Published:Updated:

சின்ன மனிதன்... பெரிய சறுக்கல்... காமெடியால் தப்பித்த #AntManAndTheWasp

கார்த்தி

இந்தப் படத்தின் இரண்டாம் போஸ்ட் கிரெடிட் காட்சிக்கும்,படத்துக்குமே ஒரு சம்பந்தம் இருக்கிறது. இரண்டுமே எதிர்பார்க்க வைத்து... சரி விடுங்கள்... !!!

சின்ன மனிதன்... பெரிய சறுக்கல்... காமெடியால் தப்பித்த #AntManAndTheWasp
சின்ன மனிதன்... பெரிய சறுக்கல்... காமெடியால் தப்பித்த #AntManAndTheWasp

அவெஞ்சர்ஸ் ரசிகர்கள் இன்னும் இனிஃபினிட்டி வார் திரைப்படத்தின் பாதிப்பில் இருந்தே மீளவில்லை. ஆசை ஆசையாக கைதட்டி ரசித்த சூப்பர் ஹீரோக்களை எல்லாம் தேனோஸ் தன் விரலின் ஒரு சொடக்கில் மறைய வைத்துவிட்டான். ஒருபுறம் அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார் படத்தில் ஏன்ட்மேன் ஏன் வரவில்லை என்று ஒரு குழப்பம், மற்றொருபுறம் மறைந்த சூப்பர்ஹீரோக்கள் என்ன ஆனார்கள் என்றொரு குழப்பம். இத்தகைய எதிர்பார்ப்புகளுக்கிடையே இந்த வாரம் வெளியாகி இருக்கிறது #AntManAndTheWasp . 

எங்க தேனோஸ் என தேடினால், முதல் காட்சியேலேயே ட்விஸ்ட்டை வைக்கிறார்கள். ஆம், ஏன்ட்மேன் படத்தின் இரண்டாம் பாகம் இன்ஃபினிட்டி வாருக்குப் பின் நடக்கும் சம்பவங்கள் அல்ல, கேப்டன் அமெரிக்கா சிவில் வார் படத்துக்கு பிறகு வரும் சம்பவங்களே. கேப்டன் அமெரிக்கா சிவில் வார் படத்தில் கேப்டன் அமெரிக்கா டீமுக்கு உதவப்போக, லேங்கை ஹவுஸ் அரெஸ்ட்டில் வைக்கிறார்கள். லேங் பற்றி தெரியாதவர்களுக்கு ஒரு சின்ன கொசுவர்த்தி சுருள். 

சின்ன மனிதன்... பெரிய சறுக்கல்... காமெடியால் தப்பித்த #AntManAndTheWaspஏன்ட் மேன்

ஷீல்டு ஏஜென்ட்டான ஹேன்க் பிம், மனிதர்களை எறும்பு அளவுக்கு சுருக்கும் ஆடை ஒன்றை வடிவமைக்கிறார். இவர் ஏன்ட் மேன், இவரது மனைவி வேஸ்ப். சோவியத் மிஸைல் ஒன்றை செயல் இழக்கச் செய்யும் போது, வேஸ்ப் குவான்டம் உலகத்துக்குள் சிக்கிவிடுகிறார். பல வருடங்கள் கழித்து, ஏன்ட்மேன் ஆடை போலவே வில்லன் டீமும் ஆடை உருவாக்குகிறது. திருடன் லேங்கின் உதவியை நாடுகிறார் ஹேன்க் பிம். இறுதியில் லேங்கும் குவான்டம் உலகத்துக்குள் சிக்குகிறார். ஆனால், எப்படியோ வெளியே வந்துவிடுகிறார்.

ஏன்ட்-மேன் அண்டு தி வேஸ்ப்

ஹவுஸ் அரெஸ்ட்டில் லேங்கை வைத்து வெறிக்க வெறிக்க வெறிகொண்டு கண்காணிக்கிறது காவல்துறை. சிறியதாக மாறும் ஆடையை லேங்குக்கு கொடுத்ததற்கு ஹேங்க் பிம் , அவரது மகள் ஹோப் இருவருக்கும் அதே ரீதியிலான ஏழரையை இழுத்துவிட்டிருக்கிறார் லேங். 

சின்ன மனிதன்... பெரிய சறுக்கல்... காமெடியால் தப்பித்த #AntManAndTheWaspலேங்கால் , குவான்டம் உலகத்துக்குள் இருந்து வெளியே வர முடிகிறதெனில், குவான்டம் உலகத்துக்குள் சிக்கியிருக்கும் ஹேங்க் பிம்மின் மனைவியையும் வெளியே கொண்டு வர முடியும்தானே என்பது பிம்மின் லாஜிக் . அதற்காக ஒட்டுமொத்த குடும்பமும் உழைக்கிறது.

கதைக்கு ஒரு வில்லன் இருக்க வேண்டும் என்பதால், ஹோப்பிடம், சண்டைபோடும் காமெடி வில்லன் டீம் ஒன்று படத்தில் உலவுகிறது. அது போலவே குவான்டம் உலகத்தின் சக்தி தேவைப்படும் கோஸ்ட் என்கிற வில்லியும் படம் முழுக்க வருகிறார். இவ்வளவு டம்மியான வில்லனை எல்லாம் டிசி சினிமாக்களில் கூட பார்த்ததில்லை. டெட்பூல் அடுத்த பாகம் எடுக்கும் போது, மொக்கை வில்லனுக்கு மார்வெலையே உதாரணமாக சொல்லலாம். 

ஹேங்க் பிம்மின் மனைவி குவான்டம் உலகத்துக்குள் இருந்து வெளிவே வருகிறாரா ? கோஸ்ட் குவான்டம் சக்தியைப் பெறுகிறாரா ? போன்ற கேள்விகளுக்கு பதில் சொகிறது ஏன்ட்-மேன் அண்டு தி வேஸ்ப். 

சின்ன மனிதன்... பெரிய சறுக்கல்... காமெடியால் தப்பித்த #AntManAndTheWaspஅட, இவ்ளோ தான் கதையா என்றால், அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வாரில் பஸ்பமான ஸ்பைடர்மேன் மேல் சத்தியமாக இவ்ளோ தான் கதை. இதை, அப்படியே அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் படத்தில் 10 நிமிட காட்சியாகக்கூட வைத்திருக்கலாமே என்று தோன்றுகிறது. ஆனால், பார்ட் 2 அறிவித்துவிட்டோமே என காமெடி விஷயங்களைத் தூவி திரைக்கதையை நிரப்பியிருக்கிறார்கள். மனிதர்களுடன் இணைந்து கட்டடம், கார் எல்லாமே சிறிதாவது இந்த பாகத்தின் ஸ்பெஷல். அதிரடி காட்டும் வேஸ்ப் கதாப்பாத்திரத்துக்கு இன்னும் கொஞ்சமேனும் ஆக்ஷன் காட்சிகள் வைத்திருந்தால், எவாஞ்சலின் லில்லி ரசிகர்கள் மகிழ்ந்திருப்பார்கள். 

முதல் பாகத்தில் தலை காட்டிய ஃபேல்கன் போன்ற கதாப்பாத்திரங்களும், அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வாரில் பிஸியாக இருந்ததால், இதில் மிஸ்ஸிங். படத்தின் நாயகன் லேங்கே நக்கல் செய்வது போல், எல்லா வார்த்தைக்கும் முன்னால் குவான்டம் போட்டு கடுப்பேற்றியிருக்கிறார்கள். Quantum Realm, Quantum force, Quantum Entanglement.. கதையும் குவான்டன் என சொல்லியிருக்கலாம். 

காமெடிக் காட்சிகளும், ' ஆனந்த யாழை ' அவ்வப்போது மீட்டும் லேங்கின் மகள் கேஸியும் தான் படத்தின் பிளஸ். முதல் பாகத்தைப் போலவே, இதிலும் லேங்கின் கோமாளி நண்பர்கள் செய்யும் அட்டூழியங்கள் ஒவ்வொன்றும் அதகளம் .

அதிலும், ' அன்னிக்கு காலைல ஆறு மணி இருக்கும் ரோபோ ஷங்கர் ' காமெடி போல், லூயிஸ் நடித்திருக்கும் காட்சிக்கு திரையரங்கமே வெடித்துச் சிரிக்கிறது. முதல் பாகத்தில் கதை எழுதிய எட்கர் ரைட்டின் டிரேட்மார்க் காட்சி போல் உள்ளது. ஏன்ட்-மேன் (முதல் பாகம் ), பேபி டிரைவர்  இரண்டிலுமே இது போன்றதொரு காட்சி உண்டு. இந்தப் பாகத்தில் அவர் பணியாற்றவில்லை என்றாலும், அதே காட்சி இதிலும் வருகிறது. 

 படத்தின் மற்றொரு சிறப்பம்சம் ஹைட்ரா மட்டுமல்ல ஷீல்டுமே பலரை ஏமாற்றியிருக்கிறது என கோஸ்டின் வாயிலாக ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார்கள். 

சின்ன மனிதன்... பெரிய சறுக்கல்... காமெடியால் தப்பித்த #AntManAndTheWasp


அவெஞ்சர்ஸ் : இன்ஃபினிட்டி வாருக்குப் பின் வரும் படம். ஆனால், அதற்குரிய எதிர்பார்ப்புகளை பெரிதாக பூர்த்தி செய்யவில்லை இந்த சின்ன ஏன்ட்-மேன். 

முதல் பாகத்தை இயக்கிய பீட்டன் ரீட் தான் இந்தப் பாகத்தையும் இயக்கியுள்ளார். 
இனி, அடுத்தாண்டு ப்ரீ லார்சன் நடிப்பில் வர இருக்கும் கேப்டன் மார்வெல் படத்துக்கு காத்திருப்போம். பின்னாடியே, அவெஞ்சர்ஸ் : நான்காம் பாகமும் வர இருக்கிறது.

இந்தப் பாகத்தை கேப்டன் அமெரிக்காவுடன் இணைக்க ஆரம்பத்திலேயே ஒரு காட்சி வைத்துவிட்டார்கள். ஆனால், இறுதியில் அவெஞ்சர்ஸுடன் இணைக்க வேண்டுமே!. படம் முடிந்ததும் திபுசிக்கு திபுசிக்கு என ஓட்டம் பிடிக்காமல், போஸ்ட் கிரெடிட் காட்சியைப் பார்த்தால், அதற்குரிய விடை கிடைக்கும்.
 
இன்னும் சற்று நேரம் காத்திருந்து,  இரண்டாம் போஸ்ட் கிரெடிட் காட்சியையும் பார்க்கலாம். இந்தப் படத்துக்கும், இரண்டாம் போஸ்ட் கிரெடிட் காட்சிக்கும் ஒரு சம்பந்தம் இருக்கிறது. இரண்டுமே எதிர்பார்க்க வைத்து... சரி விடுங்கள்... ஜெய் மார்வெல்!!!