Election bannerElection banner
Published:Updated:

அக்வாமேன், ஷஸம், காட்ஸில்லா... ட்ரெய்லர்களை வரிசைகட்டி இறக்கிய ஹாலிவுட்! எது பெஸ்ட்? #SDCC2018

அக்வாமேன், ஷஸம், காட்ஸில்லா... ட்ரெய்லர்களை வரிசைகட்டி இறக்கிய ஹாலிவுட்! எது பெஸ்ட்? #SDCC2018
அக்வாமேன், ஷஸம், காட்ஸில்லா... ட்ரெய்லர்களை வரிசைகட்டி இறக்கிய ஹாலிவுட்! எது பெஸ்ட்? #SDCC2018

இந்த வருடம் நடைபெற்ற சன் டியாகோ காமிக் கான் விழாவில் வெளியான ட்ரெய்லர்களில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ள ஐந்து முக்கிய ட்ரைலர்கள் ஒரு பார்வை... #SDCC2018

ன் டியாகோ நகரில் வருடா வருடம் நடக்கும் காமிக் கான் (San Diego Comic Con) எனும் நிகழ்வு காமிக்ஸ் ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து ஹாலிவுட் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இருக்கும் படங்களின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், ட்ரெய்லர் போன்ற விஷயங்கள் முதன்முதலில் அங்கே அறிமுகப்படுத்தப்படும். ஆயிரக்கணக்கான ரசிகர்கள், அந்தந்த திரைப்படத்தின் நடிகர்கள், நடிகையர்கள், இயக்குநர்கள் என ஒரு திருவிழாவாக நடக்கும். இந்த வருடம் நடைபெற்ற விழாவில் வெளியான ட்ரெய்லர்களில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ள ஐந்து முக்கிய ட்ரெய்லர்கள் ஒரு பார்வை... #SDCC2018

Aquaman (அக்வாமேன்)

மார்வெல் காமிக்ஸ் ஒருபுறம் படங்களில் வெற்றிகளைக் குவித்துக்கொண்டிருக்க, அதன் போட்டியாளர் DC காமிக்ஸ் தொடர் தோல்விகளில் தவித்துக்கொண்டிருக்கிறது. `வொன்டர் உமன்' மட்டும் அனைத்துத் தரப்பு ரசிகர்களைக் கவர, தற்போது அடுத்த ஆயுதமாக 'அக்வாமேன்' படத்தைக் களமிறக்கவிருக்கிறது. நீரினுள்ளே ஓர் உலகம், அதை ஆளப்பிறந்தவன் கடல் அரசிக்கும் சாதாரண நில மனிதன் ஒருவனுக்கும் பிறந்த குழந்தையான ஆர்தர் கரி. தன் சிம்மாசனத்தைப் பிடித்தானா? 

தி காஞ்சுரிங் (The Conjuring), இன்சீடியஸ், ஃப்யுரியஸ் 7 போன்ற படங்களை எடுத்த ஜேம்ஸ் வான் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். அன்டர்வாட்டர் வேர்ல்ட் சாகசங்கள் நிறைந்த அதன் ட்ரெய்லர் இதோ...

ஷஸம்! (Shazam!)

DC காமிக்ஸின் மற்றொரு சூப்பர் ஹீரோ படைப்பு இந்த Shazam! சின்ன வயது சிறுவன் ஒருவனுக்கு Shazam! என்று கூறியவுடன் வயதான சூப்பர் ஹீரோ ஆகும் சக்தி கிடைக்கிறது. அதை வைத்து அவன் நிகழ்த்தும் சாகசங்கள்தான் கதை. மார்வெல் படங்களைப்போல காமெடி பாதையில் DC பயணிக்க முயற்சி செய்வதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால், சிறுவன் ஒருவன் வயதான சூப்பர் ஹீரோவானால் அங்கே நகைச்சுவைதானே அதிகமாக இருக்கும் என DC ரசிகர்கள் பதில் கூறுகிறார்கள். லைட்ஸ் அவுட், அனபெல்: கிரியேஷன் படங்களை இயக்கிய டேவிட் சேன்ட்பெர்க் இப்படத்தை இயக்கியுள்ளார்.

ஃபெண்டாஸ்டிக் பீஸ்ட்ஸ்: தி கிரைம்ஸ் ஆஃப் க்ரிண்டல்வால்ட்' (Fantastic Beasts: The Crimes of Grindewald)

ஹாரிபாட்டர் படத்தொடரை யாராலும் மறக்க முடியாது. 90’ஸ் கிட்ஸ்களின் மறக்க முடியாத மாயாஜால சினிமா அதுதான். தற்போது அதற்கு முந்தைய கதையான ஃபெண்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் படத்தொடர் வெளியாகி வருகிறது. முதல் பாகம் 2016-ம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது. அதன் தொடர்ச்சியாக வரும் இந்த 'தி கிரைம்ஸ் ஆஃப் க்ரிண்டல்வால்ட்' பாகம் ப்ரொஃபசர் டம்புள்டோருக்கும் (Professor Dumbledore) வில்லனான க்ரிண்டல்வால்ட்க்கும் நடக்கும் போர் குறித்துப் பேசுகிறது. இளவயது டம்புள்டோராக ஜூட் லாவும், வில்லன் க்ரிண்டல்வால்ட்டாக புகழ்பெற்ற நடிகர் ஜானி டெப்பும் நடித்துள்ளனர். முந்தைய பாகம் போல இதிலும் நிறைய விநோதமான மிருகங்கள் தலைகாட்டும் என்று எதிர்பார்க்கலாம்.

காட்ஸில்லா: கிங் ஆஃப் தி மான்ஸ்டர்ஸ் (Godzilla: King of the Monsters)

காட்ஸில்லா படங்களுக்கு எப்போதுமே தனி மார்க்கெட் உண்டு. கிட்டத்தட்ட 1954-ம் ஆண்டிலிருந்து வெளிவந்துகொண்டிருக்கும் இந்தப் படத்தொடர் கின்னஸ் சாதனையிலும் இடம்பெற்றிருக்கிறது. ஆனால், ஆச்சர்யத்தக்க விஷயம் என்னவென்றால், ஹாலிவுட் இதுவரை இரண்டே இரண்டு காட்ஸில்லா படங்களைத்தான் எடுத்திருக்கிறது. 1998-ம் ஆண்டு முதல் ஹாலிவுட் காட்ஸில்லா படத்தை சோனி நிறுவனம் வெளியிட்டது. கடந்த 2014-ம் ஆண்டு வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் மீண்டும் காட்ஸில்லாவை தூசுத்தட்டி நவீன க்ராபிக்ஸ் கொண்டு வெளியிட்டது. தற்போது அதன் அடுத்த பாகமான 'காட்ஸில்லா: கிங் ஆஃப் தி மான்ஸ்டர்ஸ்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. 'தி காஞ்சுரிங்' புகழ் வேரா ஃபார்மிகா, 'தி ஷேப் ஆஃப் வாட்டர்' புகழ் சாலி ஹாக்கின்ஸ், 'ஸ்டேரஞ்சர் திங்ஸ்' தொடரில் அசத்திய மில்லி பாபி ப்ரவுன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

'தி கிளாஸ்' (The Glass)

இந்திய வம்சாவளி இயக்குநரான மனோஜ் நைட் ஷ்யாமளன் கடைசி நேர ட்விஸ்ட்கள் கொண்ட சூப்பர்நேச்சுரல் படங்கள் எடுப்பதில் வல்லவர். அவரின் சமீபத்திய வெற்றிப் படம் 'ஸ்ப்லிட்' (Split). இது அவரின் முந்தைய 'அன்பிரேகபிள்' (Unbreakable) படத்தின் இரண்டாம் பாகம். தற்போது 'அன்பிரேகபிள்' மற்றும் 'ஸ்ப்லிட்' படங்களின் முக்கியக் கதாபாத்திரங்களைக் கொண்டு இந்த மூன்றாம் பாகமான 'தி கிளாஸ்' (The Glass) வெளியாகவிருக்கிறது. உடையா எலும்புகள் மற்றும் தொடுதலின் மூலம் ஒருவரின் இறந்தகாலத்தைக் கண்டறியும் சூப்பர் பவர் கொண்ட ஒருவன். அதீத புத்திசாலி, ஆனால் சுலபமாக கை, கால் எலும்புகள் முறியும் தன்மைகொண்ட ஒருவன். உடம்பில் ஒருவனாகவும் மனதளவில் 23 நபர்களாகவும் வாழும் dissociative identity disorder என்ற மனநோய் கொண்ட ஒருவன் என மூன்று நபர்களைச் சுற்றி இந்தக் கதை நகரும். 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு