Published:Updated:

கிறிஸ்டோபர் நோலன்... நேர விளையாட்டுக்களின் மாய வித்தகன்...! #HBDChristopherNolan

Christopher Nolan

மனித மனம் மிகவும் சிக்கலானது. இருத்தலியல் பிரச்னைகள், குழப்பமான அகநிலை எனப் பல பிரச்னைகள் இவரின் நாயகர்களுக்கு எப்போதும் இருக்கும். இதை மட்டும் வைத்து படம் எடுத்தால், அது சலிப்பை ஏற்படுத்தும். ஆனால் இதை சுவாரஸ்யமாக சொல்ல நோலன் தேர்ந்தெடுத்த சிக்கலான பாதைதான் திரைக்கதை விளையாட்டு.

கிறிஸ்டோபர் நோலன்... நேர விளையாட்டுக்களின் மாய வித்தகன்...! #HBDChristopherNolan

மனித மனம் மிகவும் சிக்கலானது. இருத்தலியல் பிரச்னைகள், குழப்பமான அகநிலை எனப் பல பிரச்னைகள் இவரின் நாயகர்களுக்கு எப்போதும் இருக்கும். இதை மட்டும் வைத்து படம் எடுத்தால், அது சலிப்பை ஏற்படுத்தும். ஆனால் இதை சுவாரஸ்யமாக சொல்ல நோலன் தேர்ந்தெடுத்த சிக்கலான பாதைதான் திரைக்கதை விளையாட்டு.

Published:Updated:
Christopher Nolan

நீங்கள் சென்று சேர வேண்டிய இடத்திற்கு இரண்டு பாதைகள் இருக்கின்றன. ஒன்று நேர் வழி. வழியில் ரசிக்க, பயணத்தில் சுவாரஸ்யம் கூட்ட என எதுவும் கிடையாது. மற்றொரு வழி, ஆறு போல வளைந்து நெளிந்து, பார்த்து ரசிக்கப் பல விஷயங்களை தன்னுள் புதைத்து நீள்கிறது. அதில் தோன்றும் காட்சிகளும் நம்ப முடியாதவை. ஒருமுறை பார்த்தால் புரியாதவை. நீங்கள் எந்தப் பாதையை தேர்ந்தெடுப்பீர்கள்? உங்களை விடுங்கள். இந்த கிறிஸ்டோபர் நோலன் என்ன செய்வார் தெரியுமா? 

Christopher Nolan on the sets of 'Dunkirk'
Christopher Nolan on the sets of 'Dunkirk'

இவரைப் பற்றி தெரியாதவர்கள்கூட, "அட அந்தாளு, சுத்தி சுத்தி போற ரூட்லதான் போவாரு!" என்பார்கள். ஆம், அவர் படங்களின் திரையோட்டமும் இத்தகையதுதான். சுற்றி அடித்துக் குழப்பும் பாதைதான் இவரின் தேர்வு... ஆனால், அதோடு இதன் சுவாரஸ்யம் முடிந்து விடுவதில்லை. அந்த நீண்ட நேரம் எடுக்கும் பாதையைக்கூட, நேராக ஓடும் பாதையை கடக்கத் தேவைப்படும் நேரத்தில் கடந்துவிட முடியுமா? அப்படி வேகமாகச் செல்லும்போது நின்று ரசித்தால் மட்டுமே புரியக்கூடிய விஷயங்களைப் புரிந்து கொள்ள முடியுமா? முடிய வேண்டும்... இதுதான் அவர் சினிமா ரசிகர்களிடம் எதிர்பார்ப்பது. ஒரு சினிமா ரசிகனாக அவர் கூறிய இந்த விஷயம் மிகப் பிரபலம்.

"ஒரு படம் பிடிப்பதும் பிடிக்காமல் போவதும் அவரவர் அகநிலை மற்றும் உள் உணர்வு சார்ந்த விஷயம். ஆனால், ஒவ்வொரு முறையும் நான் ஒரு படத்திற்கு செல்லும்போது, 'படத்தை எடுத்தவர்கள் அர்ப்பணிப்போடுதான் இதை எடுத்திருக்கிறார்கள்; இது ஒரு சிறந்த படம் என்பதை அவர்கள் உறுதியாக நம்பியிருக்கிறார்கள்; அதன் பிறகே அதை மக்களுக்காக வெளியிட்டு இருக்கிறார்கள்' என்பதை நான் உணர வேண்டும். அதை நான் ஏற்றுக் கொள்ளாமலும் போகலாம், ஆனால், அந்த நம்பிக்கை, அந்த அர்ப்பணிப்பு அவசியம். அதை நான் ஒரு படத்தில் உணரவில்லை என்றால் திரையரங்கில் நான் அதற்காக செலவான நேரத்தை வீணடித்ததாகவே உணர்வேன்!"
கிறிஸ்டோபர் நோலன்
கிறிஸ்டோபர் நோலன்
கிறிஸ்டோபர் நோலன்

இந்த விஷயத்தைத்தான் ஓர் இயக்குநராக தன் எல்லாப் படங்களிலும் கொடுக்க முயல்கிறார். அதனால்தான் அவர் யாரும் பயணிக்காத அந்தப் பாதையை தயக்கமின்றி தேர்ந்தெடுக்கிறார். குறிப்பாக, நேரத்தை வைத்து அவர் செய்யும் மாயங்கள் அதி அற்புதமானவை. இந்த நேரத்தை எப்படியெல்லாம் தன் படங்களில் வித்தியாசமாகப் பிரதிபலிக்கலாம் என்பதே அவரின் சிந்தனையோ என எண்ணத் தோன்றும். இந்த நேர விளையாட்டுதான் அவரின் படங்களை அதிக சுவாரஸ்யமாக்குபவை. 

உதாரணமாக அவரின் முதல் முழு நீளத் திரைப்படம் என்றால் அது 'ஃபாலோயிங்'. இது பலருக்கும் தெரியாத ஒன்று. (இதை வைத்துத்தான் தமிழில் 'வாமணன்' என்ற படத்தை எடுத்தார்கள் என்பது வேறு விஷயம்). இந்தப் படத்தை லீனியர் முறையில் தெளிவாக எடுத்தால் ஒரு கிளாசிக் நோயர் (Noir) படம். ஆனால், நோலன் அதைச் செய்யவில்லை.

Following
Following

படத்தின் மொத்த கதையையும், 4 இடங்களில் இருந்து தனித்தனியே அணுகுகிறார். அதையும் கிட்டத்தட்ட 15 முறை கிராஸ்கட் செய்து தலைசுற்ற வைக்கிறார். ஆனால், உற்று நோக்கினால் எது எப்போது நடந்தது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். தாடி, மீசை மாற்றங்கள், உருவத் தோற்றம் என அதற்கான க்ளூக்களை ஆங்காங்கே சிதற விட்டிருப்பார்.

இதுவரை இவர் எடுத்த படங்களின் மாஸ்டர்பீஸ் என்று பெரும்பாலானவர்கள் கருதுவது 'மெமன்டோ'. நம்மூர் 'கஜினி' படத்திற்கு இதுதான் இன்ஸ்பிரேஷன். படத்தின் திரைக்கதை சற்றே குழப்பம் வாய்ந்தது. ஒரு முழு நீளக் கதை. அதை இரண்டு டைம்லைனில் சொல்கிறார். தலைச்சுற்றல் அதோடு நிற்கவில்லை. படத்தின் முதல் காட்சி, கதைப்படி இறுதி காட்சி. அதில் ஆரம்பித்து படம் பின்னோக்கி நகர்கிறது. இன்னொரு டைம்லைன், கறுப்பு வெள்ளையில் கதையின் முதல் காட்சியில் ஆரம்பித்து முன்நோக்கி நகர்கிறது. இரண்டும் ஓர் இடத்தில் சந்திக்கின்றன. அதுதான் கதையின் மையப் பகுதி. அங்கேதான் படமும் முடிந்து போகிறது.

Memento
Memento

படத்தை ஒரு காட்சி விடாமல் கவனித்திருந்தால் மட்டுமே நோலன் சொல்ல வருவதைப் புரிந்து கொள்ள முடியும். ஒரு சில இடங்களில் படத்தில் புதிய நினைவுகளை ஏற்படுத்திக் கொள்ள முடியாமல் தவிக்கும் நாயகனின் நிலைமையில்தான் நாமும் இருப்போம். இந்தக் குழப்பியடிக்கும் யுக்திக்கு உடந்தை அவரின் சகோதரரான ஜொனதன் நோலன். அவருடன் சேர்ந்து சில படங்களில் திரைக்கதை எழுதியவர். இவரின் சிறுகதைதான் 'மெமன்டோ' என்ற படமானது.

உங்களுக்கு ஒரு டைரி கிடைக்கிறது. அதை எழுதியவர், நீங்கள் வைத்திருந்த நோட்புக் ஒன்றைக் குறித்து பேசுகிறார். அந்த நோட்புக் படித்தபோது அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களை தன் டைரியில் குறிப்பிட்டுள்ளார். அதில் நீங்கள் மூழ்கத் தொடங்க, திடீரென ஒரு வரி, உங்கள் பெயரை குறிப்பிட்டு, நீங்கள் என் டைரியை படிக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும் என்று வருகிறது. அப்போது என்ன செய்வீர்கள்? அந்த டைரியை தூக்கி போட்டு விட்டு ஓடிவிட மாட்டீர்கள்? அந்த எண்ண ஓட்டத்தைத்தான் 'தி ப்ரெஸ்டீஜ்' படம் பார்த்த அனைவருக்கும் கடத்தியிருப்பார் நோலன்.

The Prestige
The Prestige

ஒரு பெரிய மேஜிக் நிபுணர். அவரின் திறமை வாய்ந்த இரண்டு சிஷ்யர்களுக்கு 'யார் பெரியவர்?' என்ற சண்டை. நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்க அவர்கள் எந்த எல்லைக்கும் தயார். ஒரு நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் ப்ரீமியர் ஷோவை பார்த்துவிட்டு, நாவலின் எழுத்தாளர் சொன்ன விஷயம், "நான் நாவலை எழுதும் போது எனக்கு ஏன் இதெல்லாம் தோன்றவில்லை" என்பதுதான்!

நோலன் படங்களில் பலராலும் வரவேற்கப்பட்ட படம் என்றால் அது 'இன்செப்ஷன்'. கனவுகள் குறித்து பி.ஹெச்.டி., பட்டம் பெருமளவிற்கு விஷயங்களை அதில் சேர்த்திருப்பார். கனவுக்குள் கனவு, அதனால் ஓடிக் கொண்டிருக்கும் நேரத்தில் சிக்கல், ஒரு திருட்டு, மனமாற்றம் என சுவாரஸ்யம் சேர்த்திருப்பார்.

Inception
Inception

கூடுதலாக இதில் மேஸ் விளையாட்டுகள், முரண்பாடு போலத் தோற்றமளிக்கும் மெய்யுரை என இறங்கி அடித்திருப்பார். இந்தப் படம் நடக்கும் களம் நமக்கு மிகவும் புதியது. இருந்தும் அது குறித்து நமக்கு எதுவும் அறிமுகப் பாடம் எடுக்காமல் அப்படியே கதை சொல்ல ஆரம்பித்து விடுவார். இங்கேயும் நேரக் கோட்பாடுகள் கொண்டு வந்து அதன் மூலம் பதற்றம் மற்றும் பரபரப்பை கூட்டியிருப்பார்.

அதற்கடுத்து அவர் நேரத்தை வைத்து விளையாடிய படம் 'இன்டர்ஸ்டெல்லர்'. கனவுகள் மூலம் நம்மைச் சீண்டியவர், இந்த முறை விண்வெளியில் குதித்திருந்தார். இதிலும் திரைக்கதை மிகுந்த பாராட்டுதலுக்குரியது. நம் உலகைக் காக்க, நம் பால்வெளி தாண்டிய பயணம் ஒன்றைச் செய்கிறது ஒரு குழு. கோள்களின் இடையே உள்ள கால நேர வித்தியாசங்களை வைத்து இந்தச் சாகசப் பயணத்திற்கு சுவாரஸ்யம் சேர்த்திருப்பார். இதனிடையே அப்பா-மகள் பாசம், அறிவியல் பாடங்கள் என நம்மை நெகிழச் செய்திருப்பார். இந்தப் படத்தின் அறிவியல் தெளிவிற்காக புகழ்பெற்ற விஞ்ஞானி கிப் தோர்ன் அவர்களின் உதவியுடன் படத்தை எடுத்திருப்பார். பலர் இந்தப் படத்தில் பேசப்பட்ட அறிவியல் நம்பகத்தன்மை உடையது எனப் பாராட்டியுள்ளனர்.

Interstellar
Interstellar

அடுத்தாக இவரின் சமீபத்திய படம் 'டன்கிர்க்'. ஒரு பயணச் சீட்டின் பின் எழுதிவிடும் அளவிற்குத்தான் இதன் கதை இருக்கும். ஆனால், அதையும் மூன்று கோணங்களில் அணுகி, மூன்று டைம்லைன்கள் வைத்து அனைத்தையும் ஒரே கோட்டில் இணைத்து முடித்திருப்பார்.

இந்த நேர விளையாட்டுகள் பெரிதாக இல்லாமல் அவர் எடுத்த படங்களும் சிறப்பானவை தான். 'பேட்மேன்' சூப்பர்ஹீரோவை வைத்து ட்ரைலாஜியாக இவர் எடுத்த படங்கள், தொய்வடைந்த சூப்பர்ஹீரோ ஜானரை தூக்கி நிறுத்தியது. பல வருடங்கள் கழித்து பேட்மேன் கதாபாத்திரம் ப்ளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது.

The Dark Knight
The Dark Knight

இதற்கு மிக முக்கியக் காரணம், பேட்மேனையும் குறைகள் கொண்ட ஒரு சாமானியனாக காட்டியதுதான். அவனுக்கும் ஆசைகள் உண்டு, காதல் உண்டு, தோல்விகள் உண்டு என்று இயல்பாகக் கதையை கடத்தியவர். முக்கியமாக, இதன் இரண்டாம் பாகத்தில் ஜோக்கர் எனும் வில்லன் மூலம் பல தத்துவார்த்தங்களை எடுத்துரைத்திருப்பார். அதுவரை சூப்பர்ஹீரோ படம் என்றால் தெறித்து ஓடிய பலரை "பேட்மேன் என்னோட ஃபேவரைட் சூப்பர்ஹீரோ" என்று சொல்ல வைத்தார்.

"நான் மகிழ்ச்சியாய் இருக்க, என்னிடமே நான் பொய்களைச் சொல்லி கொள்ள வேண்டுமா?"
"நாம் கண்களை மூடிக் கொள்வதால் உலகம் இருட்டி விடுமா என்ன?"
"அவர்கள் முட்டாள்களாக்கப்பட வேண்டும் என்பதையே விரும்புகிறார்கள்!"
"சில நேரங்களில் மக்கள் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் நம்பிக்கைகள் அனைத்தும் நிஜமாக வேண்டும் என்று பேராசை படுகிறார்கள்."

இது நோலன் படங்களில் வரும் சில வசனங்கள். மனித மனம் மிகவும் சிக்கலானது. இருத்தலியல் பிரச்னைகள், குழப்பமான அகநிலை எனப் பல பிரச்னைகள் இவரின் நாயகர்களுக்கு எப்போதும் இருக்கும்.

இது உண்மைதான், ஆனால் இதை மட்டும் வைத்து படம் எடுத்தால், அது சலிப்பை ஏற்படுத்தும். ஆனால் இதுதான் இலக்கு. இதை நோக்கிச் செல்ல நோலன் தேர்ந்தெடுத்த சிக்கலான பாதைதான் திரைக்கதை விளையாட்டு. பாட்டி வடை சுட்டக் கதைதான் என்றாலும், அதை காகத்தின் பார்வையிலிருந்து ஒரு காட்சி, பாட்டியின் பார்வையில் இருந்து ஒரு காட்சி, நரியின் பார்வையில் இருந்து ஒரு காட்சி, உச்சமாக, வடையின் பார்வையில் இருந்தே ஒரு காட்சி என வைத்தால், அந்தப் பழைய கதையே சுவாரஸ்யமாகி விடுகிறது அல்லவா? அதுதான் நோலன் மேஜிக்!

Dimple Kapadia & Christopher Nolan: Tenet
Dimple Kapadia & Christopher Nolan: Tenet

இன்று இந்தச் சமகால ஜீனியஸிற்கு 49வது பிறந்தநாள். இன்றைய நிலையில் மனிதரின் அடுத்தப் படமான Tenet-ற்காக உலகமே காத்து கொண்டிருக்கிறது. 'ட்வைலைட்' புகழ் ராபர்ட் பேடின்சன், ஜான் டேவிட் வாஷிங்டன், எலிசபெத் டேபிக்கி, ஆரான் டெய்லர்-ஜான்சன், நோலனின் ஆஸ்தான நடிகர் மைக்கேல் கெயின் என இந்தப் பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன் நம்மூர் டிம்பிள் கபாடியாவும் இணைந்துள்ளார். சுமார் 250 மில்லியன் பட்ஜெட்டில் ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் இது 2020-ல் ஜுலை 17 அன்று வெளியாகும்.

நோலன் இயக்கத்தில் உங்களின் ஃபேவரைட் படம் எது? கமென்ட்டில் தட்டிவிடுங்கள்.