Published:Updated:

``ஓஷன்ஸ் 8 முதல் ஜானி இங்கிலீஷ் 3 வரை... ஹாலிவுட் ரசிகர்களுக்கு செம வேட்டை!"

தார்மிக் லீ

இந்த வருடம் ஹாலிவுட்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஹாலிவுட் திரைப்படங்கள்.

``ஓஷன்ஸ் 8 முதல் ஜானி இங்கிலீஷ் 3 வரை... ஹாலிவுட் ரசிகர்களுக்கு செம வேட்டை!"
``ஓஷன்ஸ் 8 முதல் ஜானி இங்கிலீஷ் 3 வரை... ஹாலிவுட் ரசிகர்களுக்கு செம வேட்டை!"

ஹாலிவுட் ரசிகர்களுக்கு இந்த வருடம் செம வேட்டை. ஒரு சில படங்களின் சீக்குவெல் குறிப்பிட்ட இடைவேளையில் வெளியானாலும், சில படங்கள் நீண்ட இடைவேளைக்குப் பின் ரிலீஸாகிறது. இந்த வருடம் அப்படி என்னென்ன படங்கள் வெளியாகிறது. வாங்க பார்ப்போம்!

ஓஷன்ஸ் 8 :

1960-ல் வெளியான 'ஓஷன்ஸ் 11' படத்தை மையமாக வைத்து, 40 ஆண்டுகள் கழித்து ஸ்டீவன் சோடர்பெர்க் என்பவர் `Oceans eleven'  படத்தை இயக்கினார். ஜார்ஜ் க்ளூனி, பிராட் பிட் போன்ற பெரிய நடிகர்கள் இப்படத்தில் நடித்துக் கலக்கினார்கள். `நூதனத் திருட்டை' ஒன்லைனாகக் கொண்ட இப்படம், வசூல் ரீதியாகவும் செம ஹிட். இந்த வெற்றிக் கூட்டணி, `Oceans twelve', `Oceans thirteen' என சீக்வெலாக 2007 வரை தொடர்ந்தது. 11 வருடங்கள் கழித்து 'ஓஷியன்ஸ் 8' ஆக மீண்டும் களமிறங்க உள்ளது. ஆனால், இந்த முறை சாண்ட்ரா புல்லாக், அன்னா ஹத்தாவே, கேட் ப்ளான்கட் என மகளிர் கூட்டணி. இவர்களுடன் சேர்ந்து ரிஹானாவும் நடித்திருக்கிறார். படம், இந்த மாதம் ரிலீஸாகிறது.     

தி ஃபர்ஸ்ட் பர்ஜ் (நான்காம் பாகம்) :

இந்தப் படத்தில் முதல் பாகம் 2013-ல் வெளியானது. 'டிஸ்டோப்பியா' எனும் சமூகத்தை மையமாக வைத்து வித்தியாசமாக எடுக்கப்பட்ட படம், `தி பர்ஜ்'. குறைந்த பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம், மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அரசியல் குளறுபடிகள், பொருளாதார நெருக்கடிகள், அதற்கான களையெடுப்பு... எனப் படம் படு சுவாரஸ்யமாகவும், திகிலாகவும் நகரும். ஒருநாளில் 12 மணி நேரத்தில் செய்யும் எந்தக் குற்றங்களுக்கும் தண்டனை கிடையாது என்பதே 'டிஸ்டோப்பியா'. யார் யாரை வேண்டுமானாலும் கொல்லலாம், அரசியல் தலைவர்களைத் தவிர!. இப்படியாக ஒரு கும்பல் ஒரு பக்கம் சுற்றிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம், சாதாரண மக்கள் தங்களுடைய உயிரைக் காப்பாற்றிக்கொள்ள போராடிக்கொண்டிருப்பார்கள். இப்படம் ஜூலை மாதம் ரிலீஸ் ஆகவிருக்கிறது.  

ஸ்கைஸ்க்ராப்பர் :

`தி ராக்' என்றழைக்கப்படும் மல்யுத்த வீரர் நமக்குப் பரிட்சயமானவர். தற்போது டுவெயின் ஜான்சனாக சினிமாவிலும் கலக்கிக்கொண்டிருக்கிறார். படத்தின் கதைப்படி, FBI-ல் இருந்து ஓய்வுபெற்ற டுவெயின் ஜான்சன், ஹாங்காங்கில் இருக்கும் ஸ்கைஸ்க்ராப்பர் என்றழைக்கப்படும் உயரமான கட்டடத்தில் குடும்பத்தோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார். திடீரென தீவிரவாதிகள் ஊடுருவ, தான் செய்யாத ஒரு குற்றத்துக்காக சிக்குகிறார், டுவெயின். தானும் தப்பித்து, ஸ்கைஸ்க்ராப்பரையும் மீட்பதே கதையாக இருக்கக்கூடும். அவரது சிக்ஸ்பேக் உடலுக்கும், அவருக்கு கைவந்த ஆக்‌ஷனும் இருப்பதால், தொடர்ந்து இதேமாதிரி படங்களில் நடித்து வருகிறார். ஜூலை மாதம் படம் வெளியாக இருக்கிறது. 

தி ஈக்வலைஸர் 2 :

அல்பசினோ, லியாம் நீஸன், ஜானி டெப், லியானார்டோ டீகேப்ரியோ போன்ற பெரிய நடிகர்களின் வரிசையில் டென்ஸல் வாஷிங்டனும் தவிர்க்க முடியாத ஹாலிவுட் கதாநாயகன். அவர் நடித்த 'தி ஈக்வுலைஸர்' படத்தைக் கண்டிப்பாக ஹாலிவுட் ரசிகர்கள் கடந்து வந்திருப்பார்கள். அதில், அவர் சண்டையிடும் முறையை பல தமிழ்ப்படங்களில் கப்சா அடித்திருக்கிறார்கள். 'நடிப்புக்கு வயது தேவையில்லை' என்பதற்குச் சிறந்த உதாரணம், டென்ஸல். 2014-ல் 'தி ஈக்வலைஸர்' படம் வெளியானதைத் தொடந்து, இந்த வருடம் இதன் இரண்டாம் பாகம் வெளியாகவிருக்கிறது.  

மிஷன் இம்பாசிபில்  (ஃபால்அவுட்) :

டாம் க்ரூஸின் ஃபிலிமோகிராஃபியில் 'மிஷன் இம்பாசிபில்' பட சீக்குவெல் மிகவும் முக்கியமானது. இந்தப் படத்தின் மூலம்தான் வெகுஜன மக்களைத் தன்னுடைய ரசிகர்களாக மாற்றிக்கொண்டார். இதன் முதல் பாகம் 1996-ல் வெளியானது. டாம் க்ரூஸே இந்தப் படத்தைத் தயாரித்தார். அந்தக் காலகட்டத்திலேயே மில்லியனில் உருவான இந்தப் படம், பில்லியன் வசூலைப் பெற்று, ஹாலிவுட் சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரிய சாதனையைப் புரிந்தது. அடுத்தடுத்து வெளியான பாகங்கள் முதல் பாகம் அளவுக்கு வசூல் பெறவில்லை என்றாலும், போட்ட பணத்தைவிட கொஞ்சம் அதிகமாகவே வசூல் செய்தது. இதுவரை ஐந்து பாகம் வெளியாகியிருக்கிறது. அடுத்த மாதம் ஆறாம் பாகம் வெளியாக உள்ளது.

ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் 2 :

ஃபேன்டஸி படப் பிரியர்களுக்கு இந்தப் படம் ரொம்பவே பெட். ஜே.கே.ரௌலிங் எனும் உலகப் புகழ் பெற்ற பிரிட்டிஷ் நாவலாசிரியர் உருவாக்கிய கதை. ஹாரி பாட்டர் கதையும் இவர் எழுதியதுதான். 'ஹாரி பாட்டர்' படத்தின் கடைசி நான்கு பாகத்தை இயக்கிய டேவிட் யேட்ஸ்தான் 'ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்' படத்தையும் இயக்கினார். இந்தப் படத்தின் முதல் பாகம் 2016-ல் வெளியாகி, நல்ல வசூலையும் வரவேற்பையும் பெற்றது. படத்தில் பார்க்கும் எந்த விஷயங்களும் நம்பமுடியாதபடி இருந்தாலும், படத்தைப் பார்க்கும்போது அந்த உலகத்தில் நாமும் உலாவுவதுபோல் எஃபெக்ட்டைக் கொடுக்கும். 'ஹாரி பாட்டர்' படங்களைப் பார்க்கும்போது ஏற்படும் ஓர் ஈர்ப்பு, இந்தப் படத்தைப் பார்க்கும்போதும் ஏற்படும். 'நல்ல ஃபேன்டஸி' படங்களுக்கே உரிய குணாதிசியம் அது. நவம்பர் மாதம் படம் வெளியாக இருக்கிறது. 

ஜானி இங்கிலீஷ் 3 :

பல வருடக் காத்திருப்புக்குப் பின் வெளியாக இருக்கும் படம், 'ஜானி இங்கிலீஷ் 3' (Johnny English Strikes Again). இந்த சீரியஸின் முதல் பாகம் 2003-ல் வெளியானது. போகோ டி.வியில் சிரிப்பதற்காகவே என்னென்ன சேட்டைகளை செய்வாரோ, படத்தில் அது அனைத்தையும் சீரியஸாக செய்வார். இவரின் மிகப்பெரிய ப்ளஸ் முகத்தில் வெளிக்கொண்டு வரும் ரியாக்‌ஷன்ஸ். லாரல் அண்ட் ஹார்டி, சார்லி சாப்ளின் போன்ற காமெடி ஜாம்பவான்கள் வரிசையில், ரோவன் ஆட்கின்ஸனுக்குக் கண்டிப்பாக இடமுண்டு. வருடக் கடைசியில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.