Published:Updated:

ஜலபுலஜங்... டிக்கிலோனா தெரியும்... டேக் தெரியுமா ? #Tag படம் எப்படி ?

கார்த்தி
தார்மிக் லீ
ஜலபுலஜங்... டிக்கிலோனா தெரியும்... டேக் தெரியுமா ?  #Tag படம் எப்படி ?
ஜலபுலஜங்... டிக்கிலோனா தெரியும்... டேக் தெரியுமா ? #Tag படம் எப்படி ?

நாம் எத்தனை விளையாட்டுக்கள் சிறு வயதில் விளையாடி இருந்தாலும், டவுசர் போட்டுக்கொண்டு ஜென்டில்மேன் திரைப்படத்தில் செந்தில் சொல்லிக்கொடுத்த 'டிக்கிலோனா' , ' ஜலபுலஜங் ' , ' சப்லிங்' போன்ற விளையாட்டுக்களை மறந்துவிட முடியாது. வடிவேலுவும் முத்துக்காளையும் நமக்கு ஒரு விளையாட்டை சொல்லிக் கொடுத்து இருக்கிறார்கள். இந்த வாரம் ஹாலிவுட்டில் வெளியாகியிருக்கும் #TAG திரைப்படம் அப்படிப்பட்ட ஒரு விளையாட்டை மையப்படுத்திய கதை தான். அதென்ன டேக் ? படத்தின் டிரெய்லரை எல்லாம் விடுங்கள், இந்த 2 நிமிட காட்சியை பாருங்கள். 

இவ்ளோ தான் டேக். இந்தக் கேமை சிலர் ' நிக்கல் குந்தல் என்கிறார்கள். நிக்கலோ குத்தலோ. புய்ப்பத்தை சிலர் புஷ்பம் என்று சொல்வது போல், டேக் விளையாட்டுக்கும் பல பெயர் இருக்கும் போல. இந்தப் படத்தில் வரும் கேங் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முழுக்க டேக் விளையாடுகிறார்கள். மே 31ம் நாள் கடைசி நிமிடத்தில் யார் அவுட் ஆகிறார்களோ, அவர் தோத்தாங்கோலி ஆக்கப்பட்டு, அடுத்தாண்டு மே 1ம் தேதி வரை காத்திருக்க வேண்டும். 

ஹோகன் (எட் ஹெல்ம்ஸ்), பாப் (ஜான் ஹேம்),  ரேண்டி (ஜேக் ஜான்ஸன்), கெவின் (ஹன்னபெல் புரெஸ்), ஜெர்ரி (ஜெரிமி ரென்னர்) என இவர்கள் அனைவரும் டவுசர் போட்டு சுற்றிக்கொண்டிருந்த காலத்தில் இருந்து நண்பர்கள். பல வருடங்களுக்குப் பிறகு ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்கள். என்னதான் பெரிய இடத்தில் வேலை பார்த்து வந்தாலும், இவர்களிடம் சிறு பிள்ளைத் தனமாக இருக்கும் ஒரு குணாதிசியம், 'டேக்' என்ற கேமை ஏழு கழுதை வயதாகியும் விளையாடுவது இதில் வெற்றி பெறுபவர் என யாரும் கிடையாது, ஆனால் தோத்தாங்கோலியாக இருக்கக்கூடாது. இதுதான் விளையாடுபவர்களின் மனநிலையாக இருக்கும்.

மல்யுத்தத்தில், ரிங்கிற்கு வெளியே இருப்பவரிடம் பாஸ் கொடுப்பது போல நேரில் பார்த்தவுடன் அவருக்கே தெரியாமல் அவரைத் தொட்டுவிட வேண்டும். பதிலுக்கு அவர்கள் இவரைத் தொடாமல் மற்ற போட்டியாளனைத்தான் தொட்டு அவுட்டாக்க வேண்டும். கிட்டத்தட்ட 'லாக் அண்ட் கீ' கேமை போலதான். அவர்களது கேங்கில் ஜெரிமி ரென்னர் மட்டும் பல வருடங்களாக இவர்களுக்கு டிமிக்கிக் கொடுத்துக்கொண்டிருப்பார். யாராலும் அவரை அவுட்டாக்க முடியாது. இந்நிலையில் ஜெரிமியின் திருமண செய்தி இவர்களது காதுக்கு வர, 'இப்போ எப்படி டிமிக்கி கொடுக்கிறனு பார்க்குறேன்' என்று ஜெரிமியின் கல்யாணத்துக்கு ஒவ்வருவரும் ஒவ்வொரு மூலையிலிருந்து கிளம்பி, ஒன்றுகூடுவார்கள். ஜெரிமி அவுட் ஆனாரா இல்லை அங்கேயும் டிமிக்கி கொடுத்தாரா என்பதே படத்தின் கதை.  

இந்தப் படத்தில் இருந்த ஒரு மணி நேரம் 40 நிமிடமும், நம் பால்ய நினைவுகள் அனைத்தையும் முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்காவது தூண்டிவிடும். ஸ்கூல் படிக்கும்போது நாம் அனைவரும் என்னென்ன ரகளைகளும், சேட்டைகளும் செய்திருப்போமோ அதில் பாதி கண் முன் வந்து நிற்கும். லவ் பொண்ணைப் பார்க்க நண்பர்களை கலட்டிவிட்டுப்போவது, பொண்ணுங்களிடம் ஃப்ளர்ட் செய்வது, குஷி மோடுக்குப் போய்விட்டால் பாரபட்சம் பாராமல் கண்ட இடத்தில் அடிப்பது, சீரியஸான சூழலை நக்கலடித்து சிரிப்பது... என பால்ய நினைவுகளைத் தூண்டும் காட்சிகள் படத்தில் எக்கச்சக்கம். நடக்கும் ஒவ்வொரு சூழலையும் இவர்களது முகம் வெளிப்படுத்தும் ரியாக்‌ஷன்கள்தான் உச்சக்கட்ட ரகளை. பல வருடங்கள் கழித்து ஜெரிமியைப் பார்க்கும்போது அவரை அவுட்டாக்க இவர்கள் தீட்டும் திட்டமும், அதுக்கு அவரது ரியா(ஆ)க்‌ஷனும் செம. படம் முழுக்கவே அப்படி இருந்திருந்தால் சிரித்து வயிறு வலியே வந்திருக்கும். 

'ஹேங் ஓவர்', 'வெக்கேஷன்', 'வீ ஆர் தி மில்லர்ஸ்', போன்ற படங்களில் நடித்துக் கலக்கியவர், எட் ஹெல்ம்ஸ். ஆனால், மற்றவர்களை ஒப்பிடுகையில் இவருக்கான இடம் படத்தில் கம்மியாகவே தெரிந்தது. ரியான்ஷன்களில் மட்டுமே சிரிக்க வைக்கச் சொன்ன இயக்குநர் வசனங்களில் வழுக்கிவிட்டார். படத்தின் நீளம் குறைவாகவே இருந்தாலும், சில காமெடிகள் வரட்டு மொக்கையாகவே இருந்தது. படத்தில் எடிட்டிங், ஸ்க்ரீன்ப்ளே, கேமரா, மியூஸிக், நடிகர்கள் என எல்லாமே பக்கா... காமெடி படம் எனச் சொல்லிவிட்டு அதைச் முழுவதுமாக செய்யத் தவரவிட்டார்கள். எட் ஹெல்ம்ஸின் மனைவியாக நடித்த இஸ்லா ஃபிஷர்தான் பட்டையைக் கிளப்பியுள்ளார். சில இடங்களில் இவர் செய்யும் சேட்டைகள், காட்டும் முகபாவனைகள் என எல்லாமே சிறப்பு. 

ஹன்னபெல் புரேஸிடம் உள்ள ஸ்பெஷாலிட்டி நடக்கும் சூழலுக்கு எந்தவித களேபரங்களும் இல்லாமல் ஒரு வரியில் ஒன் ஹவர் நினைத்து நினைத்து சிரிக்க வைப்பார். இந்தப் படத்திலும் அது சூப்பராக ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது. ஆனால் இன்னமுமே காமெடி 'பற்றாக்குறை' ஏற்பட்ட இடங்களில் இவரை வைத்து நிரப்பியிருக்கலாம். 

என்னடா இது பேத்தனமா, இது ஒரு விளையாட்டு, இத மையப்படுத்தி படமா என்றெல்லாம் யோசிக்காதீர்கள். 20 ஆண்டுகளாக இந்த விளையாட்டை ஒரு குழு விளையாட, அதை Wall Street Journal கட்டுரையாக 2013ம் ஆண்டு வெளியிட்டு இருந்தது. அதைத்தான் தற்போது படமாக எடுத்திருந்தார்கள்.  ஜென்டில்மேன் திரைப்படத்தின் மூலம் உலகுக்கு அறிமுகமான டிக்கிலோனா, சப்லிங், ஜலபுலஜங் போன்ற விளையாட்டுக்கள் திரைப்படமாக கோலிவுட் இயக்குநர்கள் ஆவண செய்ய வேண்டுகிறோம்

Hereditary படத்தின் விமர்சனத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.