Published:Updated:

உள்ளூர் காலா தெரியும்... உலக சினிமாவின் இந்த `காலா' தெரியுமா?

ஆர்.சரவணன்

நான் முன்பே சொல்லிவிடுகிறேன். காலாவுக்கு முட்டுக் கொடுக்க இந்த கட்டுரை எழுதப்படவில்லை. அதேபோல காலாவின் காலை வாறவும் இதை எழுதவில்லை. `காலா' படத்தை அதிகாலை 4 மணிக் காட்சியாக பார்த்ததும் அன்று இரவு 10 மணிக்கு மால்கம் எக்ஸ் படத்தைப் பார்த்ததும் மிகவும் தற்செயலாக நடந்த நிகழ்வுதான்.

உள்ளூர் காலா தெரியும்... உலக சினிமாவின் இந்த `காலா' தெரியுமா?
உள்ளூர் காலா தெரியும்... உலக சினிமாவின் இந்த `காலா' தெரியுமா?

நான் முன்பே சொல்லிவிடுகிறேன். காலாவுக்கு முட்டுக் கொடுக்க இந்த கட்டுரை எழுதப்படவில்லை. அதேபோல காலாவின் காலை வாரவும் இதை எழுதவில்லை. `காலா' படத்தை அதிகாலை 4 மணிக் காட்சியாக பார்த்ததும் அன்று இரவு 10 மணிக்கு மால்கம் எக்ஸ் படத்தைப் பார்த்ததும் மிகவும் தற்செயலாக நடந்த நிகழ்வுதான்.

"யாரும் விடுதலை,சமத்துவம்,நீதி ஆகியவற்றை உனக்கு தரமுடியாது ! நீ மனிதன் என்றால் நீயாகவே அதை எடுத்துக்கொள்ள வேண்டும்!" - இந்தப் புகழ்பெற்ற வரிகளுக்குச் சொந்தக்காரர் தான் தோழர் மால்கம் X. 

அவரது வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மால்கம் எக்ஸ் (Malcolm X) திரைப்படத்தைப் பற்றி சொல்வதற்கு முன்னால் யார் நிஜ மால்கம் எக்ஸ்..? அவரைப் பற்றி தெரியாதவர்களுக்காக சிறு அறிமுகம் மட்டும் இங்கே!

மால்கம் எக்ஸ் 60களில் அமெரிக்காவை உலுக்கிய மனிதர். கறுப்பின மக்களுக்காக போராடியவர். நிற வெறிக்கு எதிராக இவர் எழுப்பிய குரல் இன்றளவும் உலகம் முழுவதும் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக மனதில் எதிரொலிக்கிறது. அமெரிக்க வரலாற்றில் தன் பெயரை கறுப்பெழுத்துக்களால் எழுதிய மால்கம் கறுப்பின மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து அதன் மூலமாகவே கொல்லப்பட்டவர். அவரின் இளம் வயது அத்தனை மகிழ்ச்சியாக இல்லை. ஒருவேளை எல்லோரையும் போல சந்தோஷமாக வாழ்ந்திருந்தால் அவர் ஒரு போராளியாக உருவாகியிருக்க முடியாதோ என்னவோ! அவரின் இளம் வயதில் அவரது தந்தை அவர் கண்முன் வெள்ளையின வெறியர் குழுவான 'ப்ளாக் லிஜியன்' (Black Legion) அமைப்பால்  கொல்லப்பட்டார். அவரது தாயார் மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். இதனால் மிக இளம் வயதிலேயே குழந்தைகள் காப்பகத்தினரால் வளர்க்கப்பட்டார் மால்கம். மிகவும் புத்திசாலி மாணவராக இருந்த மால்கம் இந்த குடும்ப சூழலால் அதிகம் பாதிக்கப்பட்டு பால்யத்திலேயே கெட்ட பழக்கங்களுக்கு ஆளானார். சிறை  அவரைப் போராளியாக மாற்றி அனுப்பி வைத்தது. தன் மிச்ச வாழ்க்கையை ஒரு போராளியாக வடிவமைத்துக் கொண்டார். மால்கம் லிட்டில் என்ற தன் பெயரில் இருந்த லிட்டில் என்பது அடக்குமுறைக்கான குறியீடாகக் கருதி  மால்கம் X என்று மாற்றி சேர்த்துக்கொண்டார்.

"வெள்ளை முதலாளிகளால் `லிட்டில்' என்று திணிக்கப்பட்ட அந்த வார்த்தை தப்பான சொல் பிரயோகம். பாலியல் வல்லுறவுக்கு உள்ளான என் மூதாதைதையர்களுக்கு சூட்டப்பட்ட 'லிட்டில்' என்ற அந்த வார்த்தையை வெறுக்கிறேன். அந்தப் பெயர் பரம்பரை பரம்பரையாக என் மூதாதையர் வழியில் என் மீதும் விழுந்திருப்பதை நான் விரும்பவில்லை. அதனால்தான் என் பெயரில் லிட்டிலை எடுத்துவிட்டு எக்ஸ் சேர்த்துக் கொண்டேன்''  என்றார் மால்கம். கறுப்பின மக்களை முதன்முதலில் ஆயுதம் ஏந்தச் சொன்னவர் இவர். கைகளில் ஆயுதம் இல்லையென்றாலும் "இந்த உடலே ஆயுதம் தான். அதனால் உடல் பயிற்சியால் கட்டுடலோடு எதிரிகளைத் தாக்கத் தயாராக இருங்கள்!'' என்று சொன்னவர். கறுப்பின மக்களுக்கான தனி கல்வியும் வாழ்க்கையும் கிடைக்க வேண்டும் என்பதுதான் அவர் கனவாக இருந்தது. கல்வியில் மேம்பட்டால் வாழ்க்கை முறை மாறும் என உறுதியாக நம்பினார். 'நேஷன் ஆஃப் இஸ்லாம்' என்ற புரட்சிகர அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டு இஸ்லாம் மதத்தையும் தழுவினார். நேர்படப் பேசும் தன் இயல்பால் நிறைய எதிரிகளை சம்பாதித்தார். எங்கெல்லாம் கறுப்பின மக்களை அமெரிக்காவில் ஒடுக்குகிறார்களோ அங்கெல்லாம் மால்கம் எக்ஸின் குரல் கம்பீரமாக ஒலிக்க ஆரம்பித்து அதுவரை ஆண்டு வந்த அதிகார வர்க்கத்தை மிரட்டியது. சிவில் உரிமைகளுக்காக போராடிய மார்டின் லூதர் கிங் மீது மிகக் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தார் மால்கம் எக்ஸ். 

"நான் ஒரு அமெரிக்கன். எனக்கு ஒரு கனவு இருக்கிறது'' என்று மார்டின் லூதர் கிங் கறுப்பின மக்களின் உரிமைகளுக்காக அமைதி வழியில் பேசிய போது, மால்கம் எக்ஸ் அதை விமர்சித்து, "நான் அமெரிக்கன் அல்ல; அமெரிக்க தேசியத்தால் பாதிக்கப்பட்ட 22 மில்லியன் கறுப்பின மக்களுள் ஒருவன். எனக்கு இருக்கும் அமெரிக்கக் கனவு என்பது கொடுங்கனவு மட்டுமே. தன்னுடைய கடந்த கால வரலாற்றை மறந்த சமூகம் வரலாறு படைக்கவே முடியாது!'' என்ற அவரின் குரல் ஐ.நா சபைவரை எதிரொலித்தது. ஒவ்வொரு ஓட்டும் துப்பாக்கித் தோட்டாக்களுக்கு சமம் என்று மக்களை அரசியல் ரீதியாகவும் விழிப்பு உணர்வை ஏற்படுத்த தொடர்ந்து களப்பணியாற்றி வந்தார். இறுதியில் முன்பு நட்பு பாராட்டிய நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பைச் சேர்ந்த சிலராலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். இவரின் பேச்சும் வாழ்க்கை முறையும் அதிரடியாக இருந்ததுபோலவே 40 வயதைக்கூட எட்டிப்பிடிக்காமலே 1965-ல் மறைந்தார். அவரின் புரட்சிகர சிந்தனைகளைத் தாங்கிய மூளைகள் உலகம் முழுவதும் இன்றும் வியாபித்துக் கிடக்கின்றன. 

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஒரு தலைவரின் வாழ்க்கையை மனசுக்கு நெருக்கமாகப் படம் பிடிப்பது சாத்தியமா..? என்ற கேள்விக்கு விடை சொல்கிறது 1992-ல் வெளிவந்த `MALCOLM X' ஹாலிவுட் திரைப்படம். நடிகர் டென்ஸல் வாஷிங்டன் நடிப்பில் ஸ்பைக் லீ இயக்கிய அந்தப் படம் சிறுவயதிலிருந்து மால்கம் எக்ஸ் உருவான விதத்தை அப்படியே காட்சிப்படுத்தி இருக்கிறது. 1965-ல் மால்கம் எக்ஸின் சுயசரிதையை மையமாக வைத்து திரைக்கதை அமைத்திருந்தது ஸ்பைக் லீ அல்ல. அதற்கு முன்பே மால்கம் எக்ஸின் வாழ்க்கையை டாக்குமெண்டரியாக 1972-ல் இயக்கி பரபரப்பை கிளப்பியிருந்தார் அர்னால்டு பெர்ல் என்ற திரைக்கதை ஆசிரியர். டாக்குமெண்டரி  வெளி வருவதற்குள் அவர் இறந்துவிட அந்த டாக்குமெண்டரிக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. அந்த டாக்குமெண்டரியின் ஒரிஜினல்  ஸ்கிரிப்ட்டைத் தழுவித்தான் திரைக்கதையை உருவாக்கியிருந்தார் ஸ்பைக் லீ. கிட்டத்தட்ட 20 வருடங்களாக கொஞ்சம் கொஞ்சமாக நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஸ்கிரிப்ட்டை உருவாக்கினார் ஸ்பைக் லீ. மால்கம் எக்ஸாக யாரை நடிக்க வைக்கலாம் என்று கிட்டத்தட்ட ஒரு வருடம் பலகட்ட டெஸ்ட்டுகளுக்கும், சாய்ஸ்களுக்கும் பிறகு 'பச்சக்'கென ஒட்டிக் கொண்டவர்தான் டென்ஸல் வாஷிங்டன். ரிச்சர்ட் பிரயர், எடி மர்ஃபி என லிஸ்ட் நீள, 'காந்தி' படத்துக்கு எப்படி காந்தியாக பென் கிங்ஸ்லீ பொருந்திப்போனாரோ அதேபோல டென்ஸல் வாஷிங்டன் செம பொருத்தம் என இன்றும் உலக சினிமா ஆர்வலர்கள் கொண்டாடுகிறார்கள். 1981-ல் வீதி நாடகங்களில் மால்கம் எக்ஸாக நடித்த அனுபவம் உள்ளவர்தான் டென்ஸல் என்பது லீக்கு படம் முடியும்வரை தெரியாது. ஸ்கிரிப்ட்டை படித்துப் படித்தே முழு மால்கம் எக்ஸாக மாறிப்போயிருந்தார் டென்ஸல். ஆனாலும் படம் அத்தனை அழகியலோடு இருந்தாலும்  மால்கம் எக்ஸ் படம் உண்மையில் நிஜ மால்கம் எக்ஸைக் காட்டவில்லை என்ற விமர்சனம் அப்போது பரவலாக எழுந்திருந்தது. 

 இதைப் பற்றி ஸ்பைக் லீயே ஒரு பேட்டியில் சொல்லியிருந்தது சிறந்த பதிலாக இருக்க முடியும். 

"மால்கம் எக்ஸ் என் கனவு நாயகன். கறுப்பினத்தைச் சேர்ந்த நான் அவரது வாழ்க்கையைத் தழுவிய படத்தை எழுத நிறைய சிரமங்களைக் கடக்க வேண்டி இருந்தது. பலத்த எதிர்ப்பும் இருந்தது. படத்தின் ஸ்கிரிப்ட்டை டேவிட் மேமட் மற்றும் சார்லஸ் ஃபுல்லர்  எழுதினார்கள். ஆனால் எனக்கு அதில் உடன்பாடில்லை.  ஏனென்றால் மால்கம் எக்ஸ் ஒரு சிறந்த கலகக்காரன் என்பதால் என்னைப்போல கறுப்பினத்தைச் சேர்ந்தவனால்தான் ஆன்மாவை ஊற்றி எழுத முடியும். எனக்கு முன்பு அவரது சுய சரிதையை அருகிலிருந்து பார்த்து எழுதிய ஜேம்ஸ் பால்ட்வின்னும், பல வருடங்களாக ஆராய்ச்சி செய்து டாக்குமெண்டரிக்காக ஸ்கிரிப்ட் எழுதிய அர்னால்டு பெர்லும்  அவரை ஒரு கட்டுக்குள் அடைக்க சிரமப்பட்டதையும் நான் அறிவேன். அவர்களது படைப்புகளை உற்றுப் பார்த்தும், என் அனுபவத்தின் வாயிலாகவும், ஒரு திரைக்கதையை எழுதினேன். அவரை ரொமான்டிஸைஸ் பண்ணாமல் அவரது வாழ்க்கையை மொத்தம் மூன்று பாகங்களாக திரைக்கதையில் பிரித்துக் கொண்டேன். இளம் வயது, சிறை வாழ்க்கை, ஒரு தலைவனாக உருவானது என! அவரது போராட்டங்களை மட்டும் படமாக்கினால் அதில் நம்பகத்தன்மை இருக்காது என்பதால் இளம் பிராயத்தில் அவர் அனுபவத்தின் கறுப்பு பக்கங்களையும், அவர் எப்படி சீரழிந்து போய் கீழான நிலைக்குத் தள்ளப்பட்டார் என்பதையும் அப்படியே படமாக்கியிருந்தேன். நிறைய ஆராய்ச்சிகள் செய்ததன் பலனாக உருவானதுதான் படத்தில் ஆரம்பத்தில் வரும் நெருப்புக் காட்சி. அது அவரது புத்தகத்திலும், டாக்குமெண்டரிக்கான ஸ்கிரிப்ட்டிலும்கூட இல்லை. ஆனால், நான் அதை மாற்றி உருவாக்கியிருந்தேன். அவரது வன்முறை என்பது தகுந்த காரணத்துக்காகத்தான் என்பதை காட்சிகளாக வைக்க மெனக்கெட்டேன். ஏனென்றால் X என்ற அடையாளம் தாங்கிய தொப்பியை அணிந்து கொண்டு தன் அருகில் இருப்பவனை சுட்டுக் கொல்லும் மனநிலையை நான் ஆதரிக்கவில்லை'' என்று சொல்லியிருந்தார் ஸ்பைக் லீ. 

ஒரு டைரக்டராக லீ இந்தப் படத்தின் உருவாக்கத்துக்கு செய்திருப்பது மிகப்பெரிய தியாகம் தான். பட்ஜெட்டைத் தாண்டியும் செலவு எடுத்ததும் பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டார் லீ. படத்தை ட்ராப் செய்யும் முடிவில் இருந்தது தயாரித்த வார்னர் பிரதர்ஸ் நிறுவனம். அதோடு, இரண்டு மணிநேரம் 15 நிமிடங்களுக்குள் ஓடுமாறு படத்தை சுருக்கி உருவாக்கப் பணித்தது. இயக்குநர் ஃபிரான்சிஸ் ஃபோர்டு கப்போலா அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். லீ தன் சம்பளத்தை விட்டுக் கொடுத்தார். ஓப்ரா வின்ஃப்ரே, பில் காஸ்பி, மைக்கேல் ஜோர்டான் மற்றும் ஜானட் ஜாக்சன் போன்ற கறுப்பின பிரபலங்கள் தங்கள் கையிருப்பில் இருந்த பணத்தை வாரிக் கொடுத்து படத்தை முடிக்க உதவி செய்தனர். அதன் விளைவாக 3 மணிநேரம் 22 நிமிடங்கள் ஓடும் 'மால்கம் எக்ஸ்' படம் நமக்குக் கிடைத்தது. இதைவிட இன்னொரு சுவாரஸ்யமான சம்பவம் பட உருவாக்கத்தில் உண்டு. முஸ்லீமாக மாறிய மால்கம் எக்ஸ் மெக்காவுக்கு புனிதப்பயணம் மேற்கொண்டவர். அந்தக் காட்சியை படமாக்க வார்னர் நிறுவனம் செட் போட்டு எடுத்துக் கொள்ள அனுமதித்தது. ஆனால், தன் சொந்த செலவில் மெக்காவுக்கு சென்றதோடு முதன்முதலில் அங்கு படப்பிடிப்பையும் நடத்தி அசத்தினார் லீ. 

படம் முடிந்து ரிலீஸான பிறகு தன்னை இன்டெர்வியூ எடுக்க கறுப்பின பத்திரிகையாளர்களை அனுப்பி வைக்கச் சொல்லி மீடியாவையே மிரள வைத்தார் ஸ்பைக் லீ. 

இத்தனை பரபரப்போடு 33 மில்லியன் டாலர் பொருட்செலவில் எடுக்கப்பட்ட 'மால்கம் எக்ஸ்' திரைப்படம் 1992 -ல் ரிலீஸானது.  பெரிய ஹிட் எதுவும் அடிக்கவில்லை என்பது சோகம். ஆவரேஜாகத்தான் முதலுக்கு மோசமில்லை என்ற அளவில் ஓடி 48 மில்லியன் டாலரை வசூல் செய்தது.  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்கர், பாஃப்டா விருதுகள் எதுவும் கிடைக்கவில்லை. நாமினேஷனில் எல்லாப் பிரிவுகளில் இருந்தும் ஒரு விருதும் கிடைக்கவில்லை. நடிப்பில் அசத்திய, மால்கம் எக்ஸின் ஜெராக்ஸாய் நடித்திருந்த டென்ஸலுக்கு நிச்சயம் சிறந்த நடிகருக்கான விருது கிடைக்கும் என்று எல்லோரும் நினைத்தார்கள் . ஆனால் அந்த ஆண்டு 'செண்ட் ஆஃப் எ உமன்' படத்தில் நடித்த ஹீரோ அல்பசீனோவுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.

இதுவும்கூட கறுப்பு வரலாறு தான்!