விரும்பவில்லையோ. அப்படியே மற்றவர்கள் பார்க்கவும் ஸ்பாய்லர்கள் இல்லாமல், அவர்கள் படத்தைக் கொண்டாட விடுங்கள்". படத்தின் இயக்குநர்களான அந்தோனி & ஜோ ரூஸோ அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் படத்துக்காக  சொன்ன வரிகள் இவை.  99% ஸ்பாய்லர்கள் இல்லாத AvengersInfinityWar விமர்சனம் )

ஆறு இன்ஃபினிட்டி கற்கள் கிடைத்தால், உலகை ஒரு நொடியில் பாதியாக அழிக்கும் வல்லமை படைத்த சூப்பர் வில்லன் தேனோஸ். வெவ்வேறு உலகங்கள், மனிதர்களிடம் புதைந்து கிடக்கும் அந்தக் கற்களை எடுக்க வேண்டும் என்ற டாஸ்க் தேனோஸுக்கு. தேனோஸை அழித்து உலகைக் காக்க வேண்டும் என்ற டாஸ்க் வழக்கம் போல், சூப்பர் ஹீரோக்களான அவெஞ்சர்ஸ்க்கு. யார் இறுதியில் வெல்கிறார்கள் என்பதே அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்.

சூப்பர் ஹீரோ படங்களில் இருக்கும் மிகப்பெரும் பிரச்னை, எப்படியும் சூப்பர் ஹீரோ இறக்கப்போவதில்லை என படம் பார்க்கும் ஒவ்வொரு பார்வையாளனுக்கும் தெரியும். இறுதியில் உலகை அழிக்க வந்த வில்லன் அழிந்துவிடுவான் என்பதும் தெரியும். ஆனால், அதை எப்படி நிகழ்த்துகிறான் என்கிற சுவாரஸ்யமே ஒவ்வொரு முறையும் அரங்கை அதிர வைக்கிறது. ஆனால், அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் திரைப்படத்தைப் போல்,  20க்கும் மேற்பட்ட சூப்பர் ஹீரோக்கள் இருக்கும் ஒரு படத்தில் எந்த கதாப்பாத்திரமும் எப்போது வேண்டுமானாலும் கொல்லப்படலாம் என்கிற நிலையை உருவாக்க வேண்டும்.  NO ONE IS SAFE மோடில் பயணிக்கிறது இன்ஃபினிட்டி வார். கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொலைக்காட்சி தொடரில் வருவது போல், கருணையற்ற ஒரு துணிச்சலான கதை சொல்லல். (கேம் ஆஃப் த்ரோன்ஸில் வரும் டிரியனும் (பீட்டர் டிங்க்லேஜ்) நடித்திருக்கிறார்)  கதைக்கு எது தேவையோ, எது அடுத்தடுத்த பாகங்களை இன்னும் ஈர்க்கச் செய்யுமோ அதைத் துணிந்து எழுதி திரைக்கதை ஆக்கியிருக்கிறார்கள் கிறிஸ்டோபர் மார்க்கஸும், ஸ்டேபென் மெக்ஃப்லியும்.  

ஒவ்வொரு சூப்பர் ஹீரோவுக்கும் தனி ரசிகர் பட்டாளம் இருக்கும். கடைசியாக சூப்பர் ஹிட் அடித்த StandAlone படங்களான  தோர் ரக்னராக் , பிளாக் பேந்தர் , ஸ்பைடர்மேன் ஹோம்கம்மிங் அதற்கு முக்கிய சாட்சி.   யாருடைய காட்சியையும் குறைத்து விடவும் முடியாது, ஜஸ்ட் லைக் தட் உதாசீனப்படுத்திவிடவும் முடியாது. கார்டியனஸ் ஆஃப் காலக்ஸியில் வரும் ஸ்டார் லார்டு, டார்க்ஸ், மேன்ட்டிஸ், ராக்கெட், க்ரூட் கதாபாத்திரங்களையும் காட்ட வேண்டும்.  அதே சமயம், முதல் முறையாக திரையில் வரும் தேனோஸை டம்மி வில்லனாக காட்டிவிடவும் முடியாது. ஆனால், மொத்தம் இருப்பது 149 நிமிடங்கள் தான்.  

ஒரு வில்லனை உருவாக்க 10 ஆண்டுகளுக்கு மேல் எடுத்துக்கொண்டது மார்வெல். கொஞ்சம் கொஞ்சமாக அவனை ஒவ்வொரு படத்திலும் பெரிதாக்குகிறது. தேனோஸ் ! தேனோஸ்!! தேனோஸ் !!!

அவெஞ்சர்ஸ் (2012) படத்தில்  சின்ன சின்ன சிப்பாய்களை அனுப்பிக்கொண்டிருந்தவன் , இந்தமுறை தானாகவே களமிறங்குகிறான். அவனோடு வரும் ஒவ்வொரு அடியாளும் சூப்பர் வில்லன்கள். ஒவ்வொரு சூப்பர்வில்லனும் மூன்று சூப்பர்ஹீரோக்களை எதிர்க்கும் சக்தி கொண்டவர்கள்.   என்னதான் CGI செய்த பெரிய சைஸ் உடம்பு என்றாலும், தேனோஸாக வரும் ஜோஸ் ப்ரோலின் அதகளம் செய்திருக்கிறார். பெருவெடிப்பின் ( Big Bang ) காரணமாக உருவான ஆறு இன்ஃபினிட்டி கற்களும் ஒவ்வொரு இடத்தில் இருக்கிறது. அதை அவர் அபரிக்க முயலும் ஒவ்வொரு காட்சியும், சூப்பர் ஹீரோக்களை டீல் செய்யும் விதமும் கிளாஸ். முதல்முறையாக திரையில் முழுவதுமாக வரும் கதாப்பாத்திரம் என்பதால், அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. அவனது செயல்களை நியாயப்படுத்த அத்தனை விதங்களிலும் முயற்சி செய்கிறான் தேனோஸ். கமோரா டிரெய்லரில் சொல்வது போல், தேனோஸின் இலக்கு எப்போதும் ஒன்று தான். இந்த பிரபஞ்சத்தின் மக்கள் தொகையை பாதியாகக் குறைப்பது. அதன் தேவையையும் , அதன் பின் இருக்கும் சாதகங்களையும் சொல்லிக்கொண்டே வருகிறான் தேனோஸ். தேனோஸின் கையில் இருக்கும் கான்ட்லெட்டில் ஒவ்வொரு கல்லும் சேரும் போது , ஜோஸ்லின் தரும் உடல்மொழி வாவ் ரகம்.  படத்தின் பெரும்பாலான காட்சிகளில் தேனோஸ் பாதுகாப்பு கவசம் கூட அணிவதில்லை. டேய் சின்னப்பசங்களா மோட் தான்!!!. உண்மையிலேயே ஜோஸ் ப்ரோலின் நடிப்புக்கும், அந்த CGI உடம்புக்கும் முன், சூப்பர் ஹீரோக்களே சற்று டொங்கல் தான். சில காட்சிகளில் தேனோஸ் மீது பரிதாபம் கூட வருகிறது.

டிசி காமிக்ஸின் படங்கள் போல் , மார்வெல்லின் படங்கள் அவ்வளவு ரஃப்பான சூப்பர்ஹீரோக்களை எப்போதும் கட்டமைக்கவில்லை. டாம் ஹோலண்ட் நடிப்பில் வெளியான ஸ்பைடர்மேன் ஹோம் கம்மிங் ஆகட்டும், லேட்டஸ்ட் ரிலீஸ் தோர் ரக்னராக் ஆகட்டும், காமெடி எப்போதும் ரெண்டு டீ ஸ்பூன் தூக்கலாகவே இருக்கும். காமெடி போர்ஷன்னுக்காக, கார்டியன்ஸ் ஆஃப் காலக்ஸி டீமும், ஸ்பைடர்மேனும் போட்டி போட்டுக்கொண்டு அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வாரில் உழைத்திருக்கிறார்கள். தமிழ் டப்பிங்கில் தோர் - ஸ்டார் லார்ட், ஸ்டார் லார்ட் - டோனி ஸ்டார்க் , ஸ்பைடர்மேன் வசனங்கள் அல்ட்டி. 

 ஷீல்ட் ஏஜென்ட்டாக வரும் பிளாக் விடோ (ஸ்கார்லெட் ஜொஹான்சன் ) இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இப்படியே இருப்பார். அவ்வளவு அழகு.  ஆனால், எல்லோரையும் ஓவர்டேக் செய்கிறார்கள் கமோராவும், ஸ்கார்லெட் விச்சும் . அதிலும் அந்த சிறுமி கமோராவின் நடிப்பு ஏதோ ஒரு அனிமேஷன் படத்துக்குள் நுழைந்த அனுபவத்தைத் தருகிறது. இந்த படத்திலும் க்ரூட் (வின் டீசல்) அதே I am Groot தான்.  மார்வெல்ஸின் பிதாமகன் ஸ்டான் லீ இல்லாத மார்வெல் படமா? அவரும் ஒரு காட்சியில் வழக்கம் போல் வருகிறார்.

 தோர் ரக்னராக் படத்தின் இறுதியில் நெருப்பு அரக்கன் சர்தர் ஹெல்லாவையும், அஸ்கார்டு உலகையும் மொத்தமாக அழிக்க, இருக்கும் மக்களுடன் ஸ்பேஸ்ஷிப்பில் கிளம்புகிறார்கள் தோரும், லோகியும். ( ரக்னராக் படத்தில் ஏற்கெனவே தோர், லோகி, ஹல்க், டாக்டர் ஸ்டிரேஞ் நால்வரையும் ஒன்றிணைத்துவிட்டது மார்வெல். இப்படி ஒவ்வொரு படத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக மாபெரும் பிராமாண்டத்தை நோக்கி பறந்தது மார்வெல்). தோரின் ஸ்பேஸ்ஷிப் , தேனோஸின் ஷிப்பை எதிர்கொள்வது ரக்னராக்கில் வரும் போஸ்ட் கிரெடிட் சீன். 

 அயர்ன் மேன், டாக்டர் ஸ்டிரேஞ், விஷன்,  ஃபால்கன், வார் மெசின், பிளாக் விடோ, பிளாக் பேந்தர், ஹல்க், லோகி என பாரபட்சமின்றி அனைவரும் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். விஷனின் நெற்றியில் இருக்கும் கல்லை பிடுங்குவதாக வரும் டிரெய்லர் காட்சி ஒரு சாம்பிள் தான். லோகி வைத்திருந்த டெசரெக்கட்டில் இருக்கும் கல் என்ன ஆனது? டாக்டர் ஸ்டிரேஞ் வைத்திருக்கும் நேரத்தின் கல் என்ன ஆனது? கற்களையும் உலகத்தையும் ஒரு சேர காப்பாற்றுகிறார்களா ? என ஒவ்வொரு ஃபிரேமிலும் படம் தெறிக்கிறது. 

பிளாக் பேந்தரின் வகாண்டாவில் கேப்டன் அமெரிக்காவின் நண்பன் வின்டர் சோல்ஜர்   ரெடியாவதாக இந்த  ஆண்டு வெளியான பிளாக் பேந்தரின் போஸ்ட் கிரெடிட் காட்சியிலேயே காட்டியிருந்தார்கள். இப்படி ஒவ்வொரு படத்திலும் கொஞ்சம் கொஞ்சமாய் ஒவ்வொருவரையும் இணைத்ததே , இன்ஃபினிட்டி வார் படத்தின் மிகப்பெரிய பிளஸ். இவர்களுக்காக ஜஸ்டிஸ் லீகில் நடந்தது போல், தனித்தனி இன்ட்ரோ தேவைப்படவே இல்லை.  ' இபோம்பே இபோம்பே ' என பிளாக் பேந்தர் அதிர நடக்கும் சண்டைக் காட்சிகள் எல்லாம் டாப் கிளாஸ் மேக்கிங் !.. நல்ல சவுண்ட் சிஸ்டம் இருக்கும் திரையரங்கில் பார்த்தால், ஏலன் சில்வெஸ்ட்ரி இசையில் வரும் ஒவ்வொரு சண்டையும் கூஸ் பம்ப்ஸ் தான். அதிலும் எண்ட் கிரெடிஸ்ல் வரும் அந்த இசை ஒரு துன்பவியல் இசை கோப்பு.    

கேப்டன் அமெரிக்கா சிவில் வார் படத்திலேயே ' அந்த ஷீல்ட் உங்கிட்ட இருக்கக் கூடாது' என கேப்டன் அமெரிக்கவிடம் இருக்கும் ஷீல்டை வாங்குவார் டோனி ஸ்டார்க். அதன் நீட்சியான காட்சிகளும் காண்பிக்கப்படுகிறது.  கார்டியன்ஸ் ஆஃப் காலக்ஸி படங்களில் வருவது போல், படம் ஒரே சமயத்தில் வெவ்வேறு உலகங்களில் நடக்கிறது. சில உலகங்களில் CGI காட்சிகள் ஏனோ சற்று உறுத்தலாக இருந்தது பிளாஷ்பேக் காட்சிகள், டக்கென மூன்று உலகின் காட்சிகளை அடுத்தடுத்து காட்டுவது, என எவ்வளவு நேரம் இருந்தாலும் பத்தாத ஒரு கதைக்களத்தை வைத்துக்கொண்டு அதை மூன்று மணி நேரத்துக்குள் தொகுத்து அசத்தியிருக்கிறார் ஜெஃப்ரி ஃபோர்ட் .  

படத்தின் இறுதி நிமிடங்களுக்கு வந்துவிட்டோம் என்பதை உணர்த்துகிறது படத்தின் அந்த கிளைமேக்ஸ் காட்சி. படத்தின் ஒரே குறை , அடுத்த பாகத்துக்காக 2019 மே வரை காத்திருக்க வேண்டும் என்பது தான். ஸ்பாய்லராக ஏதேனும் சொல்ல வேண்டுமென்றால், இந்த முறை படத்தில் ஒரேயொரு போஸ்ட் கிரெடிட் காட்சி தான். 

அடுத்தாண்டு மார்ச்சில் கேப்டன் மார்வெல் என்னு StandAlone சினிமா வேறு வெளியாகிறது. அதற்கும் இரண்டு மாதங்கள் கழித்து மீண்டும் அவெஞ்சர்ஸ் நான்காம் பாகம். அடுத்த பாகத்தோட டைட்டிலையாவது சீக்கிரம் சொல்லுங்கப்பா.

ஹேட்ஸ் ஆஃப் மார்வெல்!
 

அடுத்த கட்டுரைக்கு