Published:Updated:

நான்தான் டெட்பூல் 2 பேசுகிறேன்... #DeadPool2 படம் எப்படி?

நான்தான் டெட்பூல் 2 பேசுகிறேன்...  #DeadPool2 படம் எப்படி?
நான்தான் டெட்பூல் 2 பேசுகிறேன்... #DeadPool2 படம் எப்படி?

நான்தான் டெட்பூல் பேசுகிறேன்... பயப்பட வேணாம், இது அந்த மாதிரி கட்டுரை எல்லாம் இல்லை. #DeadPool2 படம் , டெட்பூல் 1 மாதிரியே ஒரு குடும்பப் பாங்கான படம். பாஸ்கர் ஒரு ராஸ்கல் அளவுக்குக் குடும்பப்பாங்கான படமா இல்லாட்டியும், ஏதோவொரு அளவுக்குக் குடும்பப்பாங்கான படம். அதாங்க ஃபேமிலி என்டெர்டெய்னர். 10 வருசமா இந்த ஏரியாவுல ஸ்லேட் வில்சனா தொழில் பண்றேன். ச்சே. அது டிசில... ஸ்லேட் என் அண்ணன், நான் வேட் வில்சன். சில வருசமா நான்தான் டெட்பூலா யாருக்கும் தெரியாம, வாழ்ந்துக்கிட்டு இருக்கேன். பேட்மேன்னா ப்ரூஸ் வெய்ன்னு, எப்படி யாருக்கும் தெரியாதோ, ஏரோன்னா ஆலிவர் குயின்னு எப்படி யாருக்கும் தெரியாதோ, சூப்பர்மேன்னா கிளார்க் கென்ட்னு எப்படி யாருக்கும் தெரியாதோ, ஃபிளாஷ்னா பேரி ஆலன்னு எப்படி யாருக்கும் தெரியாதோ, அதே மாதிரி என்னையும் யாருக்கும் தெரியாது). #SorryDC
 டெட்பூல் படம் பார்க்க வர்றதுக்கு முன்னாடி நீங்க கடந்த பத்து வருடங்களில் வந்த X-men சீரிஸின் அத்தனை படங்களும் + டெட்பூல் முதல் பாகம், மார்வெல் காமிக்ஸில் வந்த 32 டெட்பூல் காமிக்ஸ்களும் படித்துவிட்டு, 460 பக்கத்துக்கு விளக்கவுரை எல்லாம் படிச்சுட்டு வரணும்னு அவசியம் இல்லை. (இங்க லிங்க் வச்சு இருக்கறது கூட அப்படி ஒரு கட்டுரைதான்). ஏன்னா, இது அவெஞ்சர்ஸ் இல்லை... டெட்பூல் முதல் பாகம் பார்க்கலைன்னாலும் பரவாயில்லை, பார்த்திருந்தாலும் பரவாயில்ல அப்படியே படம் பார்க்க வரலாம்... 18 வயசுக்கு மேல இருக்கணும் அது மட்டும்தான் ஒரே எலிஜிபிலிட்டி

படத்துல வர்றவனுக மூஞ்சி பிடிக்காட்டியே கத்தியால குத்தி, அதுக்கு அப்புறம் துப்பாக்கில சுட்டு கொன்னுடுவேன். இயக்குநர் பிடிக்காட்டி சும்மா இருப்பனா. அதான் மொத பார்ட் எடுத்த டிம் மில்லர தூக்கிட்டி, ஜான் விக் படத்துல என்னை மாதிரியே எல்லாத்தையும் சுட்டு கொன்ன இயக்குநர் டேவிட் லீச்ச , இத இயக்குநரா போட்டுட்டேன். அதனால, இந்தப் படத்துல எக்கச்சக்கச்சக்கமா ரத்தம் இருக்கும்.


 

அஞ்சான் படத்துல வர்ற சமந்தாவுக்கு `உன் கால் தரைல படல'ங்கறது வசனம்னா, என் காதலிக்கு `உன் இதயம் சரியான இடத்துல இல்லை' ங்கறதுதான் ஒரே வசனம். என் அழகு காதலியோட முகத்தைப் பார்த்துட்டு, என் முகத்தைப் பார்க்கும் போது லேசா அதிர்ச்சியாவீங்க... போன சம்மருக்கு சென்னை வந்து போனதுல முகம் அப்படியாகிருச்சு. வேற ஒண்ணுமில்லை வேற ஒண்ணுமில்லை. (டெட்பூல் முதல் படம் பார்த்தவர்கள்... அமைதி... அமைதி... அமைதியோ அமைதி... அமைதிக்கெல்லாம் அமைதி)

படத்தோட கதை ரொம்ப சிம்பிள். ஓர் ஆதரவற்றோர் ஆசிரமம். அதாவது ஆதரவற்ற மியூட்டன்ட் ஆசிரமம். அங்க இருக்கிற ஒரு குண்டு பப்பூ. அது ஒரு ஏங்கிரி பேர்டு. வழக்கம் போல, அத கொடுமைப்படுத்துற ஒரு சைக்கோ கிறுக்கன். அவன கொல்ல ஒருத்தன். காப்பாத்த ... என்ன டெட்பூல் படத்துக்கெல்லாம் கதை படிச்சுட்டுக்கிட்டு இருக்கீங்க...பேஸிக் இன்ஸ்டின்க்ட்டா ஆங், அதாவது பேஸிக்கா எனக்கு வாய் நீளம்... X-men universe-ல் வாழுற எல்லாரையும் நக்கலடிப்பேன், மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸில் வாழ்றவங்களையும் நக்கலடிப்பேன், என்னதான் வொர்த்தான போட்டியாளரா இல்லைனாலும் அவங்களையும் நக்கலடிப்பேன், நான் யாரை சொல்றேன்னு புரியலைன்னா உங்களையும் நக்கலடிப்பேன், ஸ்டுடியோவையும் நக்கலடிப்பேன், படத்தோட இயக்குநர், ஒளிப்பதிவாளர், படம் பாக்குறவங்க எல்லாரையும் நக்கலடிப்பேன்… ஓகே, அந்த லிஸ்ட் பெருசு…தனியா ஒருத்தன் வந்தா அவனை சூப்பர் ஹீரோவாவே ஏத்துக்க மாட்டாங்க போல. இந்த X-men க்ரூப் ஆரம்பிச்சாங்க, பின்னாடியே அவெஞ்சர்ஸ்ல 847 சூப்பர் ஹீரோஸ் ஒண்ணா சேர்ந்தாங்க, மார்வெல்காரனே க்ரூப்பா வர்றானேனு, காரமடைக்கு பஸ்ஸுக்கு நின்னவ, கொமரலிங்கத்துக்கு பஸ் நின்னவங்கன்னு எல்லாத்தையும் கூட்டிக்கிட்டு, டிசியும் சூசைட் ஸ்குவாட்னு எல்லாம் படம் விட்டுச்சு.… எல்லாரும் ஒரு பட்டாளத்தோட வராங்க, அதனால நானும் என் டீமோட களத்துல இறங்குறேன்… இறங்குனேன்… ஒரு வெந்தவன், ஒரு வேகாதவன் , ஒரு அரவேக்காடு, ஒரு வாய்ல ஆஃபாயில் போடறவன், எதுக்கு இருக்கோம்னே தெரியாத ஒருத்தன், எதுக்காவது ஆகட்டுமேன்னு ஒருத்தன் இப்படி ஒரு டீம். கடைசியாத்தான் வந்து சேர்ந்தாங்க, அதிர்ஷ்ட தேவதை ...

படத்துக்கு ஒரு வில்லன் வேணும்ல… அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்ல இருந்து தேனோஸை டைம்ட்ராவல் பண்ணி கூட்டிட்டு வந்துட்டோம். ( மார்வெல் கொடுத்த சம்பளத்துல, கொஞ்சம் மிச்ச சொச்ச கால்ஷீட் இருந்துச்சு, அதான் இதுல யூஸ் பண்ணிட்டோம்) அந்தப் படத்துல அவன் கைல என்னமோ மாட்டி விட்டிருக்காங்க, அதை கழட்ட முடியலை, அதனால, அந்தக் கைக்கு இந்தப் படத்தில் வேற ஒரு சி.ஜி செய்து சுத்த விட்டிருக்கோம். டைம் ஸ்டோன மட்டும் இன்னும் வச்சுக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்கார் ஜோஸ். ஜோஸ் ப்ராலினோட அடுத்த படத்தில் சி.ஜி இல்லாம முழுசா அவர் நடிப்பாருன்னு நம்புறேன்… ஒரு நிமிஷம், அவருக்கு அடுத்தபடமும் அவெஞ்சர்ஸ் தானே… சாரி ஜோஸ். ரெண்டு வருசமா தொடர்ந்து சிஜில ஜோஸ பார்த்தால, இனி அவரு சாதாரண மனுஷன, வேற படத்துல வந்தா, அதுதான் சிஜியோன்னு தோண ஆரம்பிச்சுடும். Such Is Life.


 

மார்வெல் படம்னா போஸ்ட் கிரெடிட் இருக்கறதும், டிசி படம்னா மொக்கையா இருக்கறதும், சகஜம் தான. படத்துல ரெண்டு போஸ்ட் கிரெடிட் சீன் பிளான் பண்ணினோம். எப்படியும் நீங்க எல்லாம் படம் முடிஞ்சும், எந்திரிச்சி வெளிய போகாம, ஏதாவது இருக்கும்னு வெயிட் பண்ற ரசிகராத்தான் இருப்பீங்கன்னு நம்பறேன். அதான், அதைய இங்கயே சொல்லிடறேன்.

முதல் சீன் :

படத்துல இன்டெர்வியூ வெச்சு, ஒவ்வொருத்தவங்களா, என் டீம்ல எடுத்தனே. டிரெய்லர்ல கூட வருமே. அதுல மண்டைல நீல சொக்கா மாட்டிக்கிட்டு, கைல பிச்சை எடுக்கற தட்டோட ஒருத்தன் வேலைக்கு வந்தான். யாரோ கேப்டன் அமெரிக்காவாம். டிரம்ப் பண்ற அட்ராசிட்டில வேலை போச்சாம். அதுக்காக வேலை கிடைக்குமான்னு வந்திருந்தார். ஆனா, அவன நான் டீம்ல எடுக்கல. ஏனோ அவன் மூஞ்சி எனக்குப் பிடிக்கல.BARRY ALLEN BRUCE BANNER OLIVER QUEEN CLARK KENT KARA DENVERS TONY STARK ARTHUR CURRY T RAJENDHAR NATASHA ROMANOFF BRUCE WAYNE STEVE ROGERS STEPHEN STRANGE SHAKTHIMAAN JAMES RHODES PETER PARKER BUCKY BARNES DIANA PRINCE STAN LEE

இப்படித்தான் கொஞ்ச நேரத்துக்கு எண்ட் கிரெடிட்ஸ் ஓடிக்கிட்டு இருக்கும்.

ரெண்டாவது சீன் :

வாழ்க்கைல சில விஷயத்துல மாத்தலாம்னு முடிவு பண்ணி, சிஜி மனுசன் தேனோஸ்... ச்சே கேபிள் கைல இருந்த டைம் வாட்ச வச்சுக்கிட்டு, ஒவ்வொன்னா சரி பண்றேன். உலகத்தை இப்படி ஆக்கினதுக்குக் காரணமான ஹிட்லர அழிக்கறது அவ்வளவு சுலபம் இல்லையே. அதான், அந்தாள் குழந்தையா இருக்கறப்ப போய் கொன்னுடறேன். இது ரெண்டும்தான் டெட்பூல் 2வோட போஸ்ட் கிரெடிட் சீன்... அதாவது போஸ்ட் கிரெடிட் சீனா இருக்க வேண்டியது. ஆனா, பாருங்க I had other ideas.தியேட்டருக்கு வர உங்களை அவ்வளவு சீக்கிரம் வெளிய போக விட மாட்டேன், கொலையா கொல்லுவேன், சாகடிக்கவும் விடமாட்டேன், சாகவும் மாட்டேன்...

நீங்கள் உண்மையான வுல்வரின் ரசிகனா இருந்தா ஷேர் செய்யவும்.