Published:Updated:

"டெட்பூல்2 போறீங்களா... டெட்பூலுக்கும், வுல்வெரினுக்கும் என்ன சம்பந்தம்னு தெரிஞ்சுக்கிட்டு போங்க!" #deadpool2

டெட்பூல் கதாபாத்திரத்தை இடையில் திணித்ததால் அது இந்த எக்ஸ்-மென் உலகத்தில் எப்போது நடந்த கதை, அந்த உலகிற்கும் டெட்பூலிற்கும் என்ன தொடர்பு என்பதைப் புரிந்து கொள்வதே கடினமான விஷயமாகி விடுகிறது. எக்ஸ்-மென் படவரிசையின் டைம்லைன் புரிந்தாலே அதில் டெட்பூலின் இடத்தைச் சுலபமாகக் கண்டறிந்து விடலாம்.

"டெட்பூல்2 போறீங்களா... டெட்பூலுக்கும், வுல்வெரினுக்கும் என்ன சம்பந்தம்னு தெரிஞ்சுக்கிட்டு போங்க!" #deadpool2
"டெட்பூல்2 போறீங்களா... டெட்பூலுக்கும், வுல்வெரினுக்கும் என்ன சம்பந்தம்னு தெரிஞ்சுக்கிட்டு போங்க!" #deadpool2

Marvel பெருசா? DC பெருசா? ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களில் தற்போது விஜய், அஜித் ரசிகர்கள் சண்டைக்கு இணையாக இந்தப் பஞ்சாயத்துதான் நடந்து வருகிறது. இங்கு பெரும்பாலான DC ஃபேன்ஸ்களை உருவாக்கியது நோலனின் பேட்மேன் ட்ரைலாஜி என்றால் மார்வலை நம்மூர் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது X-Men படங்கள்தாம். அதில் குறிப்பிடத்தக்க கதாபாத்திரம் வுல்வெரின் (Wolverine). ஹாலிவுட் நடிகர் ஹக் ஜாக்மேன் (Hugh Jackman) ஏற்று நடித்த இந்த சூப்பர்ஹீரோ கதாபாத்திரம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதுவரை வெறும் காமிக்ஸ் தயாரிக்கும் நிறுவனமாக இருந்த மார்வெல் நிறுவனத்தைச் சொந்தமாகப் படங்கள் எடுக்க நம்பிக்கை அளித்ததே எக்ஸ்-மேன் தொடர் படங்களின் வெற்றிதான். படத்தயாரிப்பில் வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் உடன் சரியான திட்டமிடலுடன் களமிறங்கிய மார்வெல் ஸ்டுடியோஸ் பத்தே வருடத்தில் அயர்ன் மேன், கேப்டன் அமெரிக்கா, தோர், ஹல்க், ப்ளாக் விடோ,  19 மெகா பட்ஜெட் சூப்பர் ஹீரோ படங்களைக் கொடுத்திருக்கிறது. அதில் கடைசியாக வந்த அவென்ஜர்ஸ்: இன்ஃபினிட்டி வார் இதுவரை தன் முந்தைய படங்களில் இடம்பெற்ற சூப்பர்ஹீரோக்களை ஒருங்கிணைத்து வியாபார ரீதியாக மாபெரும் வெற்றியைக் கண்டுள்ளது.

அந்த 19 படங்களும் ஆக்ஷன், காமெடி, அதகளம் என்று பயணித்தால், எக்ஸ்-மென் படங்கள் அந்த விஷயங்களையும் தாண்டி வேறு தளத்திலும் பயணிக்கின்றன. அதீத அல்லது விநோத சக்தி படைத்த மனிதர்களான Mutants (மரபு பிறழ்ந்தவர்கள்) இனத்தவருக்கும் சாதாரண மக்களைப் போல சம உரிமை வேண்டும் என்று மறைமுகமாக ஒடுக்கப்பட்டவர்களுக்கான ஒரு சமகால அரசியலைப் பேசுகிறது இந்த எக்ஸ்-மென் தொடரில் வரும் படங்கள். அதில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற கதாபாத்திரம் என்றால் அது வுல்வெரின்தான். கட்டுக்கோப்பான உடல், எப்போதும் அனல் கக்கும் கண்கள், கைகளிலிருந்து நீளும் அடமேன்டியம் நகங்கள் (Adamantium Claws), அடிபட்டால் வேகமாகக் குணமாகும் திறன் என அவனின் சூப்பர் பவர்கள் கவர்ந்து இழுத்தாலும், ஹக் ஜேக்மேனின் அற்புதமான நடிப்பும் அந்த கேரக்டரின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம். எக்ஸ்-மேன் படங்கள் மற்ற மார்வெல் படங்கள் போல நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், படு சீரியஸாக வெளிவந்து வரவேற்பைப் பெற்றன. அந்தப் பிம்பத்தை உடைக்க எக்ஸ்-மென் படங்கள் தயாரித்த `20th Century Fox' மற்றும் `Marvel Entertainment' எடுத்த முடிவுதான் `டெட்பூல்' (Deadpool). 

காமிக்ஸ் உலகில் மிகவும் வித்தியாசமான முறையில் உருவாக்கப்பட்ட கேரக்டர்களை வரிசைப்படுத்தினால், டெட்பூலாகத் தோன்றும் வேட் வில்சன் கதாபாத்திரத்துக்கு முக்கியமான  இடம் உண்டு. நொடிக்கு நொடி காமெடி வசனங்கள், கேலி கிண்டல்கள் என இதுவரை எக்ஸ்-மென் கதாபத்திரங்கள் செய்யாத விஷயங்களை அவன் செய்தான். அதிலும் `fourth wall' என்ற ஒன்றை உடைத்து எரிந்து அவன் பேசும் வசனங்கள் புதுவகை கேளிக்கையாக அமைந்தன. 

அது என்ன Fourth Wall? 

அதாவது தான் இருப்பது ஒரு திரைப்படம் என்பதை மறந்து கதாபாத்திரங்கள் தன்னைப் பார்க்க வந்த ரசிகர்களோடு நேரடியாகப் பேச தொடங்கும். நான்காவது சுவரான  தியேட்டர் ஸ்க்ரீனைப் பொருட்படுத்தாது மக்களுடன் உரையாடும். அதாவது நம் தமிழ் ஹீரோக்கள் கேமராவைப் பார்த்து மக்களிடம் நேரடியாக அரசியல் பஞ்ச்கள் பேசுவதைப் போலத்தான். இன்னும் சொல்லப்போனால் தான் ஒரு காமிக்ஸ் கதாபாத்திரம், உண்மை இல்லை என்பதுகூட டெட்பூல் கதாபாத்திரத்துக்குத் தெரியும். உதாரணமாக, ஒரு காட்சியில் அவனுடன் உரையாடும் மற்ற கதாபாத்திரங்கள் மொக்கையாக ஏதேனும் பேசினால், ``என்னடா இவ்ளோ மொக்கையா வசனம் எழுதீற்கீங்க?" என்று நேரடியாக டெட்பூலே கலாய்ப்பான்.

டெட்பூல் எப்படி உருவானான் என்று விவரிக்கும் முதல் பாகம் கடந்த 2016-ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. 58 மில்லியன் டாலர்கள் செலவில் எடுக்கப்பட்ட படம், 783 மில்லியன் டாலர்கள் வசூலித்து எக்ஸ்-மென் பட வரிசையில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையைப் பெற்றது. இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், டெட்பூல் கதாபாத்திரம் எக்ஸ்-மென் உலகத்தைச் சேர்ந்தது என்ற உண்மையே பலருக்கும் இதுவரை தெரியாது. எக்ஸ்-மென் பட வரிசையே நம்மில் பல பேருக்குப் புரியாது. எது முதலில் நடந்தது, எது அதன் பிறகு என்று உட்கார்ந்து அரை நாளாவது யோசிக்க வேண்டும். இந்த நிலையில் டெட்பூல் கதாபாத்திரத்தை இடையில் திணித்ததால் அது இந்த எக்ஸ்-மென் உலகத்தில் எப்போது நடந்த கதை, அந்த உலகிற்கும் டெட்பூலிற்கும் என்ன தொடர்பு என்பதைப் புரிந்து கொள்வதே கடினமான விஷயமாகி  விடுகிறது. ஆனால், அது நாம் நினைப்பது போல அவ்வளவு கடினமானது கிடையாது. எக்ஸ்-மென் படவரிசையின் டைம்லைன் புரிந்தாலே அதில் டெட்பூலின் இடத்தைச் சுலபமாகக் கண்டறிந்து விடலாம்.

முதன் முதலில் டெட்பூல் கதாபாத்திரம் தோன்றியது எப்போது?

முதல் மூன்று எக்ஸ்-மென் படங்கள், அதாவது எக்ஸ்-மென் ஒரிஜினல் ட்ரைலாஜி படங்கள் X-Men Trilogy: X-Men, X2 மற்றும் X-Men: The Last Stand வெளிவந்து மாபெரும் வெற்றியைப் பெறுகிறது. அதில் வுல்வெரின் கதாபாத்திரத்துக்குத் தனி வரவேற்பு கிடைக்க தனியாக அவனுடைய கதை மட்டும்  spin-off படங்களாக வெளிவருகிறது. அதில் முதல் படமான X-Men Origins: Wolverine படம் வுல்வெரின் எப்படி உருவாகினான் என்று சொல்வதோடு, வேட் வில்சன் என்ற கதாபாத்திரத்தையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறது. பின்னர் அவனை அதில் Weapon XI-ஆக உருமாற்றுகிறார்கள். என்ன, அப்போது அவன்தான் மாற்றப்பட்ட புதிய டைம்லைனில் டெட்பூல் ஆகப்போகிறான் என்று நமக்கு அப்போது தெரியாது. அந்தப் படத்தின் இறுதிக்காட்சியில் ராட்சத கிணறு ஒன்றின் மேல் நடக்கும் சண்டைக் காட்சியில் வுல்வெரினுடன் மோதுவது வேறு யாருமல்ல நம் டெட்பூல்தான். அப்போதே டெட்பூல் கதாபாத்திரத்தை வைத்து தனியாக படம் எடுக்கும் முனைப்பில் இருந்த ஃபாக்ஸ் நிறுவனம் டெட்பூலை அந்தப் படத்தில் மறைமுகமாக அறிமுகப்படுத்தியது. டெட்பூலாக தற்போது தோன்றும் ரையன் ரேனால்ட்ஸ் (Ryan Reynolds) அப்போதே அந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். ஆனால், காமிக்ஸ் ரசிகர்கள் டெட்பூலின் கதாபாத்திரத்தைச் சீரழித்து விட்டார்கள். ரையன் ரேனால்ட்ஸ் ஏதோ பொம்மை போல வந்து போகிறான். Fourth Wall ப்ரேக் செய்யவே இல்லை என்றெல்லாம் திட்டித் தீர்த்தனர்.

சரி டைம்லைன்படி டெட்பூல் கதை எப்போது நடக்கிறது?

முன்னர் கூறியது போல எக்ஸ்-மென் பட வரிசையின் டைம்லைன் சற்றே குழப்பமானது. முதல் எக்ஸ்-மென் ஒரிஜினல் ட்ரைலாஜி படங்கள் முடிந்த பிறகு, வுல்வெரின் உருவான கதை என்று X-Men Origins: Wolverine வருகிறது. இதில்தான் வேட் வில்சன் /டெட்பூல் முதலில் வருகிறான். அதன் பிறகு, எக்ஸ்-மென் ஒரிஜினல் ட்ரைலாஜியின் முன்கதையாக  X-Men: First Class வருகிறது. பிறகு, மீண்டும் இன்னொரு வுல்வெரின் படம் வருகிறது. இது X-Men Origins: Wolverine படத்தின் அடுத்த பாகம். இதுவரை எல்லாம் சரிதான். குழப்பம் இல்லைதான். ஆனால், அதன் பிறகு குழப்புகிறார்கள். X-Men: Days of Future Past வெளிவருகிறது. இதில் நம் வுல்வெரின் டைம் ட்ராவல் செய்து இறந்த காலத்தை மாற்றுகிறான். அதாவது எக்ஸ்-மென் ஒரிஜினல் ட்ரைலாஜி படங்களில் நடந்த சம்பவங்கள் அரங்கேறவே இல்லை. எல்லாவற்றையும் ரப்பர் வைத்து அழித்துவிட்டு புதியதோர் எதிர்காலத்தை உருவாக்குகிறார்கள். இந்தப் புதிய டைம்லைனில்தான் நம் டெட்பூல் ஒரு முக்கியக் கதாபாத்திரமாக, தனிப் பெரும் ஹீரோவாக உருவெடுத்து இருக்கிறான். ஏன், வுல்வெரினின் கடைசி படமான `லோகன்' திரைப்படமே இந்தப் புதிய டைம்லைனில்தான் வருகிறது. அதை நாம் டெட்பூல் 2-வுக்குப் பிறகு இறுதியாக நடக்கும் கதை என்று எடுத்துக் கொள்ளலாம்.

டெட்பூல் என்னும் வேட் வில்சன் எப்படி உருவானான்?

இரண்டு காமிக்ஸ் ஜாம்பவான்களான மார்வெல் மற்றும் DC தங்களுக்குள் அவ்வப்போது ஒரு விளையாட்டை விளையாடிக்கொள்ளும். இரண்டுமே ஹிட்டான கதாபாத்திரங்களை மாற்றி மாற்றி காப்பி அடித்துக்கொள்ளும். இதில் மார்வெல்தான் அதிகம் காப்பி அடித்து உள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன. இந்த டெட்பூல் என்னும் வேட் வில்சன் கதாபாத்திரமும் DC காமிக்ஸில் வெளிவந்த ஸ்லேட் வில்சன் (Slade Wilson) என்னும் டெத்ஸ்ட்ரோக் (Death Stroke) கதாபாத்திரத்தின் இன்ஸ்பிரேஷன்தான். ஆனால், டெட்பூல் போல இல்லாமல், டெத் ஸ்ட்ரோக் ஒரு கொடூர வில்லன். இந்த டெத் ஸ்ட்ரோக் கதாபாத்திரத்தை இப்போதுதான் DC படத்தில் அறிமுகம் செய்திருக்கிறது. ஜஸ்டிஸ் லீக் படத்தின் இறுதிக்காட்சியில் லெக்ஸ் லுத்தரைச் சந்திக்கும் அந்த நபர் இந்த டெத்ஸ்ட்ரோக்தான்! நீங்க எல்லாத்துலயுமே லேட் DC!