Published:Updated:

ஆக்ஷன், பரபரப்பு, சாகசம் எல்லாம் சூப்பர் பாஸ்... ஆனா லாஜிக்? எப்படியிருக்கிறது Mission: Impossible – Fallout? #MI6

தன் கேரியருக்கு கட்டாய வெற்றி தேவை என்ற நிலையில் இருக்கும் டாம் க்ரூஸுக்ற்கு இந்த மிஷன் உதவியிருக்கிறதா? Mission: Impossible – Fallout படம் எப்படியிருக்கிறது? #MI6

ஆக்ஷன், பரபரப்பு, சாகசம் எல்லாம் சூப்பர் பாஸ்... ஆனா லாஜிக்? எப்படியிருக்கிறது Mission: Impossible – Fallout? #MI6
ஆக்ஷன், பரபரப்பு, சாகசம் எல்லாம் சூப்பர் பாஸ்... ஆனா லாஜிக்? எப்படியிருக்கிறது Mission: Impossible – Fallout? #MI6

1966 முதல் 1973 வரை CBS தொலைக்காட்சியில் வெளிவந்து, பின்னர் மீண்டும் 1988-ல் வெளிவந்து அனைவரின் பாராட்டையும் பெற்ற டிவி தொடர் மிஷன்: இம்பாசிபிள். அதை அடிப்படையாகக் கொண்டு 1996 முதல் வரிசையாக மிஷன்: இம்பாசிபிள் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் டாம் க்ரூஸ். படத்தின் ஆறாவது பாகமான Mission: Impossible – Fallout தற்போது வெளியாகியிருக்கிறது. தன் கேரியருக்கு கட்டாய வெற்றி தேவை என்ற நிலையில் இருக்கும் டாம் க்ரூஸுக்கு இந்த மிஷன் உதவியிருக்கிறதா? Mission: Impossible – Fallout படம் எப்படியிருக்கிறது? #MI6

இம்பாசிபிள் மிஷன்ஸ் ஃபோர்ஸைச் (IMF) சேர்ந்த ஈதன் ஹன்ட்டிற்கு (டாம் க்ரூஸ்) ஒரு மிஷன் வருகிறது. 'The Apostles' என்ற பெயரில் மாறியிருக்கும் பழைய எதிரிகள் 'The Syndicate' குரூப்பை பிடிக்க வேண்டும். அவர்களிடம் இருக்கும் மூன்று சக்தி வாய்ந்த ப்ளுட்டோனியம் அணுகுண்டுகளைக் கைப்பற்ற வேண்டும். சகாக்களுடன் வைத்த முதல் அடியே ஈதன் ஹன்டுக்கு பெரிய சறுக்கலாகிவிட, CIA-வின் பார்வைக்குக் குற்றவாளியாகவும் மாறுகிறார் ஹன்ட். இந்தப் பரபரப்புகளுக்கிடையில் ப்ளுட்டோனியம் அணுகுண்டுகளால் பேரழிவு ஏற்படப் போவதாக தெரிய வருகிறது. வழக்கம்போல உலகை இந்த நாச வேலையிலிருந்து ஹன்ட் காப்பாற்றினாரா?

மிஷன்: இம்பாசிபிள் படத்தொடரை பொறுத்தவரை தோல்வி என்பதே அதன் அகராதியில் கிடையாது. ஒரு சில படங்கள், விமர்சகர்களால் சாடப்பட்டாலும், வசூலில் அவை சோடைபோனதே இல்லை. கடந்த இரண்டு பாகங்களிலும் பெரிதும் விமர்சிக்கப்பட்டவை, தொய்வடையும் திரைக்கதையும், காமசோமா வசனங்களும்தான். இந்தப் படத்தில் அவற்றில் எல்லாம் கூடுதல் கவனம் செலுத்தி செதுக்கியிருக்கிறார் சென்ற பாகத்தையும் இந்தப் பாகத்தையும் எழுதி இயக்கிய கிறிஸ்டோஃபர் மெக்குவரி (Christopher McQuarrie). `ஸ்டார்ம் கம்மிங்!' (A Storm is coming) என்பதற்கு, பாஸ்வேர்டு என்ற பெயரில் "ஐ யம் தி ஸ்டார்ம்" (I am the storm) என பன்ச் பேசி ஆட்டத்தை ஆரம்பிக்கிறார் டாம் க்ரூஸ். அதைத் தொடர்ந்து, டைட்டில் கார்டுக்கு முன் வரும் அந்த மருத்துவமனை காட்சி, பழைய ட்ரிக்தான் என்றாலும் கைதட்டல் பெரும் மாஸ் ரகம்! 

டாம் க்ரூஸுக்கு 56 வயது என்றால் நம்புவதற்குச் சற்று கடினமாகத்தான் இருக்கிறது. அது அவர் இளமையாகத் தெரிவதால் மட்டும் இல்லை, அத்தனை ரிஸ்க்கான ஸ்டன்டுகளையெல்லாம் சர்வசாதாரணமாக டீல் செய்வதாலும்தான். ராணுவ வீரர்களுக்குக் கொடுக்கப்படும் HALO ஜம்ப், கார் மற்றும் பைக் சேஸ், இறுதியில் வரும் அந்த ஹெலிகாப்டர் சாகசம் எனப் பல ரிஸ்க்கான விஷயங்களைச் செய்து அசத்தியிருக்கிறார். படம் முழுவதையும் தன்னுடைய ஸ்கிரீன் ப்ரெசன்ஸால் தூக்கிச் சுமக்கும் டாம், அந்தக் கழிவறை சண்டைக் காட்சியில் மட்டும், 'சூப்பர்மேன்' ஹென்றி கேவிலிற்கு வழிவிட்டு ஒதுங்கிக்கொள்கிறார். மனிதர் முஷ்டியை முறுக்கிக் கொண்டு துவம்சம் செய்யும் காட்சி மிகவும் நம்பும்படியாக இருக்கிறது. ஹென்றி கேவிலைப் பிடிக்க டாம் க்ரூஸ் நடத்தும் அந்தப் பரபரப்பான சாகசத் துரத்தல் சேஸில், காமெடி வைத்தது ரசிக்கும்படி உள்ளது. அதிலும் 15 நிமிடங்களுக்கு மேல் நடக்கும் அந்த பைக் சேஸிங் சாகசம் அல்ட்டி! 

ஆனாலும், ஒரு சில லாஜிக் மீறல்கள் ஆங்காங்கே துருத்திக் கொண்டு நிற்கத்தான் செய்கின்றன. மிஷனுக்காக ப்ளுட்டோனியம் அணுகுண்டுகளை வாங்க வந்தவனைப் (ஜான் லார்க்) போல வேடமிடும் டாம் க்ரூஸை (ஈதன் ஹன்ட்) உண்மையாகவே அவன் லார்க்தான் என்று சித்திரிப்பதை CIA-வும் நம்புவது, 'இவங்க என்ன சொன்னாலும் நம்புவாங்க போலையே' ரகம். ஆர்ம்ஸ் டீலர் என்று அறிமுகப்படுத்தப்பட்ட அந்த வைட் விடோ கதாபாத்திரம் CIA முதல் IMF வரை எல்லோரிடமும் டீல் பேசுகிறது. அவர் யார் என்பதைச் சற்று தெளிவாக விலக்கியிருக்கலாம். IMF குரூப்புக்கு இவ்வளவு பெரிய பிரச்னைகள் ஏற்படும்போது, சென்ற பாகம் வரை முக்கிய IMF அதிகாரியாக இருந்த ஜெரிமி ரன்னர் இந்தப் பாகத்தில் ஒரு காட்சியில்கூட எட்டிப் பார்க்காதது என்ன லாஜிக்கோ? அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் படத்திலும் ஜெரிமி ரன்னரைக் காணவில்லை. ஒருவேளை TAG வைத்து விளையாடிக்கொண்டிருக்காரோ என்னவோ!

அது மட்டுமின்றி, டாம் க்ரூஸும் அவரின் சகாக்களும், தேடப்படும் வேளையில், பாரீஸிலிருந்து லண்டன், அங்கிருந்து காஷ்மீர் என்று பறப்பதெல்லாம், காதுல பூ! தன் பங்குக்கு ஹென்றி கேவிலும், தேடப்படும் முக்கியக் குற்றவாளியுடன் ஜஸ்ட் லைக்தட் காஷ்மீர் பறப்பதெல்லாம் ரொம்பவே ஓவர் பாஸு! அது போதாதென்று நம்மூர் சென்சார் போர்டு, காஷ்மீர் என்ற வார்த்தையையே சென்சார் செய்து கதை எங்கே நடக்கிறது என்றே தெரியாத அளவுக்குக் குழப்பம் ஏற்படுத்தி இருக்கிறார்கள். இதெல்லாம் பாவம் மை சன்! ஈதன் ஹன்ட் நல்லவன், அவன் எடுத்துக்கொண்ட வேலைக்காக என்ன வேண்டுமானாலும் செய்வான் என்பதை மீண்டும் புரியவைத்து, யாரையும் கொல்ல மாட்டான் என்று வேறு நியாயப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால், இந்த மிஷன் ஆரம்பம் முதல் இறுதியில் அந்த ஹெலிகாப்டர் பைலட் வரை, நிறைய மரணங்கள்! அதெல்லாம் யார் கணக்குங்கணா?

இருந்தும், ஆரம்பம் முதல் இறுதி வரை எந்தக் காட்சிகளுமே தேங்கி நிற்கவில்லை. பாரீஸில் கார் சேஸ், லண்டனில் கன் ஃபைட் மற்றும் ஒரு துரத்தல் சீக்குவென்ஸ், காஷ்மீரில் ஹெலிகாப்டர் கிளைமேக்ஸ் எனப் பல்வேறு இடங்களுக்குப் பயணிக்கும் கதையைச் சிறப்பாக கட்டியிழுத்து சீரான வேகத்தில் நகர்த்தியிருக்கிறது திரைக்கதை. இதுதான் ஒரு ஆக்ஷன் படம் வெற்றி பெறத் தேவையான விஷயம். அதை ஆங்காங்கே சில ட்விஸ்ட்களையும் சேர்த்து உறுதியும் படுத்தியிருக்கிறார்கள். அதனாலேயே ஆக்ஷன் பட வரலாற்றில் முக்கியமான ஓர் இடத்தைத் துண்டு போட்டுப் பிடித்திருக்கிறது இந்த Mission: Impossible – Fallout. #MI6

இன்னும் தொடர்ந்து நிறைய மிஷன்: இம்பாசிபிள் படங்களை டாம் க்ரூஸ் தயக்கமின்றி எடுக்கலாம் என்ற நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது இந்த ஆக்ஷன் மசாலா! அதற்காகவே இதைக் கொண்டாடலாம்.