Published:Updated:

பழைய கதை, பழைய ஃபார்முலா... ஆனாலும், விரட்டி மிரட்டுகின்றன டைனோசர்கள்! #JurassicWorldFallenKingdom

பழைய கதை, பழைய ஃபார்முலா... ஆனாலும், விரட்டி மிரட்டுகின்றன டைனோசர்கள்! #JurassicWorldFallenKingdom
பழைய கதை, பழைய ஃபார்முலா... ஆனாலும், விரட்டி மிரட்டுகின்றன டைனோசர்கள்! #JurassicWorldFallenKingdom

80-களின் இறுதியில் பிறந்தவர்களிடம் நீங்கள் முதன் முதலில் திரையரங்கில் பார்த்து பிரமித்த ஹாலிவுட் படம் எது எனக் கேட்டால், நிச்சயம் ஜுராசிக் பார்க் என்றுதான் பதில் வரும். முதல் இரண்டு பாகங்களை மைக்கல் கிறிச்டன், அவரின் கதையை கருவாகக் கொண்டு அப்போதைய தொழில்நுட்பத்தின் மூலம், ஸ்டீவன் ஸ்பீல்பர்க், எப்போதோ அழிந்துபோன டைனோசர்களை மீண்டும் உயிருடன் திரையில் கொண்டுவர, உலகமே அதைக் கொண்டாடி தீர்த்தது. அதன் பிறகு, மூன்றாவது பாகமும் வந்து வரவேற்பைப் பெற்றது. இது நடந்து
14 வருடங்கள் ஆன நிலையில், சும்மா இருக்குமா ஹாலிவுட். தற்போதைய நவீனத் தொழில்நுட்பம் கொண்டு பழைய படங்களின் தொடர்ச்சியாகப் புது ஜுராசிக் வேர்ல்ட் படங்களை எடுக்கத் தொடங்கியது. கடந்த 2015-ம் ஆண்டு புதிய ஜுராசிக் வேர்ல்ட் திரைப்படம் வெளியானது. வசூலில் சாதனை என்றாலும், பழைய புகழையும் பெயரையும் எட்ட முடியவில்லை. தற்போது அதன் அடுத்த பாகமான Jurassic World: The Fallen Kingdom வெளியாகியிருக்கிறது. இது இந்தப் படத்தொடரில் ஐந்தாவது படம். குறைகளைச் சரி செய்து இழந்த புகழை மீட்டிருக்கின்றனவா இந்த டைனோசர்கள்?

சென்ற படத்தில் ஜுராசிக் பார்க் இருக்கும் Isla Nublar தீவு பெரும் சேதத்துக்கு உள்ளாக, பல பேர் காயம் அடைய, அந்தப் பார்க்கை அப்படியே கிடப்பில் போட்டுவிடுகிறார்கள். அங்கே இன்னமும் மக்களின் உலகுக்குத் தொடர்பே இல்லாமல் தங்கள் இஷ்டம்போல வாழ்ந்து வருகின்றன பல வகை டைனோசர்கள். இந்நிலையில், அந்தப் பார்க்கின் அருகே இருக்கும் எரிமலை ஒன்று வெடிக்கும் தருவாய்க்குச் செல்கிறது. மிகவும் அரிதான டைனோசர் இனங்கள் தற்போது காப்பாற்றப்பட வேண்டுமா இல்லை, இது இயற்கையின் விருப்பம் என அதை அழிய விட்டுவிடலாமா? வழக்கம் போல அரசாங்கம் கைவிரித்துவிட, ஒரு 11 வகை அரிய இனங்களைக் காப்பாற்ற மட்டும் அதை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றிய லாக்வுட் எஸ்டேட் முன் வருகிறது. முந்தைய பாகத்தின் கிளேர் (Bryce Dallas Howard) மற்றும் ஓவன் கிரேடி (Chris Pratt) ஜோடி இந்த மிஷனில் தங்கள் பட்டாளத்துடன் களம் இறங்குகிறார்கள். வெற்றி கிடைத்ததா? ஒருவேளை வழக்கம்போல கடைசி நேர ட்விஸ்ட்கள் ஏதேனும்? 

படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே நம்மை கட்டிப்போட்டு விடுகிறார்கள். பாழடைந்த, தண்ணீரில் மூழ்கிப்போன பார்க்கிற்குள் நடக்கும் அந்தத் திருட்டு, ஹாலிவுட் ஹாரர் படங்கள் போல எடுக்கப்பட்டிருப்பது ஒரு நல்ல த்ரில்லான ஆரம்பத்தைக் கொடுக்கிறது. சென்ற பாகத்தின் மிகப்பெரிய குறையாக சுட்டிக்காட்டப்பட்டது டைனோசர்களை அதிக நேரம் திரையில் காட்டவே இல்லை என்பதுதான். அதற்கு ஈடு கட்டும் வகையில், இதில் கிட்டத்தட்ட அறுபது சதவிகித சீன்களுக்கு டைனோசர்களை வைத்து விளையாடியிருக்கிறார்கள். அதே போல முந்தையப் பாகத்தை விடவும், கிராஃபிக்ஸில் டைனோசர்களை இன்னமும் மெருகேற்றியிருக்கிறார்கள்.

அதிலும் ப்ளூவாக தோன்றும் கடைசி வெலாசிரேப்டரின் (Velociraptor) அட்டகாசங்கள் படத்தின் பெரிய பலம். எப்போதும் குறும்புடன் இருக்கும் அதன் கண்கள், பெரும் வேகம், சண்டையிடும்போது தன்னைவிட பெரிய மிருகத்தைக்கூட அசால்டாக டீல் செய்யும் அதன் ஆளுமை, பல கைதட்டல்களை வாங்கிக் குவிக்கின்றன. முக்கியமாக ஓவனுடன் ஓடும் ப்ளுவின் சிறு வயது ட்ரைனிங் வீடியோக்கள் அதன் குணநலன்களை நமக்கு எளிதில் புரிய வைக்கின்றன. கசியும் ஆபத்தான வாயுவை நுகர்ந்த அடுத்த நொடி, இங்கே இருக்கக் கூடாது எனத் தன்னை காத்துக்கொள்ள குதித்து ஓடும்போதும் சரி, இறுதிக் காட்சியில், மிகப்பெரிய சாகசம் (கும்கி நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. இருந்தும் கும்கிக்கு முன்னரே ஜுராசிக் பார்க் முந்தையப் படங்கள் வந்துவிட்டன) ஒன்றைச் செய்துவிட்டு, அசால்டாக மேலே நிற்கும்போதும் சரி, ஒரு மாஸ் ஹீரோவாக விசில் வரவேற்பைப் பெறுகிறது ப்ளு.

ஜுராசிக் படங்களில் டைனோசர்களுக்கு அடுத்து மிகவும் கவனம் ஈர்ப்பவை லொகேஷன்கள். இந்தப் படத்தில் அந்தப் பிரமிப்பு மிஸ்ஸிங்! பட்ஜெட் படம் போல முதல் பாதியை மட்டும் பார்க்கில் வைத்துவிட்டு, இரண்டாம் பாதியை ஒரு பெரிய வீட்டுக்குள்ளேயே முடித்து விடுகிறார்கள். கதை என்று எடுத்துக்கொண்டால், முந்தைய 'தி லாஸ்ட் வேர்ல்ட்' பாகத்தின் கதையையே கொஞ்சம் பட்டி டிங்கரிங் செய்து அதன் தொடர்ச்சி என்று சப்பைக்கட்டு கட்டியிருக்கிறார்கள். அதிலும் திரைக்கதை புதிதாக எந்த அனுபவத்தையும் தர மறுக்கிறது. 'இப்போ ஹீரோ திரும்பி வந்து மிஷன்ல ஜாயின் பண்ணிக்குவான் பாரு' என்று நீங்கள் நினைக்க அது அப்படியே நடக்கிறது. 'இப்போ பாரேன் அவன்தான் வில்லனா இருப்பான்' என்று நீங்கள் யூகிக்க, அதுவும் நடக்கிறது. 'இப்போ வில்லன் அந்தக் கதாபாத்திரத்தைக் கொன்றுவிடுவான் பாரேன்' என்றால், அதுவும்... அடப்போங்க பாஸு! இவ்வகை சாகசப் படங்கள் எப்போதுதான் இந்த டெம்ப்ளேட் மசாலாக்களில் இருந்து வெளியே வருமோ?

முந்தைய லாஸ்ட் வேர்ல்ட் படத்தின் நாயகனான டாக்டர்.இயான் மால்கம் (Jeff Goldblum) இரண்டே காட்சிகளில் மட்டும் தோன்றி வழக்கம்போல டைனோசர்களுக்கு எதிராக வாதிடுகிறார். ஆனால், முந்தைய பாகங்களைப்போல அவரின் வாதத்துக்கு இந்தக் கதையில் எந்தவித வலுவும் சேர்க்கப்படவில்லை என்பது நெருடல். புதிதாக உருவாக்கப்பட்ட இண்டோரேப்டர் (Indoraptor), லாக்வுட் எஸ்டேட்டில் இருக்கும் சிறுமி மைஸியின் கதாபாத்திரம், அவளின் அந்த அட போட வைக்கும் ரகசியப் பின்கதை இரண்டும் ஆறுதல். கதாநாயகி கிளேருடன் தோன்றும் IT டெக்னிஷியன் ஃபிரான்க்ளின் வெப் (Justice Smith) ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார். குறைகளுக்கு எல்லாம் பதிலாக, பலவகை டைனோசர்கள், சாகசங்கள் என்று கலந்துகட்டி அடித்து, இறுதியாக ஒரு நல்ல க்ளைமாக்ஸ் காட்சியையும் பிடித்து, திரையரங்கை விட்டு வெளியேறும்போது அடுத்த பாகத்துக்கான எதிர்பார்ப்பை இப்போதே ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

படத்தின் ஆரம்பத்தில் டைனோசர்களைக் காப்பது அதை இரண்டாவது முறையாக உருவாக்கிய மனிதனின் கடமையா... அல்லது இயற்கைக்கு எதிராக உருவாக்கப்பட்ட அதை இயற்கையே அழிக்க விட்டுவிட வேண்டுமா... போன்ற வாதங்கள் அற்புதமானவை. இது போன்ற கேள்விகள்தான் ஜுராசிக் பார்க்கின் முந்தைய படங்களில் முதிர்ச்சி அடைந்த சினிமா ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டவை. ஆனால், அந்தப் பாதையிலேயே பயணிக்காமல், கமெர்ஷியல் சினிமாவாக படம் மாறிப்போனது சற்று வருத்தமே! 2021-ம் ஆண்டு வெளிவரும் அடுத்த பாகம் இத்தகைய வாதங்களுக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் என நம்பலாம். காரணம், இப்படத்தின் இறுதி காட்சி அதற்கான வலுவானதொரு நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. மொத்தத்தில், Jurassic World: The Fallen Kingdom கதை, திரைக்கதையில் கோட்டைவிட்டாலும், முழுக்க முழுக்க டைனோசர்களை வைத்து அதற்கு ஈடு செய்ய முயற்சி செய்திருக்கிறது. அந்த சுவாரஸ்யத்துக்காகவே இந்த ஜுராசிக் வேர்ல்டுக்கு ஒரு விசிட் அடிக்கலாம்!