Published:Updated:

''ஓஷன்ஸ் சீரியஸின் மகளிர் மட்டும் வெர்ஷன்!" - 'ஓஷன்ஸ் 8' படம் எப்படி? #Oceans8

தார்மிக் லீ

`ஓஷன்ஸ் 8' விமர்சனம்.

''ஓஷன்ஸ் சீரியஸின் மகளிர் மட்டும் வெர்ஷன்!" - 'ஓஷன்ஸ் 8' படம் எப்படி? #Oceans8
''ஓஷன்ஸ் சீரியஸின் மகளிர் மட்டும் வெர்ஷன்!" - 'ஓஷன்ஸ் 8' படம் எப்படி? #Oceans8

1960-ல் வெளியான `ஓஷன்ஸ் 11' திரைப்படத்தை 41 வருடங்கள் கழித்து ரீமேக் செய்தனர். அதைத் தொடர்ந்து இரண்டு பாகங்களும்  ஹாலிவுட்டில் சக்கைபோடு போட்டன. இதைத் தொடர்ந்து மீண்டும் 11 வருடங்களுக்குப் பின் மகளிர் கூட்டணியில் உருவாகி தற்போது ஃப்ரெஷ்ஷாகக் களமிறங்கியிருக்கும் `ஓஷன்ஸ் 8' படம் எப்படி?

தன்னுடைய காதலனின் துரோகத்தால் சிறைக்குச் செல்லும் டெப்பி ஓஷன் (சாண்ட்ரா புல்லாக்), பரோலில் வெளியே வருகிறார். வெளியே வந்த கையோடு தன்னுடைய முன்னாள் கூட்டாளி லௌவுடன் (கேட் ப்ளாங்கெட்) இணைந்து பெரிய திருட்டுக்கு திட்டமிடுவதோடு, தான் சிறைக்குச் செல்ல காரணமாக இருந்த முன்னாள் காதலர் க்லைடு பெக்கரை (ரிச்சர்டு ஆர்மிடேஜ்) பலி வாங்க ஆவேசத்துடன் வேலைகளைத் தொடங்குகிறார். கை வைக்கப்போவது பெரிய இடம் என்பதால், டைமண்ட் எக்ஸ்பர்ட் அமிதா (மிண்டி கலிங்), முன்னாள் தோழி டேமி (சாரா பால்ஸன்), நூதனமாகத் திருடும் கான்ஸ்டன்ஸ் (அவ்க்வாஃபினா), டெக்கி கேர்ள் நைன் பால் (ரிஹானா), ஃபேஷன் டிசைனர் ரோஸ் வெய்ல் (ஹெல்லனா போன்ஹம் கார்டர்) போன்றவர்களை கூட்டுச் சேர்கிறார். `டைட்டில்ல எட்டுனு வருது திருடப் போறது ஏழா இருக்கே' இதுதானே உங்க சந்தேகம். `அந்த' எட்டாவது ஆள்தான் டிவிஸ்ட்.

வோக் பத்திரைகையின் `மெட் காலா'வான டாஃப்னி க்ளூகர் (ஆனி ஹத்தாவே) அணியும் நகையை திருட வேண்டும்.  இதற்கான வேலையில் முழு வீச்சில் இறங்கி, பக்காவான ஒரு திருட்டுத் திட்டத்தையும் தீட்டுகிறது. அவரவர் திறைமைக்குத் தகுந்த வேலைகளைப் பிரித்துக்கொண்டு, வேட்டையில் இறங்குகிறது டெப்பி அண்ட் கோ. போட்ட திட்டம் நிறைவேறியதா, டெப்பி ஓஷன் தன்னுடைய முன்னாள் காதலனைப் பலி வாங்கினாரா என்பதை காமெடி (மாதிரி) கலந்து சொல்லியிருக்கிறார், இயக்குநர் கேரி ரோஸ்.

`ஓஷன்ஸ் 8' படம், ஜானர் டப்பாவில் 'காமெடி ஹெய்ஸ்ட்' என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால் காமெடிக்கான வாய்ப்பு மட்டும்தான் படத்தில் நிரம்பி வழிந்ததே தவிர காமெடியை யாரும் முழுமையாகச் செய்யவில்லை. படத்தின் திரைக்கதைப்படி காமெடிக்கான இடத்தை இயக்குநர் நிறையவே ஒதுக்கியிருக்கிறார். ஆனால் ஒரு சில இடத்தைத் தவிர மற்ற இடங்கள் அனைத்தும் ஏனோதானோவென இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்கட்டும்.  பொதுவாக `ஓஷன்ஸ்' திரைப்பட வரிசையில் இதற்கு முன் வெளிவந்த மூன்று பாகங்களிலும் இதே மாதிரியான திரைக்கதைதான் இடம்பெற்றிருக்கும். ஆனால், அவர்கள் திட்டமிட்டுச் செய்யும் திருட்டு ஒரு சுறுசுறுப்பையும், விறுவிறுப்பையும் ஏற்படுத்தும். ஆனால், இதில் சுறுசுறுப்பும் இல்லை, விறுவிறுப்பும் இல்லை. ஆங்காங்கே கிறுகிறுப்பு மட்டுமே ஏற்பட்டது.

பொதுவாக `ஹெய்ஸ்ட்' ரகப் படங்களில் திருடிய பொருள் கைகூடி வரவிருக்கும் நேரத்தில் ஒரு சிறிய தடுமாற்றமோ குழப்பங்களோ ஏற்படும். அதிலிருந்து சாமர்த்தியமாகத் தப்பித்து, திருட்டை வெற்றிகரமாக நிறைவேற்றும் ரக திரைக்கதைதான் பார்ப்பதற்கும் ஒரு த்ரில்லிங்கைக் கொடுக்கும். இது ஓஷன்ஸ் படத்தின் மற்ற பாகங்களில் பக்காவாக வொர்க்அவுட் ஆகியிருக்கும். ஆனால், இந்தப் படத்தில் அது கொஞ்சம்கூட எடுபடவில்லை. திருடிய பொருளை எந்தவித தடங்களுமின்றி, `தம்பி ஒரு டீ' என்பது போல் எடுத்து வருகிறார்கள். சுவாரஸ்யமின்றி நகரும் திரைக்கதை படத்தின் எண்டு கார்ட் வரை தொய்வை ஏற்படுத்துகிறது. கதைப்படி ஆளுக்கு 330 மில்லியன் டாலர் பிரித்துக்கொள்கிறார்களாம். கதையை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக்கியிருந்தால், நிஜமாகவே தயாரிப்புக்குழு, அவ்வளவு லாபம் பார்த்திருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது. 

படத்தில் ஆறுதலான விஷயம், ஹெல்லனா போன்ஹம் கார்டர் போர்ஷனில் இடம்பெற்ற காமெடிகள். கலைந்த கூந்தல், வழக்கம் போல எதையோ பறிகொடுத்த முகபாவனை என ஹெல்லனா போன்ஹம் ரசிக்க வைக்கிறார். போக, ஆனி ஹத்தாவே தனக்குக் கொடுத்த கதாபாத்திரத்தைச் சரியாக செய்திருக்கிறார். வோக் பத்திரிக்கையின் `மெட் காலா' ரோலுக்குச் சரியாகப் பொருந்திப் போனார். தவிர கதையின் கதாபாத்திர வடிவமைப்பு மனதில் நிற்பதற்குள் படமே முடிந்துவிட்டது. திரைக்கதையை வேகமாக நகர்த்த முயற்சி செய்ததன் விளைவாக எந்தவொரு கதாபாத்திரமும் முழுமையாகாமல் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கின்றன. `அந்த' எட்டாவது டிவிஸ்ட்டைத் தவிர ஒன்பதாவதாக ஒரு டிவிஸ்ட்டையும் வைத்திருந்தார், இயக்குநர். எட்டாவது டிவிஸ்ட் ஆறுதலைக் கொடுத்தாலும் அடுத்து வந்த டிவிஸ்ட் அவசியம்தானா என்ற கேள்வியை எழுப்பியது. படத்தில் வரும் `மகளிர் மட்டும்' கோஷ்டி போதாது என நினைத்தாரோ என்னவோ எக்கச்சக்க கேமியோக்கள். மரியா ஷரபோவா, செரினா வில்லியம்ஸ், கிம் காதர்ஷியன் என ஒரு காட்சியில் பெண் செலிப்ரிட்டிகள் எல்லாம் ஒன்று கூடுகிறார்கள்.

வைரத்தைத் திருடுவதற்கு போட்ட திட்டத்தில் பாதியாவது திரைக்கதைக்கும் போட்டிருந்தால் `ஓஷன்ஸ் 8' சொல்லியடித்திருக்கும்.   

ஆபிரஹாமிண்டே சந்ததிகள் படத்தின் விமர்சனத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.