Published:Updated:

லிட்டில் ராணி மடோனா, பாப் உலகின் ராணியான கதை! #HBDMadonna

லிட்டில் ராணி மடோனா, பாப் உலகின் ராணியான கதை! #HBDMadonna
லிட்டில் ராணி மடோனா, பாப் உலகின் ராணியான கதை! #HBDMadonna

லிட்டில் ராணி மடோனா, பாப் உலகின் ராணியான கதை! #HBDMadonna

சை உலகில் என்றென்றும் நிலைத்திருக்கும் பெயர், மடோனா. மாபெரும் கூட்டத்தைத் தனது இசையால் கட்டி எழுப்பி வைத்திருப்பவர். தனது சாதனைகள் அனைத்தையும் அவரே முறியடிக்கிறார். இவர், தொட்ட வெற்றி சிகரத்தை இனி ஒருவர் தொடமுடியுமா என்பது சந்தேகமே.

மடோனா லூயிஸ் சிக்கோனே ( Madonna Louise Ciccone) என்பது இவரது முழுப் பெயர். 1958 ஆகஸ்ட் 16-ம் தேதி, அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தின் பே நகரில், ஒரு சாதாரண கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தார். தந்தை, சில்வியோ அந்தோணி சிக்கோனே. தாய் பெயரும் மடோனா லூயிஸ். எனவே, இவரை `லிட்டில் ராணி' என எல்லாரும் அழைத்தனர். கத்தோலிக்க வழக்கப்படி, மடோனா வெரோனிகா எனப் பெயர் மாற்றம் செய்தனர். அந்தப் பெயரே நிலையானது. ஐந்து வயதிலேயே தாயை இழந்த மடோனா, பாட்டியின் ஆதரவில் வளர்ந்தார். தனது நகரிலேயே ஒரு கத்தோலிக்க பள்ளிக்கூடத்தில் படித்து, அங்குள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பைத் தொடர்ந்தார். 

அங்கே பணியாற்றிய ஆசிரியரான கிறிஸ்டோபர், மடோனாவின் திறமையைக் கண்டு உதவ முன்வருகிறார். ஹெலன் ஹெல்லர் வாழ்வில் வந்த ஆசிரியர் அன்னி போன்று, இவரது வாழ்க்கையின் வெளிச்சமாக கிறிஸ்டோபர். தனக்கு விருப்பமான இசையைத் தேர்ந்தெடுத்தும், அதனை முழுமையாகக் கற்கமுடியாமல் கல்லூரி வாழ்வைப் பாதியில் நிறுத்திவிட்டு நியூயார்க் புறப்படுகிறார் மடோனா. தனக்குச் சிறிதும் அறிமுகம் இல்லா இடத்துக்குத் தனது திறமை மீதான நம்பிக்கையை மட்டும்வைத்து தனியாகப் புறப்படுகிறார். கையில் 32 டாலருடன் வந்தவர், ஒரு ஹோட்டலின் கேளிக்கை அரங்கில், பின்னணி நடனம் ஆடுபவராக வாழ்க்கையைத் தொடங்குகிறார். ஓர் இசைக் குழுவில் பின்னணி பாடல் பாடுவதாக நகர்கிறது அவரது வாழ்க்கை. பின்னர், தனியாகப் பாடல்களை வெளியிடத் தொடங்கினார். 

ஊடகங்களின் பார்வை இவர் மீது திரும்ப ஆரம்பித்தன. இவர் வெளியிட்ட `EVERYBODY' என்ற இசைத் தொகுப்பு, பெரிய இடத்தை இவருக்காக உருவாக்கித் தந்தது. `HOLIDAY' இவருக்கு மேலும் பல சிறப்புடன் ரசிகர் கூட்டத்தை அதிகரிக்கச் செய்தது. LUCKY STAR, BORDER LINE என அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்தார். 1984-ம் ஆண்டில் இவர் வெளியிட்ட `LIKE A VIRGIN', உலக அளவில் புகழ்பெற்று, அதிக அளவு விற்பனையான முதல் பெண்மணியின் இசைத் தொகுப்பு என்ற பெருமையையும் மடோனாவுக்கு அளித்தது. 1886-ம் ஆண்டு, `TRUE BLUE' இசைத் தொகுப்பு, கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தது. LIVE TO TELL, PAPA DON'T PREACH, OPEN  YOUR HEART, LA ISLA BONITA என நீள்கிறது இவரது வெற்றி. அதேநேரம், பல்வேறு விமர்சனங்களையும் சந்திக்கிறார். எல்லாம் கடந்து, தனது திறமையைப் பல வழிகளில் உலகுக்கு எடுத்துக் காட்டினார். பாடல்கள் எழுதவும் ஆரம்பித்தார், திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். முதலில் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றாலும், பின்னாளில் சிறந்த நடிகையாக வலம்வந்தார். இவர் நடித்த திரைப்படங்கள் வசூல் சாதனை பட்டியலில் இடம்பிடித்தன.  

1990-ம் ஆண்டு இவர் வெளியிட்ட `THE LIVE RECORD OF THE TOUR' முதல் கிராமிய விருதினைப் பெற்றுத்தந்தது. 1991-ம் ஆண்டு, `TRUTH OR DARE' என்ற பெயரில் ஆவணப்படம் வெளியிட்டார். 1996-ல் சிறந்த நடிகைக்கான சாதனையாளர் விருது, 1998-ல் `THE RAY OF LIGHT' இசைத் தொகுப்பு நான்கு கிராமிய விருது, அந்த ஆண்டே கின்னஸ் புத்தகத்தில் `NO FEMALE ARTIST HAS SOLD MORE THAN MADONAS RECORD' என்ற வாக்கியத்தின் மூலம் சாதனையின் உச்சத்தை உலகுக்குப் பறைசாற்றினார். சிறந்த பெண் தொழிலதிபர் என்ற பெயரையும் அடைகிறார். பாப் இசையில் மைக்கேல் ஜாக்சனுக்கு இணையான இடத்தைப் பெற்றவர், அவருடன் இணைந்தும் சில நிகழ்ச்சிகளையும் செய்துள்ளார்.

மடோனா தனது வாழ்வில் குடும்பத்துக்கும் முக்கியத்துவம் தந்தவராகவே உள்ளார். நான்கு குழந்தைகளைத் தத்து எடுத்து வளர்த்து வருகிறார். மொத்தம் ஆறு குழந்தைகள் இவருக்கு. திறமையுடன் கருணை உள்ளமும் நிறைந்தவர். இதுவரை பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் கட்டித் தந்து நிதி உதவிகள் செய்துவருகிறார், இதன்மூலம் 4000 குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.

சாதனைகளைப் படைத்து, அவற்றைத் தானே முறியடிப்பது இவரது தனித்தன்மை. இசை உலகம் முழுவதும் ஆண்கள் வசம் இருந்த காலகட்டத்தில், தனி பெண்மணியாக பாப் இசை உலகத்தின் ராணியாக உயர்ந்தவர் மடோனா. இன்றுவரை இவரது சாதனைகளை யாரும் முறியடிக்கவில்லை. தனக்கு இணையான சாதனையாளர்களைப் போற்றுவது தலைசிறந்த பண்பு. அதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் மடோனா. மைக்கேல் ஜாக்சன் இறந்ததும், அவருக்குச் சமர்ப்பணம் செய்யும் விதமாக ஒரு நிகழ்ச்சியை நடத்தி உலகையே திரும்பிப் பார்க்கச் செய்தார். திறமை, ஆளுமை, பொறுமை, விடாமுயற்சி, கருணை என மடோனாவின் பண்புகளைப் பட்டியலிட்டால் முடிவே இருக்காது. அதில், அவரிடமிருந்து நாமும் கற்றுக்கொள்வோம்.

அடுத்த கட்டுரைக்கு